search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meenachi Amman"

    • சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.
    • பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் காலை வெகுவிமரிசையாக நடந்தது.

    நேற்று மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் நடந்தது. இதற்காக வண்ணத் துணிகளாலும், மலர்களாலும் தேர்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

    தேரோட்டத்தையொட்டி மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் அதிகாலையில் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து கீழமாசி வீதியில் உள்ள தேரடி மண்டபத்திற்கு வந்தனர். அங்கு உள்ள கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர். சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.

    தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர்.

    சரியாக காலை 6.33 மணிக்கு பக்தர்கள் ''ஹரகர சுந்தர மகாதேவா'' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் இருந்த பெரிய தேர் நகர்ந்தது. சிறிது நேரம் கழித்து 6.50 மணிக்கு மீனாட்சி அமர்ந்திருந்த சிறிய தேர் புறப்பட்டது. தேர்களை பக்தர்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் இழுத்தனர்.

    தேர்களுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானை, 'டங்கா' மாடு ஆகியவை அணிவகுத்து சென்றன. தொடர்ந்து விநாயகரும், முருகனும் சிறிய சப்பரங்களில் சென்றனர்.

    தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. இது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது.

    • தன்னை வேண்டிய பக்தர்களுக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள்.
    • மீனாட்சி அம்மன் புகழ் இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது.

    மதுரையை ஆண்டு வந்த மலயத்துவச பாண்டியனும் அவரது மனைவி காஞ்சன மாலையும் மகப்பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். பல்வேறு யாகங்களை செய்தனர். பிறகு பிரம்மன் உபதேசித்ததன்பேரில் புத்திரகாமேட்டி யாகம் மேற்கொண்டனர்.

    அப்போது அவர்களுக்கு அருளும் பொருட்டு இவ்வுலகையே ஈன்ற அன்னையான உமாதேவியார் அந்த யாக குண்டத்தில் மூன்று தனங்களை உடைய பெண் குழந்தையாக தோன்றினார். குழந்தை உருக்கண்டு பேரானந்தம் பெற்ற அரசனும், அரசியும் அக்குழந்தையின் உருவிலே இருக்கும் மாற்றம் கண்டு மனம் வருந்தினர். அப்போது சிவபெருமான் அசரீரியாக "மன்னா மனம் வருந்தாதே இக்குழந்தைக்கு தடாதகை என்று பெயரிட்டு கல்வி கேள்விகளில் சிறப்பு பெறுமாறு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடு. தனக்கேற்ற கணவனை இக்குழந்தை காணும்போது மிகுதியாக உள்ள ஒரு தனம் மறைந்துவிடும்" என கூறினார்.

    அரசனும் மன அமைதி பெற்றான். (ஒருவன் பிறக்கின்றபோது பரஞானம், அபர ஞானம், தன் முனைப்புஎன்ற ஆணவம் ஆகிய 3 தனங்களோடு பிறக்கின்றான். தடாதகைக்கு இறைவனை பார்த்தவுடன் 3-வது தனம் மறைந்ததை போல மனிதன் இறைவனை நினைப்பதால் ஆணவம் என்ற 3-வது தனம் மறையும் என்பது தத்துவம்) தடாதகை நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்து வீரம் மிக்கவளாக வளர்ந்தாள். பாண்டிய நாட்டின் அரசியானாள். செங்கோல் வழுவாமல் சிறந்த முறையில் ஆட்சி செலுத்தினாள்.

    பாண்டிய நாடு பெருவளம் பெற்று பொன்னாடாக பொலிவு பெற்றது. தடாதகை தன் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த எண்ணி பல குறுநில மன்னர்களின் மீது படையெடுத்து சென்று வென்றாள். பிறகு பெரும்படையுடன் சென்று கயிலையம்பதியை அடைந்து போர் முரசு கொட்டினாள். அவளை எதிர்த்த பூதப்படைகளும், நந்திதேவரின் படைகளும் தோல்வியை தழுவின.

    இதனை அறிந்த இறைவன் போர்க்கோலத்துடன் அங்கே எழுந்தருளினார். அப்பெருமானை தன்னெதிரே கண்டதும் தடாதகை பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை நெறியில் நாணி தலைக்குனிந்தாள். அவரது 3-வது தனங்களில் ஒன்று மறைந்தது. இறைவனே தனக்குரிய கணவன் என்பதை உணர்ந்தாள். இறைவன், நீ மதுரைக்கு செல். இன்றைக்கு 8-ம் நாள் நாம் அங்கு வந்து உன்னை மணம் புரிவோம் என்று கூறினார். அதன்படியே தடாதகை மதுரையை அடைந்து மகளிர் அட்டமங்கலத்தோடு எதிர்கொள்ள அரண்மனைக்குள் புகுந்தாள்.

    இறைவனுக்கும், தடாதகைக்குமான திருமண நாள் குறித்து பல நாட்டு மன்னர்களுக்கும் ஓலை அனுப்பப்பட்டது. வீதிகளும், மாளிகைகளும் அலங்கரிக்கப்பட்டன. தேவர்களும், முனிவர்களும், திருமாலும் வந்திருந்தனர். மேலும் பல நாட்டு மன்னர்களும் திரண்டு வந்திருந்தனர்.

    பங்குனி உத்திர பெருநாளில் திருமணத்திற்குரிய நல்லவேளையில் இறைவன் தடாதகையை மணந்தார். சுந்தரபாண்டியன் எனும் பெயருடன் மதுரையை ஆண்டு வந்தார். அதன் பின்பு முருகனின் அவதாரமாக வந்து தோன்றியஉக்கிரகுமார பாண்டியனுக்கு முடி சூட்டி விட்டு மீனாட்சி-சுந்தரேசுவரராக இறைவடிவாயினர் என்பது இத்தல வரலாறு. (மீனை ஒத்த கண்களை உடைய தடாதகை பிராட்டியே மீனாட்சியம்மை என்ற பெயருடன் கோவில் கொண்டு விளங்குகின்றாள்.)

    தன்னை வேண்டிய பக்தர்களுக்கு அருளியவளாக மீனாட்சி அம்பிகை இத்தலத்தில் அருளுகிறாள். இதனால் தான் பெண்களின் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். தங்கள் மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், தைரியமாகப் பேசவும் மீனாட்சியே கதியென பக்தைகள் தவம் கிடக்கின்றனர்.மீனாட்சி என்பது மீன் போன்ற அழகிய கண்களை உடையவர் என்று பொருள்படும். மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயேகுஞ்சு பொறிக்கும். அதுபோல உலகத்து மக்களுக்கு தன் அருள் பார்வையால் மீனாட்சி நலம் தருபவள் என புராணங்கள் போற்றுகின்றன.

    மீன்களின் கண்கள் இமை இல்லாமல் இரவு பகலும் விழித்து கொண்டிருப்பதுபோல, தேவியும் கண்ணை இமைக்காமல் உயிர்களை காத்து வருகிறார் என்று ஹீராஸ் என்ற அறிஞர் கூறுகிறார். கருவறையில் மீனாட்சி அம்மன் இரு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியுடன் செண்டு ஏந்தியபடி காட்சி தருகிறார். கருணை பொழியும் கண்களுடன் அகிலம் எல்லாம் அருள்பாலிக்கும் அன்னையை காண கண் கோடி வேண்டும். இவரை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன்கூடிய வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒரு குடும்பத்தில் பெண்கள் கை ஓங்கி இருந்தால், அந்த வீட்டில் மீனாட்சி ஆட்சி நடக்கிறதா? என்ற பேச்சு வழக்கில் உள்ளது. அந்த அளவுக்கு மீனாட்சி அம்மன் புகழ் இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது.

    மதுரை மாநகரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. நகரின் மைய பகுதியில் மிக பிரமாண்டமான கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும்.

    மிகப்பெரிய கோவிலாக கருதப்படும் இந்த கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இந்த கோவில் 17 ஏக்கர் பரப்பளவில்அமைந்துள்ளது. கோவிலின் மொத்த நீளம் 847 அடி. அகலம் 792 அடி ஆகும்.

    ஆடி வீதியில் அமைந்துள்ள பிரகார சுவர்கிழக்கு மேற்காக 830 அடியிலும், வடக்கு கிழக்காக 730 அடியிலும் அமையப்பெற்றுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரைக்கு அழகு சேர்ப்பது அதன் கோபுரங்களும், அதில் உள்ள கலாசார சிற்பங்களும்தான்.மொத்தம் 12 கோபுரங்கள், தங்கத்திலானகோபுரங்கள் 2 என 14 கோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஒவ்வொரு திசைக்கும் ஏற்றாற்போல் 4 பிரமாண்ட வெளிப்புற கோபுரங்கள் அமையப்பெற்றுள்ளன.

    இவை அனைத்தும் 9 நிலைகள் கொண்டவை ஆகும். இந்த 4 கோபுரங்களும் ராஜகோபுரங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் "மீனாட்சி சுந்தரேசுவரர்" கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மன் மதுரையில் பிறந்ததாக கருதப்படுவதால் அம்பாளின் சன்னதியே முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் சிலை மரகதத்தால் ஆனது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவர் கடம்ப வனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும், இந்த சிவசக்தி தளத்தையும் அமைத்ததாக கருதப்படுகிறது.

    • 160 அடி உயரம் கொண்டது மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம்.
    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலை நினைத்தால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் கோபுரங்கள் தான். இந்த கோபுரங்களில் எண்ணற்ற சிற்பங்களும் உள்ளன. சிவமகாபுராணம், திருவிளையாடற்புராணம், லிங்கபுராணம், தேவி மகாத்மியம் முதலிய புராணங்கள் தொடர்பான சிற்பங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

    வெளிகோபுரங்கள்

    கோவிலின் வெளி மதிலில் 4 திசைகளிலும் 4 கோபுரங்கள் உள்ளன. இவை வெளிகோபுரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கோபுரமும் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட வாயிற் தூணோடு தொடங்கி படிப்படியாக பல அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 4 வாயில்களும் உயர்ந்த உறுதியான கதவுகளை கொண்டுள்ளது.

    இந்த கோபுரங்களின் அடிப்பகுதி கருங்கல்லினால் ஆனது. இவற்றின் உப பீடம், அதிஷ்டானம், பாதம் ஆகிய பகுதிகளில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் அழகுற அமைந்துள்ளன. கருங்கல் பகுதிக்கு மேலுள்ள சிகரப்பகுதி பல நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த பகுதி செங்கல், சாந்து இவற்றால் ஆனது. மேல்நிலைகளில் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வெளிகோபுரங்கள் நான்கும் அவை அமைந்துள்ள திசைகளை கொண்ட கிழக்கு கோபுரம், மேற்கு கோபுரம், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் என்று அழைக்கப்படுகின்றன.

    கிழக்கு கோபுரம்

    சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே கிழக்கு ஆடி வீதியை சார்ந்து அமைந்துள்ள கிழக்கு வாயிலின் மேல் அமையப்பெற்றுள்ளது. 4 கோபுரங்களிலும் இதுவே மிகவும் பழமையானதாகும். இதற்கு சுந்தரபாண்டியன் கோபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    இது கி.பி.1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும், கி.பி. 1251 முதல் 1278 வரை அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இது 153 அடி உயரம் கொண்டது. இதன் அடித்தளம் நீளம்111 அடி அகலம் 65 அடி. கிழக்கு கோபுரம் 1011 சுதைகளுடன் 9 நிலைகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

    தெற்கு கோபுரம்

    விசுவநாத நாயக்கர் காலத்தில் கி.பி.1559-ல் இந்த கோபுரம் திருச்சி நகரைச் சேர்ந்த சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியார் என்பவரால் கட்டப்பட்டது. 4 கோபுரங்களிலும் இந்த கோபுரம் உயரமானது.இந்த கோபுரத்தின் உயரம் 160 அடி, அடி தளத்தின் நீளம் 108 அடி, அகலம் 57 அடி. 9 நிலைகளை கொண்டு அமைந்துள்ள இதில் புராண கதைகளை விளக்கும் 1511 சுதை சிற்பங்கள் உள்ளன. கட்டுமானத்தின்போது இவை அமைக்கப்படவில்லை. பிற்காலத்தில் தான் அமைக்கப்பட்டது என்ற செய்தியை கி.பி.1798-ம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது.

    மேற்கு கோபுரம்

    கி.பி.1315 முதல் 1347 வரை மதுரையை ஆண்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் இதனை கட்டினான். கி.பி.1323-ல் கட்டி முடிக்கப்பெற்றது. 9 நிலைகளை கொண்டது.இதன் உயரம் 154.6 அடி. அடிதளம் நீளம் 101 அடி, அகலம் 63.6 அடி.இதில் 1124 சுதை சிற்பங்கள் உள்ளன. சித்திரை வீதியில் இருந்து வாகனங்களில் பொருட்களை கோவிலுக்குள் கொண்டுவர ஏதுவாக படிகள் இல்லாதபடி இக்கோபுரவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

    வடக்கு கோபுரம்

    இந்த கோபுரத்தின் கட்டுமான பணியை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-72) தொடங்கினார். இதனை கி.பி.1878-ல் வயிநகரம் செட்டியார் நிறைவு செய்தார். 9 நிலைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 152 அடி. அடி தளத்தின் நீளம் 111.6 அடி. அகலம் 66.6 அடி. இந்த கோபுர வாயிலின் மேற்கு பக்கம் முனியாண்டி கோவில் உள்ளது. இது ஒரு நாட்டுப்புற காவல் தெய்வமாகும்.

    இந்த கோபுரத்தை கட்டிய கிருஷ்ணப்ப நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவிலில் மேலும் பல திருப்பணிகளை செய்துள்ளார். சுந்தரேசுவரர் சன்னதி முன்னுள்ள கம்பத்தடி மண்டபம், இதன் அருகில் அமைந்துள்ள திருஞானசம்பந்தர் மண்டபம், 2-ம் பிரகார சுற்று மண்டபம், அம்மன் கோவில் நடுப்பிரகார மண்டபம் ஆகியவை இந்த மன்னர் கட்டியது ஆகும். இவரது ஆட்சி காலத்தில் தான் அரியநாத முதலியார் கி.பி.1570-ல் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டினார்.

    ராய கோபுரம்

    மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் நான்குப்புற கோபுரங்கள் தவிர இத்துடன் தொடர்புடைய கோபுரம் புதுமண்டபத்திற்கு கிழக்கே ஒன்றுண்டு. இந்த கோபுரம் திருமலைநாயக்கரால் கி.பி.17-ம் நூற்றாண்டு கட்ட தொடங்கப்பட்டது. இதன் அடித்தளம் 174 அடி நீளமும், 117 அடி அகலமும் கொண்டது. மற்றைய 4 கோபுரங்களின் அடித்தளங்களோடு ஒப்பிடும்போது இந்த கோபுரத்தின் அடித்தளம் மிக நீளமாகவும் அகலமாகவும் உள்ளது.

    இந்த கோபுரம் ராயகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஏதோ சில காரணங்களால் இந்த கோபுரம் முதல் தளத்துடன் நின்று விட்டது. முதல் தளத்தின் உயரம் 57 அடியாகும். இதுகட்டி முடிக்கப்பட்டிருந்தால் ஏனைய 4 கோபுரங்களை விட உயர்ந்த கோபுரமாக திகழ்ந்திருக்கும்.

    வெளிகோபுரங்கள் தவிர சுவாமி கோவிலில் 5 சிறிய கோபுரங்களும், அம்மன் கோவிலில் 3 சிறிய கோபுரங்களும் அம்மனுக்கும், சுவாமிக்கும் தனித்தனியாக 2 தங்க விமானங்களும் உள்ளன.

    160 அடி உயரம் கொண்ட மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம்

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோவில் எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களை தாங்குகின்றன.

    இத் திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்கு கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்கு கோபுரம் கி.பி. 1323-ம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559-ம் ஆண்டிலும், வடக்கு கோபுரம் கி.பி. 1564 முதல் 1572-ம் ஆண்டிலும் கட்டப்பட்டு முடிக்கப் பெறாமல், பின்னர் 1878-ம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தை சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப் பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்கு கோபுரம் மிக உயரமானதாகும்.

    இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570-ல் கட்டப்பெற்று 1964-ம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப்பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570-ம் ஆண்டில் கட்டப்பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப்பட்டது.

    • ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர்.
    • சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறுவது சித்திரை திருவிழா.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர்புரியும் திக்கு விஜயம் நேற்று இரவு நடைபெற்றது.

    சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.

    கோவிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல வகை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    காலை 7.45 மணி அளவில் முதலாவதாக திருக்கல்யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார்கள்.

    அதன் பின் திருக்கல்யாண வைபவங்கள் தொடங்கியது. மீனாட்சி அம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடதுபுறம் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையும் எழுந்தருளினர்.

    மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி மற்றும் தங்க காசு மாலை, பச்சைக்கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்திருந்தார்.சுவாமி சுந்தரேசுவரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். பிரியாவிடை சிவப்பு பட்டு அணிந்திருந்தார்.

    திருக்கல்யாண நிகழ்வு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டது. மேலும் சங்கல்பம், கணபதி ஹோமம், புண்ணிய வாசனம், பஞ்சகாவியம் நவதானியமிடும் பாலிகா பூஜை நடத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், மீனாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    இதையடுத்து பவளக்கனி வாய் பெருமாள், தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் இசைக்க மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    மீனாட்சி அம்மனாக கார்த்திக் பட்டரும், சுந்தரேசுவரராக பிரபு பட்டரும் வேடம் தரித்திருந்தனர். அவர்கள் இருவரும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் சுந்தரேசுவரராக வேடமணிந்திருந்த பிரபு பட்டர், வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார்.

    அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர்.

    திருமண நிகழ்ச்சியை கோவிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும் மற்றும் சித்திரை வீதி, மாசி வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரைகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டு களித்தனர்.

    சுவாமிகள் திருக்கல்யாணம் நடந்தபோது, கோவிலின் உள்ளேயும், வெளிபுறத்திலும் திரண்டிருந்த பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர்.

    திருக்கல்யாணம் முடிந்த பின்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். திருக்கல்யாணத்தை பார்த்தால் வீட்டில் திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    இதனால் சுவாமி திருக்கல்யாணத்தை காண ஏராளமானோர் திரளுவார்கள். அதேபோல் இந்த ஆண்டும் பலர் திரண்டனர். பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக சுவாமியும், அம்மனும் பழைய கல்யாண மண்டபத்தில் இன்று முழுவதும் எழுந்தருளி இருப்பார்கள்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.

    சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள். அதனை காண ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள்.

    • மீனாட்சி அம்மனுக்கு சுந்தரேசுவரருடன் இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • மீனாட்சியின் திருமணம் அன்று எப்படி நடந்தது என்று பட்டர் செந்தில் கூறியதாவது:-

    மதுரையின் அரசி மீனாட்சி அம்மனுக்கு சுந்தரேசுவரருடன் இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சியின் திருமணம் அன்று எப்படி நடந்தது என்று பட்டர் செந்தில் கூறியதாவது:-

    மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்பதால் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் இருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்தது முதல் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறைந்து காணப்பட்டது. மீனாட்சியிடம் உறுதி அளித்த நாளில் நானே நேரில் வந்து திருமணம் செய்து கொள்வேன் என்று சுந்தரேசுவரராகிய சிவபெருமான் கூறியிருந்தார்.

    அதன்படி புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சி தரும் சிவபெருமான் அன்று மணக்கோலத்தில் சுந்தரேசுவரராக மதுரை மாப்பிள்ளையாக வந்தார். இதனை காண முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தார்கள். மேலும் திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தேவசேனா உடனும் பவளக்கனிவாய் பெருமாளும் நேரில் வந்து திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இது தவிர வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷிகளும் உள்ளிட்ட முனிவர்கள் இறைவனின் திருமண கோலத்தை காண மணமேடையில் காத்து இருப்பார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மீனாட்சி திருக்கல்யாண வைபவம் இன்று காலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிகழ இருக்கிறது.

    மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் இருப்பார். அவர் சுந்தரேசுவரரை விட்டு ஒரு கணமும் பிரியாத அம்மன். அதனால் தான் அந்த அம்மனுக்கு பிரியாவிடை அம்மன் என்று பெயர் வந்தது. மீனாட்சி அம்மனுக்கு பட்டத்தரசியாக மக்களை காக்கும் பொறுப்பு அதிகம் இருக்கிறது. அதே நேரத்தில் தன்னுடைய கணவரையும் பாதுகாக்க வேண்டும். ஆதலால் கணவரின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான் பிரியாவிடை அன்னையாக காட்சி தருகிறாள்.

    ஆட்சியையும் மக்களையும் கவனிக்கும் தன்னால் கணவரை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை மீனாட்சி அம்மனுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் பிரியாவிடை உருவத்தில் சொக்கநாதருடன் கூடவே உற்சவ அன்னையாக பிரியாவிடை நாயகியாக வலம் வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று இரவு திக்குவிஜயம் நடைபெறுகிறது.
    • நாளை இரவு சுவாமி அம்பாள் மணக்கோலத்தில் வீதி உலா வருகின்றனர்.

    மதுரை நகரின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவில் நேற்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. இன்று இரவு திக்குவிஜயம் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (2-ந் தேதி) கோலாகலமாக நடக்கிறது.

    கோவிலின் வடக்கு-மேற்கு ஆடி வீதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருமணம் நடக்கும் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    நாளை காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆகியோர் பல்லக்கில் புறப்பட்டு வந்தனர்.

    முன்னதாக நாளை அதிகாலை 4 மணியளவில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை இரவு சுவாமி அம்பாள் மணக்கோலத்தில் யானை-ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த கோவில் மற்றும் சித்திரை, மாசி வீதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    பக்தர்கள் தங்களது வாகனங்களை எந்த எந்த பகுதிகளில் நிறுத்துவது தொடர்பாக மாநகர போலீசார் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு போக்குவரத்து இடையூறை தவிர்க்கும் வகையில், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள நான்கு ஆவணி, மாசி, வெளி வீதிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படி இன்று இரவு 11 மணியில் இருந்து ஆவணி மூலவீதிகளில் வாகனங்கள் செல்லவோ, நிறுத்தவோ அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் அன்று அனுமதி அட்டை இல்லாத இருசக்கர-நான்கு சக்கர வாகனங்கள் கிழக்கு, தெற்கு, வடக்கு மாசி வீதிகளில் நிறுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

    மஞ்சள் நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் வடக்கு-மேலமாசி வீதி சந்திப்பு வழியாக, தானப்பமுதலி தெருவில் மேற்கு ஆவணி மூலவீதியிலும், பிங்க் நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற பாஸ் வைத்து இருப்பவர்கள் கட்டப்பொம்மன் சிலை, நேதாஜி ரோடு வழியாக வாகனங்கள் நிறுத்த அனுமதி தரப்பட்டு உள்ளது. கீழ ஆவணி மூலவீதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.

    இது தவிர மற்ற மாசி வீதிகளில் பகல் 12 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • நாளை திருக்கல்யாணம் நடக்க இருப்பதால் மதுரை விழாக்காலம் கொண்டுள்ளது.
    • 3-ந் தேதி தேரோட்டம் நடக்க இருக்கிறது.

    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டனர்.

    ஆவணி முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் மதுரையை ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    மீனாட்சி அம்மனுக்கு முடி சூட்டும் வைபவம் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் 8-ம் நாளில் நடக்கும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று இரவு நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை தங்கப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளி கீழச்சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி காட்சி அளித்தனர். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் புறப்பட்டு கோவிலை அடைந்தனர்.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை கூறும்வகையில் பட்டாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்தன.

    இந்த நிகழ்வுகள் அம்மன் சன்னதி ஆறுகால பீடத்தில் தொடங்கியது. காப்பு கட்டிய சரவணன் பட்டர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் பட்டாபிஷேக பூஜைகளை தொடங்கினர். இரவு 7.20 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மீனாட்சி அம்மனுக்கு அந்த வைர கிரீடம் சூட்டி நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு தங்கத்தினால் ஆன செங்கோலும் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்த கண்கொள்ளா காட்சியை தரிசித்தனர்.

    அப்போது மீனாட்சி அம்மனுக்கு மீன்கொடியும் அளிக்கப்பட்டது. இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்பு மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியாக கோவில் துணை கமிஷனர் அருணாசலத்திடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார்.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தார்.

    பட்டத்து அரசியான மீனாட்சியை காண 4 மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதன் மூலம் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியது.

    பட்டத்து அரசியாக பொறுப்பேற்ற பின்பு மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வை நினைவூட்டும் திக்கு விஜயம் நிகழ்ச்சி, இன்று (திங்கட்கிழமை) மாசி வீதிகளில் நடக்கிறது. அதை தொடர்ந்து நாளை (2-ந் தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    திருக்கல்யாணம் நடைபெறும் வடக்கு, மேற்கு ஆடி வீதிகளில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருக்கல்யாண மேடை ரூ.25 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    திருக்கல்யாணம், அதற்கு மறுநாள் (3-ந் தேதி) தேரோட்டமும் நடக்க இருக்கிறது. 4-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவை, 5-ந் தேதி வைகையில் எழுந்தருளல் என முக்கிய நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • 1-ந் தேதி முதல் 6-ந்தேதி வரை திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தங்கத்தேர் புறப்பாடு இல்லை.
    • திருக்கல்யாணத்தில் பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்கிறார்.

    மீனாட்சி பட்டணமாக மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 2-ந்தேதி காலை 8.35 மணிக்கு மேல் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது. மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்து கொடுப்பது வரலாறாக இருந்து வருகிறது. இதனையொட்டி மீனாட்சி அம்மன் அருளாட்சி புரியும் மதுரைக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து வருகின்ற 1-ந்தேதி மாலை 5 மணிக்கு மேளதாளங்கள் முழங்க பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு வருகிறார்.

    இதேவேளையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் புறப்பட்டு மீனாட்சி பட்டணத்திற்கு வருகிறார். திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை வரை வழிநெடுகிலுமாக ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப்பெருமான் தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாளை வழிபடுகின்றனர்.

    2-ந்தேதி மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்கிறார். இதே வேளையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் திருக்கல்யாணத்தில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 5 -ந்தேதி வரை மதுரையிலே தெய்வானையுடன் முருகப்பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    5-ந்தேதி மாலை 5 மணியளவில் நகை வீதியில் இருந்து பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும், பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு தன் இருப்பிடமான திருப்பரங்குன்றம் வருகின்றனர். மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரை வழி நெடுகிலும் பக்தர்கள் திருக்கண் அமைத்து வழிபடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தங்கத்தேர் உலா நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தேர் உலாவின் போது உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி தங்கத்தேரில் எழுந்தருளி வலம் வருகிறார்.

    இந்த நிலையில் வருகின்ற 1-ந் தேதி மதுரைக்கு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி புறப்பட்டு செல்வதால் அன்று முதல் 6-ந்தேதி வரை கோவிலுக்குள் தங்கத்தேர் புறப்பாடு இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • நாளை இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது.

    மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். ஏன் என்றால் இங்குள்ள மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து நாட்டை ஆண்டு, பட்டத்து அரசியாக மகுடம் சூட்டி, தேவதேவா்களை போரில் வென்று சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு மதுரையை ஆண்ட மகாராணி மீனாட்சிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது.

    அந்த 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். அந்த ஒரு மாதமும் மதுரை விழாக்கோலம் பூண்டு இருக்கும். மேலும் இந்த திருவிழாவிற்காக ஒரு மாதத்திற்கு முன்பே கோவில் திருவிழாவிற்கான வேலைகள் தொடங்கி விடும்.

    சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும். காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி சுந்தரேசுவரா் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். வயதானவா்கள் முதல் அனைத்து ஜீவராசிகளும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். எனவே நம்மை தேடி வரும் இறைவனை காண மாசி வீதி முழுவதும் மக்கள் கூட்டமாக கூடி வரவேற்பார்கள். இது தவிர சுவாமிக்கு முன்னால் வரும் டங்கா மாடு, யானை, ஒட்டகம் மற்றும் சிறுவா், சிறுமியா்கள் இறைவனை வரவேற்று ஆடி பாடி வரும் காட்சியை காண உலகம் முழுவதும் இருந்தும் பக்தா்கள் கூட்டம் இந்நாளில் வந்து விடும்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடை பெறும் விழாவில் 6-ம் நாளான நேற்று இரவு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை யானை மகால் முன்பு நடந்தது. அப்போது தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள். பின்னர் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. இந்த விழா நாளை (30-ந் தேதி) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னத்தியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. எனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

    சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் திருக்கல்யாணத்தை அமர்ந்து பார்ப்பதற்கு பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்த வருகிறது. இது தவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருடன் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

    • திருக்கல்யாணம் 2-ந் தேதி நடக்கிறது.
    • திருக்கல்யாணத்திற்கு சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்வான வருகிற 30-ந் தேதி பட்டாபிஷேகம், 2-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், 3-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இதில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள்.

    கோவிலின் உள்ளே நடைபெறும் திருக்கல்யாணத்திற்கு சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் கோவிலுக்கு வருகை தருவார்கள். இது தவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சுவாமியை பார்க்க பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் கோவிலுக்கு வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து போலீசார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று காலை மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் போலீசார் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் திருக்கல்யாணம் நடைபெறும் பகுதி மற்றும் அங்கு பக்தர்கள் எந்தெந்த வழிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பக்தர்கள் எவ்வித தொந்தரவு செய்யாமல் அனைவரும் சுவாமி தரிசனம் செய்யும் வண்ணம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இது தவிர திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்கள் அவர்களது வாகனங்களை எங்கு நிறுத்தலாம். முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இதற்காக ஆவணி மூலவீதிகள், மாசி வீதிகள் மற்றும் மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று கமிஷனர் ஆய்வு செய்தார். அதில் மிகவும் முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் மேலஆவணி மூலவீதி தெற்கு பகுதியிலும், அதில் பிங்க் நிற பாஸ் வைத்திருப்பவர்கள் வடக்கு ஆவணி மூலவீதியிலும், நீல நிற பாஸ் வைத்திருப்பவர்கள் தெற்கு ஆவணி மூலவீதியிலும், பொதுமக்கள் வாகனங்கள் மேற்கு, தெற்கு, வடக்கு மாசி வீதிகளில் நிறுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தேர்திருவிழா நடைபெறும் போதும் பொதுமக்கள் வாகனங்கள் மாரட் வீதிகளில் நிறுத்தலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

    • ஒரே நாளில் 850 பேர் டிக்கெட்டை பெற்று சென்றனர்.
    • ஒரே நபர் 500, 200 ரூபாய் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியாது.

    மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு ஆகும். இந்த மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் அனுமதிக்கப்பட உள்ளனர். அதில் 500 ரூபாய் டிக்கெட்டில் 2,500 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 3,200 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். 500 ரூபாய் பதிவில் 2 டிக்கெட்டுகளும், 200 ரூபாய் பதிவில் 3 டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் 500, 200 ரூபாய் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியாது.

    இந்த கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைய தளம் மூலம் கடந்த 22-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 500 ரூபாய் டிக்கெட்டில் 3,917 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 1876 பேர் என மொத்தம் 5,793 பேர்முன்பதிவு செய்திருந்தனர்.

    டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு நேற்று முன்தினம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டணச்சீட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் காண்பித்து பணம் செலுத்தி உரிய நுழைவுக் கட்டண டிக்கெட்டை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    நேற்று முதல் திருக்கல்யாண டிக்கெட் வினியோகம் தொடங்கியது. அதில் டிக்கெட் ஒதுக்கீடு செய்தவர்கள் தங்களுக்கு வந்த குறுந்தகவலை காண்பித்து டிக்கெட்டை பெற்று சென்றனர்.

    முதல் நாளான நேற்று இரவு வரை ரூ.500 டிக்கெட் 370 பேரும், ரூ.200 ரூபாய் டிக்கெட்டை 480 பேரும் பெற்று சென்றனர். வெளியூரில் வசிப்பவர்கள் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம். திருக்கல்யாண டிக்கெட்டை பெறுபவர்கள் நேற்று காலை முதல் கோவிலில் கூட்டம், கூட்டமாக வந்து வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

    • நாளை முதல் 30-ந் தேதி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
    • வெளியூரில் வசிப்பவர்கள் 1-ந் தேதி கட்டணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

    மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் ஆகும். இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 டிக்கெட்டுகள் முன்பதிவு நடந்தது.

    தெற்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளத்தில் maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

    பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி வரவேற்பு அறையில் மேற்படி நாட்களில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

    அதன்படி நேற்று முன்பதிவு செய்ய கடைசி நாளாகும். நேற்று இரவு வரை 500 ரூபாய் டிக்கெட்டில் 3,917 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 1876 பேர் என மொத்தம் 5,793 பேர்முன்பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த விண்ணப்பங்களுக்கு இன்று(26-ந் தேதி) குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    அவ்வாறு உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள் நாளை முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் 12-ந் தேதி மாலை 5 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் காண்பித்து பணம் செலுத்தி உரிய நுழைவு கட்டண டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். வெளியூரில் வசிப்பவர்கள் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×