search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராயர் கிரீடம் சூட்டி செங்கோல் வழங்கப்பட்டது: பட்டாபிஷேக திருக்கோலத்தில் மீனாட்சி அம்மன் பவனி
    X

    செங்கோல் ஏந்திய மீனாட்சி அம்மனின் கண்கொள்ளா காட்சி, மீனாட்சி அம்மனை கை பாரமாக சீர்தாங்கிகள் தூக்கி மகிழ்ந்தனர்.


    ராயர் கிரீடம் சூட்டி செங்கோல் வழங்கப்பட்டது: பட்டாபிஷேக திருக்கோலத்தில் மீனாட்சி அம்மன் பவனி

    • நாளை திருக்கல்யாணம் நடக்க இருப்பதால் மதுரை விழாக்காலம் கொண்டுள்ளது.
    • 3-ந் தேதி தேரோட்டம் நடக்க இருக்கிறது.

    மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டனர்.

    ஆவணி முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரரும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் மதுரையை ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    மீனாட்சி அம்மனுக்கு முடி சூட்டும் வைபவம் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் 8-ம் நாளில் நடக்கும்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று இரவு நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை தங்கப்பல்லக்கில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் எழுந்தருளி கீழச்சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி வீதி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி காட்சி அளித்தனர். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் புறப்பட்டு கோவிலை அடைந்தனர்.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குவதை கூறும்வகையில் பட்டாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்தன.

    இந்த நிகழ்வுகள் அம்மன் சன்னதி ஆறுகால பீடத்தில் தொடங்கியது. காப்பு கட்டிய சரவணன் பட்டர் மற்றும் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் ஆகியோர் பட்டாபிஷேக பூஜைகளை தொடங்கினர். இரவு 7.20 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மீனாட்சி அம்மனுக்கு அந்த வைர கிரீடம் சூட்டி நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு தங்கத்தினால் ஆன செங்கோலும் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்த கண்கொள்ளா காட்சியை தரிசித்தனர்.

    அப்போது மீனாட்சி அம்மனுக்கு மீன்கொடியும் அளிக்கப்பட்டது. இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம் பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்பு மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், அம்மன் பிரதிநிதியாக கோவில் துணை கமிஷனர் அருணாசலத்திடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் கொடுத்தார்.

    அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தார்.

    பட்டத்து அரசியான மீனாட்சியை காண 4 மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதன் மூலம் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியது.

    பட்டத்து அரசியாக பொறுப்பேற்ற பின்பு மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வை நினைவூட்டும் திக்கு விஜயம் நிகழ்ச்சி, இன்று (திங்கட்கிழமை) மாசி வீதிகளில் நடக்கிறது. அதை தொடர்ந்து நாளை (2-ந் தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    திருக்கல்யாணம் நடைபெறும் வடக்கு, மேற்கு ஆடி வீதிகளில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருக்கல்யாண மேடை ரூ.25 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    திருக்கல்யாணம், அதற்கு மறுநாள் (3-ந் தேதி) தேரோட்டமும் நடக்க இருக்கிறது. 4-ந் தேதி கள்ளழகர் எதிர்சேவை, 5-ந் தேதி வைகையில் எழுந்தருளல் என முக்கிய நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதால் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    Next Story
    ×