search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MBBS"

    • எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.
    • ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள காரை கிராமம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்-மஞ்சுளா தம்பதியினர். நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இந்த தம்பதியின் மகள் கோகிலா.

    ஊசிபாசி மணிகள் விற்று பிழைப்பு நடத்தி வரும் சுப்பிரமணியன் தனது மகளை படிப்பில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் படிக்க வைத்தார்.

    அதற்கேற்ப தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்ற நிலையில் கோகிலாவும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பிரதிபலனாக தற்போது நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் பெற்று நரிக்குறவர் சமுதாயத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவி என்ற பெருமையை கொண்டுள்ளார்.

    பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 459 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த கோகிலாவுக்கு தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது.

    பழங்குடியின் மாணவிகள் தேர்ச்சிக்கு 109 மதிப்பெண்கள் போதுமானது என்ற நிலையில் மாணவி கோகிலா 161 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். சராசரி மாணவர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மதிப்பெண்களாக இருந்தபோதிலும் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பால் 161 மதிப்பெண்களை பெற முடிந்தது என்று மாணவி கோகிலா பெருமையுடன் கூறினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊசிபாசி விற்று என்னை படிக்க வைத்த பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், கல்வி கற்க வறுமையோ, தான் சார்ந்த சமுதாயமோ ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நீட் தேர்வை நான் தன்னம்பிக்கையுடன் எதிர் கொண்டேன். அதற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது. எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்.

    தற்போது தான் பெற்ற கல்வியை எனது சமுதாயத்தை சேர்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் நரிக்குறவ சமூக மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகிறேன். மற்ற நேரங்களில் பெற்றோருக்கு உதவியாக ஊசிபாசி தயாரித்து கொடுக்கிறேன். ஊசிபாதி பிடித்த கையில் ஸ்டெத் தஸ்கோப்பை பிடிக்கும் காலம் வரும் என்று எதிர் பார்க்கிறேன்.

    அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுவேன் என்றார்.

    • நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பு 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
    • 3-வது கட்டம் 30 மாதங்கள் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. நான்கரை ஆண்டுகள் காலஅளவு கொண்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான பாடத்திட்டத்தில் 2023-2024-ம் கல்வி ஆண்டு முதல் புதிய நடைமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் நாளில் இருந்தே ஒரு குடும்பத்தை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை இலவசமாக செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்கரை ஆண்டுகள் மருத்துவ படிப்பு 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் 2 கட்டங்கள் தலா 12 மாதங்கள் என்று பிரிக்கப்பட்டு உள்ளது. 3-வது கட்டம் 30 மாதங்கள் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.

    மருத்துவ படிப்பு தேர்வு களில் தோல்வியடையும் மாணவர்கள் 3 முதல் 6 வாரங்களுக்குள் மறு தேர்வு எழுதும் வகையில் மாற்றங் கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதன் மூலம் நடைமுறையில் இருந்த துணைப்பிரிவு என்ற திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு 500 மதிப்பெண்ணுக்கு மேல் 80 ஆயிரம் மாணவர்கள் பெற்றனர்.
    • கூடுதல் இடங்கள் வரவில்லை என்றால் 8 முதல் 10 மதிப்பெண் வரை அதிகரிக்கும்.

    சென்னை:

    நாடு முழுவதும் கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 47 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 78 ஆயிரத்து 693 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 54.55 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட ஒப்பிடும் போது தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தேர்ச்சி விகிதம் குறைந்த போதிலும் உயர் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அகில இந்திய அளவில் 600 மார்க்கிற்கு மேல் பெற்றவர்கள் கடந்த வருடம் 26 ஆயிரம் பேர் இருந்தனர். இந்த ஆண்டு 28 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர்.

    இதேபோல கடந்த ஆண்டு 500 மதிப்பெண்ணுக்கு மேல் 80 ஆயிரம் மாணவர்கள் பெற்றனர். இந்த ஆண்டு இது 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. 25 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக உயர் மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். இதனால் மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் 5 முதல் 10 வரை உயர வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து கல்வியாளர் சேலம் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    இந்த வருடம் நீட் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் எம்.பி.பி.எஸ். கட் ஆப் மார்க் 5 முதல் 10 வரை உயர வாய்ப்பு உள்ளது.

    மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் வரும் பட்சத்தில் கட்-ஆப் மதிப் பெண் 3 முதல் 5 வரை உயரக் கூடும். கூடுதல் இடங்கள் வரவில்லை என்றால் 8 முதல் 10 மதிப்பெண் வரை அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களிடையே மருத்துவம் மிகவும் பிரபலமான படிப்பாக உள்ளது.
    • ரஷ்ய மருத்துவ படிப்புகள் மாணவர்களுக்கு கோட்பாட்டு அறிவு, நடைமுறை திறன்களில் வலுவான அடித்தளத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மருத்துவ கல்வி படிப்பில் உலக அளவில் ரஷியா 8- வது இடத்தை பெற்று திகழ்கிறது.

    இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை ரஷ்யா கடைப்பிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத்துவக் கல்வியைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா விருப்பமான தேர்வுகளில் முதன்மையாக உள்ளது.

    2023-24-ம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 5000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஒதுக்கி உள்ளன.

    இந்த மருத்துவப் படிப்புகளுக்கான நேரடி மாணவர்கள் சேர்க்கை இன்றும் நாளையும் சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது.

    இதையொட்டி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சி நடந்தது. இந்தக் கண்காட்சியில் ரஷ்யாவின் முன்னணி கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    இன்று நடந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அதிகாரிகள் ரஷியாவில் மருத்துவ படிப்பு படிப்பதினால் கிடைக்கும் நன்மைகள், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார்கள்.

    இது தொடர்பாக ரஷ்யாவின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் (நீட் ) தேர்ச்சி பெற்ற, 12-ம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவர்கள் (எஸ்.சி./எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40 சதவீதம் மட்டுமே), ரஷ்யா மருத்துவத்தில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை.

    ஆங்கிலம் வழியிலான படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் மற்றும் படிக்கும் ஊரைப் பொறுத்து, படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு 3500 முதல் 6000 அமெரிக்க டாலர் வரை செலவாகும். இருந்தாலும் கடந்த காலங்களைப் போலவே, ரஷ்ய அரசாங்கத்தின் வருடாந்திர உதவித்தொகை திட்டம் வழியாக இந்த ஆண்டும் 100 இந்திய மாணவர்களுக்கு 100 சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் ரஷ்யாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, பட்ட மேற்படிப்புத் திட்டங்களை இலவசமாக அவர்கள் படிக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது குறித்து சென்னையில் உள்ள தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச் கூறுகையில், "உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்தர மருத்துவக் கல்வியை வழங்குவதில் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் நீண்டகாலமாக நற்பெயரை பெற்றுள்ளன. விரிவான பாடத்திட்டம், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், மேம்பட்ட வசதிகள் ஆகியவற்றின் மூலம் தங்கள் நாட்டில் மருத்துவக் கல்வியை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு வலுவான கற்றல் சூழலை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள்.

    ரஷ்யாவில் உயர் கல்விக்கான செலவு ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் ரஷ்யக் கூட்டமைப்பு அரசாங்கத்தால் கல்விக்கு அதிக மானியம் வழங்கப்படுகிறது. சர்வதேச விண்ணப்பதாரர்களுக்கான அரசாங்க ஆதரவு, தகவமைப்புத் திட்டங்களை ரஷ்ய அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இந்திய மாணவர்களுக்கான சிறப்புத் தகவமைப்பு திட்டங்கள் மூலம் பல்கலைக்கழகங்களும் பல உதவிகளை வழங்கி வருகின்றன"என்றார்.

    ரஷ்யாவில் மருத்துவக் கல்வி பற்றி ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சி. ரவிச்சந்திரன் கூறுகையில், "ரஷ்யா முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் 200 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களிடையே மருத்துவம் மிகவும் பிரபலமான படிப்பாக உள்ளது. தற்போது, 70 ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையான அந்நாட்டு எம்.டி. படிப்பை அனைத்து ரஷ்யப் பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன. இந்திய தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களையும் கடைபிடித்து வருகின்றன.

    உலகக் கல்வி தரவரிசையில் ரஷ்ய உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. ரஷ்ய மருத்துவ படிப்புகள் மாணவர்களுக்கு கோட்பாட்டு அறிவு, நடைமுறை திறன்களில் வலுவான அடித்தளத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் சுகாதாரத் துறை சார்ந்த சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள்.

    2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை / முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு தாங்கள் பெற்றுள்ள தகுதி சார்ந்த சான்றுகளையும் அவர்கள் கொண்டு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையை தொடர்ந்து வருகிற 16-ந்தேதி மதுரையிலும், 17-ந்தேதி திருச்சியிலும், சேலத்தில் 18-ந்தேதியும், கோவையில் 19-ந்தேதியும் ரஷிய கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது.

    • கல்வி கற்க எப்போதும் யாருக்கும் வயது தடையாக இருந்தது இல்லை.
    • கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி சுஜாதா ஜடா வெற்றி பெற்றார்.

    காரைக்கால் :

    நம்மில் பலருக்கு டாக்டராக வேண்டும் எனற கனவு இருந்தாலும், அதற்கான தகுதி இருந்தால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்து சேர்ந்து படிப்பதுடன் மருத்துவ சேவை செய்வதில் சாதிக்க முடியும். அதேநேரத்தில் படிப்புக்கு வயது தடை இல்லை என்பது பலரால் பல வகைகளில் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. அந்தவகையில் 63 வயதில் பெண் ஒருவர் காரைக்காலில் எம்.பி.பி.எஸ். படித்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    50 வயதாகி விட்டாலே பலர் ஓய்வை தேடும் இந்த காலத்தில், மக்களுக்கு சேவை செய்வதற்காக 63 வயதான சுஜாதா ஜடா, என்ற பெண், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருவது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த ருசிகரம் குறித்த விவரம் வருமாறு:

    மத்தியப்பிரதேச மாநிலம் அம்லா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யாதவ் (66), இவர் பிரபல தொழிலதிபர். இவரது மனைவி சுஜாதா ஜடா (63). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர், மத்திய பிரதேசத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், ராணுவத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற சுஜாதா ஜடா, தேசிய வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் சுஜாதா ஜடா, ஓய்வு காலத்தை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மாற்ற விரும்பினார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது டாக்டர் படிப்பு. அதற்கு முன்புபோல் மருத்துவக் கல்லூரியில் உடனே சேர்ந்து விட முடியாது என்பதால் நீட் தேர்வுக்கு தயாரானார்.

    அதன் விளைவாக கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி சுஜாதா ஜடா வெற்றி பெற்றார். இதனை அடுத்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள விநாயகா மிஷின் மருத்துவக்கல்லூரியில் சுஜாதா ஜடாவிற்கு இடம் கிடைத்தது. தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியாக சுஜாதா ஜடா கல்லூரியில் நுழைந்தார்.

    வகுப்பறைக்கு சென்ற சுஜாதா ஜடாவை, கல்லூரி மாணவர்கள் புதிய பேராசிரியை என கருதி கைத்தட்டி வரவேற்றனர். ஆனால், சுஜாதா ஜடாவோ தனது இயல்பான புன்னகையில், நானும் உங்களைபோல் ஒரு மாணவிதான் என்றதும் முதலில் மாணவர்கள் நம்ப மறுத்தனர்.

    பின்னர், மாணவிக்கான அடையாள அட்டையை அவர் காட்டியதும், சக மாணவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். பெற்றோர் வயதில் ஒரு மாணவியா? என ஆச்சரியமாக இருந்தாலும், போகபோக சக மாணவியை போல், அனைவரும் அவருடன் பழகி வருகின்றனர். இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுஜாதா ஜடாவுக்கு வகுப்பு எடுக்கும் மருத்துவ பேராசிரியருக்கு வயது 48.

    தனது படிப்பு குறித்து சுஜாதா ஜடா கூறுகையில், ''ராணுவத்திலும், அதன்பிறகு வங்கியிலும் வேலை பார்த்தபோதிலும் எனது கவனம் மக்கள் சேவை என்பதே என்றிருக்கும். கல்வி கற்க எப்போதும் யாருக்கும் வயது தடையாக இருந்தது இல்லை. தன்னம்பிக்கை இருந்தால் போதும். தற்போது எனக்கு வயது 63 என்றாலும் அதை நான் எப்போதும் உணர்ந்தது இல்லை. என் நோக்கமெல்லாம், மருத்துவமனையே இல்லாத எனது கிராமத்தில், சிறு மருத்துவமனை அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்காகதான் முறைப்படி டாக்டருக்கு படித்து சேவை செய்ய உள்ளேன்'' என்றார்.

    சுஜாதா ஜடாவின் டாக்டர் கனவு நிறைவேற பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தது.
    • 2014-ம் ஆண்டு 31 ஆயிரத்து 185 ஆக இருந்த முதுநிலை படிப்புகள், 65 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ படிப்புக்கான இடங்களும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட எண்ணிக்கையில் மிகவும் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்ததாகவும், தற்போது அது 660 ஆக உயர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ளார். இது 71 சதவீத உயர்வு ஆகும்.

    இதைப்போல 2014-க்கு முன்பு 51 ஆயிரத்து 348 ஆக இருந்த எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான இடங்கள் தற்போது 97 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து ஆயிரத்து 43 இடங்களாக உயர்ந்துள்ளது.

    இதில் 52 ஆயிரத்து 778 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 48 ஆயிரத்து 265 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களும் 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து உள்ளது. 2014-ம் ஆண்டு 31 ஆயிரத்து 185 ஆக இருந்த முதுநிலை படிப்புகள், 65 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த தகவல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா, "காலம் மாறியதால் நாடு மாறியது" என குறிப்பிட்டு பெருமைப்பட்டுள்ளார்.

    • தமிழகத்தில் மட்டும் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
    • அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்து அதனை தாமதமாக சரண்டர் செய்வதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

    ஆனாலும் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் நிரம்பாமல் காலியாக உள்ளன. அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 7,378 உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15 சதவீதம் போல மீதமுள்ள இடங்கள் தமிழக அரசின் மூலம் நிரப்பப்படுகின்றன.

    இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறையை பின்பற்றி தான் அனைத்து மாநிலங்களிலும் கலந்தாய்வு நடத்தப்படுகின்றன.

    தமிழகத்திலும் அதன்படி கலந்தாய்வு நடந்து வருகிறது. 2-வது கட்ட கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் சேர்ந்து வருகிறார்கள். அதன் பின்னர் ஏற்படும் காலி இடங்களும் அடுத்த கட்டமாக நிரப்பப்படும்.

    இந்த நிலையில் மத்திய அரசின் தவறான கொள்கையால் நாடு முழுவதும் 5,931 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. 4,299 எம்.பி.பி.எஸ். இடங்களும் 1,280 பி.டி.எஸ். இடங்களும் 352 பி.எஸ்.சி. நர்சிங் இடங்களும் காலியாக கிடக்கின்றன.

    தமிழகத்தில் மட்டும் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 345, நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 318, என்.ஆர்.ஐ. 201, எய்ம்ஸ் மதுரை 24, இ.எஸ்.ஐ.சி-4 காலியாக உள்ளன.

    அகில இந்திய ஒதுக்கீட்டில் சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி, மதுரை மருத்துவக்கல்லூரி போன்ற சிறப்பு வாய்ந்த கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளன.

    இந்த காலி இடங்கள் அடுத்ததாக நடைபெறும் கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறான விதிமுறைகளால் 2021-ல் ஏற்பட்ட 24 காலி இடங்கள் மீண்டும் காலி இடமாக உள்ளது.

    இந்த வருடம் தமிழ்நாட்டில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்ட பின்னர் நடந்த முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த பிறகு 600 இடங்கள் காலியாக இருந்தன.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்து அதனை தாமதமாக சரண்டர் செய்வதால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒதுக்கப்படுகின்ற இடங்கள் கடைசி வரை நிரம்பாமலேயே போய்விடுகின்றன.

    இதனால் அந்த இடங்களில் சேர்த்து படிக்க தகுதி பெறும் மாணவர்களுக்கு கிடைக்காமல் வாய்ப்பு பறி போகிறது. இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மாற்றி அமைத்தால் தான் மருத்துவ இடங்கள் காலியாகாமல் போவதை தடுக்க முடியும்.

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கடைசி நேரத்தில் மருத்துவ இடம் கிடைக்காமல் வாய்ப்பு இழக்கின்றனர். அவர்களுக்கு இந்த காலி இடங்களை ஒதுக்கினால் பயன் அடைவார்கள் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

    • 15-ந்தேதி முதல் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.
    • 15-ந்தேதி முதல் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.

    சென்னை :

    மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், வருகிற 15-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. இதற்கிடையில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடவும் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    அதற்கு கடிவாளம் போடும்வகையில் தமிழக அரசு நேற்று கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடவும் அதிகமாக வாங்கினால், கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், தனியார் சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் டீன்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    * சுயநிதி கல்லூரிகள், 2022-23 கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சுற்றுகளுக்கான கவுன்சிலிங்குக்கு மறுப்பு தெரிவித்தாலோ, கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிடவும் கூடுதலாக வசூலித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    * தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை சுயநிதி கல்லூரிகள் கண்டிப்புடன் பின்பற்றவேண்டும்.

    * இந்தச் சூழலில், மாணவர்களிடம் இருந்து ஏதாவது குறிப்பிட்ட புகார்கள் பெறப்பட்டு உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து அல்லது திரும்பப்பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    * தேர்வுக்குழு விதித்த விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று சுயநிதி கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    * மாணவர் சேர்க்கையில் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மீறும்பட்சத்தில், அது கடுமையானதாக கவனத்தில்கொண்டு, சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள் இடங்களுக்கு 47 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
    • இன்று நடந்த நேரடி கலந்தாய்வில் குறைந்த அளவில் மாணவ-மாணவிகள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 848 போக மீதமுள்ள 6067 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    சிறப்பு பிரிவினருக்கு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் நேரடியாக இன்று நடந்தது. விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது.

    சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள் இடங்களுக்கு 47 பேர் மட்டுமே வந்திருந்தனர். மற்ற பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக மாணவ-மாணவிகள் வந்தனர்.

    சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கிய நிலையில் பொதுப்பிரிவினருக்கும் ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் தொடங்கியது. இன்று முதல் 25-ந்தேதி வரை பொது கலந்தாய்வு நடக்கிறது.

    சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) நேரடியாக நடக்கிறது. 454 எம்.பி.பி.எஸ். இடங்கள், 104 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 558 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை சுயநிதி நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இன்று நடந்த நேரடி கலந்தாய்வில் குறைந்த அளவில் மாணவ-மாணவிகள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு கடிதத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாலையில் வழங்குகிறார்.

    • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேருவதற்காக 2,695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • 20-ந்தேதி காலை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான 558 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்படும். 30-ந்தேதி மாணவர் சேர்க்கையின் முதல் சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 6-ந்தேதி வரை நடைபெற்றது.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13ஆயிரத்து 457 பேரும் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை நிறைவடைந்துள்ளது.

    இதையடுத்து, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான தர வரிசைப்பட்டியல் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். அப்போது கலந்தாய்வு தேதிகளையும் அவர் அறிவித்தார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தபோது, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேருவதற்காக 2,695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 454 எம்.பி.பி.எஸ், 104 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. வருகிற 19, 20 ஆகிய நாட்களில் சிறப்பு பிரிவினருக்கான நேர்காணல் நடைபெறுகிறது. 20-ந்தேதி காலை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான 558 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்படும். 30-ந்தேதி மாணவர் சேர்க்கையின் முதல் சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி ஆகும்.

    சென்னை:

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அதன்படி, இணையதள விண்ணப்ப பதிவு 22-ம் தேதி முதல் தொடங்குகிறது.

    விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி ஆகும். இது தொடர்பான இணைய தள முகவரிகள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என தெரிவித்துள்ளார்.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கூடுதலாக 350 இடங்களை ஒதுக்கீடு செய்து இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 900 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஐ.ஆர்.டி. பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் என மொத்தம் 3 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இதில் ஐ.ஆர்.டி. பெருந்துறை இடங்களை அரசின் கலந்தாய்வு மூலம் தனியாக நிரப்பப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது கூடுதலாக எம்.பி.பி.எஸ். இடங்கள் கேட்டு தமிழக அரசு இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பியது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தற்போது எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கூடுதல் இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    மதுரை மற்றும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே 150 இடங்கள் இருக்கின்றன. இந்த 2 மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக தலா 100 இடங்களும், கரூரில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் மருத்துவ கல்லூரிக்கு 150 இடங்களும் என மொத்தம் 350 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்கீடு செய்து இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    நீட் தேர்வு முடிவு வெளியானதும், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகும். அதை தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்பட்டு, எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படும். கூடுதலாக ஒப்புதல் பெறப்பட்டு இருக்கும் இந்த 350 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் இந்த கல்வி ஆண்டிலேயே கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×