search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்.பி.பி.எஸ். பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது
    X

    எம்.பி.பி.எஸ். பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

    • சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள் இடங்களுக்கு 47 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
    • இன்று நடந்த நேரடி கலந்தாய்வில் குறைந்த அளவில் மாணவ-மாணவிகள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 848 போக மீதமுள்ள 6067 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    சிறப்பு பிரிவினருக்கு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் நேரடியாக இன்று நடந்தது. விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது.

    சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள் இடங்களுக்கு 47 பேர் மட்டுமே வந்திருந்தனர். மற்ற பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக மாணவ-மாணவிகள் வந்தனர்.

    சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கிய நிலையில் பொதுப்பிரிவினருக்கும் ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் தொடங்கியது. இன்று முதல் 25-ந்தேதி வரை பொது கலந்தாய்வு நடக்கிறது.

    சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) நேரடியாக நடக்கிறது. 454 எம்.பி.பி.எஸ். இடங்கள், 104 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 558 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை சுயநிதி நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இன்று நடந்த நேரடி கலந்தாய்வில் குறைந்த அளவில் மாணவ-மாணவிகள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு கடிதத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாலையில் வழங்குகிறார்.

    Next Story
    ×