search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marina Beach"

    • சென்னை மெரினா கடற்கரை ஆசியாவிலேயே மிகப்பெரிய மணல் பரப்பு கொண்ட கடற்கரையாக திகழ்ந்து வருகிறது.
    • குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    மெரினா கடற்கரையில் தாகம் தீர்க்கும் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை மெரினா கடற்கரை ஆசியாவிலேயே மிகப்பெரிய மணல் பரப்பு கொண்ட கடற்கரையாக திகழ்ந்து வருகிறது. இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை ரசிக்க மற்றும் பொழுது போக்க வருகை தருகிறார்கள்.

    மெரினா கடற்கரையின் அழகை பாதிக்கும் வகையில் அங்குள்ள மணல் பரப்பில் பழுதடைந்த கடைகள், குப்பைகள் நிறைந்து உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி தற்போது பழுதடைந்து உள்ளது. இதனால் குடிநீர்தொட்டி முழுவதும் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.

    இதனால் அங்கு குடிநீர் அருந்த செல்ல மக்கள் தயங்குகிறார்கள். குடிநீர் பைப்புகள் சரிவர பராமரிக்கப்படாததால் உடைந்து உள்ளன. குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் கடற்கரை மணலை சுத்தப்படுத்த 5 எந்திரங்கள் சுற்றி சுற்றி வருகின்றன.
    • கடற்கரையில் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை 2017-ல் 1447 ஆக இருந்தது. இப்போது 2500 கடைகள் உள்ளது.

    உலகிலேயே அழகான கடற்கரைகளில் ஒன்று நம்மூர் மெரினா. அதே போல் மற்றொரு அமைதியான கடற்கரை பெசன்ட் நகர்.

    சென்னையின் இந்த அழகிய கடற்கரைதான் எத்தனையோ பிரபலங்களின் ஆற்றலையும், அறிவையும் வளர்க்க உந்துசக்தியாக இருந்திருக்கின்றன.

    இந்த அழகிய கடற்கரைகளை கண்டு ரசிக்கவும், காலாற நடந்து காற்று வாங்கி உடலுக்கு புத்துணர்ச்சியை ஊட்டவும் தினமும் ஏராளமானோர் இங்கு வருகிறார்கள்.

    வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் சுற்றுலா பயணிகளும் அழகை ரசிக்க வரிசைகட்டி நிற்கிறார்கள். இந்த கடற்கரைகளை அழகுபடுத்தும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

    அதன் ஒரு கட்டமாக கடற்கரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கடைகளை வரிசையாக முறைப்படுத்தினார்கள்.

    தினமும் கடற்கரை மணலை சுத்தப்படுத்த 5 எந்திரங்கள் சுற்றி சுற்றி வருகின்றன. அதாவது மணலில் இருக்கும் குப்பை கழிவுகளை சல்லடை போட்டு தேடி சேகரிப்பது தான் இந்த எந்திரங்களின் வேலை. அப்புறமென்ன கடற்கரை நேர்த்தியாகத் தானே இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.

    அதிகாலையில் வெறும் காலில் கடற்கரை மணலில் நடைபயிற்சி சென்றால் காலுக்கு பாதுகாப்பு கிடை யாது. உடைந்து கிடக்கும் பாட்டில் துண்டுகள், குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் பார்த்தால் முகம் சுளிக்க வைக்கிறது. நடப்பதற்கு பயமுறுத்துகிறது.

    வார விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு வந்து பொழுதுபோக்க வரும் சில குடும்பத்தினர் கூறும்போது,

    கடற்கரை அசுத்தமாக மாறி வருவதால் கடற்கரைக்கு வருவதை தவிர்த்து விட்டதாகவும் அதற்கு பதிலாக வீட்டு பக்கத்தில் உள்ள பூங்காக்களுக்கு செல்வதாகவும் கூறினார்கள். கழிப்பிடங்கள் வெளிப்பார்வைக்குத்தான் பகட்டாக தெரிகின்றன. உள்ளே சென்றால் பராமரிப்பு இல்லாமல் நாற்றமடிக்கிறது.

    பல்லாயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வரும் இடத்தில் ஒரு கழிப்பறையை கூட சுத்தமாக, ஓட்டல்களில் இருப்பதை போல் பராமரிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டனர்.

    பொதுமக்களின் மனக்குறைகள் பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கடற்கரையில் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை 2017-ல் 1447 ஆக இருந்தது.

    இப்போது 2500 கடைகள் உள்ளது. மொத்தம் 15 விற்பனையாளர்கள் சங்கம் உள்ளது. இந்த கடைகளில் இருந்து வரும் குப்பை கழிவுகள்தான் கடற்கரை மணற்பரப்பில் சிதறுகிறது. கடைக்காரர்களிடம் குப்பை தொட்டிகளை வைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம் என்றனர்.

    கடற்கரையில் உடைந்த மதுபாட்டில்கள் ஏராளமாக சிதறி கிடக்கிறது. இதற்கு பொதுமக்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடற்கரை பாதையை அழகுபடுத்தி பராமரிக்க, குடிநீர் வசதிகள் செய்ய, இயற்கையை ரசிக்க, உட்காரும் இடங்கள் அழகு குடைகள், சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய நாடு முழுவதும் அனுமதித்துள்ளது.

    மெரினாவை பொறுத்தவரை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. எல்லாம் காகிதத்தில்தான் எழுத்துக்களாக இருக்கின்றன. இன்னும் செயல் வடிவம் பெறவில்லை.

    இந்த அழகிய கடற்கரையில் நான் காற்று வாங்க போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று தான் அன்று பூரித்தனர். ஆனால் இன்று நான் காற்று வாங்க சென்றேன் கொஞ்சம் நோயை வாங்கி வந்தேன் என்று சொல்லும் அளவில் தான் மெரினா கடற்கரை உள்ளது.

    • மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் உழைப்பாளர் சிலை சென்னையின் அடையாளங்களில் ஒன்று.
    • கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உழைப்பாளர் சிலை சந்திப்பில் 30 விபத்துகள் நடந்து உள்ளன.

    சென்னை:

    மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் உழைப்பாளர் சிலை சென்னையின் அடையாளங்களில் ஒன்று.

    மெரினா கடற்கரைக்கு செல்பவர்கள் இந்த சிலை முன்பு நின்று படம் எடுத்து கொள்வதை பார்க்க முடியும்.

    கடற்கரைக்கு ஆர்வமுடன் நடந்து செல்பவர்கள் சிக்னல் இருப்பதை கூட கண்டுகொள்ளாமல் கூட்டமாக ரோட்டை கடப்பதும் உண்டு. இதனால் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு போலீசார் சிரமப்படுகிறார்கள். இவ்வாறு பாத சாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி ரோட்டை கடப்பதால் விபத்துகளிலும் சிக்குகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உழைப்பாளர் சிலை சந்திப்பில் 30 விபத்துகள் நடந்து உள்ளன.

    எனவே விபத்துகளை தவிர்க்கவும், பாதுகாப்பான பாதசாரிகள் பயணத்துக்காகவும் உழைப்பாளர் சிலை சந்திப்பை சீரமைக்க போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.

    இதற்காக இந்த சந்திப்பில் போலீசார் வாகன போக்கு வரத்து, பொதுமக்கள் சாலையை கடப்பது, சிக்னல்கள் நேரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது குறைந்தபட்சம் ஒரு நாளில் 10 ஆயிரம் பாதசாரிகள் உழைப்பாளர் சிலை சந்திப்பை கடந்த செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த பகுதியில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளார்கள்.

    இதன்படி பாதசாரிகள் ரோட்டை கடக்கும் தூரம் குறைக்கப்படுகிறது. வாகனங்களின் சீரான போக்குவரத்துக்காக சென்டர் மீடியன்கள் சீரமைக்கப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியில் கூடுதல் தூரத்துக்கு அமைக்கப்படும். இந்த சந்திப்பின் தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு சென்டர் மீடியன் வைக்கப்படுகிறது.

    இந்த மாற்றங்களினால் பாதசாரிகள் வாகனங்களில் அடிபடாமல் இருக்க பிரத்யேகமான கிராசிங் லேன் அமைக்கப்படுகிறது. மேலும் ரோட்டை கடக்கும்போது சிக்னலுக்காக பாதுகாப்பாக காத்திருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படும்.

    சரியான நிறுத்த கோடுகள், திசை காட்டும் குறியீடுகள் பளிச்சென்று தெரியும் வகையில் வண்ணம் பூசப்படும். அனைத்து வயதினரும் எளிதாக கடந்து செல்லும் வகையிலும் மாற்றுத்திறனாளிகள் செல்ல சாய்வு பாதைகளும் அமைகிறது.

    அமல்படுத்தப்போகும் இந்த புதிய சீரமைப்பு வசதிகள் 3 முதல் 5 வாரங்கள் வரை பரிட்சார்த்தமாக கண்காணிக்கப்படும். அதன் பிறகு நிரந்தர மாற்றம் செய்யப்படும்.

    போக்குவரத்து மட்டுமல்லாமல் முக்கிய சந்திப்பு என்பதால் நேர்த்தியாகவும் அழகாகவும் சீரமைக்கப்படும்.

    • காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படமாட்டாது.
    • அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையொட்டி மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு இன்று முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படமாட்டாது.

    கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை-பெல்ஸ் ரோடு-வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை-பாரதி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணாசாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

    அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. (பெல்ஸ் சாலை ஓரு வழிப்பாதையாக மாற்றப்படும்)

    நேப்பியர் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை- பெல்ஸ் ரோடு-வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.

    பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. (விக்டோரியா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெரினா நீச்சல்குளம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது.
    • தற்போது கோடை விடுமுறையையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கி உள்ளது.

    சென்னை:

    கோடை விடுமுறையையொட்டி இன்று மெரினா நீச்சல் குளத்தில் இளைஞர்கள் ஆனந்தகுளியல் போட திரண்டனர்.

    சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பெரிய நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை இயங்கி வருகிறது. நுழைவு கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 டிக்கெட் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

    கோடை விடுமுறையையொட்டி வெயிலில் இருந்து தப்பிப்பதற்காகவும் வாரஇறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த நீச்சல் குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். நீச்சல்குளம் தற்போது சீரமைக்கப்பட்டு புதிய தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் மெரினா கடற்கரை நீச்சல் குளத்திற்கு படையெடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னையில் தற்போது கோடைவெயில் கொளுத்துவதையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் மெரினா நீச்சல் குளத்திற்கு அலைமோதி வருகிறது. விடுமுறை தினமான இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான சிறுவர்கள், இளைஞர்கள் மெரினா நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.

    நீச்சல்குளம் பராமரிப்பு அதிகாரி ரவி கூறியதாவது:-

    மெரினா நீச்சல்குளம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடை விடுமுறையையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கி உள்ளது.

    தற்போது சுட்டெரிக்கும் கோடைவெயில் கொளுத்துவதையொட்டி வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் நீச்சல் குளத்துக்கு தினமும் வருகிறார்கள். ஆனந்த குளியல் போடுகிறார்கள்.

    "மே"மாதம் இறுதி வரை கூட்டம் அதிகம் இருக்கும். இளைஞர்கள், பொதுமக்கள் இன்னும் அதிகளவு வருகை தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.
    • போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகே 2 வயது பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. 6 மாத ஆண் குழந்தை அழுதபடி காணப்பட்டது.

    அப்போது கடற்கரைக்கு வந்த சிலர் அந்த பெண்ணை எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. இது குறித்து அவர்கள் மெரினா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த பெண்ணை பார்த்தனர். அப்போது அவர் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. அருகில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பசி மயக்கத்தில் காணப்பட்டது. 6 மாத ஆண் குழந்தையும் பசியால் அழுது கொண்டு இருந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணையும் 2 குழந்தைகளையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பசி மயக்கத்தில் இருந்த 2 வயது குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு போலீசார் உணவு வாங்கி கொடுத்தனர். 6 மாத ஆண் குழந்தையும் பால் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போதை தெளிந்த நிலையில் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் ஆதரவற்ற நிலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.

    அந்த பெண்ணிடம் போலீசார் பெயர், கணவர் பெயர், சொந்த ஊர் பற்றிய விவரங்களை கேட்டனர். இந்தியில் பேசிய அவர் போலீசார் கேட்ட எந்த விவரங்களையும் சொல்ல மறுத்துவிட்டார். அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரை சொன்னால் அந்த மாநிலத்தை சேர்ந்தவரை வரவழைத்து அந்த பெண்ணிடம் பேச வைத்து அவரைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரையும் சொல்ல மறுத்துவிட்டார்.

    மேலும் அந்த பெண்ணிடம் குழந்தைகளுடன் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் என்று போலீசார் கூறினார்கள். அதற்கு மறுத்த அவர் சிகிச்சைக்கும் ஒத்துழைக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென்று ஓட்டம் பிடித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பிடித்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அந்த பெண் காப்பகத்துக்கு செல்லமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். என்னை மீண்டும் மெரினா கடற்கரைக்கே அனுப்புங்கள். ஏதாவது வேலை செய்து என் 2 குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்வேன் என்று போலீசாரிடம் கூறி வருகிறார்.

    அந்த பெண்ணுக்கும் 2 குழந்தைகளுக்கும் எப்படி ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்.

    • அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் நடந்து வரும் நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்து வருகிறது.
    • விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள அணுகு சாலையில் இந்த வண்டிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் வசிப்பவர்களுக்கு ஒரே பெரிய பொழுது போக்கு மெரினா கடற்கரைதான். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து கடல் அலைகளில் விளையாடி பொழுதை கழித்து செல்கின்றனர். கடலில் இறங்கி ஆபத்தான வகையில் விளையாடும் இளைஞர்களை போலீசார் குதிரைகளில் வந்து கண்காணிக்கின்றனர். அதனையும் மீறி இளைஞர்கள் சிலர் கடல் அலையில் சிக்கி இறக்கும் சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது.

    அனைத்து தரப்பினரும் கடல் அலையில் கால்களை நனைக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதையும் அமைத்து தரப்பட்டு உள்ளது. இதேபோல் முதியவர்கள் மற்றும் கை குழந்தைகளுடன் பகல் பொழுதில் வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டு உள்ளது.

    அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் நடந்து வரும் நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்து வருகிறது. இருந்தாலும் மெரினா கடற்கரையில் பகல் பொழுதில் மணல் சற்று சூடாகத்தான் இருக்கிறது. இதில் நடந்து செல்வது கடினம். இதனால் பகல் பொழுதில் வருபவர்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மணல் பகுதியை கடந்து செல்வதற்காக மூன்று சக்கர பிளாஸ்டிக் வண்டி நிறுத்தப்பட்டு உள்ளது.

    விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள அணுகு சாலையில் இந்த வண்டிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. தேவைப்படுபவர்கள் அப்பகுதிக்கு சென்றால் வண்டிகளை பாதுகாத்து வருபவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள். இதனை பெற்றுக்கொண்டு கடல் அலை இருக்கும் பகுதி வரை சென்று வரலாம். இதற்கு பொதுமக்கள் தரப்பில் நல்ல வரவேற்பு உள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டம் சற்று அதிகமாக வருவதால் கூட்டத்துக்கு ஏற்ப வண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து தர வேண்டும். அத்துடன் தற்போது இருக்கும் வண்டிகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    தொடர் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க குவிந்து வருகின்றனர். நேற்று அனைத்து இடங்களிலுமே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து பொழுதை கழித்தனர். மணற்பரப்பே தெரியாத அளவுக்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள புராதன சின்னங்கள், ஷீசெல் மியூசியம், கலங்கரை விளக்கம், கப்பல்துறை மியூசியம் போன்ற பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் கார் மற்றும் வாகனங்களில் குவிந்ததால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, கலங்கரை விளக்கம் சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மே தின விடுமுறை நாளான இன்றும் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து உள்ளனர். அவர்கள் புராதன சின்னங்கள் முன்பு நின்றபடி செல்போன்களில் செல்பி எடுத்தும், குடும்பத்துடன் பொழுதை கழித்தும் மகிழ்ந்தனர்.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மதிய வேளையில் ஷவர் குளியல் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்கள் கொடுக்கப்படுகிறது.

    இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். பறவைகள் இருப்பிடங்களில் ஆங்காங்கே தண்ணீர் குவலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதன் கூண்டுகள் சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகளின் கூண்டுகள் உட்புறம் ஈரப்பதமான நிலையில் உள்ளன. நேற்று வண்டலூர் பூங்காவுக்கு வந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்றும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகளும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக வைத்து உள்ளனர். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா? என்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.
    • மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் வாழ்க்கை இலக்கிய சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன ஒளி படங்களுடன் கூடிய வளாகம் அமைக்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட பேனா நினைவு சின்னம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் நுழைவாயில் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர்.

    இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும்.

    பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையில் கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் 7 மீட்டர் அகலத்தில் 3 மீட்டர் கண்ணாடி தரை அமைப்பாக பாலம் அமைக்கப்படும்.

    சென்னையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறும், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் இந்த பாலம் வடிவமைக்கப்படுகிறது. மீன்பிடி படகுகளின் இயக்கம் எந்த வகையிலும் தடைபடாத வகையில் பாலம் வடிவமைக்கப்படுவதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி பாலத்தில் நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

    இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டு விட்டது.

    இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசின் அனுமதிக்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கடலோர ஒழுங்கு முறை ஆணையம் இந்த திட்ட அறிக்கையை விரிவாக ஆய்வு செய்தது. உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த திட்டத்துக்கு முதற்கட்ட அனுமதி வழங்கி விட்டனர்.

    இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.

    தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

    அதன்படி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை தலைமை அதிகாரிகளும் பங்கேற்று கருத்து கேட்டனர்.

    அப்போது அந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 12 பேர் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். பேனா நினைவு சின்னத்துக்கு ஆதரவாக 22 பேர் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

    இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பொதுப்பணித்துறை தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் அதற்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பேனா நினைவு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவுக்கும், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் விரிவாக கடிதம் அனுப்பி உள்ளது.

    அதில் பேனா நினைவு சின்னம் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் இதற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் கூடி ஆலோசித்தனர்.

    பேனா நினைவு சின்னம் அமைக்கப்படுவதால் ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா? என்று தீவிரமாக ஆய்வு செய்தனர்.

    அப்போது மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

    இதுதொடர்பாக அந்த குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு 15 நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் விவரம் வருமாறு:-

    * மெரினா கடலோரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதியில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் இருப்பதால் அவர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

    * பேனா நினைவு சின்னம் கட்டப்படும்போது கடலோர நிபுணர் குழுவினர் தலைமையில் கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    * பேனா நினைவு சின்னம் கட்டுவதற்கு எந்த காரணத்தை கொண்டும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது.

    * எதிர்காலத்தில் பேனா நினைவு சின்னம் தொடர்பாக கோர்ட்டு ஏதேனும் உத்தரவு விதித்தால் அவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    * பேனா நினைவு சின்னத்தை பார்ப்பதற்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

    * சென்னை கடலோர பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் காலக்கட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது.

    * பேனா நினைவு சின்னத்திற்கு சரியான சாலை வசதி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    * போக்குவரத்து திட்டம் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுதல் ஆகியவை சரியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

    * விதிமுறைகள் மீறப்பட்டால் திட்ட அனுமதி திரும்ப பெறப்படும்.

    உள்ளிட்ட 15 நிபந்தனைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) பேனா நினைவு சின்னத்தின் வரைபடத்தை சமர்ப்பித்து அனுமதி வாங்குவதற்கு அடுத்த கட்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி பேனா நினைவு சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.
    • அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

    இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அண்மையில் பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.

    இதைத்தொடர்ந்து பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழக பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அனுமதி கொடுத்துள்ளது.

    இதில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து விரைவில் கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும்.

    கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்பட 15 நிபந்தனைகளையும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்துள்ளது.

    • எதிர்ப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் ஆக்கிமிரப்பை அகற்றினார்கள்.
    • பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டம்

    சென்னை:

    சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிற 18-ந்தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். அப்போது 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு திரண்டுவேந்து, மீன் கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் ஆக்கிமிரப்பை அகற்றினார்கள். அங்கிருந்த மீன்கள், வலைகள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தினார்கள். பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இரண்டாவது நாளாக இன்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் படகுகளை வைத்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள்.
    • லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் அகற்றினார்கள்.

    சென்னை:

    சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள், உணவகங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், இங்கு வருபவர்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எஸ்.என்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் மெரினா கடற்கரை லூப் சாலையில் மேற்கு பகுதியில் 25 சதவீதம் சாலை, நடைபாதைகளால் ஆக்கிரமித்து மீன் கடைகள், சிறு ஓட்டல்கள் செயல்படுகின்றன.

    இப்படி பொது சாலைகளை ஆக்கிரமிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது. இந்த சாலை மீன் கழிவு கொட்டுவதற்காக உள்ளதா?

    லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிற 18-ந்தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் அகற்றினார்கள்.

    இந்த நிலையில் கடைகள் அகற்றப்படுவதை அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் மீன் கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்கிறோம். கடைகளை அகற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறினார்கள்.

    அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்கள். ஆனாலும் மீனவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாலையில் அமர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

    ஆனாலும் மீனவர்களின் எதிர்ப்பை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. போலீசாரின் உதவியுடன் ஆக்கிமிரப்பை அகற்றினார்கள். அங்கிருந்த மீன்கள், வலைகள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தினார்கள்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி அதிரடியாக நடந்ததால் பெரும்பாலான மீனவர்கள் கடைகளில் இருந்த பொருட்கள் மற்றும் மீன்களை எடுத்து சென்றனர். அகற்றப்படாமல் இருந்த பொருட்கள் மற்றும் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

    ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட போது அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    ×