என் மலர்
நீங்கள் தேடியது "மதுபோதை"
- அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார்.
- லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
தெவங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம். போண்டலபள்ளியை சேர்ந்த ஒருவர், ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார்.
இதற்காக நேற்று தளம் அமைக்கும் பணி நடந்தது.தொழிலாளர்கள் சிமெண்டு கலவை கொண்டு தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தளம் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு தொழிலாளர்களுக்கு ஆட்டு கறி குழம்பு பரிமாறப்பட்டது.அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமணய்யா (வயது 65) என்பவரை சாப்பிட அழைத்தனர்.
அப்போது லட்சுமணய்யா மது போதையில் இருந்தார். அவசர, அவசரமாக ஆட்டுக்கறி துண்டை எடுத்து சாப்பிட்டார். அது அவரது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் லட்சுமணய்யா மூச்சு விட முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமணய்யா மூச்சுக் குழாயில் ஆட்டுக்கறி துண்டு சிக்கி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- குட்டி ஜீப்பை பிரதான சாலையில் ஓட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்.
- பார்பி காரை சாலையில் ஓட்டிய நபரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கனடாவில் மதுபோதையில் குழந்தைகள் ஓட்டும் குட்டி ஜீப்பை பிரதான சாலையில் ஓட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பார்பி ஜீப்பை சாலையில் ஓட்டி வந்த லின்கோயின் என்பவரை போலீசாரை சாலையில் வைத்தே கைது செய்தனர்.
பார்பி காரை சாலையில் ஓட்டிய நபரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
- ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை, நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்பாராம்.
- குளச்சல் போலீசார், மயங்கிய தொழிலாளியுடன் மது அருந்திய மேலும் சில நண்பர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக குளச்சல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது அங்கு கிடந்தவர் இறக்கவில்லை என்பதும் சுய நினைவின்றி கிடப்பதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவரை 108-ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தகவல் கொடுத்தவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போதையில் சுய நினைவற்று கிடந்தவர் வார இறுதி நாள் விருந்தில் பந்தயம் கட்டி மது அருந்தியதில் மயங்கி சாய்ந்தவர் என தெரியவந்தது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த திருமணமாகாத 40-வயதான தொழிலாளி ஒருவர், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை, நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்பாராம். நேற்று அது போல் மது விருந்தில் அவர் பங்கேற்றுள்ளார். அப்போது நண்பர்கள் வைத்த பந்தய பணத்திற்காக விபரீதத்தை உணராமல் பெரிய பாட்டில் மதுபுட்டியை திறந்து அப்படியே குடித்துள்ளார். அதனால் தான் சுய நினைவு இழந்து மயங்கி சரிந்துள்ளார்.
இதனை கண்டு நண்பர்கள் பயந்து விட்டனர். மயங்கியவரை இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து ஓடி உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் அச்சத்தில் போலீசாருக்கு தொழிலாளி இறந்து கிடப்பதாக தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொழிலாளி, மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குளச்சல் போலீசார், மயங்கிய தொழிலாளியுடன் மது அருந்திய மேலும் சில நண்பர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டீஜே என்று அழைக்கப்படும் ஆட்டம்பாட்டத்துடன் இசை கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை தொடங்கியது.
- மாப்பிள்ளையின் நண்பர்கள் மதுபோதையில் மேடையில் ஏறி குத்தாட்டம் போட தொடங்கினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் திருமண வைபோகம் காணவேண்டிய அந்த மண்டபத்தில் வரவேற்பு விழாவில் இருவீட்டாரும் மும்முரமாக இருந்தனர்.
மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படித்த இளம்பெண்ணுக்கும், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் டிப்ளமோ படித்த வாலிபருக்கும் தான் இந்த திருமண வரவேற்பு மாலை 6 மணிக்கு தொடங்கியது. இரவு 9.30 மணி வரை எந்தவித பிரச்சனையும் இன்றி வரவேற்பு விழா நடந்தது. அதன்பிறகு தான் டீஜே என்று அழைக்கப்படும் ஆட்டம்பாட்டத்துடன் இசை கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை தொடங்கியது.
அப்போது அங்கு வந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் மதுபோதையில் மேடையில் ஏறி குத்தாட்டம் போட தொடங்கினர். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையையும் அவர்கள் மேடைக்கு ஏற்றி ஆட வைத்தனர். அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை என்ற ரீதியில் மாப்பிள்ளையின் நண்பர்களில் சிலர் மணமகளையும் மேடைக்கு வருமாறு வற்புறுத்தி குரல் எழுப்பினர்.
ஆனால் தனக்கு இதுபோன்று நடனம் ஆடி பழக்கம் இல்லை என்றும், பொது இடங்களில் நான் இதுபோன்று நடனம் ஆட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் அவர் கூறுவதை காது கொடுத்து கேட்காத அந்த வாலிபர்கள் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், மணமகளின் உறவினர்கள் சிலர், அப்படி எல்லாம் எங்கள் வீட்டு பெண் ஆட வரமாட்டாள் என்று வாலிபர்களை கண்டித்தனர்.
அதை சொல்ல நீங்கள் யார் என்று மாப்பிள்ளையின் நண்பர்களில் சிலர் மணமகளின் உறவினர்களுடன் திடீரென கைகலப்பில் ஈடுபட்டு உள்ளனர். என்ன நடக்கிறது என்று இரு வீட்டாரும் யோசித்து பார்க்கும் முன்பு இந்த கைகலப்பு தகராறாக முற்றியது.
இதை பார்த்த மணமகள், மாப்பிள்ளையின் குடிகார நண்பர்களின் அற்ப வேண்டுகோளையும், அதற்காக அவர்கள் தனது உறவினர்களை தாக்கியதையும் நினைத்து இனி இந்த மாப்பிள்ளையை நான் கட்ட மாட்டேன். திருமண ஏற்பாடுகளை நிறுத்துங்கள் என்று அதிரடியாக கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி வீசினார். இதனால் வரவேற்புடன் திருமணம் நின்றது.
உடனே மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்றவை அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டு விட்டன. மேலும் மணமகன், மணமகள் வீட்டாரும் ஊருக்கு திரும்பினார்கள்.
- கட்சி, சமூகத்தை தாண்டி நாம் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.
- குழந்தைகளோட பாதுகாப்பையும் அம்மாவாகிய நாம் தான் உறுதி செய்ய வேண்டும்.
கடத்தூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
"தேர்தல் நேரங்களில் தருமபுரி பகுதிகளில் நான் போகாத ஊர்களே இல்லை. சாயங்காலம் 6 மணி ஆனால், போதையில் தள்ளாடும் இளைஞர்களை நான் பார்க்கும்போது மனசெல்லாம் வலிக்கும். அய்யோ இந்த தலைமுறை இப்படி போகுதே... நம் கண் எதிரே நம் குழந்தைகள் இப்படி போகுதேன்னு பரிதாபமாக இருக்கும்.
ஒரு தலைமுறையை குடிக்கு அடிமையாக உள்ளது. அதைவிட மோசம் போதை. போதையில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. குடித்தால் கூட நாற்றம், கண் சிவக்கும்... ஆனால் போதையில் எதுவும் தெரியமாட்டேங்குது. போதை மாத்திரைகள் எல்லாம் பள்ளி, கல்லூரிகளின் அருகிலேயே கிடைக்கிறது என்பதால் நாம் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாது? கட்சி, சமூகத்தை தாண்டி நாம் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். குழந்தைகளோட பாதுகாப்பையும் அம்மாவாகிய நாம் தான் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் சமூக வலைத்தளத்தில் எவ்வாறு பயணிக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்கள் யார்? வீட்டிற்கு எப்போது வருகிறார்கள் போன்றும் பெண்களுக்கு விதிக்கக்கூடிய கட்டுப்பாடுகளை உங்கள் மகன்களுக்கும் விதியுங்கள். 6 மணிக்கு பொண்ணு வீட்டுக்கு வரணும்னா... பையனும் அதே மாதிரிதான். இரண்டு பேருக்கும் ஒரே கட்டுப்பாடுதான் இருக்கணும். பொண்ணுக்கு சமைக்க கற்றுக்கொடுத்தால், பையனுக்கும் சமைக்க கற்றுக்கொடுங்கள். எந்த ஒரு பாகுபாடு எல்லாம் பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என்றார்.
- சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.
- சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர்.
தருமபுரி:
தருமபுரி நகரப்பகுதி நான்கு வழி சாலை அருகில் செயல்படும் அரசு மதுபான கடைக்கு இளைஞர் ஒருவர் கழுத்தில் பாம்பு ஒன்றை சுத்தி கொண்டு மது வாங்க வந்தார்.
அப்பொழுது மதுக்கடைக்கு வந்த மது பிரியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கடையின் விற்பனையாளர்கள் செய்வதறியாமல், மது வாங்க வந்த இளைஞரை எச்சரித்து, மது (பீர்) கொடுத்து அனுப்பி விட்டனர்.
மது வாங்கி கொண்டு சென்ற அந்த வாலிபர், பீர் பாட்டிலை திறந்து, பாம்பின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த வாலிபர் மது போதையில் நான்கு ரோட்டில், சாலையில் நடந்து கொண்டு பாம்பை காட்டி பொதுமக்களிடம் அட்ராசிட்டி செய்தார்.
சாலையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்தனர். அவர்களுக்கு அந்த இளைஞர் பல கோணங்களில் பாம்பை பிடித்து கொண்டு பாம்புக்கு முத்தம் கொடுத்தும், பாம்பு மற்றும், பீர் பாட்டிலை சாலை மைய தடுப்பு சுவரின் மீது வைத்தும், வித்தைக்காட்டி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவலர்கள் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.
- மது போதையில் இருந்ததாக கூறப்படும் டாக்டர், ஆஸ்பத்திரியில் இருந்த கிரில் கேட்டை அடித்ததுடன், மற்றொரு கேட்டையும் உடைத்தாக கூறப்படுகிறது.
- மருத்துவர்கள் மது போதையில் சிகிச்சை அளித்தால் வரக்கூடிய நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக காலை 6 மணிக்கு நோயாளிகள் வந்து காத்திருந்தனர். அப்போது ஆண்கள் மருத்துவப் பகுதியில் சிகிச்சை அளிக்கக்கூடிய பொது மருத்துவ பிரிவை சேர்ந்த டாக்டர் கண்ணன் என்பவர் காலை 6.30 மணிக்கு பணிக்கு வந்துள்ளார்.
அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படும் டாக்டர், ஆஸ்பத்திரியில் இருந்த கிரில் கேட்டை அடித்ததுடன், மற்றொரு கேட்டையும் உடைத்தாக கூறப்படுகிறது. பின்னர் அவர் புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதிக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
இந்நிலையில் காலையில் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்த தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியை சேர்ந்த சரோஜா என்ற பெண் இந்த சம்பவத்தை பார்த்து தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இது தொடர்பாக மருத்துவமனையில் பணியில் இருந்த சக டாக்டர்களிடம் புகார் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில், மருத்துவர்கள் மது போதையில் இருந்து சிகிச்சை அளித்தால் வரக்கூடிய நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் மற்றும் சிகிச்சையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர் கண்ணன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு வேறொரு டாக்டர் அமர்த்தப்பட்டு அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
- பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அழுதுகொண்டே, தனது தந்தையை யாரோ கொன்றுவிட்டதாகவும், அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதாகவும் கூறினாள்.
- கைது செய்யப்பட்ட சிறுமி சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
சத்தீஸ்கரில் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜஷ்பூர் மாவட்டத்தில், பாக்பஹார் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 50 வயது நபர் கடந்த ஏப்ரல் 21 இரவு ஆம் தேதி தனது வீட்டில் கோடரியால் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார்.
அந்த நபரின் 15 வயது மகள் பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அழுதுகொண்டே, தனது தந்தையை யாரோ கொன்றுவிட்டதாகவும், அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதாகவும் கூறினாள்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கியது. சிறுமியின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த போலீஸ், தாயின் முன்னிலையில் சிறுமியை விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டுள்ளது.
சிறுமியின் வாக்குமூலத்தின்படி, தந்தை தினமும் மது போதையில் சிறுமியையும், தாயாரையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். ஏப்ரல் 21 ஆம் தேதி தாய் வெளியே சென்றிருந்த நிலையில் இரவு 9 மணியளவில் குடிபோதையில் வீடு திரும்பிய தந்தை சிறுமியை அடிக்கத் தொடங்கினார். கோபத்தில், வீட்டில் வைத்திருந்த கோடரியால் தனது தந்தையின் தலையில் சிறுமி தாக்கியதன் விளைவாக அவர் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுமி நேற்று (வியாழக்கிழமை) சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
- செல்போனில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதில் தனது சொந்த ஊர் பெயரை பதிவு செய்தார்.
- 57 நிமிடங்களாக வேறு எந்த ரெயிலும் வராததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.
பீகார் மாநிலம், கோபால் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ் ராய்.
இவர் உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மது விருந்து வைக்கப்பட்டது.
அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்தார். பின்னர் வீடு திரும்புவதற்காக மீண்டும் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். மதுபோதையில் இருந்ததால் அவரது வீட்டிற்கு எந்த வழியாக செல்வது என தெரியவில்லை.
இதனால் தனது செல்போனில் கூகுள் மேப்பை பயன்படுத்தி அதில் தனது சொந்த ஊர் பெயரை பதிவு செய்தார்.
பின்னர் கூகுள் மேப் காட்டிய வழியை பின்தொடர்ந்து காரை ஓட்டி சென்றார். 1 மணி நேரத்திற்கு பிறகு அவர் ஓட்டிச் சென்ற கார் ரெயில் தண்டவாளத்தில் பாய்ந்து நின்றது.
அப்போது அந்த வழியாக ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி கார் நிற்பதை கண்ட லோகோ பைலட் அவசர கால பிரேகை பயன்படுத்தினார்.
காருக்கு அருகே 5 மீட்டர் தொலைவில் ரெயில் நின்றது. ரெயில் கார் மீது மோதி இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை அப்புறப்படுத்தினர். இதனால் ரெயில் 57 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
அந்த மார்க்கத்தில் 57 நிமிடங்களாக வேறு எந்த ரெயிலும் வராததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர்.
ஆதர்ஷ் ராய் கூகுள் மேப்பில் தனது முழு முகவரியை பதிவு செய்யாமல் நகரத்தின் பெயரை மட்டும் பதிவு செய்ததால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
- 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்துக்கு உட்பட்ட ஆர். பாலக்குறிச்சியில் வைரவன்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எம். அந்தோணி பணியாற்றி வந்தார்.
10-க்கு உட்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட இந்த பள்ளியில் அந்தோணி ஒற்றை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர்.
தொடர் புகாரின் காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராம திலகத்திடம் முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி அந்தோணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அருகாமையில் உள்ள இன்னொரு பள்ளி ஆசிரியரை பணியமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் இந்திரா கூறும் போது, தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். ஆனால் அந்தோணியின் நடத்தையால் தற்போது 7 குழந்தைகள் மட்டுமே கல்வி பயின்று வருகிறார்கள். ஆகவே தலைமை ஆசிரியர் பிரச்சனையை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- கன்னோஜில் கட்டுப்பாட்டை இழந்து லாரி காந்தி சிலை மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சிலை பெருமளவில் சேதமடைந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி மோதியதில் காந்தி சிலை. பீடத்துடன் உடைந்து விழுந்தது. இதனால், மதுபோதையில் இருவர் அழுது புலம்பியது இணையத்தில் வைரலானது.
கன்னோஜில் கட்டுப்பாட்டை இழந்து லாரி காந்தி சிலை மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிலை பெருமளவில் சேதமடைந்தது.
விபத்தில் உடைந்த காந்தி சிலை அருகே மதுபோதையில் 2 நபர்கள் கட்டிபிடித்தபடியே அழுது புரண்டனர்.
- வீரன் மற்றும் அண்ணாமலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
- படுகாயமடைந்த வீரன்,அண்ணாமலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கடலூர்
வடலூர் வள்ளலார் நகர் சித்தர் தெருவை சேர்ந்தவர் ராஜவன்னியன் என்பவரின் மகன் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை. இவர்கள் இருவரும் வடலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 24-ம் தேதி மாலையில் வீரனும் தம்பி அண்ணாமலையும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் இளைஞர்கள் மது போதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த வீரன் மற்றும் அண்ணாமலை வழியில் செல்கின்ற பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு இளைஞர்கள் நாங்கள் இப்படி தான் செய்வோம் எனவும் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்று கூறி வீரன் மற்றும் அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் இருவருக்கும் கொலை மிரட்டல் செய்துள்ளனர்.
இந்நிலையில் போதையில் இருந்த இளைஞர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பினால் இருவரையும் தாக்கினர். இதில் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை இருவருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த வீரன்,அண்ணா மலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து வீரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி எஸ்ஐ சங்கர் தலைமையிலான போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வடலூர் புதுநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் கோபிநாத் என்கிற விக்னேஷ் (வயது 19) கோட்டக்கரை மாருதி நகரைச் சார்ந்த ரகோத்தமன் மகன் சஞ்சய் (19) அன்னை சத்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார் (18) ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்து கடலூர் சிறையிலும் மேலும் 17 வயது சிறுவர்கள் 3 பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.






