மது குடித்த போது சரிந்து விழுந்த நபர்... தெறித்து ஓடிய நண்பர்கள்... கடைசியில் நடந்த டுவிஸ்ட்

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை, நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்பாராம்.குளச்சல் போலீசார், மயங்கிய தொழிலாளியுடன் மது அருந்திய மேலும் சில நண்பர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது குடித்த போது சரிந்து விழுந்த நபர்... தெறித்து ஓடிய நண்பர்கள்... கடைசியில் நடந்த டுவிஸ்ட்
Published on

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக குளச்சல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது அங்கு கிடந்தவர் இறக்கவில்லை என்பதும் சுய நினைவின்றி கிடப்பதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரை 108-ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தகவல் கொடுத்தவரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போதையில் சுய நினைவற்று கிடந்தவர் வார இறுதி நாள் விருந்தில் பந்தயம் கட்டி மது அருந்தியதில் மயங்கி சாய்ந்தவர் என தெரியவந்தது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த திருமணமாகாத 40-வயதான தொழிலாளி ஒருவர், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை, நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்பாராம். நேற்று அது போல் மது விருந்தில் அவர் பங்கேற்றுள்ளார். அப்போது நண்பர்கள் வைத்த பந்தய பணத்திற்காக விபரீதத்தை உணராமல் பெரிய பாட்டில் மதுபுட்டியை திறந்து அப்படியே குடித்துள்ளார். அதனால் தான் சுய நினைவு இழந்து மயங்கி சரிந்துள்ளார்.

இதனை கண்டு நண்பர்கள் பயந்து விட்டனர். மயங்கியவரை இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து ஓடி உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் அச்சத்தில் போலீசாருக்கு தொழிலாளி இறந்து கிடப்பதாக தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொழிலாளி, மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குளச்சல் போலீசார், மயங்கிய தொழிலாளியுடன் மது அருந்திய மேலும் சில நண்பர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com