search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெரினா கடற்கரையில் மதுபோதையில் 2 குழந்தைகளுடன் மீட்கப்பட்ட பெண்- காப்பகத்துக்கு செல்ல மறுப்பு
    X

    மெரினா கடற்கரையில் மதுபோதையில் 2 குழந்தைகளுடன் மீட்கப்பட்ட பெண்- காப்பகத்துக்கு செல்ல மறுப்பு

    • மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.
    • போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகே 2 வயது பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. 6 மாத ஆண் குழந்தை அழுதபடி காணப்பட்டது.

    அப்போது கடற்கரைக்கு வந்த சிலர் அந்த பெண்ணை எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. இது குறித்து அவர்கள் மெரினா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த பெண்ணை பார்த்தனர். அப்போது அவர் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. அருகில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பசி மயக்கத்தில் காணப்பட்டது. 6 மாத ஆண் குழந்தையும் பசியால் அழுது கொண்டு இருந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணையும் 2 குழந்தைகளையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பசி மயக்கத்தில் இருந்த 2 வயது குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு போலீசார் உணவு வாங்கி கொடுத்தனர். 6 மாத ஆண் குழந்தையும் பால் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போதை தெளிந்த நிலையில் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் ஆதரவற்ற நிலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.

    அந்த பெண்ணிடம் போலீசார் பெயர், கணவர் பெயர், சொந்த ஊர் பற்றிய விவரங்களை கேட்டனர். இந்தியில் பேசிய அவர் போலீசார் கேட்ட எந்த விவரங்களையும் சொல்ல மறுத்துவிட்டார். அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரை சொன்னால் அந்த மாநிலத்தை சேர்ந்தவரை வரவழைத்து அந்த பெண்ணிடம் பேச வைத்து அவரைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரையும் சொல்ல மறுத்துவிட்டார்.

    மேலும் அந்த பெண்ணிடம் குழந்தைகளுடன் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் என்று போலீசார் கூறினார்கள். அதற்கு மறுத்த அவர் சிகிச்சைக்கும் ஒத்துழைக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென்று ஓட்டம் பிடித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பிடித்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அந்த பெண் காப்பகத்துக்கு செல்லமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். என்னை மீண்டும் மெரினா கடற்கரைக்கே அனுப்புங்கள். ஏதாவது வேலை செய்து என் 2 குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்வேன் என்று போலீசாரிடம் கூறி வருகிறார்.

    அந்த பெண்ணுக்கும் 2 குழந்தைகளுக்கும் எப்படி ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்.

    Next Story
    ×