search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra politics"

    • ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார் உத்தவ் தாக்கரே.
    • பதவியேற்பு நாளில் மும்பை வருமாறு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பாஜக வலியுறுத்தல்.

    மும்பை:

    மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில்.உத்தவ் தாக்கரே தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக ராஜ்பவன் சென்ற அவர், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக தொடருமாறு கேட்டுக் கொண்டார். 


    இந்நிலையில், மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் பிற கட்சித் தலைவர்களுடன் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து, ஆட்சி அமைப்பது குறித்து இன்று முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், முதலமைச்சர் பதவியை உத்தவ் ராஜிமானா செய்ததால், சட்டசபையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது.

    இதையடுத்து ஆளுநரை இன்று சந்திக்கும் பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும், தமக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆளுநர் அழைப்பு விடுக்கும் நிலையில் நாளை அவர் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பதவியேற்பு நாளில் மும்பைக்கு வருமாறு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை பட்னாவிஸ் மற்றும் ஷிண்டே முடிவு செய்வார்கள் என்றும்,பாஜகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    • மகாராஷ்டிர சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு
    • சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது. உத்தவ் தாக்கரே அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து உத்தவ் தாக்கரே பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார். அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறினார். சட்ட மேலவை பதவியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்தார்.

    தனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை என்று கூறிய அவர், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்து ஆதரவு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.

    இதையடுத்து நாளை அல்லது நாளை மறுதினம் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மகாராஷ்டிர சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு
    • கவர்னரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்திருந்தது

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டுள்ளனர்.

    39 சிவசேனா எம்எல்ஏ.க்கள் தற்போதைய கூட்டணி அரசுடன் இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். அத்துடன், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி சிவ சேனாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். சிவசேனா பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், மற்ற வழக்குகளுடன் சேர்த்து11ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
    • சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே சிறந்த வழி என்று ஏக்நாத் ஷிண்டேவின் வழக்கறிஞர் வாதம்

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது.

    சிவசேனா கொறடா சுனில் பிரபு சார்பில் வக்கீல் ஏ.எம்.சிங்வி இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்டில் நிலுவையில் இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மராட்டிய கவர்னர் உத்தரவிட்டது சட்ட விரோதமானது என்றும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால அமர்வான நீதிபதிகள் சூரியகாந்த், பர்திவாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் ஆஜராகி வாதாடினார். அப்போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு நம்பிக்கையற்ற சிறுபான்மையாக கட்சிக்குள் இருப்பதாகவும், குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமானால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே சிறந்த வழி என்றும் கூறினார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டால் அது ஜனநாயக அரசியலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். தகுதிநீக்க நடைமுறையானது சபாநாயகர் முன் நிலுவையில் இருப்பதை வைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் ஷிண்டேவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

    உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்போம் என ஏக்நாத் ஷின்டே கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளைய சிறப்புபேரவை கூட்டத்தை வீடியோபதிவு செய்ய வேண்டும் எனவும் மகாராஷ்டிரா ஆளுநர் உத்தரவு.
    • மனுவை சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். போலியான கடிதம் வெளியானதாக கூறப்பட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி ஆணையிட்டார்.

    நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிறப்பு கூட்டம் நடத்தவும் சட்டமன்ற செயலருக்கு ஆளுநர் கோய்ஷாரி கடிதம் அனுப்பினார்.

    ஏற்கனவே மகாராஷ்டிரா ஆளுநரை பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதையடுத்து, நாளைய சிறப்புபேரவை கூட்டத்தை வீடியோபதிவு செய்ய வேண்டும் எனவும் மகாராஷ்டிரா ஆளுநர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனுவை சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுவில், 16 எம்எல்ஏ தகுதி நீக்க விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஆளுநர் ஆணை சட்டவிரோதமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உத்தவ் தாக்கரே அரசு பங்களாவை காலி செய்தார். பாந்த்ராவில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடியேறினார்.
    • 35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே துணை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து இருந்தார்.

    கவுகாத்தி:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அசாகி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த மேல்சபை எம்.பி. தேர்தல் மற்றும் எம்.எல்.சி. தேர்தல்களில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக கட்சி மாறி ஓட்டு போட்டனர். இதனால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனாவில் அதிருப்தி குழு உருவானது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமானார்கள்.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா ஆதரவு அளித்தது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்றனர்.

    அப்போது 14 சிவசேனா எம்.எல்.ஏ.க்களும், 7 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் அவருடன் இருப்பதாக அதிருப்தி குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களை சிவசேனா தலைவர்கள் சிலர் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான அசாமுக்கு சென்றார். கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் ஆதரவாளர்களுடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனக்கு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்பட 46 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

    இதனால் பெரும்பான்மையை இழந்து உத்தவ் தாக்கரே அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். இதில் எந்த பலனும் ஏற்படவில்லை.

    கூட்டணி அரசை காப்பாற்ற அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் மந்திரி பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் யோசனை தெரிவித்தார். இதனை உத்தவ் தாக்கரேவும் ஏற்றுக்கொண்டார்.

    இதை தொடர்ந்து அவர் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து உத்தவ் தாக்கரே அரசு பங்களாவை காலி செய்தார். பாந்த்ராவில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடியேறினார்.

    ஆனால் இதை ஏக்நாத் ஷிண்டே நிராகரித்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா விலக வேண்டும் என்றார்.

    இதுதொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

    மகா விகாஸ் கூட்டணி இயற்கைக்கு மாறானது. அதில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டும் தான் கூட்டணியில் பலன் அடைந்துள்ளனர். அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியினர் கடந்த 2½ ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகா விகாஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும். முதல் மந்திரி பதவியை நான் விரும்பவில்லை. மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பிரதாப் சர்நாயக் கூறும்போது, "பா.ஜனாவுடனான கூட்டணியை சிவசேனா மீண்டும் புதுப்பிக்க வேண்டும். காங்கிரஸ் கூட்ட ணியில் இருந்து வெளியேற வேண்டும்" என்றார்.

    இந்த நிலையில் மேலும் 3 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்துள்ளனர். தீபக் கேசகர், மங்கேஷ் குதால்கர், சதா சர்வான்கர் ஆகியோர் இன்று காலை மும்பையில் இருந்து புறப்பட்டு கவுகாத்தி சென்றனர். அவர்கள் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் அவரது கை ஓங்கி உள்ளது.

    35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே துணை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து இருந்தார். அதில் கட்சியின் தலைமை கொறடாவாக இருக்கும் சுனில் நீக்கப்பட்டு இருப்பதாகவும், புதிய கொறடாவாக பரத் கோகோவாலே நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    சிவசேனா கட்சியில் மொத்தம் 55 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 36 எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் உள்ளனர். இதனால் மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.

    ஏக்நாத் ஷிண்டே இன்று காலை 11 மணியளவில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கவுகாத்தியில் இருந்து மும்பைக்கு திரும்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதே போல் உத்தவ் தாக்கரேயும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்தடுத்த ஆலோசனையால் மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மகாராஷ்டிரா முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.
    • சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளார். அவர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தான். அவரே மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார். வாய்ப்பு கிடைத்தால் சட்டசபையில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம் என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகினர்.
    • அவர்கள் குஜராத்தில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமாகி, அவர்கள் குஜராத் ஓட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் சிவசேனா அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு ஆட்சியமைக்கும் முயற்சியில் பா.ஜ.க. தீவிரம் காட்டியுள்ளது.

    288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்துப் போட்டியிட்டன. இதில் 105 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் மந்திரி பதவியில் பங்கு கேட்டு சிவசேனா வற்புறுத்தியது.

    பா.ஜ.க. இதை ஏற்க மறுத்ததால் அங்கு அரசியல் பூகம்பம் ஏற்பட்டது. சிவசேனா கட்சி தனது இந்துத்வா கொள்கைக்கு மாறான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து 162 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாகவும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் துணை முதல் மந்திரியாகவும் நவம்பர் 30-ம் தேதி பதவியேற்றனர்.

    உத்தவ் தாக்கரே அரசு இரண்டரை ஆண்டுகளைக் கடந்து ஆட்சி செய்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலிலும், நேற்று முன்தினம் நடந்த மகாராஷ்டிர மேல்சபை தேர்தலிலும் ஆளும் கூட்டணியை மிஞ்சி பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் மேல் சபைக்கு நடந்த தேர்தலின் போது மாலை 5 மணி வரை சிவசேனா சட்டமன்ற குழு தலைவரான மந்திரி ஏக்நாத் ஷிண்டே, முதல் மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் இருந்தார். அதன்பிறகு அவரும், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலரும் திடீரென மாயமாகினர். அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்திற்கு இரவோடு இரவாக சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கியது தெரியவந்தது. நேற்று காலை மேலும் சில சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் சூரத் ஓட்டலுக்கு சென்று அவர்களோடு தங்கினர்.

    ஏக்நாத் ஷிண்டேயுடன் இருக்கும் 22 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் வெளியானது. இருப்பினும் தங்களது அணியில் 30-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவர்கள் கூறினர். அவர்கள் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அமைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், ஆட்சியைக் கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சி பலிக்காது என சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

    ×