search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Meenakshi Amman Temple"

    • மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக இருந்த கருமுத்து கண்ணன் மறைவையடுத்து புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
    • அறங்காவலர்கள் குழுவினர் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்வு செய்வார்கள்.

    சென்னை:

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்களாக மதுரை அண்ணா நகரை சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை காந்திநகர் சுப்புலட்சுமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனி வேல்ராஜன், கே.கே.நகர் சீனிவாசன், அரசரடி மீனா ஆகிய 5 பேரை நியமித்து இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கடந்த மே 23-ந்தேதி மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக இருந்த கருமுத்து கண்ணன் மறைவையடுத்து புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறங்காவலர்கள் குழுவினர் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்வு செய்வார்கள். அறங்காவலர்கள் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.
    • ஒரே நேரத்தில் கோவிலுக்குள் இருந்ததால் அவர்கள் சந்திக்க கூடும் என்று வெளியில் காத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

    மதுரை:

    மதுரை வலையங்குளத்தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட இந்த மாநாடு வெற்றி பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வருகை தந்தார்.

    கிழக்கு நுழைவு வாயில் வழியாக கோவிலுக்குள் சென்ற அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்த அவர் பிரகாரங்கள் வழியாக சுற்றி வந்தார். பொற்றாமரை குளத்தின் படிக்கட்டுகளில் நின்றவாறு கோவில் அழகை ரசித்தார்.

    இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் பாராளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில், பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இன்று இரண்டாவது நாளாக அவர்கள் சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டனர். இதையடுத்து கனிமொழி தலைமையிலான நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.

    எடப்பாடி பழனிசாமி கோவிலுக்குள் சென்ற சிறிது நேரத்தில் கனிமொழி எம்.பி.யும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். இருவரும் ஒரே நேரத்தில் கோவிலுக்குள் இருந்ததால் அவர்கள் சந்திக்க கூடும் என்று வெளியில் காத்திருந்த அ.தி.மு.க., தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

    ஆனால் இருவரும் வெவ்வேறு பிரகாரங்களில் இருந்தனர். அவர்கள் சந்திக்கவில்லை என்று உடன் சென்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் முதலில் எடப்பாடி பழனிசாமியும், அதன் பிறகு கனிமொழி எம்.பி. தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களும் கோவிலை விட்டு வெளியே வந்து புறப்பட்டு சென்றனர்.

    இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்.
    • மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரம்மாண்ட முறையில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு கடந்த 20-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் அ.தி.மு.க. தலைமை எதிர்பார்த்தது போல தொண்டர்கள் குவிந்ததால் மாநாடு மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும், வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றி கிடைக்கும் என்றும் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மாநாடு வெற்றியை கொண்டாடும் வகையில் மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு கறி விருந்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். நேற்று மாலை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் அழகர் கோவில் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தில் இருந்து ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக சேலத்தில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மதுரைக்கு காரில் புறப்பட்டார். அவர் காலை 8.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு நுழைவாயில் பகுதிக்கு வந்தார். அப்போது அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க, அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார் வாழ்க என்று திரண்டு நின்ற தொண்டர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடி எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை கொடுக்கப்பட்டது.

    மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதி, முக்குருணி விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள், பொற்றாமரைக்குளம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதற்காக சிறப்பு பூஜைகள் செய்து விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் அவருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட சம்பவம் மதுரை அ.தி.மு.க. தொண்டர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் சுமார் ஒரு மணி நேரம் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி பின்னர் காரில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் அதிகாலை முதலே திரண்டதால் அந்த பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன்.
    • கருமுத்து கண்ணனின் உடல் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் (வயது 70). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அருகே உள்ள கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் கருமுத்து கண்ணன் இன்று காலை மரணம் அடைந்தார். அவரது மரண செய்தி அறிந்ததும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருவதுடன் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    மரணமடைந்த கருமுத்து கண்ணன் கடந்த 1953-ம் ஆண்டு தொழிலதிபர் கருமுத்து தியாகராஜர்-ராதா தம்பதியருக்கு ஒரே மகனாக பிறந்தார். இவர் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராஜர் கலைக் கல்லூரி, திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் மேலாண்மை கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் தலைவராகவும், நூற்பாலைகளில் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    மிகச்சிறந்த நிர்வாகியாக போற்றப்பட்ட கருமுத்து கண்ணன் கடந்த 18 ஆண்டுகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக தொடர்ந்து பதவி வகித்தார்.

    இவரது பதவி காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பல்வேறு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. அங்கு குளிர்சாதன வசதி, தகவல் மையம், சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்கம் பிரதிஷ்டை உள்ளிட்ட ஆன்மீக பணிகள் நேர்த்தியாக செய்யப்பட்டன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உப கோவில்களான தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த கருமுத்து கண்ணன் ஏற்பாடு செய்தார்.

    மேலும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்க துரித நடவடிக்கை மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சியம்மன் கோயில் உள்ள வசந்த ராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதிலுள்ள தூண்கள் சேதம் அடைந்தது.

    அதனை மீண்டும் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த கருமுத்து கண்ணன், அந்த பணிகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வந்தார். மத்திய அரசின் ஜவுளிக்குழு தலைவராக பதவி வகித்துள்ள அவருக்கு தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும், கவுரவ பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கருமுத்து கண்ணனுக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களும் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களுக்கு தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மதுரைக்கு விரைந்துள்ளனர்.

    எனவே கருமுத்து கண்ணனின் உடல் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கருமுத்து கண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    அவரது இறுதி சடங்குகள் மற்றும் உடல் தகனம் நாளை பிற்பகலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்மன், சுவாமி சன்னதிகளுக்கு சென்று ரோஜா வழிபட்டார்.
    • சொக்கரையும் கும்பிட்டு விட்டு புதிய உத்வேகத்தோடு மக்களுக்கு நல்லது செய்ய சந்தோஷமாக செல்கிறேன் என ரோஜா கூறினார்.

    மதுரை:

    ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அம்மன், சுவாமி சன்னதிகளுக்கு சென்று ரோஜா வழிபட்டார். பின்னர் கோவிலை சுற்றி பார்த்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை பார்க்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சாமி தரிசனம் செய்து விட்டு அம்மன் சன்னதி வழியாக வெளியே வந்த ரோஜா நிருபர்களிடம் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் அருளால் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது கோவிலுக்கு வந்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துள்ளேன். சொக்கரையும் கும்பிட்டு விட்டு புதிய உத்வேகத்தோடு மக்களுக்கு நல்லது செய்ய சந்தோஷமாக செல்கிறேன் என்றார்.

    அவரிடம் தொடர்ந்து நிருபர்கள் அரசியல் தொடர்பாக கேள்வி கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.
    • ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

    மதுரை:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.

    மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விமான நிலையம் சென்று கோவை செல்கிறார். அங்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
    • உண்டியல் எண்ணிக்கையின்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், கோவில் தக்கார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 11 உபகோவில்களின் உண்டியல்கள் கோவில் வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டன. இதில் காணிக்கையாக ரூ. 1 கோடியே 20 லட்சத்து 97 ஆயிரத்து 991 கிடைத்தது.

    0.540 கிராம் தங்கம், 3 கிலோ 280 கிராம் வெள்ளி, 323 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையின்போது கோவில் துணை கமிஷனர் அருணாசலம், கோவில் தக்கார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    • ஆண்டுதோறும் சராசரியாக 4 தடவைகள் கிரகணங்கள் நிகழும். அதன்படி சூரிய கிரகணம் இன்று நடக்க உள்ளது.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சி காலம், சாயரக்ஷை பூஜைகள் ஆகியவை முடிந்த பிறகு காலை 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது.

    மதுரை:

    சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழும். அப்போது நிலவின் நிழலை சூரியன் மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழலை சந்திரன் மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் சராசரியாக 4 தடவைகள் கிரகணங்கள் நிகழும். அதன்படி சூரிய கிரகணம் இன்று நடக்க உள்ளது. அதாவது இன்று மாலை 5:23 மணி முதல் 6:23 மணி வரை நிகழும். அந்த நேரத்தில் கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சி காலம், சாயரக்ஷை பூஜைகள் ஆகியவை முடிந்த பிறகு காலை 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. அதன் பிறகு பக்தர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திம காலம் மாலை 5:51 மணிக்கு சுவாமிகளுக்கு தீர்த்தம் வழங்கி, கிரகணகால அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு சந்திரசேகர் புறப்பாடு நடக்கிறது.

    இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்படும். எனவே இங்கு வழக்கமாக நடத்தப்படும் கோலாட்ட உற்சவம், சுவாமி புறப்பாடு ஆகியவை இன்று ஒரு நாள் மட்டும் இரவு 7 மணிக்கு பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை 8 மணி நேரம் மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும்.

    சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி உப ஆலயங்களான தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முத்தீஸ்வரர் கோவில், பைரவர் கோவில், கீழமாசி வீதி தேரடி கருப்பண்ண சுவாமி கோவில், ஏழுகடல் காஞ்சன மாலை அம்மன் கோவில், விநாயகர் கோவில், கீழஆவணி மூலவீதி காலபைரவர் கோவில்,

    தெற்கு மாசி வீதி தென்திருவாலய சாமி கோவில், வீரபத்திர சுவாமி கோவில், சிம்மக்கல் வடக்குவாசல் அனுமார் கோவில், ஆதி சொக்கநாதர் கோவில், செல்லாத்தம்மன் கோவில், திருமலைராயர் படித்துறை காசி விஸ்வநாதர் கோவில், புட்டுத்தோப்பு கடம்பவனேஸ்வரர் கோவில்,

    செல்லூர் பரிபூரண விநாயகர் கோவில், திருவாபுடையார் கோவில், நாகமலை புதுக்கோட்டை சித்தி விநாயகர் கோவில், ஆமூர் ஐயம்பொழில் ஈஸ்வரன் கோவில், சுண்ணாம்பூர் மகா கணபதி கோவில், திருவாதவூர் பிடாரி அம்மன் கோவில், திருமறை நாதர் கோவில், கொந்தகை தெய்வ நாயகப் பெருமாள் கோவில் ஆகிய 23 கோயில்களிலும் இன்று மாலை நடை சாத்தப்படும் என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில், கோவிலின் உள்ளே செல்லும் பகுதியில் அதிகளவில் கடைகள் உள்ளன.
    • கோவில் ஊழியர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், மூடிய கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றும் படி அறநிலையத்துறை உத்தரவிட்டது.

    மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில், கோவிலின் உள்ளே செல்லும் பகுதியில் அதிகளவில் கடைகள் உள்ளன. அந்த கடைகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது.

    கோவில் ஊழியர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், மூடிய கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    கிழக்கு கோபுர பகுதியில் 53 கடைகள் அகற்றப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 12 கடைகளை அகற்றக்கூடாது என்று கோர்ட்டு இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. அந்த கடைகள் அகற்றப்படவில்லை.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 10 மாதங்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் ரூ.2 கோடி வருமானம் கிடைத்துள்ளது. #MaduraiMeenakshiTemple
    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்போன்களை கொண்டு செல்ல கூடாது என்று ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது.

    மேலும் கோவில் நிர்வாகம், பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    பின்னர் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் 5 கோபுர வாசல்களிலும் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க தனி அறைகள் அமைக்கப்பட்டு, அங்கு தற்காலிக ஊழியர்களை நியமித்தது. மேலும் செல்போன் ஒன்றை பாதுகாக்க அங்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் கோவிலுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

    இதற்கிடையே மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மீனாட்சி அம்மன் கோவிலில் இதுநாள் வரை செல்போன் கட்டணமாக எவ்வளவு ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகத்திடம் கேள்வி கேட்டு இருந்தார். அதில் நிர்வாகம் கொடுத்த தகவல் படி கடந்த 10 மாதங்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 10 வசூலாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கட்டணத்தை ரூ.5 ஆக குறைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #MaduraiMeenakshiTemple

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறுமழை பெய்தாலே தண்ணீர் கோவிலுக்குள் புகுந்துவிடும். நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக கோவிலின் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் தண்ணீர் புகுந்தது. #MeenakshiAmmanTemple
    மதுரை:

    மதுரையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    மதுரை மாவட்டத்தில் தற்போது சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் நிரம்பி வருகிறது.

    நேற்று 7-ந்தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் காலை முதல் மாலை வரை சில நிமிடங்களில் மிதமான மழை பெய்தது.

    நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. சுமார் 1மணி நேரம் இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் நிலையப்பகுதிகளிலும் வெள்ளம் கரை புரண்டது.

    மதுரை மாவட்டத்தில் மொத்தம் 85 செ.மீ. மழை பெய்துள்ளது. அதன் சராசரி அளவு 4 செ.மீ ஆகும்.

    கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனை சரி செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறுமழை பெய்தாலே தண்ணீர் கோவிலுக்குள் புகுந்துவிடும். நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக கோவிலின் கிழக்கு கோபுர நுழைவு வாயிலில் தண்ணீர் புகுந்தது. மேலும் கோவிலுக்குள் உள்ள வடக்காடி வீதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இன்று காலை கோவில் ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றினர். #MeenakshiAmmanTemple

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பசும்பால், சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. #MaduraiMeenakshiTemple
    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.

    வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட கூட்டம் அலைமோதும்.



    கைக்குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் போது சில குழந்தைகள் வயிற்றுப்பசி உள்ளிட்ட காரணங்களால் அழுவதுண்டு.

    இது பக்தர்களுக்கு சாமி கும்பிடும் நேரத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதாக கோவில் நிர்வாகம் கருதியது. இதனை சரி செய்யும் வகையிலும் குழந்தைகளின் பசியை போக்கவும் பசும்பால் மற்றும் சுடுதண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டு தற்போது அம்மன் சன்னதியில் இலவச பால் மற்றும் சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கென 2 பெண் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கு பால் வழங்கும் இந்த முயற்சிக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவில் இணை கமி‌ஷனர் நடராஜன் கூறியதாவது:-

    கோவிலில் சாமி கும்பிடும்போது குழந்தைகளின் அழுகுரலை கட்டுப்படுத்த இலவச பசும் பால் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    இந்த திட்டம் பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளதால் தினமும் அபிஷேகத்திற்கு போக மீதம் உள்ள 20 லிட்டர் பசும்பால் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் பெரிய கேனில் சுடுதண்ணீரும் வைக்கப்பட்டு கோவில் ஊழியர்கள் மூலம் டம்ளர்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த முயற்சிக்கு பக்தர்களின் வரவேற்பு அதிகரித்துள்ளதால் இதற்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு குழந்தைகளின் பசி தீர்க்கப்படுகிறது.

    இது போன்று மற்ற கோவில்களிலும் குழந்தைகளுக்கு பசும்பால் வழங்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MaduraiMeenakshiTemple

    ×