search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைப்பு
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

    சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைப்பு

    • ஆண்டுதோறும் சராசரியாக 4 தடவைகள் கிரகணங்கள் நிகழும். அதன்படி சூரிய கிரகணம் இன்று நடக்க உள்ளது.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சி காலம், சாயரக்ஷை பூஜைகள் ஆகியவை முடிந்த பிறகு காலை 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது.

    மதுரை:

    சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழும். அப்போது நிலவின் நிழலை சூரியன் மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழலை சந்திரன் மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் சராசரியாக 4 தடவைகள் கிரகணங்கள் நிகழும். அதன்படி சூரிய கிரகணம் இன்று நடக்க உள்ளது. அதாவது இன்று மாலை 5:23 மணி முதல் 6:23 மணி வரை நிகழும். அந்த நேரத்தில் கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உச்சி காலம், சாயரக்ஷை பூஜைகள் ஆகியவை முடிந்த பிறகு காலை 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. அதன் பிறகு பக்தர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திம காலம் மாலை 5:51 மணிக்கு சுவாமிகளுக்கு தீர்த்தம் வழங்கி, கிரகணகால அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு சந்திரசேகர் புறப்பாடு நடக்கிறது.

    இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்படும். எனவே இங்கு வழக்கமாக நடத்தப்படும் கோலாட்ட உற்சவம், சுவாமி புறப்பாடு ஆகியவை இன்று ஒரு நாள் மட்டும் இரவு 7 மணிக்கு பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை 8 மணி நேரம் மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும்.

    சூரிய கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி உப ஆலயங்களான தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முத்தீஸ்வரர் கோவில், பைரவர் கோவில், கீழமாசி வீதி தேரடி கருப்பண்ண சுவாமி கோவில், ஏழுகடல் காஞ்சன மாலை அம்மன் கோவில், விநாயகர் கோவில், கீழஆவணி மூலவீதி காலபைரவர் கோவில்,

    தெற்கு மாசி வீதி தென்திருவாலய சாமி கோவில், வீரபத்திர சுவாமி கோவில், சிம்மக்கல் வடக்குவாசல் அனுமார் கோவில், ஆதி சொக்கநாதர் கோவில், செல்லாத்தம்மன் கோவில், திருமலைராயர் படித்துறை காசி விஸ்வநாதர் கோவில், புட்டுத்தோப்பு கடம்பவனேஸ்வரர் கோவில்,

    செல்லூர் பரிபூரண விநாயகர் கோவில், திருவாபுடையார் கோவில், நாகமலை புதுக்கோட்டை சித்தி விநாயகர் கோவில், ஆமூர் ஐயம்பொழில் ஈஸ்வரன் கோவில், சுண்ணாம்பூர் மகா கணபதி கோவில், திருவாதவூர் பிடாரி அம்மன் கோவில், திருமறை நாதர் கோவில், கொந்தகை தெய்வ நாயகப் பெருமாள் கோவில் ஆகிய 23 கோயில்களிலும் இன்று மாலை நடை சாத்தப்படும் என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×