search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Milk Water"

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பசும்பால், சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. #MaduraiMeenakshiTemple
    மதுரை:

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.

    வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவதால் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட கூட்டம் அலைமோதும்.



    கைக்குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் போது சில குழந்தைகள் வயிற்றுப்பசி உள்ளிட்ட காரணங்களால் அழுவதுண்டு.

    இது பக்தர்களுக்கு சாமி கும்பிடும் நேரத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதாக கோவில் நிர்வாகம் கருதியது. இதனை சரி செய்யும் வகையிலும் குழந்தைகளின் பசியை போக்கவும் பசும்பால் மற்றும் சுடுதண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டு தற்போது அம்மன் சன்னதியில் இலவச பால் மற்றும் சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கென 2 பெண் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கு பால் வழங்கும் இந்த முயற்சிக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவில் இணை கமி‌ஷனர் நடராஜன் கூறியதாவது:-

    கோவிலில் சாமி கும்பிடும்போது குழந்தைகளின் அழுகுரலை கட்டுப்படுத்த இலவச பசும் பால் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    இந்த திட்டம் பக்தர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளதால் தினமும் அபிஷேகத்திற்கு போக மீதம் உள்ள 20 லிட்டர் பசும்பால் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் பெரிய கேனில் சுடுதண்ணீரும் வைக்கப்பட்டு கோவில் ஊழியர்கள் மூலம் டம்ளர்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த முயற்சிக்கு பக்தர்களின் வரவேற்பு அதிகரித்துள்ளதால் இதற்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு குழந்தைகளின் பசி தீர்க்கப்படுகிறது.

    இது போன்று மற்ற கோவில்களிலும் குழந்தைகளுக்கு பசும்பால் வழங்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MaduraiMeenakshiTemple

    ×