search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "larceny"

    திருப்பதி பஸ் நிலையங்களில் பயணிகள் போல் நடித்து நகை, பணம் திருடிய 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி பஸ் நிலையங்கள் மற்றும் பஸ்களில் பயணிகளிடம் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாக திருப்பதி குற்றப்பிரிவு போலீசாருக்குப் புகார்கள் வந்தன. திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் திருப்பதியில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மாதவம் தங்கும் விடுதி அருகில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த இரு இளம்பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இருவரும், கர்னூல் மாவட்டம் ஆத்மகூரு மண்டலம் சித்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரமணம்மா என்கிற சங்கீதா (வயது 22), அனிதா (19) எனத் தெரிய வந்தது. இளம்பெண்களான இருவரும், திருப்பதியில் உள்ள பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள்போல் நடித்து, சக பயணிகளிடம் நகை, பணத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான இரு இளம்பெண்கள் மீதும் திருப்பதி போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #POCOF1



    சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஆன்லைனில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதிக சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை குறைந்த விலையில் வழங்குவதால் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சியோமி நிறுவனம் தனது போகோ எஃப்1 ஸ்மார்ட்போனினை ஆஃப்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 13 (இன்று) முதல் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் சியோமியின் அதிகாரப்பூர்வ Mi ஹோம் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

    இதைத் தொடர்ந்து சியோமியின் கூட்டு விற்பனை மையங்களில் அக்டோபர் 17-ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சியோமி போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரர்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போகோ பிரான்டு இந்தியர்கள் மத்தியில் பிரபலப்படுத்த சியோமி முடிவு செய்துள்ளது.

    ஆகஸ்டு மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் 6ஜி.பி. ரேம்/64 ஜி.பி. மெமரி, 6ஜி.பி. ரேம்/128 ஜி.பி. மெமரி, 8ஜி.பி. ரேம்/256 ஜி.பி. மெமரி என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டு இயங்குகிறது, இதே பிராசஸர் ஒன்பிளஸ் 6, சாம்சங் கேலக்ஸி நோட் 9 மற்றும் பல்வேறு இதர ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. 



    போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் 
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் பிளாக், ஸ்டீல் புளு மற்றும் ரோஸோ ரெட் போன்ற நிறங்களிலும், ஆர்மர்டு எடிஷன் மாடலும் கிடைக்கிறது. இவற்றுடன் சாஃப்ட் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. 

    போகோ எஃப்1 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.20,999, போகோ எஃப்1 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.23,999, போகோ எஃப்1 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.28,999, போகோ எஃப்1 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சித்தோடு அருகே வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

    ஈரோடு:

    சித்தோடு அருகே உள்ள நடுப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் உமா சங்கர் (வயது 30).

    மேல் வீட்டில் உமாசங்கர் தனது குடும்பத்துடனும், கீழ் வீட்டில் அவரது பெற்றோர் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் உமா சங்கர் மற்றும் அவரது பெற்றோர் என அனைவரும் சேர்ந்து வீட்டை பூட்டி விட்டு காரைக்குடிக்கு சென்று விட்டனர்.

    ஊருக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது மேல் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வீட்டின் உள்ளே பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவின் உள்ளே இருந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    ஆதம்பாக்கத்தில் 600 கிலோ செம்புகம்பி திருடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    பூந்தமல்லி:

    ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் அப்துல். இவர் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் பழைய வயர்களில் இருந்து செம்பு கம்பி, அலுமினியம் ஆகியவற்றை பிரித்து எடுக்கும் கம்பெனி வைத்திருக்கிறார்.

    இங்கு 5 பேர் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கம்பெனியில் இருந்த செம்புகம்பி திருட்டு போனது. இதுகுறித்து அப்துல் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது, கம்பெனியில் உள்ள சி.சி. டி.வி. கேமரா மூலம் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் செம்புகம்பி திருடியவர்கள் பற்றிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் கேளம்பாக்கத்தில் பழைய இரும்பு கடை வைத்துள்ள ஜான்ராஜ் (27), அசாம் மாநிலத்தை சேர்ந்த பகதூர் சட்டர்ஜி (23), அனில் (22), ஆப்தர் அலி (23), பிஜில் மோரன் (22), தன்போரா (21) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பிடிபட்டவர்களிடம் இருந்து 600 கிலோ செம்புகம்பி பறிமுதல் செய்யப்பட்டது. கேளம்பாக்கம் ஜான்ராஜ், அசாம் வாலிபர்களை வாடகை வீட்டில் தங்க வைத்து செம்புகம்பி திருட வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதவிர வட மாநில வாலிபர்கள் எங்கெங்கு திருடினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ஒரத்தநாடு அருகே ஓடும் பஸ்சில் நகை மற்றும் பணத்தை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நெசலிங்கப்பா. இவரது மனைவி திலகா.

    இந்த நிலையில் நேற்று திலகா ஒரத்தநாடு கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றார். அங்கு கொலுசு வாங்கி விட்டு ஒரத்தநாடு- மன்னார்குடி டவுன் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

    பின்னர் அவர் சாவடி பஸ் நிறுத்தத்தில் திலகா பஸ்சை விட்டு இறங்கிய போது தான் கொலுசு மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் வைத்திருந்த கைபையை காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். மேலும் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் கூச்சல் போட்டதால் பஸ்சில் இருந்தவர்கள் பஸ்சை நிறுத்த கூறினர். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள், திலகாவிடம் நகை- பணத்தை திருடியதை ஒப்பு கொண்டனர். இதையடுத்து அந்த 3 பெண்களையும் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் 3 பெண்களும் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதான 3 பெண்களும் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. மேலும் பிடிபட்ட 3 பெண்களும் தங்களது பெயர்களை மாற்றி மாற்றி கூறி வருவதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ராஜபாளையத்தில் திருட்டு வழக்குகளில் சிறை சென்று திரும்பியவர் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 32), மைக்செட் தொழிலாளி. இவர் திருப்பூரில் வேலை பார்த்தபோது அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

    சில நாட்களில் மாரியப்பனின் நடவடிக்கை பிடிக்காததால், மனைவி பிரிந்து சொந்த ஊர் சென்று விட்டார். அதன் பிறகு கேரளா சென்ற மாரியப்பன் அங்கு பரமேஸ்வரி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து அழைத்து வந்தார். இவர்களுக்கு பெரியசாமி (8), மல்லிகா (5) என 2 குழந்தைகள் உள்ளனர்.

    2 குழந்தைகள் ஆன பிறகும் மாரியப்பனின் நடவடிக்கை சரியில்லை என கூறப்படுகிறது. திருட்டு வழக்குகளில் சிக்கி சிறைக்கும் சென்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த பரமேசுவரி மகனுடன் கேரளா சென்றுவிட்டார்.மகளையும் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து விட்டார்.

    2 மனைவிகள் பிரிந்த நிலையில் மாரியப்பனின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அதன் பின்னர் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் தளவாய்புரம் போலீசில் மாரியப்பனின் தாயார் பஞ்சவர்ணம் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அவனியாபுரத்தில் கதவு பூட்டை உடைத்து பர்னிச்சர் கடையில் பொருட்களை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர்.

    அவனியாபுரம்:

    மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ரகு, அவனியாபுரம் காமராஜர் நகரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று காலை கடைக்கு வந்தபோது முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 9 துளைபோடும் எந்திரங்கள், ஒரு மோட்டார், கம்ப்யூட்டர், 3 குத்துவிளக்குகள், சரக்கு ஆட்டோ பேட்டரி, பித்தளை குடம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவனியாபுரத்தில் உள்ள மாநகராட்சியின் வரி வசூல் மையத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து இன்வெர்ட்டர் பேட்டரி உள்பட சில பொருட்களை திருடியுள்ளனர்.

    இது போன்று அவனியாபுரத்தில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

    இதனை தவிர்க்க போலீசார் தீவிர கவனம் செலுத்தி திருடர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணியிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திலும், ரெயிலில் வரும் பயணிகளிடமும் தொடர்ச்சியாக செல்போன் திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு பயணியிடம் பணம், செல்போன் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தல் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 37). சமையல் மாஸ்டர்.

    சம்பவத்தன்று இரவு இவர் கோவையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரெயிலில் செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

    ஆனால் அந்த ரெயிலை அவர் தவறவிட்டார். எனவே மறுநாள் அதிகாலையில் வரும் ரெயிலில் செல்லலாம் என்று நினைத்து ரெயில் நிலையத்தில் தங்கினார்.

    அங்கு டிக்கெட் வழங்கப்படும் இடத்தின் அருகே படுத்து தூங்கினார். திடீரென எழுந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த ரூ. 3700 பணம் மற்றும் செல்போனை காணவில்லை.

    கவியரசன் தூங்கியதை சாதகமாக வைத்து அவரிடம் இருந்து யாரோ மர்ம நபர் பணம், செல்போனை திருடியது தெரியவந்தது.

    இது குறித்து ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் நிலையத்தில் இது போன்று தொடர்ச்சியாக நடைபெறும் திருட்டு சம்பவங்கள் ரெயில் பயணிகளையும், மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கோவையில் கைவரிசை காட்டிய மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 10 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில மாதங்களாக மோட் டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது.

    குறிப்பாக காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, அரசு ஆஸ் பத்திரி முன்புறம், பீளமேடு, போத்தனூர் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நிறுத்தி செல்லும் மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் நைசாக திருடி சென்றனர்.

    இதில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்ற இடங்களில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் மூலம் மோட்டார் சைக்கிள் திருடியதாக ரத்தினபுரியை சேர்ந்த விஜயகுமார் (வயது 22), சாய்பாபா காலனியை சேர்ந்த மதன் குமார்(22), சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்த பாபு(27), ஜாகிர் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 4 பேரும் லேத் வேலை செய்து வந்துள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர்.

    இவர்கள் திருடும் மோட்டார் சைக்கிளின் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்துள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளை விற்பதன் மூலம் ரூ.10 ஆயிரம் வரை கிடைத்துள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் பற்றியும் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பேரில் மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை கைது செய்த உதவி கமி‌ஷனர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசாரை, மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, துணை கமி‌ஷனர் பெருமாள் ஆகியோர் பாராட்டினர்.
    ×