search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry theft"

    • புதிய பஸ் நிலையத்தில் தொடரும் சம்பவம்
    • கண்காணிப்பு பணியை தீவிரபடுத்த வேண்டும்

    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார்.

    இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். பிரதீப்குமார் தனது மனைவி மற்றும் மாமியாரை அழைத்துக் கொண்டு மீண்டும் அங்கிருந்து வேலூர் வருவதற்காக, திருப்பதி செல்லும் பஸ்சில் பயணம் செய்தார்.

    அதன்படி பஸ் அதிகாலை 4.30 மணியளவில், வேலூர் புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. அங்கு பிரதீப்குமாரின் மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் கழிவறைக்குச் சென்றனர். பிரதீப் குமார் தனது கை குழந்தையை கையில் வைத்துக் கொண்டு, தான் கொண்டு வந்த பைகளையும் கீழே வைத்திருந்தார்.

    அப்போது அவர் பையில் வைத்திருந்த 5 பவுன் நகையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி விட்டார். என்ன செய்வது என தெரியாமல் பதறிப்போன பிரதீப்குமார், இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, புதிய பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம், நகை திருட்டு சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.

    எனவே புதிய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மர்ம நபர் 4 பவுன் நகையை திடுடி சென்றார்.
    • மூதாட்டி ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார்.

    கடலூர்:

    சேத்தியாதோப்பு அருகே வடகிரிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி ஜெயசெல்வி (வயது 52) இவர் கடந்த 24-ந்தேதி வீட்டிலிருக்கும்போது அங்கு வந்த மர்ம நபர் ஏ.டி.எம் ல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஜெயசெல்வியிடருந்து 4 பவுன் நகையை திடுடி சென்றார்.

    இதுகுறித்து மூதாட்டி ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சேத்தியாதோப்பு பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அந்த நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஆசைகுமார் (வயது 49) என்பதும் வடகிரிராஜபுரம் பகுதியில் உள்ள மூதாட்டியிடம் இருந்து 4 பவுன் நகையை திருடி சென்றதை ஒப்புகொண்டார்.

    உடனே போலீசார் ஆசைகுமாரின் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஆசைகுமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறிது நேரத்தில் தண்ணீர் பாட்டிலுடன் பஸ்சில் ஏறிய வடிவேல் பையை காணாமல் திடுக்கிட்டார்.
    • பஸ் நிலையத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து தினமும் வெளியூர்களுக்கு ஏராளமான பயணிகள் புறப்பட்டு செல்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பு கருதி பஸ்நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறி பயணியின் நகைகள் இருந்த பையை வாலிபர் ஒருவர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆவடியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி சுவர்ணத்தாய். ஆசிரியை. இவர்கள் இருவரும் திருச்சி துறையூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு தங்களது வீட்டில் இருந்து புறப்பட்டனர். வாடகை காரில் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு வந்த இருவரும் பஸ்நிலையத்தில் 6-வது நடைமேடையில் துறையூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறி அமர்ந்தனர். டிரைவர் இருக்கையின் பின்புறம் 3- வது இருக்கையில் இடம் பிடித்த கணவன் - மனைவி இருவரும் சீட்டின் மேலே பைகளை வைக்கக்கூடிய இடத்தில் தங்களது பையை வைத்து விட்டு அமர்ந்திருந்தனர்.

    அப்போது வடிவேல் மனைவியை இருக்கையில் அமரவைத்து விட்டு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக கீழே இறங்கினார்.

    சிறிது நேரத்தில் தண்ணீர் பாட்டிலுடன் பஸ்சில் ஏறிய வடிவேல் பையை காணாமல் திடுக்கிட்டார். இது பற்றி மனைவியிடம் கேட்டபோது அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதனால் செய்வதறியாமல் தவித்த இருவரும் பஸ் நிலையத்தினுள் செயல்பட்டு வரும் கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ்நிலையத்துக்கு ஓடிச்சென்று புகார் அளித்தனர். வடிவேலு எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரை பெற்று போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கினர்.

    பஸ் நிலையத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது துறையூர் பஸ்சில் இருந்து வடிவேல்-சுவர்ணத்தாய் தம்பதியினரின் பையை தூக்கிக்கொண்டு வாலிபர் ஒருவர் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து திருட்டு வாலிபர் தப்பிச்சென்ற வழித்தடம் வழியாக போலீசார் பின்தொடர்ந்தனர். அப்போது அந்த வாலிபர் வடபழனி வரை ஆட்டோவில் சென்று பின்னர் அங்கிருந்து பஸ்சில் ஏறி கிண்டி கத்திப்பாராவில் போய் இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் ரமேஸ்கண்ணா, உமா மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கத்திப்பாரா பகுதியில் நின்றுகொண்டிருந்த வெளியூர் செல்லும் பஸ்களில் ஏறி சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை செல்லும் பஸ்சில் ஏறி திருட்டு வாலிபர் அமர்ந்திருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சுந்தரலிங்கம் என்பது தெரியவந்தது. தேவகோட்டையை சேர்ந்த இவரிடமிருந்து நகை பையை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த 14 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கோயம்பேட்டில் நகை பை இருந்த பெரிய பையை தூக்கிசென்ற வாலிபர் சுந்தரலிங்கம் நகை பையை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிய பையை தூக்கி வீசி இருக்கிறார். பின்னர் தனது சட்டையையும் மாற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு தப்ப முயன்றுள்ளார். ஆனால் போலீசார் பின் தொடர்ந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். நேற்று இரவு 10 மணி அளவில் திருட்டு சம்பவம் நடந்த நிலையில் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி 12 மணி அளவில் குற்றவாளியை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உயர் அதிகாரிகள் தனிப்படை போலீசாரை பாராட்டினர்.

    • நண்பரின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
    • மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூர் கிராமம் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் நேற்று மாலையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். 

    அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிறகு துரைசாமி உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த பீரோ மற்றும் கப்போர்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6பவுன் ஆரம், 4 பவுன் நெக்லஸ், அரை பவுன் டையுள்ள 5 மோதிரம், தோடுகள் 5 பவுன், , ஒரு பவுன் எடையுள்ள 5 காயின் உள்ளிட்ட மொத்தம் 25பவுன் தங்க நகை, பணம் 9 ஆயிரம் ரொக்கப்பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து துரைசாமி சின்னசேலம் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் குற்றவாளிகளை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா உதவியுடன் குழந்தையிடம் திருடிய பெருமபாக்கத்தை சேர்ந்த தபர்சம் பானுவை கைது செய்தனர்.
    • ஏற்கனவே பல தடவை திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    சென்னை:

    ஆவடி பகுதியைச் சேர்ந்த ரேவதி (வயது30) என்ற பெண் தனது குழந்தையுடன் சம்பவத்தன்று தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு துணிக்கடையில் சென்று துணிமணிகள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் அவரது குழந்தை கழுத்தில் இருந்த 12 கிராம் எடையுள்ள நகையை யாரோ திருடி சென்றனர்.

    இதுகுறித்து ரேவதி மாம்பழம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா உதவியுடன் குழந்தையிடம் திருடிய பெருமபாக்கத்தை சேர்ந்த தபர்சம் பானுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் ஏற்கனவே பல தடவை திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    • நகைகளை மீட்டு அதனை நகைகடையில் விற்று ரூ.1 லட்சத்து 97 தனது கைபையில் போட்டு எடுத்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (வயது70). இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று வங்கியில் இருந்து 4½ பவுன் நகைகளை மீட்டு அதனை நகைகடையில் விற்று ரூ.1 லட்சத்து 97 தனது கைபையில் போட்டு எடுத்து வந்தார்.

    அவர் கடையில் இருந்து பஸ்சில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் பஸ் நிறுத்தம் வந்ததும் இறங்கி பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.1.97 லட்சத்தை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் நகைகளை விற்று ரூ.1.97 லட்சம் பணத்தை கைபையில் போட்டு பஸ்சில் வந்தேன்.

    அப்போது எனது அருகே பயணிபோல் உட்கார்ந்து கொண்டு வந்த மர்ம நபர் தான் அந்த பணத்தை திருடி சென்றுள்ளார் என்று புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து திருட்டு செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர் சம்பவத்தன்று தனது குழந்தையுடன் மொபட்டில் வெளியே புறப்பட்டார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் ரேணுகா தேவியை பின் தொடர்ந்தார்.

    தெய்வானை நகர் அன்பின் வீதியில் வந்த போது மர்மநபர் ரேணுகாதேவியை மறித்து அவர் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். ஆனால் அவர் திருடனிடமிருந்து நகையை காப்பாற்ற முயன்றார். இதில் ஆத்திரமடைந்த மர்மநபர் ரேணுகா தேவியை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். அப்போது ரேணுகாதேவி கொள்ளையனை பிடிக்க மொபட்டில் சென்ற போது கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பெருமாள் கவுண்டர் இறந்து விட்டார். இவர்களது மகன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். பெரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் பெரியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் நுழைந்தனர். பின்னர் அதில் ஒருவர் பெரியம்மாளின் வாயை பொத்தினார். அப்போது மற்றொரு வாலிபர் அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் 2 பேரும் நகையுடன் தப்பி ஓடினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெரியம்மாள் பதட்டத்தில் சத்தம் போட்டு அலறினார். அதற்குள் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பெரியம்மாள் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்மநபர்கள் சிலர் இரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
    • மறைந்திருந்த மர்மநபர்கள் திடீரென சோனாவின் வாயை துணியால் கட்டி கழுத்தில் கத்தியை வைத்து பீரோ சாவி கொடு. இல்லையென்றால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டினர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 59). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து விட்டு தற்போது சொந்த ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேகா (45), மகள் சோனா (19).

    இந்நிலையில், நேற்று சவுந்தரராஜன் வழக்கம்போல் கடைக்கு சென்று விட்டார். ரேகா வெளியூர் சென்றார். வீட்டில் சோனா மட்டும் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் இரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

    சத்தம் கேட்டு சோனா வெளியே சென்று பார்த்தார். அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் திடீரென சோனாவின் வாயை துணியால் கட்டி கழுத்தில் கத்தியை வைத்து பீரோ சாவி கொடு. இல்லையென்றால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டினர். இதனால் செய்வதறியாது திகைத்த சோனா சாவியை எடுத்து கொடுத்தார்.

    பின்னர், பீரோவில் இருந்த சுமார் 16½ பவுன் தங்க நகை, ரூ.9500 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு வாயில் இருந்து துணியை எடுத்து சோனாவை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது திருடன்.. திருடன். காப்பாற்றுங்கள் என்று சோனா கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர், நடந்த விவரங்களை தனது தந்தையிடம் கூறினார்.

    இதுகுறித்து, சவுந்தரராஜன் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கைதான பாலமுருகன் மீது சென்னை அம்பத்தூர் புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
    • திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியே வந்த மறுநாளே அவன் திருமுல்லைவாயல் பகுதியில் நர்சு வீட்டில் கைவரிசை காட்டி சிக்கி உள்ளான்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல், சோழம்பேடு கண்ணன் தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகத்தாய். இவர், ஈ.எஸ். ஐ. அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 10-ந்தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான கோவில்பட்டிக்கு தனது தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டான்.

    இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்த போது நர்சு வீட்டில் கைவரிசை காட்டியது, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டை பாலா என்கிற பாலமுருகன் என்பது தெரிந்தது. அவனை சவுகார்பேட்டை அருகே நகையை விற்க முயன்ற போது போலீசார் கைது செய்தனர்.

    கைதான பாலமுருகன் மீது சென்னை அம்பத்தூர் புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியே வந்த மறுநாளே அவன் திருமுல்லைவாயல் பகுதியில் நர்சு வீட்டில் கைவரிசை காட்டி சிக்கி உள்ளான்.

    கொள்ளையடித்த நகைகளை விற்று ஊத்துக்கோட்டை அருகே உள்ள கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. அவனிடம் இருந்து 57 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பாலமுருகனை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பீரோ உடைக்கப்பட்டு 11 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி குமார் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் மதியழகன். விவசாயி. இவரது மனைவி மகாராணி (வயது 55). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையில் ஒரு மண்டபத்தில் நடந்த திருமண விழாவுக்கு சென்றார்.

    மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.

    பீரோ உடைக்கப்பட்டு 11 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறித்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை செயின்ட் பால்ஸ் ரோட்டை சேர்ந்தவர் நம்பி. இவரது மனைவி கன்னுத்தாய் (வயது55).

    இவர் சம்பவத்தன்று மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்க புரத்தில் இருந்து சந்தை ரவுண்டானா பகுதிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    பஸ்சை விட்டு இறங்கும் போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 14 கிராம் தங்க செயினை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ செயினை திருடியதை அறிந்து மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆன்டனி ஜெகதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினார்.

    அதில் திருட்டு சம்பவம் நடந்த பஸ்சில் இருந்து சந்தேகப்படும் படியாக 3 பெண்கள் இறங்கி அருகில் நின்ற காரில் ஏறி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவெண் மதுரையை சேர்ந்ததாக இருந்தது.

    இதையடுத்து அந்த பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த கார் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு சென்று காரை மடக்கி பிடித்தனர்.

    அதில் இருந்த 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து அவர்களை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே உள்ள மேட்டுபட்டி மஞ்சுமலை கோவில் தெருவை சேர்ந்த வெள்ளச்சாமி (வயது47), இவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ (36), ஆறுமுகசெல்வி (42), வாடிபட்டி அருகே உள்ள பெரிய ஊர் சேரியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மனைவி ஜீவா (47), அவரது மகன் ரஞ்சித் குமார் (29) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 5 பேரும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகளை திருடி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களாகவே மதுரையில் இருந்து ஒரே காரில் 5 பேரும் நெல்லைக்கு வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தினமும் அதிகாலையி லேயே காரில் புறப்பட்டு நெல்லைக்கு வந்து விடுவோம். மாநகர பகுதிக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து பெண்கள் 3 பேரும் கைக்குழந்தையுடன் கூட்டம் அதிகமான பஸ்களில் ஏற்றி விடுவோம்.

    கூட்டத்தில் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பெண் பயணிகளின் கழுத்தை நோட்டமிட்டு அவர்களிடம் கைக்குழந்தையை வைத்திருக்குமாறு கொடுப்பார்கள். பின்னர் லாவகமாக பயணிகளுக்கு தெரியாமலேயே அவர்கள் கழுத்தில் கிடக்கும் நகையை நைசாக பறித்து விட்டு குழந்தையுடன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுவார்கள்.

    நாங்கள் அந்த பஸ்சுக்கு பின்னாலேயே காரில் செல்வோம். 3 பெண்களும் பஸ்சை விட்டு இறங்கியதும் அவர்களை காரில் ஏற்றி கொண்டு தப்பி சென்று விடுவோம். பின்னர் அந்த நகைகளை மதுரைக்கு கொண்டு சென்று விற்ற பணத்தை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். தற்போது சி.சி.டி.வி. காமிரா மூலம் நாங்கள் சிக்கி கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கைதான ஆறுமுக செல்வி, ஜெயஸ்ரீ, ஜீவா ஆகியோரை கொக்கிர குளம் மகளிர் சிறையிலும், வெள்ளைச்சாமி, ரஞ்சித் குமார் ஆகியோரை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர். திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
    ×