search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    மதுரையில் இருந்து நெல்லை வந்து கைவரிசை - ஓடும் பஸ்களில் நகை பறித்த 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

    ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறித்த 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை செயின்ட் பால்ஸ் ரோட்டை சேர்ந்தவர் நம்பி. இவரது மனைவி கன்னுத்தாய் (வயது55).

    இவர் சம்பவத்தன்று மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்க புரத்தில் இருந்து சந்தை ரவுண்டானா பகுதிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    பஸ்சை விட்டு இறங்கும் போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 14 கிராம் தங்க செயினை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ செயினை திருடியதை அறிந்து மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆன்டனி ஜெகதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினார்.

    அதில் திருட்டு சம்பவம் நடந்த பஸ்சில் இருந்து சந்தேகப்படும் படியாக 3 பெண்கள் இறங்கி அருகில் நின்ற காரில் ஏறி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவெண் மதுரையை சேர்ந்ததாக இருந்தது.

    இதையடுத்து அந்த பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த கார் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு சென்று காரை மடக்கி பிடித்தனர்.

    அதில் இருந்த 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து அவர்களை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே உள்ள மேட்டுபட்டி மஞ்சுமலை கோவில் தெருவை சேர்ந்த வெள்ளச்சாமி (வயது47), இவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ (36), ஆறுமுகசெல்வி (42), வாடிபட்டி அருகே உள்ள பெரிய ஊர் சேரியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மனைவி ஜீவா (47), அவரது மகன் ரஞ்சித் குமார் (29) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 5 பேரும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகளை திருடி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களாகவே மதுரையில் இருந்து ஒரே காரில் 5 பேரும் நெல்லைக்கு வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தினமும் அதிகாலையி லேயே காரில் புறப்பட்டு நெல்லைக்கு வந்து விடுவோம். மாநகர பகுதிக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து பெண்கள் 3 பேரும் கைக்குழந்தையுடன் கூட்டம் அதிகமான பஸ்களில் ஏற்றி விடுவோம்.

    கூட்டத்தில் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் பெண் பயணிகளின் கழுத்தை நோட்டமிட்டு அவர்களிடம் கைக்குழந்தையை வைத்திருக்குமாறு கொடுப்பார்கள். பின்னர் லாவகமாக பயணிகளுக்கு தெரியாமலேயே அவர்கள் கழுத்தில் கிடக்கும் நகையை நைசாக பறித்து விட்டு குழந்தையுடன் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுவார்கள்.

    நாங்கள் அந்த பஸ்சுக்கு பின்னாலேயே காரில் செல்வோம். 3 பெண்களும் பஸ்சை விட்டு இறங்கியதும் அவர்களை காரில் ஏற்றி கொண்டு தப்பி சென்று விடுவோம். பின்னர் அந்த நகைகளை மதுரைக்கு கொண்டு சென்று விற்ற பணத்தை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். தற்போது சி.சி.டி.வி. காமிரா மூலம் நாங்கள் சிக்கி கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கைதான ஆறுமுக செல்வி, ஜெயஸ்ரீ, ஜீவா ஆகியோரை கொக்கிர குளம் மகளிர் சிறையிலும், வெள்ளைச்சாமி, ரஞ்சித் குமார் ஆகியோரை பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர். திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×