search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்சில் ஏறி ஆசிரியையின் 14 பவுன் நகை பையை திருடிவிட்டு தப்பிய வாலிபர் கைது
    X

    பஸ்சில் ஏறி ஆசிரியையின் 14 பவுன் நகை பையை திருடிவிட்டு தப்பிய வாலிபர் கைது

    • சிறிது நேரத்தில் தண்ணீர் பாட்டிலுடன் பஸ்சில் ஏறிய வடிவேல் பையை காணாமல் திடுக்கிட்டார்.
    • பஸ் நிலையத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து தினமும் வெளியூர்களுக்கு ஏராளமான பயணிகள் புறப்பட்டு செல்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பு கருதி பஸ்நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறி பயணியின் நகைகள் இருந்த பையை வாலிபர் ஒருவர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆவடியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி சுவர்ணத்தாய். ஆசிரியை. இவர்கள் இருவரும் திருச்சி துறையூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு தங்களது வீட்டில் இருந்து புறப்பட்டனர். வாடகை காரில் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு வந்த இருவரும் பஸ்நிலையத்தில் 6-வது நடைமேடையில் துறையூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறி அமர்ந்தனர். டிரைவர் இருக்கையின் பின்புறம் 3- வது இருக்கையில் இடம் பிடித்த கணவன் - மனைவி இருவரும் சீட்டின் மேலே பைகளை வைக்கக்கூடிய இடத்தில் தங்களது பையை வைத்து விட்டு அமர்ந்திருந்தனர்.

    அப்போது வடிவேல் மனைவியை இருக்கையில் அமரவைத்து விட்டு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக கீழே இறங்கினார்.

    சிறிது நேரத்தில் தண்ணீர் பாட்டிலுடன் பஸ்சில் ஏறிய வடிவேல் பையை காணாமல் திடுக்கிட்டார். இது பற்றி மனைவியிடம் கேட்டபோது அவருக்கு எதுவும் தெரியவில்லை. இதனால் செய்வதறியாமல் தவித்த இருவரும் பஸ் நிலையத்தினுள் செயல்பட்டு வரும் கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ்நிலையத்துக்கு ஓடிச்சென்று புகார் அளித்தனர். வடிவேலு எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரை பெற்று போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கினர்.

    பஸ் நிலையத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது துறையூர் பஸ்சில் இருந்து வடிவேல்-சுவர்ணத்தாய் தம்பதியினரின் பையை தூக்கிக்கொண்டு வாலிபர் ஒருவர் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து திருட்டு வாலிபர் தப்பிச்சென்ற வழித்தடம் வழியாக போலீசார் பின்தொடர்ந்தனர். அப்போது அந்த வாலிபர் வடபழனி வரை ஆட்டோவில் சென்று பின்னர் அங்கிருந்து பஸ்சில் ஏறி கிண்டி கத்திப்பாராவில் போய் இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் ரமேஸ்கண்ணா, உமா மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கத்திப்பாரா பகுதியில் நின்றுகொண்டிருந்த வெளியூர் செல்லும் பஸ்களில் ஏறி சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை செல்லும் பஸ்சில் ஏறி திருட்டு வாலிபர் அமர்ந்திருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சுந்தரலிங்கம் என்பது தெரியவந்தது. தேவகோட்டையை சேர்ந்த இவரிடமிருந்து நகை பையை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த 14 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கோயம்பேட்டில் நகை பை இருந்த பெரிய பையை தூக்கிசென்ற வாலிபர் சுந்தரலிங்கம் நகை பையை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிய பையை தூக்கி வீசி இருக்கிறார். பின்னர் தனது சட்டையையும் மாற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு தப்ப முயன்றுள்ளார். ஆனால் போலீசார் பின் தொடர்ந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். நேற்று இரவு 10 மணி அளவில் திருட்டு சம்பவம் நடந்த நிலையில் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி 12 மணி அளவில் குற்றவாளியை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உயர் அதிகாரிகள் தனிப்படை போலீசாரை பாராட்டினர்.

    Next Story
    ×