search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Instructions"

    • மற்ற வாகனங்களுடன் போதுமான இடைவெளி விட்டு, மெதுவாக இயக்க வேண்டும்.
    • கனமழை நேரங்களில் சாலையில் போதிய 'விசிபிளிட்டி' இருக்காது.

    திருப்பூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மழைக்காலத்தில் விபத்துகளில் இருந்து பாதுகாக்க சிலவற்றை பின்பற்ற வேண்டுமென திருப்பூர் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி ஈரமான சாலைகளில், போதுமான பிடிமானம் இருக்காது. வாகனங்கள் வழுக்குவதற்கு வாய்ப்புள்ளதால் மணிக்கு 30 - 40 கி.மீ., வேகத்தில் பயணிப்பது பாதுகாப்பானது. ஈரமான சாலையில் வண்டியை நிறுத்துவதற்கு தடுமாற்றம் ஏற்படும். மற்ற வாகனங்களுடன் போதுமான இடைவெளி விட்டு, மெதுவாக இயக்க வேண்டும்.

    ஈரமான சாலைகளில் வண்டி ஓட்ட, டயர்கள் நல்ல நிலையில் இருப்பது முக்கியம். டயர்களில் நல்ல கிரப், போதுமான ட்ரெட் பட்டன்கள் இருப்பதை உறுதி செய்யவும். தேய்ந்த டயர்களால் வாகனங்கள் சறுக்கி, விபத்துகள் நிகழும். தினமும் இரண்டு டயர்களின் அழுத்தத்தையும் தவறாமல் சோதித்துக் கொள்ள வேண்டும்.

    மழையில், சாலையின் மேற்பரப்பில் சிந்தியிருக்கும் வாகனங்களின் ஆயில் மற்றும் ஈரத்தால், வழுக்கும். 'சடன் பிரேக்' அடிக்கும்போது வண்டி உங்கள் கட்டுப்பாட்டை இழக்கலாம். இதேபோல் ஆக்சிலேட்டரை முறுக்கும்போதும், வளைவுகளில் திருப்பும்போதும் வண்டியை மெதுவாகவே இயக்க வேண்டும்.

    கனமழை நேரங்களில் சாலையில் போதிய 'விசிபிளிட்டி' இருக்காது. மழைநேரத்தில் உங்கள் முகப்பு விளைக்கை எரியவிட்டபடி பயணிக்கவும். மழையால் விளக்குகளில் சேறு படியும் என்பதால், அவ்வப்போது ஹெட்லைட் மற்றும் டெயில் லேம்புகளை சுத்தம் செய்ய வேண்டும்.

    தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் பைக்கை இயக்குவதை தவிர்க்கவும். பள்ளம் எந்தளவுக்கு ஆழம் என்பது நமக்கு தெரியாது. ஆழமாக இருப்பின் வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும். மழைநீர் உங்கள் பைக்கின் ஸ்பார்க் பிளக்கில் பட்டு, வண்டி பழுதடைவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென போலீசார் வேண்டுகோள் தெரிவித்துள்ளனர்.

    • பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
    • பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.

    திருப்பூர்:

    அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் சில விதிமீறல்கள் நடப்பதாக தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்த சில வழிகாட்டுதல்களை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் பஸ் இயக்கப்படும் போது லைெசன்ஸ் பெற்ற ஒரு பணியாளர் மட்டுமே பஸ்களை நகர்த்த வேண்டும். வேறு ஒருவர் இயக்க கூடாது. பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஓய்வறைகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது கூடாது. மீறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மதுஅருந்திய நிலையில் பணிக்கு வருபவர் குறித்து பாதுகாவலர் கண்காணிக்க வேண்டும். பஸ்சில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், வெடி பொருட்களை ஏற்ற எந்த நேரத்திலும் அனுமதிக்க கூடாது. பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தரப்பில் இருந்து திருப்பூர் உள்பட அனைத்து கிளை மண்டல மேலாளர்களுக்கு விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    • அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கொடுவாயில் நடைபெற்றது.
    • தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

    குண்டடம் :

    திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீதான அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கொடுவாயில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மகளிா் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், வீட்டுமனைப் பட்டா, கால்நடை மருத்துவமனை, குடிநீா் வசதி, கோயில் புனரமைப்பு பணிகள், சமுதாயக் கூடம், பொதுக்கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் கொடுமுடியை நீராதாரமாக கொண்டு முத்தூா், காங்கயம் வழியாக மேட்டுக்கடை வரையிலும் கொண்டு வர முடிகிறது. வெள்ளக்கோவில், மூலனூா், கொளத்துப்பாளையம், தாராபுரம் நகராட்சி மற்றும் சின்னக்காம்பாளையம் பேரூராட்சி வரையிலும் பெரிய திட்டமாக அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் சரியாக பராமரிப்பு பணி நடைபெறாத காரணத்தினால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே, குடிநீா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கு ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீா் எடுப்பதற்கும், மின்மோட்டாா் மற்றும் பழுதான குழாய்களை மாற்றி சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறோம். பெறப்படும் மனுக்களின் மீது அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, குண்டடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் யூனியன் கவுன்சிலருமான சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலர் சிவசெந்தில்குமார், குண்டடம்-ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு, யூனியன் கவுன்சிலர் புங்கந்துறை சண்முகபிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
    • கட்சிக்கொடிக்கம்பங்கள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.திருப்பூர் மாநகர பகுதியில் கட்சிக்கொடிக்கம்பங்கள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

    ஆனால் மீண்டும் நடுவதாக புகார் எழுந்துள்ளது. கொடிக்கம்பங்களை கட்சியினர் அகற்றாவிட்டால் மாநகராட்சி சார்பில் அவை அகற்றப்படும். சாலையின் மையத்தடுப்பில் கட்சிக்கொடிகள் கட்டக்கூடாது. ரவுண்டானா பகுதியில் விளம்பர பதாகைகளை வைக்கக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது. வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சியினரிடம் வலியுறுத்தப்பட்டது.

    • படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது.
    • கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் அதிக அளவில் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு ஆண்டிலும் படைப்புழுக்களின் தாக்குதலை ஆரம்ப கட்டம் முதலே திட்டமிட்டு கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    படைப்புழுக்களானது முட்டைப் பருவம் முதல் அந்துப்பூச்சி வரை 6 நிலைகளை உடையது. தாய் அந்துப்பூச்சி இலைகளின் அடியில் 100 முதல் 200 முட்டைகள் வரை இடும். இவ்வாறு ஒவ்வொரு அந்துப்பூச்சியும் தன் வாழ்நாளில் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் இளம்புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி சேதம் உண்டாக்கும். அடுத்தடுத்த நிலைகளில் குருத்து முதல் கதிர் வரை சேதம் உண்டாக்கி மகசூல் இழப்பை உண்டாக்குகிறது.

    படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி விதைப்புக்கு 20 நாட்களுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழவு செய்ய வேண்டும். இது மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். தப்பிப் பிழைத்த கூட்டுப் புழுக்களிலிருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள் முட்டையிட முடியாத அளவுக்கு செயலற்றதாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கடைகளில் வாங்கப்பட்ட விதைகளில் பூஞ்சாணக்கொல்லி விதைநேர்த்தி மட்டுமே செய்யப்பட்டிருக்கும். இந்த விதைகளில் சையாண்டிரினில்புரோல் 19.8 எப்.எஸ். மற்றும் தயோமீதாக்சோம் 9.8 எப்.எஸ். என்ற கூட்டு மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி. என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். ஊடுபயிராக வேலிமசால் படைப்புழுக்களால் விரும்பப்படாத திரவத்தை வெளியிடக்கூடிய வேலிமசாலை ஊடுபயிராகப் பயிரிடலாம்.

    விதை முளைத்த 2-ம் நாளிலிருந்தே அந்துப்பூச்சிகள் பயிர் சேதம் விளைவிக்கத் தொடங்கி விடுகிறது. எனவே விதைப்பு சமயத்திலேயே ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சிப்பொறிகளை வைக்க வேண்டும். இதன்மூலம் ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழித்து அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். பயிர் உயரத்துக்கு ஏற்றாற்போல இனக்கவர்ச்சிப்பொறிகளின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதால் 30 முதல் 40 நாட்களில் பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். அதன்பிறகும் பாதிப்பு அதிகமாக இருந்தால் (100 செடிகளுக்கு 10 செடிகளுக்கு மேல்) வேளாண்மைத்துறையினரின் ஆலோசனை பெற்று உரிய மருந்துகளைத் தெளிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×