search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் மனு"

    • அனைத்து சமத்துவ புரங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.
    • எங்கள் பகுதியில் ரேஷன் கடை, சுற்றுச் சுவர், சாக்கடை கால்வாயும் இல்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பம் சாலையில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் 2006-ம் ஆண்டு அப்போதைய துணை முதல் அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், சமத்துவபுரத்தை திறந்து வைத்து 100 பேருக்கு வீட்டின் சாவியை வழங்கினார். ஆனால் 18 ஆண்டுகள் முடிந்தும் பட்டா வழங்கவில்லை.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சமத்துவ புரங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.

    வீட்டில் புதிய அறைகள் அமைக்கவும், பாகங்கள் பிரிக்கவும், பட்டா தேவைப்படுகிறது. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் மரணமடைந்துள்ளனர். அவர்களின் வாரிகளுக்கு வாரிசு சான்றுடன் பட்டா தேவைப்படுகிறது. எங்கள் பகுதியில் ரேஷன் கடை, சுற்றுச் சுவர், சாக்கடை கால்வாயும் இல்லை. எனவே பட்டா வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மது பாட்டில்களாலும், சந்து கடை விற்பனை, நாள்தோறும் அடிதடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.
    • டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆர்.பூசாரிப்பட்டி பகுதி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர். பூசாரிப்பட்டி-தானம்பட்டி ரோட்டில் சுமார், 350 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு கடந்த காலங்களில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இருவர் இறந்துள்ளனர்.

    மேலும் டாஸ்மாக் கடைக்கு அருகில் தனியார் பள்ளி, மசூதி, தேவாலயம் உள்ளிட்டவைகளும் உள்ளன. இந்த டாஸ்மாக் கடை வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

    சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மது பாட்டில்களாலும், சந்து கடை விற்பனை, நாள்தோறும் அடிதடி பிரச்னைகள் உள்ளிட்டவைகளாலும் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    இது குறித்து பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

    இது குறித்து விசாரித்து டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தமிழக தொல்லியல் துறையால் ஆய்வு செய்ய தோ்வு செய்யப்பட்டுள்ளது.
    • நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயக்குமாா் தலைமையில் கவுத்தம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழக தொல்லியல் துறையால் ஆய்வு செய்ய தோ்வு செய்யப்பட்ட 32 இடங்களில் கவுத்தம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குமரிக்கல்பாளையமும் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மிகவும் பழைமையான குமரிக்கல் உள்ளது. இந்த இடத்தில் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் சாா்பில் உயா்மின் கோபுரத்துக்கான துணை மின்நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் துணை மின்நிலையம் அமைத்தால் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது. ஆகவே குமரிக்கல்பாளையத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் முயற்சிகளைக் கைவிட்டு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆண்டிபாளையம் 60-வது வார்டு கண்ணன் காட்டேஜ் பகுதியில் சுமார் 250 வீட்டுக்கு மேல் உள்ளது.
    • குப்பை தொட்டி இல்லாமல் மேலும் நோய்களும், கெட்ட துர்நாற்றமும் வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆண்டிபாளையம், கண்ணன் காட்டேஜ் 60-வது வார்டு பகுதி பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    ஆண்டிபாளையம் 60-வது வார்டு கண்ணன் காட்டேஜ் பகுதியில் சுமார் 250 வீட்டுக்கு மேல் உள்ளது. நாங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதி இல்லை. சாக்கடை வசதி இல்லை.குடிநீரில் புழுக்கள் கலந்து வருகிறது. தெருவில் கொசுத் தொல்லைகளும் உள்ளது.அவரவர் வீட்டின் முன்பு குழி தோண்டி தண்ணீரை பெருக்க வேண்டிய சூழ்நிலைஉள்ளது. இந்த தண்ணீர் குழியில் பெருகி ரோடுகளில் செல்கிறது.குழந்தைகள் அதில் மிதித்து தான் நடக்க வேண்டியுள்ளது. இதனால் டெங்குகாய்ச்சல் அதிகமாக வருகிறது. சிக்கன்குனியா பெரியவர்களுக்கு வருகிறது.

    மேலும் குப்பை தொட்டி இல்லாமல் மேலும் நோய்களும், கெட்ட துர்நாற்றமும் வருகிறது. மாநகராட்சிக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். மனுவும் கொடுத்துஉள்ளோம். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • குழந்தைகள், வேலைக்கு செல்வோரும் அவ்வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
    • வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவாசப் பிரச்சினைகளாலும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காமன்தொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சப்படி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி மற்றும் பல கிரானைட் தொழிற்சாலைகள் சட்டவிரோதமாகவும், அரசு விதிகளை மீறியும் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சேஷாத்திரி ஏரி நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்துள்ளனர். அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தூசி படிந்து பயிர்கள் பாழாகின்றன. அதே போல இப்பகுதியில் உள்ள கோபால் சாகர் ஏரி, தின்னூர் ஏரி பராமரிப்பு பணி செய்ய, ரூ.55 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றக்கோரி மனு அளித்து, வருவாய் துறையினர் நிலங்களை அளந்து கல் நட்ட பின்பும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இது குறித்து கேட்டால் ஊர் பொதுமக்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர்.

    அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளால் பெரிய சப்படி முதல் காமன்தொட்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விவசாய நிலங்கள் பாழடைந்தும், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோரும் அவ்வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவாசப் பிரச்சினைகளாலும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊராட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று அன்னூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
    • நிலத்தை வீட்டு மனையாக பிரித்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

    அன்னூர்,

    அன்னூர் அருகே அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர் ஊராட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று அன்னூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் அங்கு தாசில்தார் தங்கராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    விவசாய தொழிலாளர்களான எங்களுக்கு சொந்தமான இடம் மற்றும் வீடு இல்லாததால் ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

    அரசு ஒன்றை சென்ட் இடம் வழங்கினால் அதில் வீடு கட்ட முடிவதில்லை. எனவே அனைத்து குடும்பங்களும் தலா 5 சென்ட் நிலம் வழங்க வேண்டும்.

    மேலும் இப்பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது. அந்த நிலத்தை வீட்டு மனையாக பிரித்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் ராஜிடமும மனு அளித்தனர்.

    இதுகுறித்து நமது நிலம் நமதே அமைப்பின் தலைவர் குமார வேல் பேசுகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த நிலமும், வீடும் இல்லாமல் தவிக்கின்றனர் அவர்களுக்கு தலா 5 சென்ட் இடம் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்த இருக்கிறோம். என்றார்.

    • செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 2 சேடபாளையம் நியாய விலை கடை அருகிலும், வார்டு எண் - 3 டி. இ.எல். சி பள்ளி வளாகத்திலும், வார்டு எண் - 5 ல் குலாலர் அங்காளம்மன் கோயில் மண்டபத்திலும், வார்டு -13 ல் செட்டிபாளையம் சாலையில் தனியார் மண்டபத்திலும் பகுதி நகரசபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் விநாயகம், முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், அலுவலக மேலாளர் சண்முகராஜா, தலைமை எழுத்தர் சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டங்களில், அந்தந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படைப் பிரச்சினைகளான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, தார் சாலை, உள்ளிட்டவற்றை தீர்க்கக்கோரி கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் தரப்பில் கொடுத்த கோரிக்கை மனுக்கள் விபரம் வருமாறு:-

    வார்டு எண்3ல் நாரணாபுரம் பகுதிக்கு புதிய ரேசன் கடை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், பொதுமக்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்தல், பொதுகழிப்பறையை சுகாதாரமான முறையில் அமைத்து தர வேண்டும். வார்டு எண்.2ல் அங்கன்வாடி மையம் அருகில் குப்பைகளை கொட்ட அனுமதிக்கூடாது. சேடபாளையம்,தண்ணீர்பந்தல் முதல் அருள்புரம் வரை செல்லும் நெடுஞ்சாலை துறைக்கான தார் சாலையை அகலப்படுத்திட வேண்டும். சேடபாளையம் பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். சேடபாளையம் பகுதியில் தெருநாய் தொல்லை இல்லாமல் செய்ய வேண்டும்.வார்டு எண்.5ல் டி.எம்.டி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் பெயர் பலகை அமைத்தல், மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும். தெரு நாய் தொல்லையை அகற்ற வேண்டும்.

    அரசு கல்லூரி எதிரே பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். அம்மாபாளையம் பிரிவில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும். மங்கலம் சாலையிலிருந்து ராயர்பாளையம் பகுதி வரை பி.ஏ.பி. வாய்க்கால் மண்பாதையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். வார்டு எண் 13ல் செட்டிபாளையம் சாலை பாலாஜி நகர் பகுதியில் ரேசன் கடை புதியதாக அமைக்க வேண்டும். அருள்ஜோதி நகர்,ராஜ கணபதி நகர் பகுதியில் தெருநாய் தொல்லைக்கு நிவர்த்தி செய்ய வேண்டும். கோவை -செட்டிபாளையம் சாலை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட குடிநீர் வசதி, மழை நீர் வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • தென்காசி மாவட்டத்தில் பொது புகார்களை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் உதவி மையத்தை தொடங்கி உள்ளது.
    • உதவி மையம் மூலம் உரிய துறைக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.

    தென்காசி:

    தென்காசி கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் அரசாங்க சேவைகளில் உள்ள குறைகளையும், பொது புகார்களையும் கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் கலெக்டர் உதவி மையத்தை தொடங்கி உள்ளது.

    எனவே வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

    இந்த உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு தங்கள் மனுக்களை தக்க விபரங்களோடு சமர்ப்பிக்கலாம்.உதவி மையம் மூலம் உரிய துறைக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.

    இந்த உதவி மையம் மூலம் மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான இடைவெளி குறைக்கப்படுவதோடு மக்களின் கோரிக்கைகளையும்,குறைகளையும் கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சரி செய்யும்.

    பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மாவட்ட கலெக்டரின் சேவை மையத்தின் கட்டணமில்லா எண் :1800 599 3599 மற்றும் வாட்ஸ்அப் எண் :7790019008 ஆகிய எண்களில் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கொடுவாயில் நடைபெற்றது.
    • தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

    குண்டடம் :

    திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீதான அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கொடுவாயில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மகளிா் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், வீட்டுமனைப் பட்டா, கால்நடை மருத்துவமனை, குடிநீா் வசதி, கோயில் புனரமைப்பு பணிகள், சமுதாயக் கூடம், பொதுக்கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் கொடுமுடியை நீராதாரமாக கொண்டு முத்தூா், காங்கயம் வழியாக மேட்டுக்கடை வரையிலும் கொண்டு வர முடிகிறது. வெள்ளக்கோவில், மூலனூா், கொளத்துப்பாளையம், தாராபுரம் நகராட்சி மற்றும் சின்னக்காம்பாளையம் பேரூராட்சி வரையிலும் பெரிய திட்டமாக அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் சரியாக பராமரிப்பு பணி நடைபெறாத காரணத்தினால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே, குடிநீா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கு ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீா் எடுப்பதற்கும், மின்மோட்டாா் மற்றும் பழுதான குழாய்களை மாற்றி சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறோம். பெறப்படும் மனுக்களின் மீது அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, குண்டடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் யூனியன் கவுன்சிலருமான சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலர் சிவசெந்தில்குமார், குண்டடம்-ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு, யூனியன் கவுன்சிலர் புங்கந்துறை சண்முகபிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • மதுரை மேற்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் சாலை, குடிநீர் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    • பெயர்மாற்றம், வீட்டுவரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து 50க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி யின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது.

    திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மேயர் இந்திராணி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன், மேற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் இந்திரா காந்தி, விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் பகுதியில் பஸ்நிலையத்தை மீண்டும் செயல்படுத்தவும், மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருநகர் விஸ்தரிப்பு பகுதியான 94-வது வார்டு பகுதியில் எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் சாலைவசதி மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்து அந்தப்பகுதி பொதுமக்கள் மேயர் இந்திராணியிடம் மனு கொடுத்தனர். திருநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். ஆக்கிரமி ப்புகளை அகற்றக்கோரியும் அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல பெய ர்மாற்றம், வீட்டுவரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து 50க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்களின் கோரி க்கைகளை நிறைவேற்று வதாக அதிகாரிகள் பொது மக்களு க்கு வாக்குறுதி அளித்து அனுப்பி வை த்தனர்.

    • கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • கிராம சபைக்கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும்

    புதுக்கோட்டை:

    திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழாத்தூரில் ஊராட்சி மன்றத்தலைவர் இந்திரா தலைமையில் கிராம சபைக்கூட்டம் தொடங்கியது. இதில் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அலுவலர் ஒருவரும், கிராமத்தினரும் கலந்து கொண்டனர். அப்போது அனைத்துத்துறை அலுவலர்களையும் கலந்து கொள்ள செய்த பிறகு கூட்டத்தை நடத்த வேண்டும் என பொதுக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    பின்னர் வரவு செலவு கணக்கில் முரண்பாடு இருப்பதாக கூறி மீண்டும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஊராட்சி நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு உரிய ஆவணங்கள் கொண்டு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் உடனே கொண்டு வரப்படாததால் மாலை வரை கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கிடைய கிராம சபைக்கூட்டம் நடத்தியதாகவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவு அலுவலர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்ததாக தெரிகிறது.

    இதை தொடர்ந்து கீழாத்தூரில் உரிய வரவு, செலவு ஆவணங்களுடன் கிராம சபைக்கூட்டத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என அதே கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலெக்டர் கவிதா ராமுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

    • அவினாசியிலிருந்து 7 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் உள்ளது.
    • தெக்கலூரில் ஒரு சில பஸ் தவிர அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை.

    அவினாசி:

    அவினாசி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., தனபால் தொகுதி மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். அப்போதுஅவினாசி ஒன்றியம் கருவலூரில் உள்ள அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும். வளர்ந்து வரும் கருவலூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.வஞ்சிபாளையம்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். வஞ்சிபாளையத்திலிருந்து முருகம்பாளையம் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.சின்ன ஒலப்பாளையம் கானாங்குளம், குப்பான்டம்பாளையம், வடுகபாளையம்,பிச்சான்டம்பாளையம், ஆலாம்பாளையும் ஆகிய பகுதி எ.டி.காலனி மக்கள் மயானத்திற்கு சாலைவசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும்.

    அவினாசியிலிருந்து 7 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் உள்ளது. இப்பகுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் அவினாசி. திருப்பூர், நியூ திருப்பூர் ஆகிய பகுதியில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கும், விசைத்தறி கூடங்களுக்கும் தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். பள்ளி மாவை, மாணவியர் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் தெக்கலூரில் ஒரு சில பஸ் தவிர அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா.எனவே தெக்கலூரில் அனைத்து பஸ்களும் நின்று பயனிகளை ஏற்றி இறக்கி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ.தனபாலிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிகூறினார்.

    ×