search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draupadi Murmu"

    • சிறிது நேரம் அமர்ந்து கீர்த்தனை நிகழ்ச்சியில் பங்கெடுத்தார்.
    • பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    அமிர்தசரஸ் :

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒரு நாள் பயணமாக பஞ்சாப் சென்றார். இதற்காக விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்ற அவர், அங்குள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்தார். மேலும் அங்கு சிறிது நேரம் அமர்ந்து கீர்த்தனை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார்.

    ஜனாதிபதியுடன் முதல்-மந்திரி பகவந்த் சிங், சிரோமணி குருத்பாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹஜிந்தர் சிங் தாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    முன்னதாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், மத்திய மந்திரி சோம் பிரகாஷ், அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அஜ்லா உள்பட பலர் வரவேற்றனர்.

    பொற்கோவிலில் வழிபட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு பின்னர் ஜாலியன் வாலாபாக், துர்கையனா கோவில் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • இன்று மாலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
    • 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    மதுரை :

    திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறார்.

    2 நாள் பயணமாக வரும் முர்மு மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்திலும், அங்கிருந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையிலும், கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    அவரது பயண விவரம் வருமாறு:-

    தமிழக சுற்றுப்பயணத்துக்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் திரவுபதி முர்மு புறப்படுகிறார். மதுரை விமான நிலையத்துக்கு பகல் 11.45 மணி அளவில் வந்து சேருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கிருந்து காரில் புறப்பட்டு, 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார். பூரண கும்ப மரியாதையுடன் கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். சுமார் 1 மணி நேரம் கோவிலில் இருக்கிறார்.

    பின்னர் கோவிலில் இருந்து பிற்பகலில் மீண்டும் விமான நிலையம் புறப்படுகிறார். மதுைரயில் இருந்து விமானத்தில் கோவை செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை விமான நிலைய பணியாளர்களுக்கும், மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    கோவிலை பொறுத்தவரை அர்ச்சகர்கள், பூரண கும்ப மரியாதை அளிப்பவர்கள், மேள-தாளம் வாசிப்பவர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று காலை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இது தவிர பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.

    முன்ஏற்பாடாக ஜனாதிபதி நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடக்க இருக்கிறது. பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் முதல் அனைவரும் இந்த ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.

    இதற்காக காலை 11.45 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து ஒத்திகை வாகன அணிவகுப்பு தொடங்குகிறது. வரும் வழித்தடத்தில் சற்று நேரம் போக்குவரத்தை நிறுத்தி இந்த ஒத்திக்கை பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை நகரம் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருந்து வருகிறது.

    கோவை ஈஷா யோகா மையத்தில், மகா சிவராத்திரி விழா நாளை (சனிக்கிழமை) மாலை, 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடக்கிறது. அங்கு ஆதியோகி சிலை மற்றும் தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    விழாவில், தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரையில் இருந்து நாளை மாலை தனிவிமானத்தில் புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

    அங்கிருந்து அவர், கார் மூலம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். அன்று இரவு, மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து அங்கு தங்குகிறார்.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

    இந்த நிகழ்ச்சி குறித்து வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் கூறும்போது, வெலிங்டன் ராணுவ மையத்தில் ஜனாதிபதி முர்மு கலந்து கொண்டு ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் போரில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவுதூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி காலை 10 மணிமுதல் 12 மணிவரை நடைபெறுகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமானநிலையம் சென்று டெல்லி திரும்புகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். ஜனாதிபதி செல்லும் பாதைகள் குறித்து திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) மாலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. ஜனாதிபதி வருகையையொட்டி ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஜனாதிபதி பாதுகாப்புக்கான சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் நேற்று கோவை வந்தார். அவர் ஜனாதிபதி செல்லும் அனைத்து வழிக ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது.
    • ஒரு தாயின் முயற்சியால் ஒரு குடும்பம், சிறந்த குடும்பமாக மாறும்.

    புதுடெல்லி :

    டெல்லி அருகே உள்ள குருகிராம் பிரம்மகுமாரிகள் அமைப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் 'மதிப்பீடுகள் சார்ந்த சமூகத்தின் அடிப்படை, பெண்கள்' என்ற தேசிய மாநாட்டையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரம்மகுமாரிகள் அமைப்பின் சேவைகளை பாராட்டினார். மேலும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய சமூகத்தில் மதிப்பீடுகள் மற்றும் நெறிமுறைகளை வடிவமைப்பதில் பெண்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைத்தால், அவர்கள் ஆண்களுக்கு இணையாக, சில சமயங்களில் அவர்களை விடவும் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. எனினும் அவர்களில் பலரும் உயர்ந்த பதவிகளை அடைய முடிவதில்லை. தனியார் துறைகளின் நடுநிலை நிர்வாகத்தில், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பெண்களின் பங்கேற்பு குறைந்துள்ளது.

    இதற்கு பெண்களின் குடும்ப பொறுப்புகளும் ஒரு காரணம் ஆகும். பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தை போல வீட்டிலும் பல்வேறு பொறுப்புகள் உள்ளன.

    ஆனால் குழந்தைகளை வளர்ப்பதும், வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பும் பெண்களுக்கானது என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். பெண்கள் தங்கள் தொழிலில் எந்த இடையூறும் இல்லாமல் உயர்ந்த நிலையை அடைவதற்கு குடும்பத்தினரின் ஆதரவும் இருக்க வேண்டும்.

    பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும். அதிகாரம் பெற்ற குடும்பங்கள் அதிகாரம் பெற்ற சமுதாயத்தையும், அதிகாரம் பெற்ற தேசத்தையும் உருவாக்கும்.

    பொருளாதார முன்னேற்றம் மற்றும் செல்வ செழிப்பு நமக்கு பொருள் சார்ந்த மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் நிலையான அமைதியை வழங்காது. ஆன்மிக வாழ்க்கை தெய்வீக பேரின்பத்துக்கான கதவுகளைத் திறக்கிறது.

    தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல மனிதர்களாக மாற ஊக்குவிக்க வேண்டும். ஒரு தாய் தனது குழந்தைகளிடையே ஒருபோதும் பாகுபாடு காட்டுவதில்லை. குடும்பத்தில் முதல் ஆசிரியராகவும் அவரே இருக்கிறார்.

    அவர், தனது குழந்தையை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குழந்தைக்கு பல்வேறு மதிப்பீடுகளையும் புகுத்துகிறார். எனவே, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான மதிப்பீடுகளுடன் கல்வி கற்பிக்க வேண்டும்.

    ஒரு தாயின் முயற்சியால் ஒரு குடும்பம், சிறந்த குடும்பமாக மாறும். அப்படி ஒவ்வொரு குடும்பமும் சிறந்த குடும்பமாக மாறினால், சமூகத்தின் இயல்பு தானாகவே மாறும். நமது சமூகம் மதிப்பீடுகள் அடிப்படையிலான சமூகமாக மாறும்.

    இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

    • நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை கொண்டாடுகிறது.
    • இந்தியிலான இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்.

    புதுடெல்லி :

    நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை (26-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) உரை ஆற்றுகிறார்.

    இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில், "நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி 25-ந்தேதி இரவு 7 மணிக்கு உரை ஆற்றுகிறார். இதை அகில இந்திய வானொலி தனது அனைத்து அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புகிறது. இதே போன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்தியிலான இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தூர்தர்ஷன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்பும். அகில இந்திய வானொலியிலும் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை ஒலிபரப்பாகிறது. ஜனாதிபதி முர்மு பதவி ஏற்ற பிறகு குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

    • கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
    • தமிழக கவர்னரை திரும்பப்பெறக்கோரி மனு அளிக்க உள்ளனர்.

    சென்னை :

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தார்.

    இதையடுத்து அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சட்டசபை உரையில் சில பகுதிகளை தவிர்த்தது ஏன் என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் 6 அம்சங்களை சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக, கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழக அரசு சார்பில் 6 பக்க தகவல் வெளியானது.

    இதற்கிடையே சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்து அவர் மீது ஜனாதிபதியிடம் புகார் அளிக்க தி.மு.க. எம்.பி.க்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க தி.மு.க. எம்.பி.க்களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 11.45 மணியளவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. எம்.பி.க்களுடன் ஜனாதிபதியை சந்திப்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களும் இந்த சந்திப்பில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர்கள் ஜனாதிபதியிடம், தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்டவிதம் குறித்தும், அவரை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மனு அளிக்க உள்ளனர்.

    • உலகம் இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது.

    டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதற்கான சிறந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது.

    கருணையை வளர்ப்பதுதான் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத் திறவுகோல். பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள் என்ற தங்க விதியே, மனித உரிமைகள் தொடர்பான கருத்தை அழகாக தொகுத்து வழங்குகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக, அசாதாரண வானிலையால் உலகம் அதிக எண்ணிக்கையிலான இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவுக்கு ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிக விலை கொடுக்கப் போகிறார்கள். பருவநிலை மாற்றத்தின் சவால் மிகப் பெரியது. அது உரிமைகளை மறுவரையறை செய்ய நம்மைத் தூண்டுகிறது.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு மனிதர்களைப் போலவே சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன என்று கூறியுள்ளது. இயற்கையை கண்ணியத்துடன் நடத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும், அது தார்மீகக் கடமை மட்டுமல்ல, நம் வாழ்வுக்கும் அவசியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
    • 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    திருப்பதி :

    ஜனாதிபதியாக பதவியேற்று திருப்பதி மாவட்டத்துக்கு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) என 2 நாட்கள் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    திருப்பதிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதிமுர்முவுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், ஜனாதிபதி திருப்பதி வருகிறார். அதற்காக ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

    ஜனாதிபதி விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று புறப்பட்டு இரவு 8:40 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைகிறார். இரவு 9.25 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருமலையை அடைகிறார்.

    திருமலையில் தங்கி ஓய்வெடுத்ததும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராஹ சுவாமி கோவில், வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார்.

    திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார்

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை கலெக்டர் பாலாஜி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நேர்மை, பாரபட்சமின்மை போன்ற உயர்ந்த பண்புகளுடன் திகழ வேண்டும்.
    • நலிந்த பிரிவினருக்கு சேவை செய்யுங்கள்.

    புதுடெல்லி :

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2020-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 175 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர்.

    அப்போது அவர்களிடையே ஜனாதிபதி பேசியதாவது:-

    நீங்கள் பணியாற்றும் இடங்களில் சமூகத்தின் கடைசி நபரையும் கவனித்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை உங்களிடம் எதிர்பார்க்கிறோம். நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை பற்றி அறியாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    அடித்தட்டு மக்களுக்கும் நலத்திட்டங்களின் பலன்கள் கிடைத்தால்தான் அந்த திட்டம் வெற்றி பெற்றதாக கருதப்படும். அதற்கு நீங்கள் பாடுபட வேண்டும். நீங்கள் பணியாற்றும் பகுதியை மனிதவள குறியீடு அடிப்படையில் 'நம்பர் ஒன்' பகுதியாக உயர்த்த வேண்டும் என்ற வேட்கையுடன் செயல்பட வேண்டும்.

    நீங்கள் யாருக்கு பணியாற்ற கடமைப்பட்டு இருக்கிறீர்களோ, அவர்களிடம் அக்கறையாக இருக்க வேண்டும். நலிந்த பிரிவினரின் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதில் பெருமைப்பட வேண்டும். 'உலகமே ஒரு குடும்பம்', 'ஒட்டுமொத்த இந்தியாவும் என் குடும்பம்' என்ற குறிக்கோளுடன் பணியாற்ற வேண்டும்.

    தற்போதைய உள்கட்டமைப்பு வளர்ச்சியால், எந்த உட்புற பகுதியையும் எளிதில் சென்றடைந்து விடலாம். அப்படி சென்று நலிந்த பிரிவினருக்கு சேவை செய்யுங்கள். நேர்மை, பாரபட்சமின்மை போன்ற உயர்ந்த பண்புகளுடன் திகழ வேண்டும்.

    2047-ம் ஆண்டு நடக்கும்போது, முடிவு எடுக்கும் உயர் அதிகாரிகளில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள். அந்த ஆண்டு, இந்தியா மிகவும் வளமாகவும், வலிமையாகவும், திகழ்வதை உறுதி செய்யும்வகையில் வேட்கையுடன் பணியாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாட்டின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக மாறி வருகிறது.
    • தேசிய கல்விக் கொள்கை எதிர்கால தலைமுறையை தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

    சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    இந்தியா சுதந்திரம் பெற்ற நேரத்தில் வறுமை மற்றும் கல்வியறிவின்மை காரணமாக இந்தியாவில் ஜனநாயக ஆட்சியின் வெற்றி குறித்து பல சர்வதேச தலைவர்கள், நிபுணர்கள் சந்தேகம் கொண்டு இருந்தனர். ஆனால் இந்தியர்களாகிய நாம் சந்தேகிப்பவர்களைத் தவறென்று நிரூபித்தோம்.

    ஜனநாயகத்தின் உண்மையான திறனைக் கண்டறிய உலகிற்கு உதவிய பெருமை இந்தியாவுக்கு உண்டு. ஜனநாயகம் இந்த மண்ணில் வேர்களை வளர்த்தது மட்டுமல்ல, வளப்படுத்தியது.

    நாட்டில் பாலின ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருகின்றன, பெண்கள் தடைகளை உடைத்து வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக மாறி வருகிறது. பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருகின்றன.

    தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் கருணை என்பதே இன்று இந்தியாவிடம் இருக்கும் ஒரு மந்திரச் சொல். ஆண்டுதோறும் நவம்பர் 15ந் தேதி பழங்குடியினர் தினமாக கொண்டாடப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

    தேசிய கல்விக் கொள்கை எதிர்கால தலைமுறையை தொழில் புரட்சியின் அடுத்த கட்டத்திற்கு தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அது நமது பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கிறது. 

    கொரோனா தொற்றுக்கு எதிரான எங்களின் நடவடிக்கை எல்லா இடங்களிலும் பாராட்டப்பட்டது. மனித வரலாற்றில் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மூலம் நாங்கள் தொடங்கினோம்.

    கடந்த மாதம் வரை போடப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 200 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில், பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் சாதனை சிறப்பாக உள்ளது.

    உலகம் பெரும் பொருளாதார நெருக்கடி விளைவுகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் போது, ​​இந்தியா ஒன்றிணைந்து முன்னேறி வருகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் உள்ளது. புதிய இந்தியாவின் வளர்ச்சியை உலகம் கண்டுள்ளது.

    சொந்த வீடு என்பது ஏழைகளுக்கு இனி கனவாக இருக்காது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தால் மேலும் பலருக்கு அது நனவாகி வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதே இது போன்ற முயற்சிகளின் நோக்கமாகும்.

    ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியை, பிரிவினைக்கால பயங்கரங்களை நினைவுகூரும் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்; இதன் மூலம் சமூக நல்லிணக்கம், ஒற்றுமை, மக்களுக்கு அதிகாரப் பங்களிப்பு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறோம்.

    காலனியாதிக்க ஆட்சியாளர்களிடம் இருந்து நம்மை நாம் விடுவித்துக் கொண்டு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக் கொள்வது என்று தீர்மானித்த நாள் தான் நாளைய தினம்.

    இந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், ஒரு சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்வதைத் தங்களின் மகத்தான தியாகங்கள் மூலம் சாத்தியமாக்கிய அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் தலைவணங்குவோம். சமூக நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிப்பதே சுதந்திர தினத்தின் முக்கியமான அம்சம். 

    உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசின் நிர்வாக அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது.
    • முப்படைகளின் தலைமை தளபதியும் அவரே.

    புதுடெல்லி :

    நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றிருக்கும் நிலையில், இந்திய ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறித்த ஒரு பார்வை:-

    அரசின் நிர்வாக அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் தலைவர் என்ற முறையில் அவரே அரசியல்சாசனத்தின் பாதுகாவலராக உள்ளார். முப்படைகளின் தலைமை தளபதியும் அவரே.

    மந்திரிசபையின் பரிந்துரையின் பேரில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும், பாராளுமன்றத்தை கலைக்கவும் அதிகாரம் பெற்றிருக்கிறார்.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தை தவிர மற்ற எந்த நேரத்திலும் அவசர சட்டம் பிறப்பிக்கவும் அதிகாரம் கொண்டிருக்கிறார். நிதி மசோதாக்களை அறிமுகம் செய்ய பரிந்துரைக்கவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் அதிகாரம் பெற்றவராகிறார்.

    மன்னிப்பு, அவகாசம் அல்லது தண்டனையில் இருந்து விடுவித்தல் அல்லது இடைநீக்கம் செய்தல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தண்டனைகளை ரத்து செய்தல் அல்லது மாற்றுதல் என பல்வேறு அதிகாரம் படைத்தவர் ஜனாதிபதி. போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சியால் நாடு அல்லது அதன் எந்தப் பகுதிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், பிரதமர் தலைமையிலான மந்திரிசபையின் பரிந்துரையின் பேரில் அவசரநிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம்.

    மேற்கண்ட அதிகாரங்கள் உள்பட மேலும் பல்வேறு அதிகாரங்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருக்கிறார்.

    • இவரது பெயர் பலமுறை மாற்றப்பட்டது.
    • ‘துர்பதி’, ‘தோர்ப்தி’ என பல்வேறு விதங்களில் மாற்றப்பட்டது.

    புவனேஸ்வர் :

    புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பெயரில் உள்ள 'திரவுபதி', மகாபாரதத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். இந்த பெயர் அவருக்கு எவ்வாறு வந்தது என்ற தகவலை அவரே ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.

    ஒடியா மொழி பத்திரிகை ஒன்று அவரை சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கண்டிருந்தது. அப்போதுதான் இதை திரவுபதி முர்மு வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது:-

    எங்கள் சந்தாலி கலாசாரத்தில் பெயர்கள் மறையாது. ஏனெனில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதன் பாட்டியின் பெயரோ, ஆண் குழந்தை பிறந்தால் அதன் தாத்தாவின் பெயரோ வைக்கப்படும்.

    அந்த வகையில் எனது சந்தாலி பெயர் 'புடி' ஆகும். திரவுபதி என்பது எனது ஆசிரியர் வைத்த பெயர் ஆகும். அதுவும் மற்றொரு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியரால் கிடைத்தது.

    எனது இயற்பெயரை அவர் விரும்பவில்லை. எனவே எனது பெயரை மாற்றி விட்டார். அதுமட்டுமின்றி எனது பெயர் பலமுறை மாற்றப்பட்டது. 'துர்பதி', 'தோர்ப்தி' என பல்வேறு விதங்களில் மாற்றப்பட்டது.

    இவ்வாறு திரவுபதி முர்மு கூறினார்.

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 'துடு' என்ற குடும்பப்பெயரைக்கொண்டிருந்த திரவுபதி, வங்கி அதிகாரியான சியாம் சரண் துடுவை மணந்த பிறகு, முர்மு என்ற பெயரை பயன்படுத்த தொடங்கி உள்ளார்.

    • இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார்.
    • ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.

    பீஜிங்:

    இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

    இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான நாடுகள். இரு நாட்டின் மக்களைப் போலவே அரசுகளும் ஆரோக்கியமான, நிலையான உறவைக் கொண்டுள்ளன. அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், வேறுபாடுகளை சரியாகக் கையாளவும், இருதரப்பு உறவுகளை சரியான பாதையில் முன்னோக்கி நகர்த்தவும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

    ×