search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய பாடுபடுங்கள்: புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை
    X

    நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய பாடுபடுங்கள்: புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை

    • நேர்மை, பாரபட்சமின்மை போன்ற உயர்ந்த பண்புகளுடன் திகழ வேண்டும்.
    • நலிந்த பிரிவினருக்கு சேவை செய்யுங்கள்.

    புதுடெல்லி :

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2020-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த 175 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர்.

    அப்போது அவர்களிடையே ஜனாதிபதி பேசியதாவது:-

    நீங்கள் பணியாற்றும் இடங்களில் சமூகத்தின் கடைசி நபரையும் கவனித்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை உங்களிடம் எதிர்பார்க்கிறோம். நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை பற்றி அறியாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    அடித்தட்டு மக்களுக்கும் நலத்திட்டங்களின் பலன்கள் கிடைத்தால்தான் அந்த திட்டம் வெற்றி பெற்றதாக கருதப்படும். அதற்கு நீங்கள் பாடுபட வேண்டும். நீங்கள் பணியாற்றும் பகுதியை மனிதவள குறியீடு அடிப்படையில் 'நம்பர் ஒன்' பகுதியாக உயர்த்த வேண்டும் என்ற வேட்கையுடன் செயல்பட வேண்டும்.

    நீங்கள் யாருக்கு பணியாற்ற கடமைப்பட்டு இருக்கிறீர்களோ, அவர்களிடம் அக்கறையாக இருக்க வேண்டும். நலிந்த பிரிவினரின் வாழ்க்கைத்தரத்தை மாற்றுவதில் பெருமைப்பட வேண்டும். 'உலகமே ஒரு குடும்பம்', 'ஒட்டுமொத்த இந்தியாவும் என் குடும்பம்' என்ற குறிக்கோளுடன் பணியாற்ற வேண்டும்.

    தற்போதைய உள்கட்டமைப்பு வளர்ச்சியால், எந்த உட்புற பகுதியையும் எளிதில் சென்றடைந்து விடலாம். அப்படி சென்று நலிந்த பிரிவினருக்கு சேவை செய்யுங்கள். நேர்மை, பாரபட்சமின்மை போன்ற உயர்ந்த பண்புகளுடன் திகழ வேண்டும்.

    2047-ம் ஆண்டு நடக்கும்போது, முடிவு எடுக்கும் உயர் அதிகாரிகளில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள். அந்த ஆண்டு, இந்தியா மிகவும் வளமாகவும், வலிமையாகவும், திகழ்வதை உறுதி செய்யும்வகையில் வேட்கையுடன் பணியாற்றுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×