search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demolition"

    • ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன
    • கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அப்பகுதியில் கடைகள் கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    • கடலூரில் மாநகராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு- கடைகள் இடிக்கப்பட்டது.
    • மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பம் பெண்ணையாறு ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. இந்த இடங்களை ஆக்கிரமித்து வீடு, கடைகள் மற்றும் தடுப்பு சுவர்களை பொதுமக்கள் கட்டியுள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மாநகராட்சி ஆணையாளர் நாவேந்திரன் உத்தரவின் பெயரில் அந்த ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்ய வேண்டுமென அரசு சார்பில் முன்னதாகவே அறிவுறுத்தபட்டது. இதனையடுத்து இன்று காலை மாநகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் அருள் செல்வம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3 வீடுகள், 2 கடை, 4 சுற்றுசுவர் உள்ளிட்டவைகளை ஜேசிபி எந்திரத்தின் மூலம் அதிரடியாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. பின்னர் அதை அப்புறப்படுத்தினார். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்று மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

    • பேருந்து நிழற்குடை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

    கரூர் :

    கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, வடக்கு பாளையம் கிராமத்தில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1996 - 2001ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை உள்ளது. இதற்குப் பின்புறம் திருமூர்த்தி என்பவர் இல்லம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பேருந்து நிழற்குடை இருக்கும் இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி, இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் கொண்டு தரைமட்டமாக இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு பாளையம் பகுதி கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தின் போது கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ், பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் விைரந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் பேருந்து நிழற்டையை புதிதாக அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • விழுப்புரத்தில் சுகாதார கேடு விளைவிக்கும் பாழடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.
    • சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலையில் இக்கட்டிடம் காணப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளது. என் நகரம் என் பெருமை என்ற திட்டத்தின் கீழ், நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.இதில், நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் உள்ள வடக்குத் தெருவில் தனி நபருக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று மிகவும் பாழடைந்த நிலையில் இருந்து வந்தது.போதிய பராமரிப்பின்றி காணப்பட்ட இந்த கட்டடப் பகுதி, புதர்கள் மண்டியும் , மேலும்விஷ பாம்புகளின் நடமாட்டமும் அதிகம் காணப்பட்டது . மேலும் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலையில் இக்கட்டிடம் காணப்பட்டது.

    இதையடுத்து, இந்தக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கவுன்சிலர் வக்கீல் ராதிகா செந்தில்,மற்றும் நகர சபை தலைவர் தமிழ்ச்செல்வி சர்க்கரை கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில், நகராட்சி ஆணையாளர் சுரேந்தர் ஷா, நகர சபை உறுப்பினர் ராதிகாநகர் நல அலுவலர் டாக்டர் பாலசுப்ரமணியன்திமுக நகர செயலாளரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான சக்கரை ஆகியோர் முன்னிலையில் பாழடைந்த கட்டிடத்தை பொக்லின் எந்திரத்தின் மூலம்இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்..

    நிகழ்வின் போது முன்னாள் நகர சபை உறுப்பினர் வக்கீல் செந்தில், துப்புரவு ஆய்வாளர் ரமணன் துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்துவேல், விழுப்புரம் மேல் தெரு மாரியம்மன் கோயில் அறங்காவலர் மோகன் ,திமுக பிரதிநிதி முகமது அலி,மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி கீதாரத்தினம்,விழுப்புரம் வடக்கு தெரு குடியிருப்பு வாசிகள் பால்ராஜ்,ஆனந்த்,சீனு மற்றும் மெக்கானிக்கல் சரவணன் உடன் இருந்தனர்.

    • நெல்லையப்பர் கோவில் ரதவீதிகளில் பெரும் அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.
    • ஜே.சி.பி. எந்திரம் கொண்டு விதிமுறைகளை மீறி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.இதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள் என   பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    வண்ணார்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாக மாநகராட்சிக்கு புகார் சென்றது. இதனைத்தொடர்ந்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.

    ஜே.சி.பி. எந்திரம் கொண்டு விதிமுறைகளை மீறி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது.

    இந்த பணியை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் கூறியதாவது:-

    வண்ணார்பேட்டையில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பதாக புகார் வந்தது. அதன்பேரில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வந்தது. சாலையோரம் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடக்கிறது.  

    தொடர்ந்து நிலையான கட்டிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும்.

    நெல்லையப்பர் கோவில் ரதவீதிகளில் பெரும் அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதனை அகற்றப்பட்டு மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யாமல் இருக்க அழகு படுத்தும் பணி விரைவில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது செயற்பொறியாளர் நாராயணன், உதவி பொறியாளர் சிவசுப்பிர–மணியன், உதவி கமிஷனர் லெனின், சுகாதார அலுவலர் இளங்கோ, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர், சாலை ஆய்வாளர்கள் பழனிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மாதவரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட விநாயகர் கோவிலை பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    மாதவரம்:

    மாதவரம் பால்பண்ணை கேகே தாழை சிவபாலன் 1-வது தெருவில் சாலையை ஆக்கிரமித்து 400 சதுர அடியில் விநாயகர் கோயில் கட்டப்பட்டு பொதுமக்கள் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த கோவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இதனை அகற்றக்கோரி ஒருவர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட் டிருந்த விநாயகர் கோவிலை அகற்ற நீதிமன்றம் சென்னை மாநகராட்சி மாதவரம் 3.வது மண்டல அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி மாதவரம் 3-வது மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் இன்று காலை மண்டல செயற்பொறியாளர் ராமமூர்த்தி உதவி செயற்பொறியாளர்கள் தேவேந்திரன், சதீஷ், கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலையை அகற்ற சென்றனர்.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள், இந்து முன்னணியினர் கோவில் முன் திரண்டு கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மாதவரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ராமலிங்கம் தலைமையில் பால்பண்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியினர் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் மண்டல அதிகாரிகள் பொக்லின் இயந்திரம் மூலம் விநாயகர் கோவிலை இடித்தனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் பால் பண்ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. #Ayodhya #Section144 #BabriMasjid
    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன.

    இதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசார் தவிர துணை ராணுவத்தினரும் அதிரடி படையினரும் பெரும் அளவில் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    2500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ரோந்து பணியில் இருப்போர் எந்த நேரமும் உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  #Ayodhya #Section144 #BabriMasjid 
    கூடுவாஞ்சேரி அருகே அடையாறு ஓடையில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

    செங்கல்பட்டு:

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நீர்வழிபாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பு, நீர் ஓடைகளை அகலப்படுத் துதல், ஏரிகளை தூர்வாருதல் போன்ற பணிகளை வருவாய் துறையினரும், பொதுப் பணித் துறையினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சின்னையா உத்தரவுப்படி செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்தூர், மறை மலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், மண்ணிவாக்கம் பகுதிகளில் ஏரிகள், குளங்களுக்கு செல்லும் கால்வாய்கள், ஓடைகள் அகலப்படுத்தப் படுகின்றன.

    இதையொட்டி கூடுவாஞ்சேரி அருகே உள்ள சங்கர் கணேஷ் நகர் பகுதியில் அடையாறு ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றக்கோரி நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த வீடுகளை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

    செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் முத்து வடிவேலு மேற்பார்வையில் தாசில்தார் பாக்கியலட்சுமி, பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பிரகாஷ் நேவ்பிரபு முன்னிலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறை, பொதுப்பணித்துறை ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    அடுக்குமாடி வீடுகள் உள்பட மொத்தம் 19 வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.25 கோடி. வீடுகளை இழந்த அனைவருக்கும் நாவலூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘‘இந்த அக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதால் இந்த பகுதியில் இனி மழை காலத்தில் வெள்ளம் தேங்காது’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் கிராமத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் யூனியன் புத்தேந்தல் கிராமத்தில் சுமார் 650–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஊரின் கடைசியில் உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    கடந்த பல ஆண்டுகளாக இந்த தண்ணீரை தான் புத்தேந்தல் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பின்றி போனதால் பெரும்பாலான குழாய்களில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத்தொட்டியின் அருகில் புதிதாக 4 குழாய்கள் அமைத்து கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் சிறிது சிறிதாக வருவதால் இரவு பகலாக மக்கள் காத்திருந்து காவிரி தண்ணீரை பிடித்து செல்கின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் குடிநீர்தொட்டி நாளடைவில் அதன் உறுதித்தன்மையை இழந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து வந்த நிலையில் தற்போது மேல்நிலை குடிநீர்தொட்டி எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

    இந்த நிலை காரணமாக மேல்நிலைத்தொட்டியில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியின் அருகில் தான் பெண்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பஸ் மற்றும் இதர வாகனங்களுக்காக காத்திருப்பார்கள்.

    இதுபோன்ற நிலையில் ஆபத்தான மேல்நிலைத்தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உடனடியாக தொட்டியை இடிக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மழைகாலத்திற்கு முன்பாக மோசமான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து விட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ×