search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Vishnu"

    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் தையல் எந்திரம், அயன் பாக்ஸ், விவசாய இடு பொருள்கள் மற்றும் விவசாய கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டது.
    • தோட்டக்கலைத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார்.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகிலுள்ள வடக்கு அரியநாயகிபுரத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

    சப்-கலெக்டர் ரிஷப் முன்னிலை வகித்தார். முகாமில் மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டு 140 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் தையல் எந்திரம், அயன் பாக்ஸ், விவசாய இடு பொருள்கள் மற்றும் விவசாய கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டது.

    முன்னதாக தோட்டக்கலைத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார்.

    இதில் திட்ட இயக்குநர் பழனி, தாசில்தார் பாலசுப்பிரமணியன், பாப்பாக்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரன், துணை தாசில்தார் பால சுப்பிரமணியன், யூனியன் சேர்மன் பூங்கோதை சசிகுமார், துணை சேர்மன் மாரிவண்ணமுத்து, வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி, துணைத் தலைவர் சீனிவாசன், அரியநாயகிபுரம் கூட்டுறவு சங்க தலைவர் செண்பகம், பாப்பாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன், யூனியன் கவுன்சிலர் சோழைமுடிராஜன், பல துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 300 பேர் முகாமில் கலந்து கொண்டனர். 

    • நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது
    • பாளை முருகன் குறிச்சியில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கனிணி பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பாளை முருகன் குறிச்சியில் உள்ள பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கனிணி பயிற்சி, கைவினைப்பொருட்கள் தயார் செய்யும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தசைகுறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.

    சிறப்பு பூங்கா

    இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்காக ரூ.7.6 லட்சம் மதிப்பில் பழைய செஞ்சிலுவை சங்க வளாகத்தில் சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பூங்காவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பூங்காவை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், புஷ்பலதா கல்வி குழும தலைவர் புஷ்பலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடங்கி உள்ளது.
    • 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கி உள்ளது.

    பாராட்டு சான்றிதழ்

    இத்திட்டத்தின்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளர்களிடம் இருந்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக ஆதார் எண் விபரம், பெயர், முகவரி, வாக்காளர் அட்டை எண் மற்றும் பிற விபரங்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இப்பணியில் 100 சதவீதம் சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தொகுதிக்கு 2 பேர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.அவர்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கினார்.

    கலெக்டர் பேச்சு

    அப்போது கலெக்டர் விஷ்ணு பேசும்போது, பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை விபரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • சைக்கிள் போட்டி 3 பிரிவு களில் நடத்தப்படுகிறது. 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை சார்பில் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வருகிற 15-ந் தேதி காலை 7 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    இந்த போட்டி 3 பிரிவு களில் நடத்தப்படுகிறது. 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

    15 வய துக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது.

    இந்த போட்டி பாளை யங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி, டி.ஐ.ஜி. பங்களா வழியாக திருச்செந்தூர் சாலையில் நடக்க உள்ளது.

    இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். அதேபோல் 4-வது முதல் 10-வது இடம் வரை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.

    இந்த போட்டிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று கண்டிப்பாக வருகிற 13-ந்தேதிக்குள் நெல்லை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • விழாவில், அரசின் அனைத்து துறைகளின் சார்பிலும் பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 77 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்

    நெல்லை:

    நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    தேசிய கொடி ஏற்றினார்

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் மூவர்ண பலூன்களை கலெக்டர் விஷ்ணு பறக்கவிட்டார். பின்னர் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    நற்சான்றிதழ்கள்

    விழாவில், அரசின் அனைத்து துறைகளின் சார்பிலும் பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 77 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார். வீரதீர செயல்கள் புரிந்த 253 பேருக்கும், சமூக தொண்டாற்றியவர்களுக்கும் நற்சான்றுகள் வழங்கப்பட்டன.

    கலை நிகழ்ச்சிகள்

    தொடர்ந்து சந்திப்பு மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. கரகம், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் சுமார் 1,315 பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, சப்-கலெக்டர் ரிஷப், ஆர்.டி.ஓ. சந்திரசேகர், துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, சரவணகுமார், திட்ட அலுவலர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி

    நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காலை 6.45 மணிக்கு மேயர் சரவணன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்களுக்கு நற்சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் தச்சை கணேச ராஜா தலைமையிலும், சந்திப்பு கூட்டுறவு பேரங்காடியில் அதன் சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை தலைமையிலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

    • பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை கொடுப்பதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II தொடங்கப்பட்டுள்ளது.
    • பொது மக்கள் இலவச வீட்டு மனை பட்டாக்கள், முதியோர் உதவித் தொகை குறித்து முகாமில் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம்.

    நெல்லை:

    பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை கொடுப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்கும் வகையில் பொது மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் முதல்-அமைச்சர் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் ஒவ்வொரு வட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் முகாமிட்டு மக்கள் பிரதிநிதிகள், அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மாவட்டத்தில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இந்த திட்டம் நெல்லை வட்டம், மானூர் வட்டாரம் பேட்டை ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்திலும், நாங்குநேரி வட்டம் சிந்தாமணி ஊராட்சி இ-ேசவை மையத்திலும், ராதாபுரம் வட்டம் வள்ளியூர் வட்டாரம் லெவிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், காவல்கிணறு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடத்தப்படுகிறது.

    எனவே பொது மக்கள் இலவச வீட்டு மனை பட்டாக்கள், முதியோர் உதவித் தொகை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், சாதி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதிகள், போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம்.

    இத்தகவல் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • பயிறசி வாகனம் இன்று முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் ஒரு பள்ளி என மொத்தம் 15 அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
    • வாகனத்தில் தொழில்கல்வி பயிற்சிக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள், சொட்டுநீர் பாசன கருவி, சோலார் கருவி, மெக்கானிக் கல்விக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு ஆணையம், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடையே தொழில் கல்விக்கான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்கில்ஸ் ஆன் வீல்ஸ் என்ற நடமாடும் பயிற்சி வாகன சேவை தொடங்கப்பட்டது.

    கலெக்டர் தொடங்கிவைத்தார்

    கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதனை கலெக்டர் விஷ்ணு, செய்தி மக்கள் தொடர்புதுறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை தலைமை செயலாளர் மகேசன் காசிராஜன்ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தொழிற் பயிற்றுனர்கள் கணேஷ், ராஜேஷ், திறன்மேம்பாட்டு உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்கிலின், செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலர் ஜெயஅருள்பதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த வாகனத்தில் தொழில்கல்வி பயிற்சிக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள், சொட்டுநீர் பாசன கருவி, சோலார் கருவி, மெக்கானிக் கல்விக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனம் இன்று முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் ஒரு பள்ளி என மொத்தம் 15 அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தொழில் கல்வி பயிற்றுநர்களும் வாகனத்தில் செல்வார்கள். முதற்கட்டமாக இந்த வாகனம் இன்று டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் பள்ளிக்கு சென்றது. அதனுடன் தொழிற்கல்வி பயிற்றுனர்களும் சென்றனர். இது குறித்து கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை இணைந்து இந்த புதிய முயற்சியை தொடங்கி உள்ளோம். குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் இந்த வாகனம் ஏற்பாடு செய்துள்ளோம். எதிர்காலத்திலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    மாநகராட்சி பள்ளிகளில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பணம் ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நான் முதல்வன் திட்டத்திலும் விரைவில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அரசு பள்ளியில் கொரோனாவுக்கு பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பது குறித்து கேட்டபோது, அரசு பள்ளியில் குறிப்பாக தொடக்க பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. நல்ல வழியில் அரசு பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

    ×