search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்விகள் குறித்து நடமாடும் பயிற்சி வாகனம் -கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

    • பயிறசி வாகனம் இன்று முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் ஒரு பள்ளி என மொத்தம் 15 அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
    • வாகனத்தில் தொழில்கல்வி பயிற்சிக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள், சொட்டுநீர் பாசன கருவி, சோலார் கருவி, மெக்கானிக் கல்விக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு ஆணையம், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இடையே தொழில் கல்விக்கான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்கில்ஸ் ஆன் வீல்ஸ் என்ற நடமாடும் பயிற்சி வாகன சேவை தொடங்கப்பட்டது.

    கலெக்டர் தொடங்கிவைத்தார்

    கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதனை கலெக்டர் விஷ்ணு, செய்தி மக்கள் தொடர்புதுறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை தலைமை செயலாளர் மகேசன் காசிராஜன்ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, தொழிற் பயிற்றுனர்கள் கணேஷ், ராஜேஷ், திறன்மேம்பாட்டு உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்கிலின், செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலர் ஜெயஅருள்பதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த வாகனத்தில் தொழில்கல்வி பயிற்சிக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள், சொட்டுநீர் பாசன கருவி, சோலார் கருவி, மெக்கானிக் கல்விக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனம் இன்று முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் ஒரு பள்ளி என மொத்தம் 15 அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தொழில் கல்வி பயிற்றுநர்களும் வாகனத்தில் செல்வார்கள். முதற்கட்டமாக இந்த வாகனம் இன்று டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் பள்ளிக்கு சென்றது. அதனுடன் தொழிற்கல்வி பயிற்றுனர்களும் சென்றனர். இது குறித்து கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை இணைந்து இந்த புதிய முயற்சியை தொடங்கி உள்ளோம். குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் இந்த வாகனம் ஏற்பாடு செய்துள்ளோம். எதிர்காலத்திலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    மாநகராட்சி பள்ளிகளில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பணம் ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நான் முதல்வன் திட்டத்திலும் விரைவில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அரசு பள்ளியில் கொரோனாவுக்கு பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பது குறித்து கேட்டபோது, அரசு பள்ளியில் குறிப்பாக தொடக்க பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. நல்ல வழியில் அரசு பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×