search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anna Revival Project Camp"

    • பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை கொடுப்பதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II தொடங்கப்பட்டுள்ளது.
    • பொது மக்கள் இலவச வீட்டு மனை பட்டாக்கள், முதியோர் உதவித் தொகை குறித்து முகாமில் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம்.

    நெல்லை:

    பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை கொடுப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்கும் வகையில் பொது மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் முதல்-அமைச்சர் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் ஒவ்வொரு வட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் முகாமிட்டு மக்கள் பிரதிநிதிகள், அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மாவட்டத்தில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இந்த திட்டம் நெல்லை வட்டம், மானூர் வட்டாரம் பேட்டை ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்திலும், நாங்குநேரி வட்டம் சிந்தாமணி ஊராட்சி இ-ேசவை மையத்திலும், ராதாபுரம் வட்டம் வள்ளியூர் வட்டாரம் லெவிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், காவல்கிணறு ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடத்தப்படுகிறது.

    எனவே பொது மக்கள் இலவச வீட்டு மனை பட்டாக்கள், முதியோர் உதவித் தொகை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், சாதி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதிகள், போக்குவரத்து, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம்.

    இத்தகவல் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×