search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child marriage"

    • 15 வயதில் முதல் திருமணமும், 17 வயதில் 2-வது திருமணமும் சிறுமிக்கு நடந்ததது தெரியவந்தது.
    • முதல் கணவரான பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2-வது திருமணம் செய்த கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகில் உள்ள மட்டப்பாறையை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும், திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சாமிநாதனின் 15 வயது மகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவே சிறுமி கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

    அதன்பிறகு திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவருடன் சிறுமிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இந்த சிறுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு அழகர்சாமியுடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே குழந்தையுடன் அவரை வீட்டைவிட்டு விரட்டி விட்டனர்.

    சம்பவத்தன்று திருப்பூர் ரெயில்நிலையத்தில் அழுதபடி கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதனைதொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார் வழக்குபதிவு செய்து இந்த வழக்கை நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பேபி விசாரணை மேற்கொண்டதில் 15 வயதில் முதல் திருமணமும், 17 வயதில் 2-வது திருமணமும் சிறுமிக்கு நடந்ததது தெரியவந்தது. முதல் கணவரான பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2-வது திருமணம் செய்த கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
    • குழந்தை திருமணங்கள் நடைபெற்றால், கண்டறிந்து, சம்பந்தப்பட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    அட்சய திருதியை யையொட்டி குழந்தை திருமண ங்கள் நடைபெறு வதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இதுகுறித்து கலெக்டர் வினீத் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வரும் 22 ம் தேதி அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, குழந்தை திருமணங்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், அனைத்து மகளிர் போலீசார், சைல்டு லைன், ஹிந்து அறநிலையத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்கள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

    குழந்தை திருமணங்கள் நடைபெற்றால், கண்டறிந்து, சம்பந்தப்பட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சிறைதண்டனை 1 லட்சம் ரூபாய் அபராதம்
    • தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்

    பெரம்பலூர்,

    நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது பெண் கல்வி. பெண் கல்விக்கு தடையாக இருப்பது குழந்தை திருமணம். குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆகிய அனைவருக்கும் குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 பிரிவு 11-ன்படி, 2 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ தண்டனையாக விதிக்கப்படும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிந்தால் சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட சமூக நல அலுவலரை 9944350988 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரை 8668092093 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை 9443391931 என்ற செல்போன் எண்ணிலும், குழந்தை நலக்குழுவை 6369018347 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • திருமணம் செய்து வைத்தது தொடர்பாக தந்தை, கணவர் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரபட்டி அருகேயுள்ள எருமையாம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது 15 வயது மகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு எச்.புதுபட்டியை சேர்ந்த கலைஞன் (வயது 25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    கர்ப்பிணியான அந்த சிறுமி பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.

    அதன்பேரில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அவரது தந்தை சின்னசாமி, கணவர் கலைஞன், மாமியார் காந்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தை திருமணம் ஒரு குற்றம்.
    • மக்களும் அரசோடு இணைய வேண்டும்

    புதுடெல்லி :

    2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கை டெல்லியில் நேற்று நடத்தினார்.

    இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "குழந்தை திருமணம் ஒரு குற்றம். அதை நாம் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    குழந்தை திருமணத்தை முற்றிலும் நிறுத்தி சரித்திரம் படைப்போம். 23 சதவீதமாக இருக்கும் குழந்தை திருமணங்களை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்க சட்டம் தன் கடமையை செய்கிறது. ஆனால் மக்களும் அரசோடு இணைய வேண்டும்" என்று கூறினார்.

    • போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தினர்.

    கவுகாத்தி:

    அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 51 நபர்கள் மத குருக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தின்போது, பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

    அடுத்த 6 நாட்களுக்கு இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8000 பேர் குழந்தை திருமணம் தொடர்பாக குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • ஒரே நாளில் 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • குழந்தை திருமணம் சட்ட விரோதம்.

    கவுகாத்தி :

    நமது நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18. இந்த வயதுக்கு கீழே உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும். இந்த குழந்தை திருமணம் சட்ட விரோதம். அப்படி செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

    அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குழந்தை திருமணங்கள் நடைபெறுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விரிவான வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்று கடந்த 23-ந் தேதி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் கூடிய மாநில மந்திரிசபை முடிவு எடுத்தது.

    இதுபற்றி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா சில கடுமையான அறிவிப்புகளை வெளியிட்டார். அவை:-

    * 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்வோர் மீது போக்சோ சட்டம் பாயும், 14-18 வயது பிரிவு சிறுமிகளை திருமணம் செய்கிறவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டம், 2016 பாயும். இந்த திருமணங்கள் செய்வோர் கைது செய்யப்படுவார்கள், அவர்களது திருமணங்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்படும்.

    * 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் திருமணம் செய்தால் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த முடியாது என்ற நிலையில், சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    * இப்படிப்பட்ட திருமணங்களை நடத்தி வைக்கிற மத குருமார்கள், குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் அறிவித்தார்.

    இந்த நிலையில் குழந்தை திருமண விவகாரத்தில் அசாம் போலீசார் நேற்று ஒரே நாளில் 1,800-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், " மாநிலம் முழுவதும் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை முடக்கி விடப்பட்டு, கைது செய்யும் படலம் அதிகாலை முதல் தொடங்கி விட்டது. இந்த நடவடிக்கை இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு தொடரும்" என குறிப்பிட்டார்.

    இந்த மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 4 வழக்குகள் 15 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதிகபட்சமாக தூப்ரியில் 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையொட்டி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார்.

    அந்தப் பதிவில் அவர், " மாநிலத்தில் குழந்தை திருமண அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. இதுவரை அசாம் போலீஸ் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 4 வழக்குகள் (குழந்தை திருமணம்) பதிவு செய்துள்ளது. இனி வரும் நாட்களில் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குகள் மீதான நடவடிக்கை 3-ந் தேதி முதல் (நேற்று) தொடங்கும். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறி உள்ளார்.

    • 55 திருமணங்கள் முடிந்த நிலையில் சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • விவரம் தெரியவந்தால் ‘காதல் திருமணம்’ என்று கூறி பெற்றோர்களும் தப்பி விடுகின்றனர்.

    திருப்பூரில் :

    திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பது தடுக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் திருப்பூரில் 61 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 55 திருமணங்கள் முடிந்த நிலையில் சட்ட ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடத்த நினைக்கின்றனர். 18 வயது பூர்த்தியாகாத பெண்ணுக்கு திருமணம் நடந்தால் குறிப்பாக மணமகனுக்குதான் பாதிப்பு அதிகம் என்பதை உணர வேண்டும். மணமகள் வயது 18-க்கு குறைவாக இருந்து, அந்த விவரம் தெரியவந்தால் 'காதல் திருமணம்' என்று கூறி பெற்றோர்களும் தப்பி விடுகின்றனர். எனவே திருமண வயது இளைஞர்கள் மற்றும் பெண்ணுக்கு பூர்த்தியாகிவிட்டதா என்பதை உறுதி செய்த பிறகே திருமண ஏற்பாடுகளை தொடங்க வேண்டும்' என்றனர்.

    • பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மசினகுடி பள்ளியில் நடைபெற்றது.
    • தானியங்கள், கீரைகள், காய்கறிகளில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து பலகாரங்களை சாப்பிட்டார்.

    ஊட்டி,

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மசினகுடி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமாரி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் தானியங்கள், கீரைகள், காய்கறிகளில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து பலகாரங்களை சாப்பிட்டு அதன் சுவையை உணர்ந்து பாராட்டு தெரிவித்தார்.

    தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    குழந்தைகள் பாதுகாப்பு பின்னர் மகளிர் ஆணைய மாநில தலைவி ஏ.எஸ்.குமாரி பேசும்போது கூறியதாவது:- ஆதிவாசி மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை சிறு வயதில் திருமணம் செய்து வைக்கக் கூடாது.

    அறிவியல் ரீதியாக 18 வயதை கடந்த பின்னரே பெண் திருமணம் செய்து கொள்வதற்கான பருவத்தை அடைகிறாள். தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து உள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு சட்டங்கள் உள்ளது.

    ஆனால் அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என கண்காணிப்பதற்காக மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆதிவாசி மக்கள் மட்டுமின்றி பெண்கள், குழந்தைகள் சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு முறைகளை சாப்பிட வேண்டும்.

    தொடர்ந்து இருமல் இருந்தால் ஆங்கில மருந்துகளை பயன்படுத்துவதை கைவிட்டு ஓமம் உட்கொண்டால் இருமல் வராது. பாரம்பரிய மருந்துகள் கொரோனா காலத்தில் ஊட்டச்சத்து, பாரம்பரிய மருந்துகள் தான் உடல் நலனை பாதுகாத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்தனா,மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆதிவாசி குழந்தைகளின் பாரம்பரிய நடனம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது

    • அய்யனார்ஊத்து கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது

    கயத்தாறு:

    கயத்தாறு தாலுகாவை சேர்ந்த அய்யனார்ஊத்து கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் பைசல் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ தலைமை தாங்கினார். கோவில்பட்டி சாய்லீங்க அறக்கட்டளையின் தலைவர் உமையலிங்கம், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தை திருமணம்,போதை பொருள் ஒழிப்பு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

    தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகர் சுரேத்துவாணி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடைபெற்றது. இதில் 250 மாணவ- மாணவியர் பங்கேற்றனர்.

    அறக்கட்டளையின் சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 350 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    பள்ளியின் உதவி தலைமைஆசிரியர் ராமலட்சுமி நன்றி கூறினார்.

    • 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
    • மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது25), இவருக்கும் புதுப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் பாலு கருணாநிதி, ராஜ்மோகன் ஆகியோர் மீது குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சமூக நல அலுவலர் தனபாக்கியம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து மகளிர் போலீசார் 3பேர் மீது வழக்கு பதிந்து சிறுமியை கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவனும், சிறுமியும் புளியந்தோப்பில் உள்ள எல்லையம்மன் கோவில் வாசலில் நின்று திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • சிறுவனும், சிறுமியும் திருமணம் முடிந்ததும் ஓட்டலுக்கு சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்து சாப்பிட்டு உள்ளனர்.

    பெரம்பூர்:

    கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் உடன் படிக்கும் 17 வயது சிறுவனை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த சிறுவனும், சிறுமியும் புளியந்தோப்பில் உள்ள எல்லையம்மன் கோவில் வாசலில் நின்று திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவுக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்தது. இதுபற்றி குழந்தைகள் நல குழுவினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் விசாரணை நடத்திய போது காதல் வயப்பட்ட சிறுவனும், சிறுமியும் கடந்த 7-ந்தேதி எல்லையம்மன் கோவில் முன்பு தாலி கட்டி திருமணம் செய்து இருப்பது தெரிந்தது. இதனை அவர்களது நண்பர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து மற்ற நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர்.

    தற்போது இது சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுவனும், சிறுமியும் திருமணம் முடிந்ததும் ஓட்டலுக்கு சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்து சாப்பிட்டு உள்ளனர். பின்னர் அவரவர் வீட்டுக்கு வந்து விட்டனர்.

    இதனால் சிறுமிக்கு திருமணம் ஆனது குறித்து வீட்டில் இருந்த உறவினர்களுக்கு தெரியவில்லை. திருமண வீடியோ பதிவு வெளியே வந்த பின்னர்தான் இது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    போலீசார் விசாரணை நடத்துவது பற்றி தெரிந்ததும் அந்த சிறுவன் தப்பி ஓடி விட்டான். அவனை பிடித்து மேலும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது காதல் ஆசை வார்த்தை கூறி சிறுவன் பாலியல் ரீதியாக உறவில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து சிறுமியை மீட்டு போலீசார் கெல்லீசில் உள்ள மையத்தில் தங்க வைத்து உள்ளனர். அவருக்கு ஆலோசனை வழங்க குழந்தைகள் நல அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    திருமணம் செய்த இருவரும் சிறுவன், சிறுமி என்பதால் அவர்கள் மீது என்ன மாதிரியான நட வடிக்கை எடுப்பது என்று போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    சிறுமியை, சிறுவன் திருமணம் செய்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×