search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister edappadi palanisamy"

    மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் ரூ.16 கோடி செலவில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவித்தார். #TNAssembly #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பள்ளி மாணவர்களின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 48 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் அனைத்து பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக 2,283 திறன் வகுப்பறைகள் 42 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

    நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தினை மாணவர்களுக்கு சீரிய முறையில் பயிற்றுவிக்க ஏதுவாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி வழங்கப்படும். மேலும், தலைமை ஆசிரியர்கள் அவர்களது தலைமைப்பண்பினை மேம்படுத்திகொள்வதற்காக பயிற்சியும், ஆய்வு அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும், தேசிய ஆசிரியர் தகவுக்கான கட்டகங்கள் உள்ளடு செய்தல் சார்ந்த பயிற்சியும் மற்றும் இதர பயிற்சிகளுக்காக 35 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

    மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்துவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, இப்பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக செயல்படும் விதத்தில், ஒரு பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் வீதம் 16 கோடி ரூபாய் செலவில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.

    தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன் அட்டை வழங்கும் முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்தது. இத்திறன் அட்டையில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட திறன் அட்டையாக நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 11 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #TNAssembly #EdappadiPalanisamy
    சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத்தில் 3 வழித்தடங்களுக்கு ஒப்புதலையும், நிதி பங்களிப்பையும் மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். #MetroTrain #ChennaiMetro
    சென்னை:

    சென்னை எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையே சுரங்கப்பாதையில் ரெயில் போக்குவரத்து தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    54 கிலோ மீட்டர் நீளத்திலான சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டம் தற்போது சென்னை பெருநகர் பகுதியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு போதாது என்பதை உணர்ந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில் 3 மெட்ரோ ரெயில் வழித்தடங்களை செயல்படுத்த முடிவு செய்தார்.

    அதன்படி ரூ.79 ஆயிரத்து 961 கோடி மதிப்பீட்டில் 107.55 கிலோ மீட்டர் நீளத்தில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மாதவரம் முதல் சிறுசேரி வரையில் ஒரு வழித்தடமும், சென்னை புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை ஒரு வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடமும் என 3 மெட்ரோ ரெயில் வழித்தடங்களை செயல்படுத்துவதற்கு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இத்திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடனுதவி பெறுவதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத்தில் 3 வழித்தடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்பு ஆகியவற்றை விரைவில் வழங்க வேண்டும்.


    3 வழித்தடங்களில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மற்றும் மாதவரம் முதல் சிறுசேரி வழித்தடத்தில் மாதவரம்- கோயம்பேடு வரையிலுமான வழித்தட பகுதிக்கு மட்டும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடனுதவி வழங்க முன்வந்துள்ளது. இதற்கான நிதி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் இருந்து பெறப்பட்டவுடன் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். 17.12 கிலோ மீட்டர் நீளத்திலான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தட பகுதிக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி பெற அரசு முயற்சியை எடுத்து வருகிறது.

    கோவை மாநகரத்தில் புதிய மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி சென்னை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கான நிதியை ஜெர்மனி நிதி நிறுவனமான ‘கே.எப்.டபிள்யூ’ வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வழித்தடங்களை மாற்றி அமைத்து, கலங்கரை விளக்கம் முதல் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை எடுத்து செல்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    இதுதவிர, விமான நிலையத்துடன் முடிவடையும் மெட்ரோ ரெயில் பாதையை வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள புறநகர் பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்து சென்னை நகரில் உள்ள துரித போக்குவரத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MetroTrain #ChennaiMetro #CMRL
    டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.#ADMK
    சென்னை:

    டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டி.டி.வி.தினகரன் புதிதாக ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட பாசறை செயலாளர் கே.பி.கோபிநாத், ஆலந்தூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் டி.கண்ணன், துணை தலைவர் வாட்டர் கே.சரவணன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி செயலாளர் எஸ்.கவுதம் சுரேஷ், 164-வது வட்ட கழக செயலாளர் புல்லட் கே.ராஜேஷ் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த ஆலந்தூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் வி.ரமேஷ், 156-வது வட்ட துணைச் செயலாளர் பி.சுந்தர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட தீபா பேரவை தலைவர் எம்.ஜி.ஆர்.விமலானந்தர் உள்பட 100 பேர் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
    தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.#ADMK #EdappadiPalanisamy
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் மணிமண்டபம் திறப்பு விழா, வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட ஆண்டு விழா ஆகிய விழாக்கள் பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் கலந்துகொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1899-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. என்னை உருவாக்கி உங்கள் முன் நிறுத்தியிருப்பது இந்த பள்ளி தான். நான் படித்த பள்ளி இது. 1967-ம் ஆண்டு முதல் 6-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்பு அதாவது எஸ்.எஸ்.எல்.சி. வரை இங்கு படித்தேன்.

    சிறந்த ஆசிரியர்கள் பெருமக்கள் எங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தனர். அதையெல்லாம் நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் படித்து முதல்-அமைச்சராக உருவாகி இருக்கிறேன் என்றால் அந்த பெருமை இந்த பள்ளிக்கூடத்தை சாரும்.

    குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 65 சதவீதம் மக்கள் விவசாயப்பணி செய்கிறார்கள். உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் விவசாயத்துக்கு நீர் முக்கியம். இந்த நீர் இருந்தால்தான் விவசாயிகளும், வேளாண்மையும் நன்றாக இருக்கும். எனவே கடந்த ஆண்டு 1,519 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் சீரமைக்கப்பட்டது.

    இந்த ஆண்டில் 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏரிகளில் நீர் வரத்து கால்வாய், கரைகள் பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல், ஆழப்படுத்துதல், உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரி சரிசெய்தல் ஆகிய பணிகள் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் அந்தந்த பகுதி விவசாய சங்கங்களுக்கு வழங்கப்படும். சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி குடிமராமத்து பணிக்கு செலவாகும் தொகை முழுவதும் அரசு அவர்களுக்கு வழங்கும். இதனால் எந்த தவறும் நடந்து விடாமல் பணிகள் நடைபெறும்.

    இந்த பணிகள் நிறைவடைந்தால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம், ஏரிகளில் தேங்கி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படும். இதுபோல் மழைக்காலங்களில் மட்டும் நீர் ஓடும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வீணாக செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க 3 ஆண்டுகளுக்கான திட்டம் போடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டுக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நான் படித்த பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு சில கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் கேட்டு கொண்டு உள்ளனர். அந்த கோரிக்கைகள் இந்த அரசு நிறைவேற்றி தரும். இங்கு ஆயிரம் மாணவர்கள் அமரும் வகையில் புதிய கலையரங்கம், பள்ளிக்கூட சிறப்பு பராமரிப்பு நிதி, சுற்றுச்சுவர் ஆகியவற்றுக்கு ரூ.1 கோடி தேவை என்று தெரிவித்தனர். அந்த தொகையை முழுமையாக தமிழக அரசு வழங்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #ADMK #EdappadiPalanisamy
    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுமா? என்பது சந்தேகம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார். #MetturDam #EdappadiPalanisamy
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வேளாண்மை தொழில் சிறக்கவும், விவசாய நலனை காக்கவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.

    மேட்டூர் அணையில் மிக குறைவான அளவு தண்ணீர் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதனால் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என்பது சந்தேகம். தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருக்கும் என நம்புகிறோம். அவ்வாறு மழை பெய்தால் அணைகள் நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்.


    காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் இறுதி தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. இந்த சமயத்தில் கர்நாடக முதல்-மந்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்துவது ஏற்புடையதாக இருக்காது. காவிரி பிரச்சினையில் நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

    சேலம்-சென்னை இடையே புதிதாக அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வரும். தமிழகத்தில் பலர் தொழிற்சாலைகள் தொடங்க தயாராக இருக்கிறார்கள். புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.

    வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகள் கிடைக்கும். இதன்மூலம் தொழில் வளம் பெருகும். மத்திய அரசின் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும். இந்த திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். தமிழகத்தில் கனிம வளங்களை பாதுகாப்பது அரசின் கடமை. இதனால் மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.  #MetturDam #EdappadiPalanisamy
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றிய குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருவதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
    சென்னை:

    திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 16 நாட்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. பேச்சு வார்த்தைக்கு பிறகு ஏப்ரல் 2-ந் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது, தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ரசிகர்கள், அரசு குறும்படம் ஒன்றை பார்க்கும் நிலை ஏற்பட்டது.

    அதாவது, தமிழக அரசின் செய்தி துறை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி தயாரிக்கப்பட்ட குறும்பட காட்சிகள்தான் அவை. தனக்கு வேலை கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு பெண் ஒருவர் கோவிலில் அர்ச்சனை செய்வது போன்று அந்தக் காட்சி இடம்பெற்றிருந்தது.

    தமிழக அரசின் இந்த விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தியேட்டரில் ஒளிபரப்பப்பட்ட குறும்பட காட்சி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, அந்த சர்ச்சை ஓரளவு ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



    அதாவது, கோவிலுக்கு வரும் ஒரு தம்பதி, “பரணி நட்சத்திரம். பிரவீணுக்கு அர்ச்சனை செய்யுங்கள்” என்று அங்குள்ள குருக்களிடம் கூறுகிறார்கள்.

    அந்த நேரத்தில் மூன்று சக்கர நாற்காலியில் இருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் குருக்களை அழைத்து, “அர்ச்சனை செய்ய வேண்டும். என் பேருக்கு அல்ல. சாமி பேருக்கு” என்று கூறுகிறார்.

    குருக்களும், “பேஷா பண்ணிடலாம். எந்த சாமிக்கு” என்று கேட்கிறார்.

    அதற்கு பதில் அளிக்கும் அந்த மாற்றுத்திறனாளி இளைஞர், “நம்ம தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான். அவருதானே எனக்கு வேலை கொடுத்த சாமி” என்கிறார்.

    சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வீடியோவும் தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்டதா?, அல்லது வேறு யாராவது சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக தயாரித்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து, அரசு தரப்பில் விசாரித்தபோது, தமிழக அரசு சார்பில் தியேட்டர்களில் ஒளிபரப்பப்பட்ட குறும்படம் நிறுத்தப்பட்டுவிட்டது. புதிதாக எந்த குறும்படமும் தியேட்டர்களுக்கு வழங்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், தியேட்டர்களில் ஒளிபரப்ப ஏற்கனவே தயாரிக்கப்பட்ட குறும்படங்களில் இதுவும் ஒன்று என்றும், எப்படியோ சமூக வலைதளங்களில் மட்டும் வெளியாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது. எனவே, அதுகுறித்து தமிழக அரசின் செய்தித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
    ×