search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chandrasekhara rao"

    • அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
    • ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அம்பேத்கர் சிலையை இன்று மதியம் 2 மணியளவில் திறந்து வைக்கிறார்.

    இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஸ்தூபியை நிர்மாணித்த பிறகு, சிலையின் பாகங்கள் டெல்லியில் தயாரிக்கப்பட்டு ஐதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டன. கனரக கிரேன்களின் உதவியுடன் அவை முறையாக நிறுவப்பட்டுள்ளன.

    இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வலிமையான உலோகப் பொருட்கள் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பாகத்தில் இருந்து, சிலையை முழுவதுமாக கண்டுக்களிக்க படிக்கட்டு மற்றும் சாய்வுதளத்துடன் 15 பேர் அமரக்கூடிய 2 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்படுகிறது.நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வைக்கப்பட உள்ளது. சிலையின் கீழ், தூணில் உள்ள நினைவு கட்டிடத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.

    அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் அடங்கிய அருங்காட்சியகம் மற்றும் புகைப்படத் தொகுப்பு இங்கு நிறுவப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே ஆடியோ காட்சி அறைகள் உள்ளன.

    நினைவிடத்திற்கு வெளியே பசுமைக்காக. 2.33 ஏக்கர் காலி நிலம். ராக் கார்டன், லேண்ட்ஸ்கேப்பிங், தோட்டம், நீர் ஊற்று உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 450 கார்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சுமார் 750 பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 50 ஆயிரம் பேர் உட்காருவதற்கு வசதியாக நாற்காலிகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    • தெலுங்கானா ராஷ்டிர சமிதி வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது.
    • புதிய கட்சி குறித்த அறிவிப்பை விஜயதசமி நாளில் சந்திரசேகர ராவ் அறிவிக்கிறார்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க விரும்புகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

    கடந்த மாதம் 5-ம் தேதி பேசிய சந்திரசேகர ராவ் மத்தியில் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். கடந்த மாதம் 12-ம் தேதி சட்டசபையில் பேசிய சந்திரசேகர ராவ், தேசிய கட்சி தொடங்கப் போவதாக முதல் முதலில் அறிவித்தார். தேசிய அளவில் கால் பதிக்கும் நோக்கத்திலும், பா.ஜனதாவுக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் நோக்கத்திலும் சந்திரசேகர ராவ், பிற தலைவர்களை சந்திக்கத் தொடங்கினார். பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார்.

    இந்நிலையில், விஜயதசமி தினத்தன்று (நாளை) புதிய கட்சி தொடங்குவது பற்றி சந்திரசேகர ராவ் அறிவிப்பு வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • மரபுபடி பிரதமர் வருகையின் போது அவரை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் வரவேற்பது வழக்கம்.
    • ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரியும் , தெலுங்கானா ராஷ்ட்ரிய தலைவருமான சந்திரசேகர ராவ் பிரதமர் வருகையை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார்.

    ஐதராபாத்:

    வட மாநிலங்களில் வலுவாக உள்ள பா.ஜனதா தற்போது தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கால் பதிக்கும் வகையில் காய் நகர்த்தி வருகிறது. இதனால் பாரதிய தேசிய செயற்குழு கூட்டத்தை அக்கட்சி ஐதராபாத்தில் நடத்துகிறது.

    இன்றும் நாளையும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதா ஆளும் மாநிலத்தை சேர்ந்த 18 முதல்-மந்திரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இன்று காலை ஐதராபாத்தில் உள்ள சர்வதேச மாநாட்டு திடலில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதனை ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். இதில் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டது. மேலும் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பாரதிய ஜனதா செயல்பாடுகள் குறித்தும், வெற்றி வியூகம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    செயற்குழு கூட்டத்தையொட்டி நாளை (3-ந்தேதி) பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்தையொட்டி ஐதராபாத் நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. மோடியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் சாதனை குறித்த சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன , பிரதமர் வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் பேகம்பேட்டை விமான நிலையம் வருகிறார்.

    மரபுபடி பிரதமர் வருகையின் போது அவரை அந்தந்த மாநில முதல்-மந்திரி கள் வரவேற்பது வழக்கம்.

    ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் பிரதமர் வரவேற்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார். அவருக்கு பதிலாக அம்மாநில மந்திரி மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்க மட்டுமே செல்கின்றனர்.

    ஆனால் பிரதமர் வருகைக்கு முன்பாக அதே விமான நிலையத்துக்கு வந்த எதிர்கட்சி ஐனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை சந்திரசேகர ராவ் மற்றும் அம்மாநில மந்திரிகள் வரவேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தேசிய அளவில் மோடிக்கு எதிராக 3-வது அணி அமைத்து எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக அவர் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் தனது சொந்த மாநிலத்திற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க செல்ல மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 6 மாதங்களில் பிரதமர் மோடி வருகையை சந்திரசேகர ராவ் 3-வது முறையாக புறக்கணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாட்டை விழிப்புடன் காவல் காக்கும் நபர் பிரதமராக இருப்பதால் மக்கள் அச்சமின்றி நடமாடுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, புதிய இந்தியா உருவாக பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். #Votefor #NewBharat #ModiinTelangana
    ஐதராபாத்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகரில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி ஆதரவு திரட்டினார்.

    ஜாதகம், ஜோசியத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் என்று தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவை குற்றம்சாட்டிய மோடி, வாரிசு அரசியல் மற்றும் சமரச அரசியல் மூலம் அவர் பிழைப்பு நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

    ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள உங்களது முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தெலுங்கானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னதாகவே சட்டசபையை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்தும் நிலையை உருவாக்கி விட்டார். ஜோசியரின் ஆலோசனையை கேட்டு அவர் செய்த இந்த காரியத்தால் தற்போது இங்கு இரண்டு தேர்தல்கள் நடைபெறுகிறது. 


    இந்த மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற அவர் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்திருக்க முடியும். ஆனால், பதவியின் மூலம் தனது குடும்பத்தாருக்கு மட்டும் நன்மைகளை செய்த அவர் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. 

    என்னை திட்டியும், தாக்கியும் பேசி வருபவர்களின் ஏச்சுகளுக்கு இடையில் மக்களின் ஆசிகளுடன் முன்னேற்றத்துக்கு தேவையான பல்வேறு நல்ல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி முடித்துள்ளது.

    பெண்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தேவையான பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். 

    ஏப்ரல் 11-ம் தேதி இங்கு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் தொகுதியின் எம்.பி.க்காகவோ, மத்தியில் அடுத்து ஆட்சி செய்யப்போகும் பிரதமருக்காகவோ நீங்கள் வாக்களிக்கப் போவதில்லை. புதிய பாரதம் உருவாவதற்காக வாக்களிக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் இந்த தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். #Votefor #NewBharat #ModiinTelangana
    தெலுங்கானாவில் 10 புதிய உறுப்பினர்களுடன் தனது அமைச்சரவையை முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று விரிவாக்கம் செய்தார். #TelanganaCM #TelanganaCabinet
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது.  தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்றார். அவருடன் ஒரே ஒரு அமைச்சரான முகமது மஹ்மூதுவும் பதவியேற்றார். அவருக்கு உள்துறை ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் நீண்டகாலமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

    இது அரசியலமைப்பை மீறும் செயல் என்றும், நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. எனினும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. சுமார் 2 மாத தாமதத்திற்கு பிறகு, கடந்த வாரம் இதுபற்றி பேசிய முதல்வர் சந்திரசேகேர ராவ், பவுர்ணமி நாளான பிப்ரவரி 19-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.

    அதன்படி தெலுங்கானா மாநில அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்தார் முதல்வர் சந்திரசேகர ராவ். 10 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் புதுமுகங்கள். சந்திரசேகர ராவின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற இந்திரகரன் ரெட்டி, தலசானி சீனிவாஸ் யாதவ், ஜெகதீஷ் ரெட்டி மற்றும் ஏதலா ராஜேந்தர் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

    ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் இஎஸ்எல் நரசிம்மன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அமைச்சரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு பெண் உறுப்பினருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #TelanganaCM #TelanganaCabinet
    சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். #chandrasekhararao #chandrababunaidu #pmmodi #parliamentelection
    அமராவதி:

    2019 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கிடையே பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக மூன்றாவது கூட்டணி என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறி வருகிறார். அவருக்கு ஆதரவு வெளிப்படையாக யாரும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர பிரதேச எதிர்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் சந்தித்து பேசியது கூட்டணி குறித்தான கேள்வியை எழுப்பியுள்ளது.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு பின்னணியில் பா.ஜனதா உள்ளது என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது.

    இந்நிலையில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அமராவதியில் உள்ள தெலுங்குதேசம் தொண்டர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியை, சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் சந்தித்து பேசியதை விமர்சனம் செய்தார். 

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் உண்மை நிலை இப்போது வெளிப்பட்டுள்ளது. அவர்கள் மோடியின் உத்தரவின் பேரில் செயல்பட்டு வருகிறார்கள். மூன்றாவது கூட்டணி என்பதற்கு பின்னால் பிரதமர் மோடியின் மூளை வேலை செய்கிறது, ஆந்திராவில் பா.ஜனதாவிற்கு எதிரான வாக்குகளை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் மூன்றாவது கூட்டணிக்கு பிற கட்சிகளிடம் இருந்து வெளிப்படையான, ஸ்திரமான பதில் கிடைத்துள்ளது என கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு. #chandrasekhararao #chandrababunaidu #pmmodi #parliamentelection
    தெலுங்கானா மாநிலத்துக்கென புதிதாக உருவாக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார். #ThottathilBhaskaranNairRadhakrishnan
    ஐதராபாத்:

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது.

    முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாகி வருகிறது.

    மிக பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகிவரும் அமராவதி நகரில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர் நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம்  பரிந்துரைத்தது.

    மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை கடந்த 26-ம் தேதியன்று வெளியிட்டார்.

    இந்த உத்தரவை தொடர்ந்து, ஜனவரி முதல் தேதியில் (இன்று) இருந்து அமராவதியில் புதிதாக செயல்பட தொடங்கும் இந்த நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர் நீதிமன்றமாகும். தலைமை நீதிபதியுடன் மேலும் 15 நீதிபதிகள் இங்கு நியமிக்கப்படுவார்கள்.

    இதைதொடர்ந்து, ஐதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம் இன்று முதல் தெலுங்கானா உயர் நீதிமன்றம் என்று மட்டுமே அழைக்கப்படும்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்துக்கென புதிதாக உருவாக்கப்பட்ட ஐகோர்ட்டின் முதல் தலைமை நீதிபதியாக  தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்று கொண்டார்.

    ஐதராபாத் நகரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற எளிய விழாவில் தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணனுக்கு அம்மாநில கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்த பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ், அம்மாநில மந்திரிகள் நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதற்கு முன்னர் ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர், தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. #FirstChiefJustice #TelanganaHighCourt #ChiefJusticeswornin #ThottathilBhaskaranNairRadhakrishnan 
    சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் என்று தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கினார். #ChandrasekharaRao #RahulGandhi
    ஐதராபாத்:

    மாநிலத்தை தங்கமாக மாற்றுவார் என மக்கள் கனவு கண்டால், சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் என்று தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கினார்.

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு வரும் 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற உத்வேகத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.



    இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும், தெலுங்குதேசம் கட்சியும் இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணி, அவருக்கு சரியான போட்டியாக அமைந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியும் ஆட்சியைப் பிடிக்க ஆர்வமாக உள்ளது.

    இந்த நிலையில் அங்கு கத்வால் என்ற இடத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    5 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா பணக்கார மாநிலமாக இருந்தது. இப்போது அது கடன்களின் பிடியில் தவிக்கிறது. மாநிலத்தில், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தலா ரூ.1 லட்சம் கடன் உள்ளது. ஆனால் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் குடும்பத்தினர் சொத்துகளோ உயர்ந்து கொண்டே போகிறது.

    30 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 4½ ஆண்டு கால ஆட்சியில் எத்தனை பேருக்கு இந்த ஆட்சியில் வேலை கிடைத்தது? விவசாயிகள், மலைவாழ் பழங்குடி மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளது.

    வீடு இல்லாதவர்களுக்கு 2 படுக்கை அறைகளை கொண்ட வீடுகள் கட்டித்தரப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை அவர் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இப்படி மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்காக குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

    குடிநீர், வளங்கள், வேலை வாய்ப்புகள் என எல்லாவற்றையும் பெற்ற தங்கமான மாநிலமாக தங்கள் மாநிலம் மாறும் என மக்கள் கனவு கண்டார்கள். ஆனால், முதல்-மந்திரி சந்திரசேகரராவின் குடும்பம்தான் தங்கமான (பணக்கார) குடும்பமாக மாறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராகுல் காந்தி, தெலுங்கானா தேர்தலையொட்டி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகியவை பாரதீய ஜனதா கட்சியின் மற்றொரு அணி (‘பி’ டீம்), சந்திரசேகரராவ் பிரதமர் மோடியின் தெலுங்கானா ரப்பர் ஸ்டாம்ப்” என தாக்கி உள்ளார்.

    இதே போன்று மராட்டிய மாநிலத்தில் சஞ்சய் சாத்தே என்ற விவசாயி சாகுபடி செய்த 750 கிலோ வெங்காயத்துக்கு வெறும் ரூ.1,064 தான் கிடைத்து, அந்த பணத்தை அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ளதை தொடர்புபடுத்தி மற்றொரு பதிவில் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

    அதில் அவர், “பிரதமர் மோடி 2 இந்தியாக்களை கட்டமைத்து கொண்டிருக்கிறார். ஒரு இந்தியாவில், ரபேல் விமான பேரத்தில், எதுவும் செய்யாத, விமானத்தை தயாரிக்காத அனில் அம்பானிக்கு அவர் ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை வழங்கி உள்ளார். மற்றொரு இந்தியாவில், நாசிக் விவசாயிக்கு 4 மாத உழைப்பில் விளைந்த 750 கிலோ வெங்காயத்துக்கு ரூ.1,040 கிடைத்துள்ளது” என கூறி உள்ளார். #ChandrasekharaRao #RahulGandhi 
    காங்கிரஸ் கட்சியைப் போன்று வேலை செய்யாமல் மாநிலத்தில் ஆட்சி செய்ய நினைப்பதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். #TelenganaElection #TelanganaAssemblyPoll #ModiCampaign
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைத் தட்டிப்பறிக்க காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் களமிறங்கி உள்ளன. இதேபோல் தெலுங்கானாவில் காலூன்ற பாஜகவும் களமிறங்கி உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று நிஜாமாபாத் வந்தார். நிஜாமாபாத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-


    வளர்ச்சி, புதிய இந்தியாவை கட்டமைத்தல் மற்றும் புதிய தெலுங்கானா மீது நம்பிக்கை உள்ளவர்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

    காங்கிரஸ் கட்சியைப் போன்று பல ஆண்டுகளாக எந்த பணியையும் செய்யாமல் ஆட்சியை பிடிக்க முடியும் என தெலுங்கானா முதல்வரும், அவரது குடும்பத்தினரும் நினைக்கின்றனர். லண்டனைப் போன்று நிஜாமாபாத் நகரத்தை மாற்றிக் காட்டுவதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், இங்கோ தண்ணீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளன.


    தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான்பாரத் திட்டத்தில் இந்த மாநில முதல்வர் இணையவில்லை. இதன்மூலம் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார். எனவே மக்கள் டிஆர்எஸ் அரசாங்கத்திற்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    வாக்கு வங்கி அரசியல் கரையான் போன்று வளர்ச்சியை செல்லரித்துவிட்டது. டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குடும்பத்தினர் ஆளும் கட்சி. இந்த கட்சிகள் இணைந்து தெலுங்கானா தேர்தலில் நட்புறவு போட்டியில் விளையாடுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் பிரசார பொதுக்கூட்டம் இதுவாகும். இதேபோல் மெகபூப்நகரில் நடைபெற உள்ள பிரசார கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார். #TelenganaElection #TelanganaAssemblyPoll #ModiCampaign
    தெலுங்கானாவில் நாளை ராகுலும், சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதால் மெகா கூட்டணி மீது வாக்காளர்களின் பார்வை திரும்பியுள்ளது. #TelanganaAssemblyElection #RahulGandhi #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபைக்கு வருகிற 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    119 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்க காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி ஆகிய 4 கட்சிகளும் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியும் களத்தில் உள்ளது.

    இதனால் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. மூன்று அணிகள் சார்பில் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரசாரம் நிறைவு பெற இன்னும் 8 நாட்களே இருப்பதால் அங்கு உச்சக்கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    தெலுங்கானாவில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 119 தொகுதிகளில் 75 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரசுக்கு ஆதரவு திரட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் தெலுங்கானாவில் குவிந்துள்ளனர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி கடந்த 22 மற்றும் 23-ந்தேதிகளில் தெலுங்கானா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொள்கிறார்.


    இன்று மதியம் அவர் நிஜாமாபாத்தில் பேசுகிறார். பிற்பகலில் மெகபூப் நகரில் பிரசாரம் செய்கிறார்.

    இந்த நிலையில் தெலுங்கானா மக்களிடம் ஆதரவு திரட்டும் பணியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தீவிரப்படுத்தி உள்ளார். தெலுங்கானா மாநிலத்துக்கு நாளை (புதன்கிழமை) அவர் வர உள்ளார். வழக்கம் போல இந்து கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    கம்மம் பகுதியில் நடக்கும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேச உள்ளார். அதற்கு முன்பும், பின்பும் “ரோடு-ஷோ” நடத்தவும் ராகுல் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில காங்கிரசார் சுறுசுறுப்புடன் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே ராகுல் காந்தி பேச உள்ள கம்மம் பொதுக்கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் மெகா கூட்டணி அமைத்துள்ள ராகுலும், சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பேச இருப்பது இதுவே முதல் முறையாகும். ராகுலும், சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் ஒன்று சேர்ந்து ஆதரவு திரட்டுவதன் மூலம் மெகா கூட்டணிக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் கம்மம் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தெலுங்கானா ஜன சமிதி கட்சித் தலைவர் கோதண்டராம் ஆகியோரையும் கலந்து கொள்ள செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் பங்கேற்றால் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியின் ஒற்றுமையை மக்கள் மத்தியில் காட்ட முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சிகள் உருவாக்கி இருக்கும் மெகா கூட்டணிக்கு “மக்களின் முன்னணி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த முன்னணி சார்பில் நேற்று குறைந்தபட்ச பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெலுங்கானா வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய வாக்குறுதிகள், அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் நாளை ராகுலும், சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதால் மெகா கூட்டணி மீது வாக்காளர்களின் பார்வை திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர்கள் தாக்கி பேசி வருகிறார்கள்.

    இதற்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு, “தெலுங்கு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் சந்திரசேகரராவ் பிரிவினையை அதிகப்படுத்துகிறார். அவரை தோற்கடித்தால்தான் தெலுங்கு மக்கள் அனைவருக்கும் முன்னேற்றம் கிடைக்கும்” என்றார்.

    ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தெலுங்கானா மக்களில் 64 சதவீதம் பேர் சந்திரசேகரராவுக்கே ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  #TelanganaAssemblyElection #RahulGandhi #ChandrababuNaidu
    ×