என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கர்"

    • நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.
    • தவெக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.

    சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில்,

    சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர்.
    • அம்பேத்கர் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர்.

    ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சமரசமின்றி, தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர் டாக்டர் #அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்பேத்கரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.
    • அம்பேத்கரின் வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்!

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்!

    எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.

    அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் #Ambedkar எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்வோம்.
    • அம்பேத்கரின் லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அம்பேத்கரின் தலைமைத்துவம், நீதி, சமத்துவம், அரசமைப்பு மீதான அர்ப்பணிப்பு நம்மை வழி நடத்துகிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்வோம். கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் தலைமுறைகளை தூண்டியவர், வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப அம்பேத்கரின் லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும் என்று கூறியுள்ளார். 



    • ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்றுங்கள்.
    • தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அதை மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.

    அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளான இன்று சமத்துவ நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கலந்துகொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர், "ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்றுங்கள். தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அதை மற்ற மாநிலங்கள் பின்பற்றும்.

    நாடு முழுவதும் சாதி ரீதியாக ஆணவக் கொலை நடக்கிறது; பல உயிர்களை இழந்துள்ளோம்; அனைத்து சமூகமும் ஆணவக் கொலையை தவறாகக் கருதாதது வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்தார்.

    • அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
    • ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா?

    அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு எடுத்த முடிவு குறித்த விவாதம் அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

    பெங்களூரில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா விழாவில் இன்று கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் ஹோசபாலே பேசினார்.

    அப்போது, "பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.

    முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவால் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை குறித்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஹோசபாலே, ஔரங்கசீப் போன்றோர் சின்னமாக மாற்றப்பட்டனர். ஆனால் சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவரது சகோதரர் தாரா ஷிகோ போன்றோர் மறக்கப்பட்டனர். இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிராகச் சென்றவர்கள் சின்னங்களாக மாற்றப்பட்டனர்.

    ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய வர படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்யும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு, 2023-ம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று விருதுகள் வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தினை சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று வருகிற 30-ந்தேதிக்குள் மேற்படி அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் அம்பேத்கர் மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர்
    • ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர் அம்பேத்கர்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ள தாவது:-

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்கிற பி.ஆர்.அம்பேத்கர், இன்றைய மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில் பிறந்தவர். இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர்.

    உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். பட்டியல் இன மக்களுக்கு என்று கழகம் ஒன்றைத் தொடங்கியவர், பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர் என்று, பல்வேறு போற்று தல்களுக்கு உரியவர் அம்பேத்கர்.

    பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

    இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990ல் இவருக்கு வழங்கப்பட்டது

    போற்றுதலுக்கு உரிய டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று (டிசம்பர் 6). இந்த நாளில், அவரரைப் போற்றி வணங்குவோம். இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    சென்னை:

    சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் காவி உடை அணிவது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவரை அவமதித்த இந்து மக்கள் கட்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

    இந்து மக்கள் கட்சியினர் அண்ணல் அம்பேத்கரை வேண்டும் என்றே அவமதிப்பதாகவும், வரலாற்றை மாற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.

    தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களையும் இதே போல் இழிவுபடுத்தும் வகையில் அந்த அமைப்பு செயல்படுவதாகவும் இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    இதே போல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
    • அசோக் நகரில் உள்ள 'வெளிச்சம்' அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    சென்னை:

    டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஜனநாயகம் காப்போம் சிறுத்தைகள் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து இந்த அணிவகுப்பு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை நடைபெறுகிறது.

    அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்று கூடி அணிவகுப்பாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

    இதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.

    சென்னையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை அணிவகுப்பு நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்.ஜி. சாலை வரை மத்திய அரசுக்கு எதிராக அணிவகுத்து செல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, ரவிசங்கர், வி.கோ.ஆதவன், அன்பு செழியன், அம்பேத் வளவன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.

    சென்னையில் உள்ள 6 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிகிறார்கள்.

    முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் மணிமண்ட பத்தில் நாளை திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் அசோக் நகரில் உள்ள 'வெளிச்சம்' அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    • அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • சிலையை வடிவமைத்த 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுடர் கவுரவிக்கப்படுகிறார்.

    ஐதராபாத் :

    இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது.

    ரூ.146.5 கோடி செலவில் இந்த பிரமாண்ட சிலை மற்றும் புதிய தலைமை செயலக வளாகத்தை தெலுங்கானா அரசு கட்டியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளன.

    இதைத்தொடர்ந்து அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று (வெள்ளிக்கிழமை) இந்த பிரமாண்ட சிலை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை தெலுங்கானா முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர் ராவ் திறந்து வைக்கிறார்.

    அப்போது ஹெலிகாப்டர் மூலம் சிலை மீது மலர்கள் தூவப்படுகின்றன.

    பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த விழாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக மாநிலத்தின் 119 தொகுதிகளில் இருந்து 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை பங்கேற்க செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அத்துடன் விழாவில் பங்கேற்பவர்களுக்கு சட்டசபை வளாகத்தில் உணவு, இனிப்பு, மோர், தண்ணீர் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க அவரது பேரன் பிரகாஷ் அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில், சிலையை வடிவமைத்த 98 வயதான சிற்பி ராம் வஞ்சி சுடர் கவுரவிக்கப்படுகிறார்.

    இந்த திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று ஆய்வு செய்தார். மேலும் மாநில மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவையொட்டி ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
    • ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அம்பேத்கர் சிலையை இன்று மதியம் 2 மணியளவில் திறந்து வைக்கிறார்.

    இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஸ்தூபியை நிர்மாணித்த பிறகு, சிலையின் பாகங்கள் டெல்லியில் தயாரிக்கப்பட்டு ஐதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டன. கனரக கிரேன்களின் உதவியுடன் அவை முறையாக நிறுவப்பட்டுள்ளன.

    இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வலிமையான உலோகப் பொருட்கள் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பாகத்தில் இருந்து, சிலையை முழுவதுமாக கண்டுக்களிக்க படிக்கட்டு மற்றும் சாய்வுதளத்துடன் 15 பேர் அமரக்கூடிய 2 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்படுகிறது.நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வைக்கப்பட உள்ளது. சிலையின் கீழ், தூணில் உள்ள நினைவு கட்டிடத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.

    அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் அடங்கிய அருங்காட்சியகம் மற்றும் புகைப்படத் தொகுப்பு இங்கு நிறுவப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே ஆடியோ காட்சி அறைகள் உள்ளன.

    நினைவிடத்திற்கு வெளியே பசுமைக்காக. 2.33 ஏக்கர் காலி நிலம். ராக் கார்டன், லேண்ட்ஸ்கேப்பிங், தோட்டம், நீர் ஊற்று உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 450 கார்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சுமார் 750 பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 50 ஆயிரம் பேர் உட்காருவதற்கு வசதியாக நாற்காலிகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    ×