search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banwarilal Purohit"

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். #BanwarilalPurohit #Thoothukudifiring #governormeetsvictims
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து  தூத்துக்குடி ஆலையை மூட அரசாணை வெளியிட்டப்பட்டது. அரசியல் காரணங்களினாலேயே இந்த அரசாணை வெளியிடப்பட்டதாக பல்வேறு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



    முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். #BanwarilalPurohit #Thoothukudifiring #governormeetsvictims
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார். #SterliteProtest #BanwarilalPurohit
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்கள் இன்று பேரணியாக சென்றனர். அப்போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக அரசுத்தரப்பு மற்றும் அனைத்து ஊடகங்களும் தெரிவித்துள்ளன.  துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,  ‘தூத்துக்குடியில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்திற்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் அமைதியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    சேக்கிழார் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு உலக தமிழ்சாதனையாளர்கள் விருதை அமைச்சர்கள் மற்றும் துணைவேந்தர்களுக்கு வழங்கினார். #BanwarilalPurohit
    சென்னை:

    சென்னை தமிழ்சங்கம் சார்பில் செந்தமிழும், சேக்கிழாரும் இயல், இசை நாட்டிய திருவிழா, தியாகராயநகர் சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    உலக தமிழ்ச்சாதனையாளர்கள் விருதை தமிழ் ஆட்சி மொழி, தமிழ்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தங்கசாமி, தமிழ்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன், தமிழ்நாடு இசை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமிளா குருமூர்த்தி, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி, மதுரை உலக தமிழ் சங்க இயக்குனர் சேகர், பேராசிரியர் தெய்வநாயகம், டாக்டர் சொக்கலிங்கம் உள்பட பலருக்கு வழங்கினார். மேலும் ஊடகவியல் துறைக்கான விருது ராஜ் டி.வி.க்கு வழங்கப்பட்டது.

    விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சேக்கிழார். அவர் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். அவர் 2-வது குலோத்துங்கசோழன் ஆட்சியில் வாழ்ந்துள்ளார். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் தமிழ் மொழியில் முக்கியத்துவம் வாய்ந்தது. பெரிய புராணத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து எழுதினார். அவர் என்ன எழுதுவது என்று தெரியாமல் இருந்தபோது சிவபெருமானே முதல் அடியை எடுத்து கொடுத்து எழுத வைத்தார்.

    நாயன்மார்கள் 63 பேர் வேறு வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள். வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இருந்தபோதிலும் சாதியை பற்றி பாராமல் 63 நாயன்மார்கள் பற்றி எழுதியவர்.

    தமிழுக்கு சேக்கிழார் தொண்டாற்றி உள்ளார். சேக்கிழாரின் பெரிய புராணம் இல்லாமல் தமிழ் வரலாற்றை கூற முடியாது.

    நடனக்கலைக்கு சிவபெருமான் சிதம்பரம் நடராஜர் ஆக அர்ப்பணித்துள்ளார். இயல், இசை, நாடகம் ஆகியவற்றை தமிழ் மொழி உள்ளடக்கி உள்ளது. சேக்கிழார் பெரிய புராணத்தில் அந்த 3 தமிழுக்கும் சிறப்புற இடம் கொடுத்து உள்ளார்.

    தமிழ் மொழி அழகான மொழி. தமிழ் மொழியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

    விழாவுக்கு சென்னை தமிழ்ச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆலோசகரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மா.ராமு வரவேற்றார். 
    மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் மொழி இனிமையானது என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று தெரிவித்துள்ளார். #BanwarilalPurohit
    சென்னை:

    பழம்பெரும் புலவர் சேக்கிழாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு  இன்று சென்னை தமிழ் சங்கம் சார்பில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழ் மொழி இலக்கிய அழகின் பரிணாம வளர்ச்சியை பெரியபுராணத்தில் காணலாம், தமிழ் மொழியின் பழம்பெருமையும் காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டதற்கும் சேக்கிழார் எழுதிய பெரிய புராணமே சாட்சி என கூறினார்.

    மேலும், மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் மொழி இனிமையானது என்பதில்  சந்தேகத்திற்கு இடமே இல்லை. 12ம் நூற்றாண்டின் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் தமிழ் மற்றும் இந்து மதத்துக்கு ஆற்றிய தொண்டின் மூலம் என்றும் நினைவு கூறப்படுவார்.  சாதி சமயம் கடந்து 63 நாயன்மார்கள் ஒன்றிணைந்து தமிழ்மொழிக்கு உண்மையான தொண்டாற்றியதை தமிழ்மொழியின் தலைசிறந்த ஒன்றாக தாம் பார்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். #BanwarilalPurohit
    தூய்மை இயக்க திட்டம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை விருதுநகர் வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்ட உள்ளனர்.#TamilNaduGovernor #BanwarilalPurohit
    விருதுநகர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்து அரசின் திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தையும் தொடங்கி வைத்து வருகிறார்.

    கவர்னரின் இந்த ஆய்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் தூய்மை இயக்க திட்டம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை (11-ந் தேதி) விருதுநகர் வருகிறார்.

    நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் கவர்னர் அங்கிருந்து விருதுநகருக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். முதலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விருதுநகருக்கு வரும் அவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார்.

    தொடர்ந்து தேசபந்து திடலில் தூய்மை பாரத திட்டத்தை கவர்னர் தொடங்கி வைக்கிறார். பின்னர் விருதுநகர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    மாலையில் விருதுநகர்- அழகாபுரி ரோட்டில் உள்ள சந்திரகிரி கிராமத்துக்கு செல்லும் கவர்னர் அங்கு தூய்மை பாரத விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு நாளை இரவே கவர்னர் சென்னை புறப்படுகிறார்.

    இதுகுறித்து விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், நாளை விருதுநகர் வர உள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் கோரிக்கை மனுக்களை அளிக்க விரும்புவர்கள் காலை 9 மணி முதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    விருதுநகரில் ஆய்வு மேற்கொள்ள வரும் கவர்னரை கண்டித்து நாளை தி.மு.க. சார்பில் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கம் அருகே அவருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்துள்ளனர்.

    இதனால் கவர்னர் வரும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். #TamilNaduGovernor #BanwarilalPurohit
    ×