search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM Machine"

    ஆவடியில், ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரம் திறந்து கிடந்தது. எனவே மர்மநபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். #ATMRobbery
    ஆவடி:

    ஆவடி எச்.வி.எப். சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி, பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் அருகேயே அதன் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இங்கு 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உள்ளன.

    இந்த ஏ.டி.எம். மையத்துக்கு காவலாளி கிடையாது. நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஒரு ஏ.டி.எம். எந்திரம் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அங்கு சென்று பார்த்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாரிகள் யாரும் வங்கியில் இல்லை. போன் மூலம் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் யாராவது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனரா?. அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதா?. அல்லது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பியபோது சரியாக பூட்டாமல் சென்றதால் தானாகவே திறந்து கொண்டதா? என அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    மேலும் இன்று(திங்கட் கிழமை) வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து பார்த்தபிறகுதான், நடந்தது என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.   #ATMRobbery #Tamilnews
    கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.22 லட்சம் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். #ATMRobbery
    கோவை:

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவை நகரில் 250 ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது.

    இந்த நிறுவனத்தில் ஒண்டிப்புதூரை சேர்ந்த தாஜுதீன் (வயது 30), ராமநாதபுரத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (26) ஆகிய 2 பேர் வேலைபார்த்து வந்தனர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது தனியார் வங்கிக்கு சொந்தமான காந்திபுரம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்ட ரூ.21 லட்சத்து 99 ஆயிரம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவனத்தினர் அந்த 2 ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 4 முறை தாஜுதீனும், ஆரோக்கிய தாசும் பணத்தை நிரப்பிய பிறகு மீண்டும் ஏ.டி.எம். மையத்துக்கு வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    அவர்கள் 2 பேரும் ரகசிய எண்ணை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து ரூ.21 லட்சத்து 99 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் மேலாளர் ஜெகதீசன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உதவிய அக்பர் அலி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    நாங்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் மூலம் செய்து வந்தோம். கோவையில் உள்ள 250 ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்புவோம். தினமும் அதிகளவில் பணத்தை பார்க்கும்போது பணத்தின் மீது ஆசை வந்தது.

    எனவே ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை எடுத்து ஆடம்பரமாக வாழ முடிவு செய்தோம். நாங்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு செல்வோம். அடிக்கடி பணம் வைக்க செல்வதால் அங்கு பணியில் இருக்கும் காவலாளிக்கு எங்கள் மீது சந்தேகம் வராது. அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை பழுது பார்ப்பதுபோல் ஷட்டரை மூடிவிடுவோம். இதனால் வாடிக்கையாளர்கள் சந்தேகப்பட மாட்டார்கள்.

    எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தின் ரகசிய குறியீட்டு எண் மூலம் திறந்து பணத்தை எடுத்துவிடுவோம். உயர் அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எந்திரத்தில் உள்ள டிரேயில் பண அளவை மாற்றி வைத்துவிடுவோம். ஒரு மாதத்தில் ரூ.21 லட்சத்து 99 ஆயிரத்தை கையாடல் செய்தோம். இந்த நிலையில்தான் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசில் சிக்கி கொண்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
    புதுக்கோட்டையில் பெண்ணிடம் ஏ.டி.எம். எண்ணை பெற்று பணத்தை நூதன முறையில் திருடிய நபர்கள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் லட்சுமி (வயது 46). இவர் திருவரங்குளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் அழைப்பு வந்தது. அதில் ஒருவர் நான் வங்கி மேலாளர் பேசுகிறேன். உங்களது வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது. இதனால் ஏ.டி.எம். எண்ணை கொடுக்குமாறு லட்சுமியிடம் கூறினார். 

    இதையடுத்து அவர் வங்கி ஏ.டி.எம். எண்ணை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் 2 தவணையாக லட்சுமி வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மனு கொடுத்துள்ளார். பின்னர் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். 

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அசாம் மாநிலத்தில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் இருந்த ரூ. 12 லட்சம் பணத்தை எலி கொறித்து தள்ளி நாசமாக்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். #MiceDestroyedNotes #TinsukiaATM
    தின்சுகியா:

    அசாம் மாநிலம் தின் சுகியா மாவட்டம், லாய்புலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் கவுகாத்தியை சேர்ந்த நிதி நிறுவனம் கடந்த மே 19-ம் தேதி ரூ. 29 லட்சத்தை வைத்தது. பணம் வைக்கப்பட்ட மறுநாளே ஏடிஎம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்படவில்லை. ஏடிஎம் வாயில் மூடப்பட்டு இருந்த நிலையில் அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாமல் இருந்து உள்ளது.

    ஏடிஎம் செயல்படாதது தொடர்பாக வங்கி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து கடந்த 11-ம் தேதி அதனை சரிசெய்யும் ஊழியர்கள் சென்றார்கள். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வங்கி ஏடிஎம்மில் இருந்த 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை எலி ஒன்று கடித்து துண்டு துண்டாக்கியிருந்தது. இது தொடர்பாக வங்கி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



    ஏடிஎம்மில் இருந்த ரூ. 12,38,000 பணம் எலியால் சிதைக்கப்பட்டுள்ளது என வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களால் ரூ. 17 லட்சத்தை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஏடிஎம் பழுது அடைந்த உடன் அதனை சரிசெய்யாதது ஏன்? என்று கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.  #MiceDestroyedNotes #TinsukiaATM

    வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஊட்டியில் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ஊட்டி:
     
    வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீலகிரி முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்கள் பணிக்கு செல்ல வில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள வங்கி கிளைகள் பூட்டு போட்டு இருந்தன.

    நீலகிரி மாவட்டத்தில் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 95 உள்ளன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 125 ஏ.டி.எம்.கள் உள்ளன. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்பட வில்லை. வங்கிகளில் இருந்தும் பணத்தை எடுக்க முடியவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும், தேயிலை விவசாயிகள் பச்சை தேயிலைக்கான பணத்தை வங்கியில் இருந்து பெற முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். கிராமப்பகுதிகளில் விளையும் மலைக்காய்கறிகளை ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், தங்களது விளைபொருட்களை வியாபாரிகளுக்கு விற்று விட்டு முழுதொகையை பெற முடியாமல் குறிப்பிட்ட செலவுக்கான தொகையை மட்டும் பெற்று செல்கின்றனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு இருப்பதால் ஊட்டி வர்க்கி, சாக்லெட், நீலகிரி தைலம் போன்ற பொருட்களை சுற்றுலா பயணிகள் தேவையான அளவுக்கு வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நடைபெறும் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது.
    மதுரையில் ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை தமுக்கம் மைதானம் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்தது.

    பின்னர் பயங்கர ஆயுதங்களுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியவில்லை.

    இதற்குள் அந்தப்பகுதியில் ஆள் நடமாட்டமும் வருவதை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.

    இன்று காலை ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அந்தப்பகுதி மக்கள் வங்கிக்கும், தல்லாகுளம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏ.டிஎம். மையத்தை ஆய்வு செய்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகரின் மையப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    ×