search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi People"

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஒரே நேரத்தில் 45 ஆயிரம் பேர் எப்படி மனு அளித்தார்கள்? என்றும், ஆலையை திறந்தால் மீண்டும் போராடுவோம் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் தெரிவித்தனர். #ThoothukudiSterlite
    சென்னை:

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் மில்டன், சுரேஷ் சக்தி முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் இருக்கிறார்கள். இதுதொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை முழுமையாகவும், முறையாகவும் நடைபெற வேண்டும். தமிழக அரசு, பசுமை தீர்ப்பாயம் கமிட்டி முன்பு முறையாக விசாரணையை நடத்த வேண்டும்.

    நிலம், நீர், காற்று மாசுபட்டு இருக்கிறது என்ற ஆவணங்களை தொகுத்து தமிழக அரசு வழங்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. போலீஸ் இதுவரை உரிய ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. உடனே சி.பி.ஐ. இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். அப்படி சி.பி.ஐ. விசாரணையை தொடங்கும்போது, மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் முன்வந்து புகார் அளிப்பார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தூத்துக்குடி மக்கள் சிலர் பேசினர். அதன் விவரம் வருமாறு:-

    பண்டாரம்பட்டியை சேர்ந்த சுரலி:-

    எங்கள் பகுதியில் 35 பெண்களுக்கு கர்ப்ப பை இல்லை. இதுபோல் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம். அரசு, எங்கள் பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். கடந்த 23-ந் தேதி மனு கொடுக்க சென்றோம். அப்போது மனு பெறப்பட்ட இடத்தை சுற்றி ஆயிரம் போலீசார் நின்றார்கள்.

    இப்படி நின்றால் யார் மனு கொடுக்க வருவார்கள். அதுவும் தனித்தனியாக மனு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு 2 மணி நேரம் தான் கால அவகாசம் வழங்கினர். அந்த குறுகலான இடத்தில் 7 லட்சம் பேர் 2 மணி நேரத்தில் எப்படி தனித்தனியாக மனு அளிக்க முடியும்?. ஓட்டுப்போடுவதற்கு மட்டும் எத்தனை இடங்களை அமைத்து கொடுக்கும் அரசு, மனு அளிக்கும்போது அதுபோல் நிறைய இடங்களை ஒதுக்கினால் என்ன?

    ஆனால் சென்னையில் பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஒரே நேரத்தில் 45 ஆயிரம் பேர் மனு அளித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அதை மட்டும் எப்படி அனுமதித்தார்கள்?. ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால், நாங்கள் மீண்டும் போராடுவோம். இனி அரசிடம் கோரிக்கை வைக்கமாட்டோம். கேள்வி தான் கேட்போம்.

    குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ்:-

    கடந்த மே மாதம் 22-ந் தேதி வரை தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தான் செயல்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொடுத்த ஆணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் வாழும் பகுதியில் இதுபோன்ற தொழிற்சாலை வைக்கக்கூடாது என்று அவசர சட்டம் இயற்ற வேண்டும். பசுமை தீர்ப்பாயத்தின் குழுவினரின் ஆய்வு வெறும் கண்துடைப்பு தான். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது.

    தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்த விஜயபாஸ்கர்:-

    என்னுடைய வீட்டில் 2 பேருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என்று பொய் சொல்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பணம், வேலை கொடுத்து சரிகட்டிவிடுகிறார்கள். என்னையும் அப்படி அழைத்தார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டமுறைப்படி எதையும் செய்ய முடியவில்லை. மீண்டும் ஸ்டெர்லைட் வரக்கூடாது. அப்படி வந்தால் தற்கொலைக்கு தான் போவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.   #ThoothukudiSterlite
    அடுத்த ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அதிகாரியின் அறிவிப்பு தூத்துக்குடி மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. #SterlitePlant #ThoothukudiFiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதட்டமும், பரபரப்பும் உண்டானது.

    துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்டு விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. துப்பாக்கி சூடு தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவை நேரடியாக தூத்துக்குடி வந்து விசாரணை மேற்கொண்டன.

    இதே போல நீதிபதிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவும் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தின. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முதல் கட்டமாக ஆலைக்கு மின்சாரம் வழங்குவது மற்றும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டன.

    இதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘அடுத்த ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்தார்.

    இது தூத்துக்குடி மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று அந்த நிறுவன அதிகாரி கூறியிருப்பது எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பிரச்சனையில் 13 பேரை இழந்து விட்டோம். நல்ல காற்று, குடிநீர் கிடைக்கவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையால் படும் துன்பம் சொல்லி மாளாத நிலையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆலையை மூடியுள்ளது. எனினும் இதுபற்றி சட்டமன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை குறித்த தீர்மானம் நிறைவேற்றி ஆலையை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகாலட்சுமி கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையினால் புற்றுநோய் ஏற்பட்டு பலர் இறந்து விட்டார்கள். குடிநீர் மாசுபட்டு உள்ளது. ஏற்கனவே இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் இறந்து விட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கை, கால்கள் முடமாகி உள்ளனர். தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டமான நிலையில் காணப்படுகிறது.

    தமிழ் மாந்தன், மகேஷ்

    இந்த சூழ்நிலையில் மீண்டும் ஆலையை திறப்போம் என ஆலை நிர்வாகம் கூறியிருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதற்கு முழுமையான தீர்வை காணவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தூத்துக்குடி மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாந்தன் கூறியதாவது:-

    துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்த வேதனை இன்னும் தீரவில்லை. கொந்தளிப்பு அடங்கவில்லை. மக்கள் மனதில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் ஆலை மீண்டும் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது சாத்தியமல்ல என கூறியிருந்தார். அனில் அகர்வால் கோர்ட்டு உத்தரவு பெற்று திறப்போம் என தெரிவித்தார்.

    இதைவைத்து பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே உடன்பாடு இருப்பது போல் தெரிகிறது. தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது பூட்டு போடும் விழா போல நடந்துள்ளது.

    எனவே சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiFiring
    ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமா?, வேண்டாமா? என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது. #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் நேற்று மாலை தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அரசு திட்டமிட்டு நடத்தி உள்ளது. இதற்காகவே தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். பதற்றமான சூழல் என்று பல இடங்களில் போலீசாரை நிறுத்தி வைத்து மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிப்பதற்காக தமிழக அரசு, ஒரு நபர் கமிஷன் என்ற பெயரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனத்தை திரும்ப பெற வேண்டும். அதற்கு மாற்றாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, பரந்தாமன் ஆகியோரில் ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.

    துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு மாற்றாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களின் லட்சியமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு, இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான தமிழக அரசு ஆட்சி பொறுப்பில் இருந்து விலக வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை குற்றத்திற்கான சதித்திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.


    ஸ்டெர்லைட் ஆலைக்கு குடிநீர் வினியோகம், மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்கவில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மறுபக்கம் மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடம் இருந்தும் அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் ஆலையை தொடங்குவோம் என்று வேதாந்தா நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

    எனவே அரசும், ஆலை நிர்வாகமும் மக்களின் விருப்பம் என்னவென்று அறிய வேண்டும். அதாவது ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா?, மூடப்பட வேண்டுமா? என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SterliteProtest #Thoothukudi #Tuticorin
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஏன் நேரில் சென்று பார்க்கவில்லை என்று தே.மு.தி.க. மகளிரணிச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரேமலதா விஜயகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘‘வரலாற்றில் மட்டுமே படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. இது தமிழக மக்களுக்கு ஒரு அவமான சின்னம் தமிழ்நாட்டின் கருப்பு நாள் மே.22.

    ஒரு மானை சுட்டால் கூட தண்டனை கொடுக்கக்கூடிய நாட்டில் மனிதர்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை இவர்களுக்கு கொடுத்தது யார்? தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் இணைய தளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது. முடக்க வேண்டியது இணைய தளங்களை அல்ல. ஆட்சியை தான்.

    தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தால் எந்த மாற்றமும் வராது. மாற்ற வேண்டியது இந்த அரசை தான். 100 நாள் அறவழியில் மக்கள் போராடினார்கள். பேரணிக்கு ஏன் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது திட்டமிட்ட படுகொலை. தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைத்து 3 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால் 50 ஆயிரம் மக்கள் கூடும் பேரணியில் பாதுகாப்பு பணிக்கு ஏன் அதிக அளவில் போலீசார் போடவில்லை.

    உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் என வழங்குகிறது. ஒரு உயிரின் மதிப்பு ரூ.10 லட்சம் தானா? இந்த அரசு எதை செய்தாலும் காசு கொடுத்து வாயை அடைக்கலாம் என கருதுகிறது.

    மக்களுக்கு பாதுகாப்பு தராமல் ஸ்டெர்லைட் ஆலைக்கும் அதன் முதலாளிக்கும் அரசு பாதுகாப்பு அளிக்கிறது. மத்திய-மாநில அரசுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒரு நாளைக்கு 4 முறைபேட்டி அளிக்கின்றனர். தூத்துக்குடி மக்களை நேரடியாக சந்திக்கவில்லை.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏன் மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை. படுகொலைக்கு பின்னால் பணம் விளையாடி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஒரு மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு காத்துக் கொண்டிருக்கிறார்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×