search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic banned"

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார். #vikramaraja #plasticbanned #tngovt

    சென்னை:

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிளாஸ்டிக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. மாநில அரசுக்கு பிளாஸ்டிக் தடை விதிக்க அதிகாரமில்லை என்பதே முதன்மையான வழக்கு.

    இந்நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ள பிளாஸ்டிக் தடை மீறல்களுக்கான தண்டனை, அபராதம் போன்றவை அதிகார அத்துமீறல் மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்.

    இதுபோன்ற சிக்கலான நேரங்களில் வணிகர் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.

    பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருள் அறிமுகப்படுத்தாத நிலையில் நிறைவேற்றப்பட உள்ள சட்ட முன்வடிவுகள் அதிகாரிகளின் அத்துமீறல்களுக்கு மட்டுமே வழி வகுக்கும். தினசரி வட்டிக்கு கடன் வாங்கி, அன்றாடம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிற லட்சக் கணக்கான சிறு, குறு வியாபாரிகளை இந்த சட்டம் வெகுவாக பாதிக்கும்.

    பிளாஸ்டிக் பற்றிய அதீத விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே தடை செய்யப்பட்ட பொருட்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதையும் கவனத்தில் கொண்டு, அதற்குரிய வகையில் அபராத தண்டனையை மறுபரிசீலனை செய்து தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு விக்கிரமராஜா அதில் கூறி உள்ளார். #vikramaraja #plasticbanned #tngovt

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill
    சென்னை:

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணெய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



    தடை செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அரசு கூறியிருந்தது.

    இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இதேபோல் பிளாஸ்டிக் தடையை மீறும் மளிகை கடைகள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill

    தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோட்டை வளாகத்தில் உள்ள டீக்கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை. #Plasticban #TN
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமான விழிப்புணர்வு பிரசாரங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பை, கப், பேப்பர், ஸ்டிரா, பிளாஸ்டிக் இலை போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையாமல் புழக்கத்தில் உள்ளது.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அலுவலகங்கள் அமைந்துள்ள கோட்டை வளாகத்தில் ஏராளமான டீக்கடை, ஜூஸ் கடை, பெட்டிக்கடைகள் உள்ளன.



    இந்த கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை. வழக்கம் போல் பிளாஸ்டிக் டம்ளரில் தான் ஜூஸ் கொடுக்கிறார்கள்.

    உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சாலையோரம் ஆங்காங்கே வீசப்பட்டு குப்பையாக காட்சி அளிக்கிறது. இதே நிலைதான் மற்ற பகுதிகளிலும் காணப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சாமுவேல் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் உபயோகத்தை ஒரே நாளில் தடை செய்துவிட முடியாது. இதை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

    பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் இதை முழுமையாக செயல்படுத்த முடியும். மளிகை கடை, காய்கறி கடைகளுக்கு வருபவர்கள் வெறும் கையுடன்தான் வருகிறார்கள்.

    கடைக்காரர்கள்தான் இலவசமாக பிளாஸ்டிக் பையில் பொருட்களை போட்டு கொடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் கடைக்கு வருபவர்கள் தான் துணிப்பை கொண்டு வர வேண்டும்.

    மற்ற மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படாததால் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து இங்குள்ள கடைகளுக்கு பிளாஸ்டிக் பை, கப் போன்றவை வந்துவிடும். எனவே இதை நடைமுறைபடுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்.

    நாங்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு காலண்டருக்கு பதில் துணிப்பை வழங்க முடிவு செய்துள்ளோம். காய்கறி கடைகளுக்கு வருபவர்களுக்கு தரமான கூடைகளை அன்பளிப்பாக கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சூப்பர் மார்க்கெட், போன்ற பெரிய நிறுவனங்களில் 1-ந்தேதி முதல் அட்டை பைக்கு 6 ரூபாய் தனியாக வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். #Plasticban #TN

    பிளாஸ்டிக் பிரச்சினையை சீரமைக்க தடை என்பது நிரந்தரத் தீர்வாகாது என்றும் அதற்கு மாற்றாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால் நிரந்தர தீர்வு காண முடியும் எனவும் வணிகர் பேரமைப்பு மாநில தலைவர் கூறினார்.
    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

    கூட்டத்துக்கு தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைச்செயலாளர் சிவனேசன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,-

    தமிழக அரசு வரும் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விதிகளில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை கவனித்தால் சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு பொருள் பேக்கிங் செய்யவும் விற்பனை செய்யவும் இந்த அறிவிப்பு பாதகமாக உள்ளது.

    மையம் பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்து பேக்கிங் செய்யும் அனைத்து பொருட்களுக்கும் தடை இல்லை என்று அறிவித்துள்ளது. உதாரணமாக சிறு குறு மளிகை வியாபாரிகள் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து சில்லறை வணிகத்திற்கு ஏற்றவாறு பேக்கிங் செய்து இதுவரை விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது தடை அறிவிப்பின்படி பொருட்களை மேற்கூறியவாறு பேக்கிங் செய்யவும் விற்பனை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களது தொழில் மிகவும் பாதிக்கும் சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

    இது சிறு மற்றும் குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர ஓட்டல் மற்றும் சிறு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரி நிறுவனங்கள், பொருட்களை பேக்கிங் செய்வதற்கு இதுவரை பிளாஸ்டிக் பொருளை உபயோகித்து வந்தனர். தற்போது இந்த தடையால் மாற்று பொருள் தெரியாமல் பேக்கிங் செய்ய சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான விழிப்புணர்வை தந்து மறுசுழர்ச்சிக்கு குப்பைகளை சேகரித்து பயன்படுத்தும் பொழுது குப்பைகளின் அளவும் முற்றிலும் குறையும்.

    அதேசமயம் மறுசுழற்சி நிறுவனங்களும் பெருகி நிறைய வேலை வாய்ப்புகளும் உண்டாகும். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு மறுசுழற்சி நிறுவனங்களுக்கு ஏதுவான உதவிகளை செய்து அவர்கள் தொழில் முனைய வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    இந்த தடையால் பல கோடி வியாபாரிகளும் எங்களை போன்ற உற்பத்தியாளர்களும் பாதிப்படைவார்கள். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தவும் வழி வகுத்து விடும்.

    எனவே இந்த பிளாஸ்டிக் பிரச்சினையை சீரமைக்க தடை என்பது நிரந்தரத் தீர்வாகாது .அதற்கு மாற்றாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினால் இந்த பிரச்சினைக்கு 100 சதவீதம் தீர்வு காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செயற்குழு உறுப்பினர் ராமசாமி முன்னாள் தலைவர் வெங்கடாசலம் துணைத்தலைவர் ஜெப்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×