search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic ban bill"

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill
    சென்னை:

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அதேநேரம், பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணெய் பாக்கெட்டுகள், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    பேப்பர் கப்புகளை பொறுத்தவரை, பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்து உற்பத்தி செய்தால், விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



    தடை செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அரசு கூறியிருந்தது.

    இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விற்பனை செய்தல், கொண்டு செல்லுதல், பகிர்ந்து அளிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதல் முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 2வது முறை தவறு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை பிடிபட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இதேபோல் பிளாஸ்டிக் தடையை மீறும் மளிகை கடைகள் மற்றும் மருந்துக் கடைகளுக்கு 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சிறு வணிகர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNPlasticBan #PlasticBanBill

    ×