search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister RB udhayakumar"

    பாராளுமன்ற தேர்தலில் தினகரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பரிசு பெட்டி சின்னமானது காலி பெருங்காய டப்பா என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar
    மதுரை:

    தேனி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் உசிலம்பட்டி பகுதிகளில் இன்று கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார்.

    அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிபதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களுக்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறது. ஆனால் தி.மு.க.வினர் தனி நபர் விமர்சனம் செய்து ஓட்டு கேட்கிறார்கள். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    ஜெயலலிதா மீது வழக்குகளை போட்டு தொல்லை கொடுத்த தி.மு.க.வினர் இப்போது ஜெயலலிதா மீது பரிதாபம் காட்டுகிறார்கள்.

    மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் நடத்த பார்க்கிறார். அ.தி.மு.க.வை அழிக்கப்போவதாக கூறிய டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு காணாமல் போய் விடுவார். அவருக்கு “பரிசு பெட்டி” சின்னம் கிடைத்துள்ளது. அந்த பரிசு பெட்டி காலி பெருங்காய டப்பா. அது தோற்கிற சின்னம். இரட்டை இலை சின்னம் தான் வெற்றி மகுடம் சூடும் சின்னமாகும்.

    எனவே தேனி பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. பெறும் வெற்றி டெல்லியில் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar
    ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்தது தொடர்பாக டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். #ADMK #MinisterUdhayakumar #TTVDinakaran
    மதுரை:

    அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் பண்பாடு இல்லாமல் அமைச்சர்களை பட்டப்பெயர் சூட்டி இழிவாக, மலிவாக பேசி வந்த தினகரன் தான் ஏதோ மன்னர் பரம்பரையில் இருந்து வந்தது போல நினைத்துக் கொண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை தொடங்கி அம்மாவால் அரசியலில் வளர்த்து எடுக்கப்பட்டவர்களை தரம் தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    தனி நபர் தாக்குதல், மிரட்டல் போன்றவற்றையே பொழுதெல்லாம் கடைப்பிடிக்கும் தினகரன் இவற்றை எல்லாம் அவர் சென்று வந்த சென்னை மத்திய சிறை, கடலூர் சிறை, திகார் சிறை போன்ற இடங்களில் கற்றுக்கொண்ட பண்பாக இருக்கலாம்.

    ஆனால் புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பின்பற்றி நடக்கக்கூடிய நாங்கள் அத்தகைய இழிவான அரசியலை என்றைக்கும் மேற்கொண்டது இல்லை.

    இந்நிலையில் பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூஜைக்கு சென்று வந்த தினகரன் அந்த புண்ணிய திருத்தலத்தில் கேவலமான அரசியல் யுக்தியை கையில் எடுத்து அங்கு வைக்கப்பட்ட பேனர்களை அடித்து நொறுக்கி கிழிக்க வைத்து அதனை ரசித்தார் என்றால் தினகரனின் வக்கிர புத்திக்கு இதுவே சான்று ஆகும்.

    மக்கள் முகம் சுளிக்கும் அந்தகாரியத்தை செய்து விட்டு அதனை பொதுமக்களின் மீதுபழி போட்டது தினகரனின் கிரிமினல் தனத்திற்கு சாட்சியாகும். இப்படி அரசியலில் அடிப்படை நாகரித்தையே சிதைக்கிற வேலையில் ஈடுபட்டு வருபவர் அவ்வப்போது அவர் அம்மாவின் மீதுகொண்டு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிகாட்டி வருகிறார்.

    தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது அம்மாவின் புனித பெயரால் வரும் நமது அம்மா நாளேட்டை நமது பாட்டி, நமது கொள்ளு பாட்டி என்று எல்லாம் அடை மொழி போட்டு அவர் அம்மாவின் மீது இருக்கும் எரிச்சலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    அது மட்டுமல்லாது அம்மாவை அவமரியாதை செய்துள்ளார். அவர் பயன்படுத்திய சொற்களுக்குகாக டி.டி.வி.தினகரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MinisterUdhayakumar #TTVDinakaran
    வைகை அணையில் மேலும் 2 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் 10 நாட்களில் தொடங்கும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். #ministerrbudhayakumar

    மதுரை:

    மேலூர் அருகே உள்ள புலிப்பட்டியில் பெரியாறு பிரதான கால்வாய் உள்ளது. இங்கிருந்து கருங்காலக்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    இதனை ஏற்று பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதகு களை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான், சிவகங்கை மாவட்ட அமைச்சர் பாஸ்கரன் கோரிக்கையை ஏற்று பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலூர் தொகுதிக்குட்பட்ட மேல வளவு, கச்சிராயன்பட்டி, வஞ்சிநகரம், கருங்காலக்குடி உள்ளிட்ட 8 கிராமங்களுக்கும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென் சிங்கம்புணரி, வடசிங்கம்புணரி, எஸ்.எஸ். கோட்டை உள்ளிட்ட 11 கிரா மங்களுக்கும் பாசன வசதி கிடைக்கும். 22 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    வைகை அணையில் மேலும் 2 தடுப்பணைகள் அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான பணிகள் 10 நாளில் தொடங்கும்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து குறை கூறி வருவதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். அவர் ஒட்டு கேட்கும் வேலை செய்கிறாரா? அதில் ஈடுபட வேண்டாம். ஓட்டு கேட்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்.எல். ஏ.க்கள் பெரியபுள்ளான், சரவணன், முன்னாள் எம். எல்.ஏ. தமிழரசன், முன் னாள் ஊராட்சி மன்ற மாவட்ட துணைத்தலைவர் ஜபார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெற்றி செழியன், மணிகண்டன் மற்றும் அன்புச்செல்வன், மேலூர் பெரியாறு ஒரு போக பாசன சங்கத் தலைவர் முருகன், பொதுப் பணித்துறை செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerrbudhayakumar

    சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை குறித்து சிலர் மக்களிடம் பொய் பிரசாரம் செய்வதாக திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். #ChennaiSalemgreenexpressway
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தின் நன்மைகள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துக் கொண்டு பேசியதாவது:-

    இந்தியாவிலேயே 2-வது பசுமை சாலை தமிழகத்தில் தான் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான ஆதரவு இல்லை என்று வதந்தி பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் திரண்டு இருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது 8 வழிச்சாலைக்கு ஆதரவு அதிகம் இருப்பதை உணர முடிகிறது.

    ஜெயலலிதா வழியில் தொடரும் அ.தி.மு.க. ஆட்சி எவ்வளவு சீக்கிரம் கவிழும் என சிலர் ஜாதகம் பார்க்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சி ஆயுள் காலம் சில ஆண்டுகள் மட்டுமே எனவும் எதிர்ப்பார்க்கின்றனர். எத்தனை ஆண்டுகளானாலும் அ.தி.மு.க ஆட்சியை அசைக்க முடியாது.

    110-விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அதன் பிறகே, 110 விதியில் திட்டங்களை அறிவிப்பது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட எதிர்கட்சியினருக்கே விவரம் தெரியும்.

    8 வழி சாலை அமைவதால் 5 மாவட்டங்களிலும் தொழில் வளம், தனிநபர் வருமானம் மற்றும் கட்டுமான வளர்ச்சி பெருகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பசுமை சாலை அமைக்கப்படும்.

    இதற்கு முன் உதாரணமாகவே ரூ.10 ஆயிரத்து 250 கோடியில் சென்னை- சேலம் பசுமை வழி சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை திட்டத்திற்கு மக்கள், விவசாயிகள் பெரும்பாலும் ஆதரவளித்துள்ளனர்.

    சிலர் பொய் பிரசாரம் செய்து விவசாயிகளையும், மக்களையும் குழப்பி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் தீயசக்திகள் ஊடுருவியுள்ளனர்.


    பசுமை சாலை திட்டத்தால் கிடைக்கும் நன்மை என்னென்ன என்று தெரியாமல் மக்களை ஏமாற்றி குழப்பத்தை விளைவிக்கின்றனர். கையகப்படுத்தும் நிலத்திற்கு 2014 புதிய நில எடுப்பு சட்டத்தின் படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    மேலும் 2½ மடங்கு முதல் 4½ மடங்கு வரை நிலத்திற்கு நிவாரணம் போர்க்கால அடிப்படையில் வழங்கப்படும். நிலத்தை கையகப்படுத்திய பிறகு உடனடியாக விவசாயிகளிடம் காசோலை வழங்கப்படும்.

    தற்போது அளவீடு மற்றும் மதிப்பீடு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. நிலத்தை கொடுக்கவும், கொடுக்க மறுக்கவும் விவசாயிகளுக்கு உரிமை இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், பசுமை சாலை திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அதன் பலன்களை முதலில் அறிந்து கொண்டு பிறகு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

    தமிழகம் சாலை விபத்தில் முதல் மாநிலமாக உள்ளது. பசுமை சாலை திட்டத்தால் விபத்துகள் குறையும். குறுகிய, விபத்துகள் ஏற்படும் மேலும் பல சாலைகள் அகலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன், பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #ChennaiSalemgreenexpressway
    மதுரை துணைக்கோள் நகரத்தில் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #TNMinister #RBUdhayakumar
    மதுரை:

    மதுரையில் இருந்து நெல்லைக்கு நடத்துனர் இல்லாத விரைவு பஸ் சேவையை திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று தொடங்கி வைத்தார்.

    திருமங்கலத்தில் இருந்து 6 விரைவு பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விரைவு பஸ் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் நடத்துனர் இல்லாத பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து திருமங்கலம் வழியாக நெல்லைக்கு 6 விரைவு பஸ் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் நடத்துனர்கள் அதற்குரிய ஸ்டே‌ஷன்களில் இருப்பார்கள். இந்த பஸ் சேவை மூலம் மக்கள் விரைவாகவும், பாதுகாப்புடனும் செல்ல முடியும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்படுவதை புள்ளி விவரங்களுடன் எடுத்துக்கூறினார்.

    சட்டம், ஒழுங்கை காப்பாற்றக்கூடிய இந்த அரசின் யுக்தியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் மாற்றுக்கொள்கை, லட்சியம் உள்ளவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

    எந்த ஒரு கட்சிக்கும் லட்சியம், கொள்கை, எதிர் பார்ப்பு இருக்கும். அதில் தவறு இல்லை. தங்களது கட்சி தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக லட்சியங்களையும், கொள்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்வது மரபு. அது தான் வாடிக்கை.

    அந்த வாடிக்கையே சில சமயங்களில் வேடிக்கையாகவும் அமைவது உண்டு.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைந்ததில் 7 கோடி தமிழர்களுக்கும் பங்கு உண்டு. வருவாய்த்துறை அமைச்சர் என்ற முறையில் அதற்கு உரிய நிலத்தை ஆர்ஜிதம் செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற பணியில் மன நிறைவோடு செயல்பட்டுள்ளேன்.


    எய்ம்ஸ் அருகே துணைக்கோள் நகரம் அமைய இருக்கிறது. இது மறைந்த முதல்-அமைச்சர் அம்மா கண்ட கனவு திட்டம் ஆகும்.

    இந்த துணைக்கோள் நகரத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் 5 ஆயிரம் வீடுகளும், வீட்டு வசதி வாரியம் மூலம் 5 ஆயிரம் குடியிருப்புகளும் மொத்தம் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

    மேலும் பள்ளி, கல்லூரிகளும் அங்கு வர உள்ளது. அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    பஸ் போர்ட்டும் அமைவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கோவை, சேலம், அடுத்து மதுரைக்கு பஸ் போர்ட் வருகிறது. அதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    துணைக்கோள் நகரம் அமைப்பதற்கு தேவையானதை விட கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் அதிகாரி குணாளன், நிர்வாகிகள் வெற்றிவேல், ஜான் மகேந்திரன், அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  #TNMinister #RBUdhayakumar
    ×