என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- கொலையாளிகள் சட்டசபைக்கு செல்லக்கூடாது என்பதால் தேர்தலில் நிற்கிறேன்.
- மக்கள் யாரை ஜெயிக்க வைக்கணும்னு யோசிச்சு வாக்களிக்கணும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் தொகுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா, பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை. ஜெகன் மோகன் ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்கிறது.
விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. கொலைகாரர்கள் வெளியில் திரிகிறார்கள்.
கொலையாளிகள் சட்டசபைக்கு செல்லக்கூடாது என்பதால் தேர்தலில் நிற்கிறேன். நியாயம் ஒரு பக்கம். அநியாயம் இன்னொரு பக்கம். ராஜசேகர ரெட்டியின் பிள்ளை ஒரு பக்கம்.

விவேகானந்த ரெட்டியை கொன்ற கொலையாளிகள் இன்னொரு பக்கம். மக்கள் யாரை ஜெயிக்க வைக்கணும்னு யோசிச்சு வாக்களிக்கணும்.
ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆண்டு கால ஆட்சியில் கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டு இருந்தார். தேர்தலுக்காக இப்போதுதான் விழித்துக் கொண்டுள்ளார்.
அப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். உங்கள் நலன்களுக்காக பாடுபட இந்த சர்மிளாவை தேர்ந்தெடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
- டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
பல்லடம்:
தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது செல்லும் வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.இதைப்பார்த்த அண்ணாமலை அதிர்ச்சியடைந்ததுடன், ஞாயிற்றுக்கிழமை என்றாலே இப்படித்தான் நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்ய வரவே பயமாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாஸ்மாக் கடைதான். எனவே டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கு நீங்கள் பா.ஜ.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர்கள் மத்தியில் பேசினார்.
பின்னர் அவர் தனது பிரசாரத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராயநகா் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
- காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) 7-வது முறையாக அவர் தமிழகம் வருகிறார். நாளை மாலை மகாராஷ்டிராவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை சென்றடைகிறார்.
அங்கு புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் அலுவலகம் முன் பிரதமருக்கு பா.ஜ.க. சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடா்ந்து பனகல் பூங்கா முதல் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி பிரசாரத்தில் பிரதமா் மோடி ஈடுபட உள்ளாா். சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பூக்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்கிறார்கள்.
பா.ஜ.க. வேட்பாளா்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்.கனகராஜ் (வட சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரதமா் மோடி வாக்கு சேகரிக்கிறார்.
ரோடு ஷோ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் அதிகம் நிறைந்த பரபரப்பான பகுதியாகும். எனவே தி.நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரோடு ஷோ நடைபெறும் சாலையில் உள்ள கடைகள் நாளை மூடப்படுகின்றன. ஆனால் கடைகளை மூட தேவையில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.
ரோடு ஷோ நடை பெறும் இடத்தில் உயரமான கட்டிடங்களில் ஏறி நின்று போலீசார் பைனாகுலர் மூலமாக இன்று காலை முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
தி.நகர் பகுதியில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் நேற்று இரவு விடிய விடிய சோதனை நடத்தினர். இன்று இரவு இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது. தி.நகர் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாளை மாலை நடைபெறும் பிரதமரின் ரோடு ஷோ தொடர்பாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். ரோடு ஷோவில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை பங்கேற்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீசார் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். பிரதமா் மோடியின் வருகையை முன்னிட்டு பனகல் பூங்கா பகுதியில் தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளா் தமிழிசை சவுந்தரராஜன் பேரணி ஏற்பாடுகள் குறித்து நேற்று பாா்வையிட்டாா்.
பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராயநகா் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமரின் வாகன பேரணி செல்லும் பகுதி முழுவதையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாா் சோதனை செய்தனா்.
அந்தப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருப்பவா்களின் விவரங்களைச் சேகரித்து, அவா்களது அடையாள அட்டையைப் பெற்று விசாரிக்கின்றனா். அதேபோல அங்குள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் குறித்த தகவல்களையும் சேகரிக்கின்றனா்.
144 தடைச் சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிகழ்ச்சிகள் நடைபெறும் தியாகராயநகா் பகுதி, பிரதமா் மோடி தங்கும் கிண்டி கவர்னர் மாளிகை ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் வாகன ரோடு ஷோவையொட்டி, சென்னையில் 22 ஆயிரம் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோா் தலைமையில் செய்யப்பட்டு உள்ளன.
நாளை இரவு சென்னை ரோடு-ஷோ முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி சென்று கவர்னர் மாளிகையில் தங்குகிறார். அவா், நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் செல்கிறாா். அங்கு வேலூா் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூா் பா.ஜ.க. வேட்பாளா் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு காலை 11.30 மணிக்கு வரும் அவா், அங்கிருந்து கோவை சூலூா் விமானப்படை தளத்துக்கு விமானத்தில் செல்கிறாா். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமா் மோடி, நீலகிரி பா.ஜ.க. வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.
அதன்பிறகு சூலூா் விமானப்படை தளத்துக்கு திரும்பும் பிரதமா், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு விமானத்தில் செல்கிறாா்.
- கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை.
- ராகுல் காந்தி தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை. ஆனாலும் தற்போதும் அவர் தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். மற்றவர்கள் கட்சியை வழிநடத்த அவர் அனுமதிக்கவில்லை.
நடைமுறையில் என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறதோ அத்தனையையும் ராகுல் காந்தி முயற்சி செய்து பார்த்து வருகிறார். ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளில் அவரால் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் வேறு யாரையும் வழிநடத்தவும் அவர் விடவில்லை. என்னை பொறுத்தவரை இது ஜனநாயக விரோதம்.
கடந்த 10 வருடமாக இந்த வேலையை செய்து வெற்றி பெறாமல் இருக்கும் போது அவர் ஓய்வெடுத்து எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. 5 ஆண்டுகள் வேறு யாரிடமாவது பொறுப்பை ஒப்படைக்கலாம். இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. ராஜீவ் காந்தி இறந்த போது சோனியா காந்தி இதை செய்தார்.
ராகுல் காந்தி தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு உதவி தேவை என்பதை உணரவில்லை. என்றால் யாராலும் உங்களுக்கு உதவ முடியாது. தான் நினைப்பதை செய்யக்கூடிய ஒருவர் நமக்கு தேவை என்று அவர் நம்புகிறார். அது சாத்தியமில்லை.
2019-ம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வி அடைந்த போது கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கட்சியை வேறு யாராவது வழி நடத்தட்டும் என்றும் அவர் எழுதினார். ஆனால் அவர் சொன்னதுக்கு மாறாக நடந்து வருகிறார். தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும் முக்கிய முடிவுகள் எடுப்பதில் ராகுல் தான் இறுதியானவர்.

ஒரு தொகுதி தொடர்பான முடிவுகளுக்கு கூட ராகுல் காந்தியின் ஒப்புதல் தேவை என்பதை பல தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்வார்கள்.
எந்த ஒரு தனிநபரையும் விட காங்கிரசும், அதன் ஆதரவாளர்களும் பெரியவர்கள் என்பதால் கட்சிக்கு வழிவிடுவதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது. காங்கிரசில் ஒரு கட்சியாக மட்டும் பார்க்க கூடாது. நாட்டின் அது பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தை ஒரு போதும் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது. அது சாத்திய மில்லை.
காங்கிரஸ் அதன் வரலாற்றில் பல முறை பரிணாம வளர்ச்சி அடைந்து, மறு பிறவி எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் போன்ற அமைப்புகள் சமரசம் செய்து கொண்டதால் தனது கட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்து வருகிறது என்று ராகுல் காந்தி கூறுவது உண்மையல்ல.
2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. ஆனால் அப்போதே 206 இடங்களில் இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பிலேயே குறைபாடுகள் இருக்கிறது. அதை சரிசெய்வது வெற்றிக்கு அவசியம்.
நீங்கள் கடந்த 1984-ம் ஆண்டு முதல் தேர்தல்களை பார்த்தீர்கள் என்றால் அதில் வாக்கு சதவிகிதம் மற்றும் மக்களவை, சட்டமன்ற தொகுதிகளில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. காங்கிரசில் இப்போது சிக்கல் என்பது தனிப்பட்ட நபர்களால் வருவது அல்ல. அது கட்சியின் கட்டமைப்பில் இருக்கும் சிக்கல்.
மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தாலும் கட்சியை நான்தான் அதில் இருந்து மீட்பேன் என்று ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கக் கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் ராகுல் காந்தி ஒதுங்கி வழிவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தி.மு.க.வினர் விமர்சித்து வருகிறார்கள்.
- இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் அங்கம் வகித்து கொண்டு இருக்கிறார்.
திருவள்ளூர்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூர் (தனி)தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தி.மு.க.வினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் செயல் மறவர்கள் தொண்டர்கள் நிறைந்த கட்சியாக உள்ளது. ஆனால், தி.மு.க.வும், காங்கிரசும் பணக்கார கட்சி. ஆடை கலையாமல் வாக்கு கேட்கிற தலைவர்கள் தி.மு.க.விலும், காங்கிரசிலும் இருக்கிறார்கள்.
அவர்கள் திட்டமெல்லாம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து, கொள்ளையடிக்க வேண்டும். இதனாலேயே இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் அங்கம் வகித்து கொண்டு இருக்கிறார்.
ஆனால் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினோம். சுயநலத்தோடு யோசித்திருந்தால் அந்த கூட்டணியில் தொடர்ந்திருப்போம். அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி, அதிகாரத்திற்கு அடி பணியாத கட்சி. தேசிய கட்சியோடு கூட்டணி வைத்து எந்த பிரயோ ஜனமும் இல்லை. தமிழ்நாடு வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக அ.தி.மு.க. தேசிய கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்களோ அதை சொல்லி ஓட்டு கேளுங்கள். என்னைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்.
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தான். ஆனால் மீண்டும் அவர்களே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என்பதை நாங்கள் சொல்கிறோம். உங்களால் சொல்ல முடியுமா? சொன்னதையும் சொல்லாததையும் நாங்கள் செய்து வருகிறோம். இனிமேலாவது வாக்களித்தவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 520 தேர்தல் வாக்குறுதியில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை, விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யாத அரசாக தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க. கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை. 11 அரசு மருத்துவ கல்லூரிகளை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் தி.மு.க. 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டுவரவில்லை. திமுக ஆட்சி இருண்ட ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, பா.பென்ஜமின், மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், திருத்தணி கோ.அரி,மாவட்ட செயலாளர்கள் சிறுணியம் பலராமன், அலெக்சாண்டர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முழக்கமிட்டார்.
- சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்.
கீழக்கரை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஆங்காங்கே பிரசாரத்தில் ருசிகரங்களுக்கும், பரபரப்புகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை. கலகலவென்று பேசும் வேட்பாளர்கள், கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கும் வாக்காளர்கள் என சுவாரசியங்களும் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் ஓ.பி.எஸ். பிரசாரத்திலும் நடந்துள்ளது.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய பகுதிகளான குயவன்குடி, வாலாந்தரவை, வழுதூர், பெருங்குளம், செம்படையார்குளம், கும்பரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது செம்படையார்குளம் கிராமத்தில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கோட்சூட் அணிந்தபடி டிப்டாப்பாக பிரசார களத்திற்குள் வந்தார். பின்னர் அவர் நான் துபாயிலிருந்து வருகிறேன் என ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து குரல் எழுப்பி, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முழக்கமிட்டார்.
அதற்கு ஓபிஎஸ் "தம்பி துபாயா, முதல்ல அந்த கூலிங் கிளாஸ போடுங்க" என அவருடன் சிரித்து கொண்டே பேசினார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்து பிரசாரத்தை மீண்டும் தொடங்கிய, ஓ.பன்னீர்செல்வம் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், இப்பகுதியில் சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்து விட்டு சென்றார்.
- சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வேனில் நின்ற படியே பிரசாரம் செய்கிறார்.
- தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையிலும், கெங்கவல்லியில் 6 மணிக்கும் வேனில் நின்றபடி பிரசாரம் செய்கிறார்.
சேலம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஓமலூர் அண்ணாசிலை சந்திப்பில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அதனை தொடர்ந்து நாளை (9-ந்தேதி) காலை 9 மணிக்கு சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வேனில் நின்ற படியே பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து 10 மணிக்கு எடப்பாடி பஸ் நிலையம் அருகில் செல்லும் அவர் அங்கு வேனில் நின்ற படி சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து பேசுகிறார்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையிலும், கெங்கவல்லியில் 6 மணிக்கும் வேனில் நின்ற படி பிரசாரம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- அண்ணாமலையை ஆதரித்து த.மா.கா. தலைவர் வாசன் கோவை சிங்காநல்லூர், இடையர்பாளையம் பிரிவில் வாக்கு சேகரித்தார்.
- இனியும் பெண்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.
கோவை:
கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து த.மா.கா. தலைவர் வாசன் கோவை சிங்காநல்லூர், இடையர்பாளையம் பிரிவில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
போதைப் பொருள் கடத்தலிலும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவிலும், டாஸ்மாக் மது விற்பனையிலும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வஞ்சிப்பதிலும் தான் தி.மு.க. அரசு முன்னிலையில் உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்கு வங்கிக்காகவே பயன்படுத்துகின்றனர். இந்த இரு கட்சிகளுமே பாராளுமன்ற தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. இது இஸ்லாமியர்களுக்கு செய்யும் துரோகமாகும். ஆனால் சிறுபான்மையின மக்கள் மேம்பாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதமர் நரேந்திரமோடி பிரதிபலிக்கிறார்.
பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கோவை தொகுதியை நன்கு அறிந்தவர். இந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பது அவருக்கு தெரியும். தமிழகம் முழுவதும் நடை பயணம் செய்து மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து வைத்துள்ளார்.
அதனால் அவரை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு கோவை தொகுதி மக்களுக்கு உள் ளது. அதன் மூலம் சிறந்த எம்.பி.யை தேர்ந்தெடுத்த பெருமை கோவை மக்களுக்கு சேரும்.
மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வருவது மிக அவசர தேவையாகும். இன்றைய தமிழக வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம். தி.மு.க. அரசு விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம், பத்தி ரப்பதிவு கட்டணம் உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வு என மக்கள் தலையில் மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்துள்ளது.
மக்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது. காலையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 உத வித்தொகை கொடுத்து விட்டு மாலையில் குடும்ப தலைவரிடம் இருந்து டாஸ்மாக் வழியாக அதை தி.மு.க. பிடுங்கி கொள்கிறது. தி.மு.க. டாஸ்மாக் வியாபார அரசாக மாறி இருக்கிறது. இனியும் பெண்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.
நீங்கள் போடும் ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கானது. இரு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம், உலக ளவில் இரண்டாம் இடத்துக்கு உயரும். உங்களுக்காக உழைக்க தாமரைக்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணாமலையை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று பல முனைகளில் இருந்து அஸ்திரம் வீசப்படுகிறது
- சரியான நேரத்துக்கு பிரசாரத்தை தொடங்கும் அண்ணாமலை பகல் 12 மணி வரை பிரசாரம் செய்கிறார்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதி நட்சத்திர தொகுதியாக எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
அண்ணாமலையை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று பல முனைகளில் இருந்து அஸ்திரம் வீசப்படுகிறது. அத்தனையையும் தனக்கே உரித்தான பாணியில் எதிர்கெண்டு களத்தில் நிற்கிறார்.
அண்ணாமலையின் தினசரி செயல்பாடுகள் பற்றி அவருடன் இருப்பவர்கள் ஆச்சரியத்துடன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்கள்.
அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் ரெடியாகி கீழே வந்து விடுகிறார். உதவியாளர்களை அழைத்து அன்றைய நிகழ்ச்சி நிரல் பற்றி பேசுகிறார்.
அதன் பிறகு தன்னை தேடி காத்திருக்கும் நிர்வாகிகளை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து சரியாக 7 மணிக்கெல்லாம் பிரசாரம் தொடங்கும் இடத்துக்கு சென்று விடுகிறார். சரியான நேரத்துக்கு பிரசாரத்தை தொடங்கும் அண்ணாமலை பகல் 12 மணி வரை பிரசாரம் செய்கிறார்.
உணவு இடைவேளையில் தொண்டர்கள் ஓய்வு எடுக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை ஓய்வு எடுப்பதில்லை. அந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அமைப்புகள், நலச்சங்கங்கள் பற்றி முன் கூட்டியே தகவல் சேகரித்து வைத்திருக்கிறார்.
மதியம் ஓய்வு நேரத்தில் அவர்களை நேரில் சென்று சந்தித்து பேசுகிறார். பின்னர் மாலையில் தொண்டர்களுடன் மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார்.

மாலையில் பிரசாரத்தை முடித்து விட்டு இரவில் தங்குமிடம் வருகிறார். அதன் பிறகுதான் முக்கிய ஆலோசனைகள் தொடர்கிறது. பிரசாரத்தை தினமும் கண்காணித்து வரும் குழுவினரை அழைத்து அன்றைய பிரசாரம் எப்படி இருந்தது? மக்களிடம் வரவேற்பு பெற்றதா? மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பது பற்றி விவாதிக்கிறார்.
அதன் பிறகு மறுநாள் பிரசாரம் எப்படி அமைய வேண்டும், வாக்காளர்களிடம் நம்பிக்கை பெறும் வகையில் செயல்பட வேண்டிய விதம் பற்றி அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கிறார்.
தொடர்ந்து கீழ்மட்டம் வரையிலான நிர்வாகிகளை அழைத்து தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் பா.ஜனதாவை பற்றிய பேச்சுக்கள். அதற்கான பதிலடிகள் பற்றி அவர்களிடம் விளக்குகிறார்.
இந்த நள்ளிரவு ஆலோசனை முடியவே ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். அதன் பிறகு தூங்க செல்கிறார். அதிகபட்சம் 3 மணி நேரம் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு மீண்டும் 5 மணிக்கு தயாராகி விடுகிறார். ஏற்கனவே 24x7 என்ற ரீதியில் போலீஸ் பணியில் இருந்ததால் அவருக்கு நேரம், காலம் பிரச்சனை இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாகவே களத்தை கலக்குகிறார்.
பிரசாரத்தின் போது பருக, சாப்பிட என்று தனியாக எதுவும் எடுத்து செல்வதில்லை. இடைஇடையே குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பருகுவார். சாப்பாடு நிர்வாகிகள் வீட்டில்தான்.
தினசரி யோகா, உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உண்டு. இப்போது அதற்கான நேரம் கிடைப்பதில்லை. ஆனாலும் எப்போதாவது சிறிது நேரம் ஓய்வு கிடைத்தால் அப்போது சிறிது உடற்பயிற்சி செய்வார்.
உழைப்பு.... உழைப்பு... அதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.
- கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே தாக்கல்.
நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
- வரும் தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் கூறி வருகிறார்
பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார்.
அங்கு பேசிய நிதிஷ்குமார், வரும் பாராளுமன்ற தேர்தலில், 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரும் தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் கூறி வரும் நிலையில், 4000 எம்.பிக்கள் என்று நிதிஷ்குமார் பேசியது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.
- தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
- பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டதாக நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் - திமுக
தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது பெயர் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் ஆவர். சதீஷ் பா.ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.
இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.
3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். சட்ட விரோதமாக ரெயிலில் கடத்தப்பட்ட இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இந்நிலையில், நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் பார்வையாளரிடம் திமுக வழக்கறிஞர் அணியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நெல்லை மாநகர திமுக வழக்கறிஞர் அணி தலைவர் ஜாகிர் உசேன் தலைமையிலான வழக்கறிஞர்கள் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சோனாளி பொன்ஷே வயங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டதாக நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். வேட்பாளரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.






