search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆட்சி, அதிகாரத்திற்கு அடிபணியாத கட்சி அ.தி.மு.க.- எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    ஆட்சி, அதிகாரத்திற்கு அடிபணியாத கட்சி அ.தி.மு.க.- எடப்பாடி பழனிசாமி பேச்சு

    • அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தி.மு.க.வினர் விமர்சித்து வருகிறார்கள்.
    • இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் அங்கம் வகித்து கொண்டு இருக்கிறார்.

    திருவள்ளூர்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூர் (தனி)தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தி.மு.க.வினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் செயல் மறவர்கள் தொண்டர்கள் நிறைந்த கட்சியாக உள்ளது. ஆனால், தி.மு.க.வும், காங்கிரசும் பணக்கார கட்சி. ஆடை கலையாமல் வாக்கு கேட்கிற தலைவர்கள் தி.மு.க.விலும், காங்கிரசிலும் இருக்கிறார்கள்.

    அவர்கள் திட்டமெல்லாம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து, கொள்ளையடிக்க வேண்டும். இதனாலேயே இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் அங்கம் வகித்து கொண்டு இருக்கிறார்.

    ஆனால் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினோம். சுயநலத்தோடு யோசித்திருந்தால் அந்த கூட்டணியில் தொடர்ந்திருப்போம். அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி, அதிகாரத்திற்கு அடி பணியாத கட்சி. தேசிய கட்சியோடு கூட்டணி வைத்து எந்த பிரயோ ஜனமும் இல்லை. தமிழ்நாடு வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக அ.தி.மு.க. தேசிய கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்களோ அதை சொல்லி ஓட்டு கேளுங்கள். என்னைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்.

    நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தான். ஆனால் மீண்டும் அவர்களே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என்பதை நாங்கள் சொல்கிறோம். உங்களால் சொல்ல முடியுமா? சொன்னதையும் சொல்லாததையும் நாங்கள் செய்து வருகிறோம். இனிமேலாவது வாக்களித்தவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 520 தேர்தல் வாக்குறுதியில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை, விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யாத அரசாக தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க. கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை. 11 அரசு மருத்துவ கல்லூரிகளை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் தி.மு.க. 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டுவரவில்லை. திமுக ஆட்சி இருண்ட ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, பா.பென்ஜமின், மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், திருத்தணி கோ.அரி,மாவட்ட செயலாளர்கள் சிறுணியம் பலராமன், அலெக்சாண்டர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×