search icon
என் மலர்tooltip icon

    நைஜீரியா

    • டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் காயமின்றி தப்பினர்.
    • பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் நேற்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து ஒண்டோவில் உள்ள ஃபெடரல் சாலை பாதுகாப்புப் படையின் தலைவர் எசேக்கியேல் சோனால்லா கூறுகையில், "

    நேற்று முன்தினம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பெட்ரோல் டேங்கர் சாலையை விட்டு விலகி ஒன்டோவின் ஓடிக்போ மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது.

    இதைதொடர்ந்து, டேங்கரில் இருந்து எரிபொருளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடித்து சிதறியுள்ளது. நபர்களில் ஒருவர் செல்போன் வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்" என்றார்.

    இந்த விபத்தில், டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் காயமின்றி தப்பினர்.

    பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லாரியை முந்திச் செல்ல முற்பட்டபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.
    • வாகன ஓட்டிகள், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

    நைஜீரியாவில் கொடிய சாலை விபத்துகள் அடிக்கடி பதிவாகின்றன, பெரும்பாலும் அதிக சுமை, மோசமான சாலை நிலைமைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

    தென்மேற்கு நைஜீரியாவின் லாகோஸில் நேற்று முன்தினம் பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோவா நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிரக் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த சுமார் 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

    20 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து, லாகோஸ்-படக்ரி விரைவுச் சாலை வழியாக மோவோ நகருக்கு அருகே மணல் ஏற்றப்பட்ட டிரக் மீது மோதியதாக லாகோஸில் செய்தியாளர்களிடம் லாஸ்ட்மா செய்தித் தொடர்பாளர் தாவோபிக் அடேபாயோ தெரிவித்தார்.

    இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லாரியை முந்திச் செல்ல முற்பட்டபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

    வாகன ஓட்டிகள், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இதனால் தேவையில்லாத உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    • சமையலறையில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்த ஹில்டா பாசி தனது ஓய்வு இடைவேளைகளில் கூடுதல் நிமிடங்களை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • சமையல் நேரத்தில் 7 மணி நேரம் கழிக்கப்பட்டு 93 மணி நேரம் 11 நிமிடங்கள் இடைவிடாமல் சமைத்ததாக அறிவிக்கப்பட்டது.

    நீண்ட நேரம் சமையல் செய்து உலக சாதனை படைத்து அசத்தி உள்ளார் நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண். அவரது பெயர் ஹில்டா பாசி. 26 வயதான இவர் சுமார் 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைக்க முயன்றுள்ளார்.

    மே 11-ந்தேதி தொடங்கிய இவரது சமையல் பயணம் மே 15-ந்தேதி வரை தொடர்ந்துள்ளது. சமையலறையில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்த இவர் தனது ஓய்வு இடைவேளைகளில் கூடுதல் நிமிடங்களை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சமையல் நேரத்தில் 7 மணி நேரம் கழிக்கப்பட்டு 93 மணி நேரம் 11 நிமிடங்கள் இடைவிடாமல் சமைத்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்திய சமையல் கலைஞரான லதா டோண்டன் என்பவர் 87 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த சாதனை படைத்திருந்தார். அதனை ஹில்டா பாசி தற்போது முறியடித்துள்ளார். இதுகுறித்து ஹில்டா பாசி கூறுகையில், நைஜீரிய உணவு வகைகளை பிரபலபடுத்தும் வகையில் இந்த சாதனையை முயற்சி செய்ததாக அவர் கூறினார்.

    • நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இதில் 103 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அபுஜா:

    நைஜீரியாவின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் இதில் பங்கேற்றனர்.

    திருமணம் முடிந்து 300க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் திரும்பிக் கொண்டிருந்தனர். மேலும் பலர் படகில் தங்களது பைக்குகளை எடுத்து வந்திருந்தனர். அப்போது அதிக பளு காரணமாக படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 103 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

    தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 100க்கு மேற்பட்டோரை மீட்டுள்ளனர். மேலும், மாயமான பலரை தேடி வருகின்றனர்.

    திருமணத்துக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய மக்கள் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் 3 நாள் சுற்றப்பயணத்தின் ஒரு பகுதியாக நைஜீரியாவுக்கு சென்று உள்ளார்.
    • இந்நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் ககாமே, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா போன்றோரும் கலந்து கொண்டனர்.

    நைஜீரியா நாட்டில் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போலா தினுபு இன்று பதவியேற்றுக் கொண்டார். இதனால், தினுபு நைஜீரியாவின் 16-வது அதிபராகியுள்ளார்.

    இதற்காக தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் 5 ஆயிரம் பேர் அமர கூடிய இடத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.

    பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்நிகழ்ச்சியில் ருவாண்டா அதிபர் ககாமே, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா போன்றோரும் கலந்து கொண்டனர்.

    அழைப்பிதழ்கள் இல்லாத நாட்டு மக்கள் நிகழ்ச்சியை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் 3 நாள் சுற்றப்பயணத்தின் ஒரு பகுதியாக நைஜீரியாவுக்கு சென்று உள்ளார். 

    • இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
    • போலீசார் அங்கு விரைந்து வந்து வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பிளேட்டு:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும்,அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது.

    அங்குள்ள ஒரு நிலத்தில் கால் நடைகள் மேய்ந்தது. இதனை தட்டிக்கேட்ட உரிமையாளருக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர். சிலர் துப்பாக்கியை எடுத்து சுடவும் ஆரம்பித்தனர். இந்த மோதலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும், தாக்கப்பட்டதிலும் அடுத்தடுத்து பலர் இறந்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதில் பலர் இறந்தனர்.இதனால் கடந்த 3 நாட்களில் இந்த மோதலுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 85- ஆக உயர்ந்து உள்ளது. சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    வன்முறை மேலும் பரவாமல் தடுக்க அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போலீசாரை பார்த்ததும் வன்முறை கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    • நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்றவற்றை தயாரித்தார்.
    • ஹில்டா பாசியின் அற்புதமான முயற்சியை நாங்கள் அறிவோம்.

    அபுஜா:

    நைஜீரியாவை சேர்ந்த பெண் சமையல் நிபுணர் ஹில்டா பாசி (வயது27). தொழில் அதிபரான இவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமைத்து சாதனை படைக்க முடிவு செய்தார்.

    அதன்படி அவர் கடந்த 11-ந்தேதி மாலை 4 மணிக்கு சமைக்க தொடங்கினார். அவர் பெரும்பாலும் நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்றவற்றை தயாரித்தார்.வெளிநாட்டு உணவு வகைகளையும் சமைத்தார்.

    லாகோஸ் நகரில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியில் சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை உற்காசப்படுத்தியபடி இருந்தனர்.

    அவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்தார். ஹில்டா பாசி, 110 உணவு வகைகளை சமைத்தார். இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த பெண் சமையல் நிபுணர் லதா டாண்டன் கடந்த 2019-ம் ஆண்டு தொடர்ந்து 87 மணி நேரம் 45 நிமிடங்கள் சமைத்து இருந்தார். அந்த சாதனையை ஹில்டா பாசி முறியடித்தார்.

    இதையடுத்து அவருக்கு ஜனாதிபதி முகம்மது புகாரி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இது தொடர்பாக ஹில்டா பாசி கூறும்போது, அன்பின் வெளிப்பாடு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அன்புக்கும், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார். ஹில்டா பாசியின் சாதனை சமையல் நிகழ்ச்சி, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.

    இது தொடர்பாக கின்னஸ் சாதனை நிறுவனம் கூறும் போது, ஹில்டா பாசியின் அற்புதமான முயற்சியை நாங்கள் அறிவோம். அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் முன் முதலில் அனைத்து ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    • நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
    • பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 40 பேர் ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் இறந்து உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

    லாகோஸ்:

    நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கடந்த 2 வாரங்களில் மட்டும் நைஜீரியா வடகிழக்கு மாகாண பகுதியில் பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 40 பேர் ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் இறந்து உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

    மேலும் அந்த குழுவினரின் குடும்பத்தினர் குழந்தைகள் உள்பட 510 பேர் அரசிடம் சரண் அடைந்து உள்ளனர்.

    • நைஜீரியாவில் பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகினர்.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் எனுகு-போர்ட் ஹார்கோர்ட் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதனால் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    மீட்புக்குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தனர்.
    • கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு என கூறப்படுகிறது.

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினர்.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். சிலர் பயத்தில் புதர்களுக்குள் ஒளிந்து கொண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    • நைஜீரியாவின் லாகோஸ் பகுதியில் பயணிகள் பஸ் மீது ரெயில் மோதியது.
    • இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    லாகோஸ்:

    நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் பஸ் மீது ரெயில் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் பஸ் பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணையும் தொடங்கி உள்ளது.

    ரெயில் பயணிகள் யாரும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமடையவில்லை. பஸிசில் இருந்து 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • கச்சா எண்ணெய் குழாயில் இருந்து சிலர் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயற்சித்துள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    அபுஜா:

    நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவங்கள் பெருமளவில் நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருடி அதை வெளிச்சந்தையில் விற்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில் அந்நாட்டின் நைஜர் டெல்டா மாகாணம் மைஹா நகரில் செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து சிலர் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயற்சித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் கச்சா எண்ணெய் குழாயில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×