search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    • வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும்.
    • ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான உணவாகும்.

    வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும். இது ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான உணவாகும். இது அங்கு வாழும் தமிழ் மக்களால் விரும்பி உண்ணப்படும் அற்புதமான உணவாகும். இது அனைத்து விழாக்களின் போதும் செய்து அனைவரும் உண்பார்கள். இதன் சுவை அமோகமாக இருக்கும். ஈசியாக செய்யக்கூடியது.

    பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கருப்பட்டி வட்லப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சுவையில் சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி முட்டை- 4

    தேங்காய் பால்- அரை கப்

    சர்க்கரை- ஒரு ஸ்பூன்

    கருப்பட்டி- 1½ கப்

    உப்பு- ஒரு சிட்டிகை

    ஏலக்காய் தூள்- அரை ஸ்பூன்

    செய்முறை:

    கருப்பட்டி வட்லப்பம் செய்ய முதலில் மிக்சி ஜாரில் தேங்காய்களை ஏலக்காயை சேர்த்து நன்கு அரைத்து முதல் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    முட்டையை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் கருப்பட்டியை சேர்த்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும் வரை சுட வைக்க வேண்டும்.

    பின்னர் தேங்காய்ப்பால், கருப்பட்டி கரைசல், அரைத்த சீனி எல்லாவற்றையும் நன்றாக கலந்து கரைந்ததும் வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்.

    அதன்பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் அடித்து வைத்த முட்டை, தேங்காய் பால் கலவையில் கருப்பட்டி கரைந்த நீரினை கலந்து எடுத்து ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    தண்ணீர் சூடானதும் இட்லி பாத்திரத்தினுள் இந்த கலவையை வைத்து மூடி வைக்க வேண்டும். 25 நிமிடம் வட்லபத்தை வேகவிட வேண்டும்.

    வட்டிலப்பம் வெந்ததும் ஒரு கரண்டியால் வட்லபத்தை குத்தி எடுத்து பார்த்தால் கரண்டியில் வட்லப்பம் ஒட்டாமல் இருக்க வேண்டும். இப்பொழுது சுவையான கருப்பட்டி வட்டலப்பம் தயார்.

    • ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது.
    • அவகாடோ ஐஸ் கிரீம் எப்படி ஈஸியாக செய்வது என்று பார்க்கலாம்.

    ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது. இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம். கோடையை சமாளிக்க ஒரு புறம் பருவக்கால பழங்களை சமாளிக்க ஐஸ்கிரீமை மறந்துவிட முடியாது. குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு சத்தான அவகாடோ ஐஸ் கிரீம் எப்படி ஈஸியாக செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவகாடோ – 2

    ஹெவி கிரீம் – 1 + 1/2 கப்

    கன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு

    வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி

    செய்முறை:

    ஹெவி கிரீம் செய்ய... ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெயை சேர்த்து உருக்கி ஆற விடவும். இதனுடன் பால் சேர்த்து ஹான்டு பீட்டர் கொண்டு நன்கு அடித்து எடுத்தால் கிரீம் ரெசி. இதனை ஃப்ரிட்ஜில் வைத்து 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, மேலே படிந்து வரும் ஆடைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். சேகரித்த பால் ஆடைகளை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கினால் ஹெவி கிரீம் தயார்.

    முதலில் அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டன்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்க வேண்டும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான சத்தான அவகாடோ ஐஸ் கிரீம் ரெடி.

    • லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    • குழந்தைகளுக்கு தினமும் விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து அசத்தலாம்.

    குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எலுமிச்சைச்சாறு – 1/2 கப்,

    தண்ணீர் – 1 கப்,

    சர்க்கரை – 3/4 கப்,

    புதினா சாறு – 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீருடன், 3/4 கப் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். இதனுடன் புதினா சாறு சேர்க்க வேண்டும். பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி எடுக்கவும். இதனை பாப்சிகிள் மோல்டில் ஊற்றி 3-4 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். லெமன் ஷாட் பாப்சிகிள் ரெடி.

    • நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும்.
    • பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    காளான் கிரேவி கொஞ்சம் வித்தியாசமான முறையில், மசாலாவை வித்தியாசமாக சேர்த்து இப்படி வைத்து பாருங்கள். சூப்பரா இருக்கும். பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள பரோட்டா சைட் டிஷ் இது. உங்களுடைய குழந்தைகளுக்கு, இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும். ரொம்ப ரொம்ப சுலபமாக மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாமா?

    தேவையான பொருட்கள்:

    காளான் – 1 பாக்கெட்

    நறுக்கிய வெங்காயம் – 1

    நறுக்கிய தக்காளி – 1

    கொத்தமல்லி – 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்

    கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

    மிளகு – 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் – 3

    கடுகு, சீரகம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை

    கடாய் ஒன்றில் எண்ணெய் விடாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    பின்னர் காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா பொடி கலவையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்போது தண்ணீர் விட்டு மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு காளான் மசாலா தயார்.

    • உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்.

    இது சுவையான பானம் மட்டுமல்ல. உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியதும் கூட. அவலில் கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, நார்ச்சத்து, ஆக்சிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. ருசிக்கும் ஆவலைத் தூண்டும் அவல் பால் கீர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாமா?

    தேவையான பொருட்கள்:

    அவல்- ஒரு கப்

    பால்- 3 கப்

    வெல்லம்- 1/2 கப்

    நெய்- 1 ஸ்பூன்

    முந்திரி- 10

    உலர் திராட்சை- 2 ஸ்பூன்

    கன்டென்ஸ்டு மில்க்- 1/4 கப்

    ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும். பின்னர் அதே நெய்யில் அவல் சேர்த்து மொறுமொறு என்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள அவல் சேர்த்து வேகவைக்க வேண்டும்.

    பின்னர் அதில் முந்திரியை ஊறவைத்து அரைத்துச் சேர்த்து கொதிக்கவிடவும். தொடர்ந்து, அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்கவிடுங்கள். இதனால் கீர் நன்கு கெட்டி யாகி வரும். கடைசியாக வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின்னர் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கினால், சூடான, சுவையான அவல் பால் கீர் ரெடி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.

    • சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.
    • காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.

    மைக்ரோவேவ் அவன் சாதனத்தில் சமைக்கும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் சமைப்பதற்கான சமையல் டிப்ஸ்...

    * காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி வேகவைக்க வேண்டும்.

    * காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.

    * சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.

    * உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கறிகள் வறண்டு விடும். ஆதலால் அவை வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

    * சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும்.

    * ஒரு பவுல் அல்லது ஒருகப் தண்ணீரை மைக்ரோவேவில் சூடு செய்து அதில் தக்காளியை போட்டு எடுத்தால் ஓரிரு நிமிடத்தில் தோலை நீக்கி விடலாம்.

    * உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள்கரண்டியால் குத்தியோ அல்லது துண்டு துண்டாக வெட்டியோதான் அவனில் வைக்க வேண்டும்.

    * புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க, பச்சரிசியில் வைப்பது போலவே நேரம், அளவு வைக்கவேண்டும்.

    * பாசுமதி அரிசியில் சமைக்கும்போது அரிசியும், தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் 'மைக்ரோ-ஹை'யில் வைக்கவும்.

    * தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

    * நமத்துப் போன சிப்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிஸ்கட் வகைகளை, காட்டன் கர்ச்சீப் போன்ற துண்டு விரித்து அதில் பரப்பி வைத்து மூடாமல் ஒரு நிமிடம் சூடு செய்யலாம்.

    * பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும், நீரும் பாதி அளவுதான் இருக்க வேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

    * உலோக பாத்திரங்களை அவனில் வைத்து சமைக்கக் கூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து, ஓவனின் உட்புற உலோக தகட்டில் எதிரொலித்து பக்க விளைவுகள் ஏற்படும்.

    • பாரம்பரிய உணவுகளில் ஒன்று பருத்தி பால்.
    • நெஞ்சு சளிக்கு உடனே தீர்வளிக்கும் உணவாக பார்க்கப்படுகிறது.

    மாதவிடாய் நாட்களில் அதிக தொல்லை மற்றும் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இப்படி நாள்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு ஒரு அருமையான உணவாகவும் மருந்தாகவும் செயல்படுவது தான் நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான பருத்தி பால். மதுரை ஜிகர்தண்டாவை போல மேலும் ஒரு ஸ்பெஷல் உணவாக பார்க்கப்படுவது பருத்தி பால்.

    பருத்தி பால் மாதவிடாய் பிரச்சனை மட்டும் இல்லாது, நெஞ்சு சளிக்கும் உடனே தீர்வளிக்கும் ஒரு உணவாக பார்க்கப்படுகிறது. நிறைய நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்திற்கு பலம் தருகிறது. சரி இப்படி ஏராளமான பலன்களை தரும் பருத்தி பால் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பருத்தி கொட்டை- 2 கப்

    வெல்லம் - 1 1/2 கப்

    பச்சரிசி-1/4 கப்

    ஏலக்காய் - 5

    சுக்கு-ஒரு சிறிய துண்டு

    தேங்காய் ஒரு கப்

    செய்முறை

    பருத்தி கொட்டைகளை நன்றாக கழுவி இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் பருத்திப் பால் செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஊற வைக்க வேண்டும்.

    இதையடுத்து கிரைண்டர் அல்லது மிக்சியில் பருத்திக் கொட்டையை சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும் பருத்தி நன்றாக அரைத்த பின்னர் அதை பிழிந்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முறை அரைத்து பால் எடுத்துக்கொள்ளலாம். இதையடுத்து ஊற வைத்த பச்சரிசியை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே போல் வெல்லத்தை பாகு காய்ச்சி வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பருத்திப் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கிளற ஆரம்பிக்க வேண்டும். பருத்தி பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை கலந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு சிட்டிகை அளவுக்கு உப்பை சேர்க்க வேண்டும். கைவிடாமல் பருத்தி பாலை கிளறி விட வேண்டும். இல்லை என்றால் கட்டி விழுந்து விடும்.

    பருத்திப் பால் ஓரளவிற்கு கெட்டியாக வரும் போது வடித்து எடுத்து வைத்துள்ள வெல்லப் பாகை சேர்த்துக் கிளற வேண்டும்.

    இதையடுத்து நன்றாக கொதித்த பின்னர் ஏலக்காய் மற்றும் சுக்கை நன்றாக பொடித்து பாலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் தேவையான அளவு தேங்காயை துருவி சேர்த்துக்கொள்ளலாம். இனி சிறிய கிண்ணத்திற்கு மாற்றி பருத்திப் பாலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறலாம்.

    வாரத்திற்கு ஒரு முறையேனும் இதுபோன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது ஆண்-பெண் இருதரப்பினருக்கும் அதிக பலனைத் தரும்.

    • பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை.
    • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    சத்து மிகுந்த பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. அதன் சுவையிலோ அல்லது மனத்திலோ ஏதாவது பிடிக்காமல் போய்விட்டால் அதை நாம் உண்ண மறுத்து விடுவோம். அப்படி பிடிக்காத காய்களில் முள்ளங்கியும் ஒன்று. ஒரு சிலரே இந்த முள்ளங்கியை விரும்பி சாப்பிடுவார்கள். பலரும் இதை விரும்ப மாட்டார்கள்.

    முள்ளங்கியை நாம் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கக்கூடிய கல்லீரல், சிறுநீரகம், ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மலக்குடல் போன்றவற்றின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் அதிக அளவு நீர் சத்தும், நார் சத்தும் இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ள வேண்டும். முள்ளங்கியை வைத்து எப்படி காரசாரமான துவையல் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி- கால் கிலோ

    சின்ன வெங்காயம்- 10

    காய்ந்தமிளகாய்- 4

    மல்லி - ஒரு ஸ்பூன்

    வேர்கடலை- ஒரு ஸ்பூன்

    கடலை பருப்பு- ஒரு ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    புளி- நெல்லிக்காய் அளவு

    பூண்டு- 4

    செய்முறை:

    முதலில் முள்ளங்கியை எடுத்து தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்த பிறகு அதில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டும் லேசாக நிறம் மாறியதும் அதில் மல்லி சேர்க்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு வருத்த வேர்க்கடலை சேர்த்து கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

    மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை அதில் சேர்த்து வதக்க வேண்டும். முள்ளங்கியின் நிறம் லேசாக மாறிய பிறகு சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வெந்த பிறகு புளியை போட்டு ஒரு நிமிடம் அடுப்பில் நன்றாக வதக்க வேண்டும். இதையும் எடுத்து ஆற வைத்து விட வேண்டும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து ஆற வைத்திருக்கும் பருப்பு வகைகளை போட்டு தண்ணீர் ஊற்றாமல் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வதக்கி வைத்திருக்கும் முள்ளங்கியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்றாக அரைபட்ட பிறகு அதை ஒரு பவுலுக்கு மாற்றி விட வேண்டும்.

    இப்பொழுது துவையலை தாளிப்பதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்க வேண்டும். பருப்பு நன்றாக சிவந்த பிறகு அதில் ஐந்து பல் பூண்டை நன்றாக தட்டி சேர்க்க வேண்டும். பூண்டு லேசாக சிவந்த பிறகு அதில் கருவேப்பிலையை போட வேண்டும். கருவேப்பிலை நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் துவையலில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

    இதனை சூடான சாதத்தில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள முள்ளங்கி தொக்கு சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
    • தேரலி இலைகள் அல்லது வாழை இலைகளில் வேகவைக்கப்படுகிறது.

    பலாப்பழ அப்பம் என்பது பழுத்த பலாப்பழம், வெல்லம், தேங்காய் மற்றும் வீட்டில் வறுத்த அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய தேநீர் நேர சிற்றுண்டாகும். தயாரிக்கப்பட்ட மாவை தேரலி இலைகள் அல்லது வாழை இலைகளில் வேகவைக்கப்படுகிறது.

    கேரளாவிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் பிரபலமானது. இது சக்கா அப்பம், எலாய் அடாய் கும்பலியப்பம் சக்கா அடா இலா அடா எலாய் கொசுகட்டாய் சக்கா கோலுகாட்டா போன்ற பல பெயர்களில் அறியப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    வறுத்த அரிசி மாவு - 1.5 கப்

    பலாப்பழம் - 1.5 கப் நசுக்கியது

    வெல்லம் - 3/4 கப்

    அரைத்த தேங்காய் - 1/4 கப்

    வாழை இலை -8 துண்டுகள்

    நெய் - 1 ஸ்பூன்

    ஏலக்காய் - 4

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    அனைத்து பலாப்பழ துண்டுகளிலும் விதைகளை அகற்றிவிட்டு மிக்சி ஜாரில் கரகரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து அது முழுமையாக உருகும் வரை சூடாக்க வேண்டும். பின்னர் வெல்லம் கரைந்த பிறகு அதை வடிகட்ட வேண்டும்.

    ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் நெய் ஊற்றி காய்ந்த பிறகு நசுக்கிய பலாப்பழத்தை சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து வதக்க வேண்டும்.

    பின்னர் உருகிய வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பலாப்பழம் மென்மையாகி, கலவை கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இதில் அரைத்த தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    இப்போது வறுத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்க்க வேண்டும். எல்லாம் நன்கு ஒன்றாக சேரும்' வரை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து விட்டுசில நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.

     இதற்கிடையில், வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இலையில் சிறிது நெய் தடவி சிறிய பங்கு மாவை நடுவில் வைத்து வட்டமாக தட்டி விரல்களால் அதைப் பரப்பவும். வாழை இலையை பாதியாக மடித்து ஒரு பொட்டலமாக அமைக்கலாம். மீதமுள்ள மாவையும் அதைப் போலவே செய்யுங்கள்.

    இதனை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். சூடு ஆறியதும் பொட்டலத்தை அகற்றி சூடான தேநீருடன் பலாப்பழ அப்பத்தை சுவைக்கலாம்.

    • ஊறுகாய் வகைகளில் இருந்து சற்று மாறுபாடான சுவையுடையது.
    • மீன் மலிவாக கிடைக்கும் நேரங்களில் தயாரித்து வைத்துகொள்ளலாம்.

    மீன் ஊறுகாய் மற்ற ஊறுகாய் வகைகளில் இருந்து சற்று மாறுபாடான சுவையுடையது. மீன் மலிவாக கிடைக்கும் சமயங்களில் தயாரித்து வைத்துகொள்ளலாம். நேரம் கிடைக்கும்போது செய்து வைத்துகொண்டால் தேவைப்படும்போது உபயோகித்துகொள்ளலாம். ஆனால் மற்ற ஊறுகாய் போன்று அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. மீன் ஊறுகாய் மாறுபட்ட சுவையுடன் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.

    கேரளா கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ளவர்களால் அதிகமாக செய்யப்படும் ஒரு சுவையான ஊறுகாய் இந்த மீன் ஊறுகாய். சுவையாக இருப்பதால் தற்போது அனைவரும் சமைக்கும் உணவு பட்டியலிலும் வந்துவிட்டது நீங்களும் ஒரு முறை சமைத்து பாருங்கள் இதன் சுவை உங்களுக்கும் பிடித்த வகையில் நிச்சயம் இருக்கும். இதே போன்று இறால் ஊறுகாயும் மிகவும் சுவையானது. இப்போது மீன் ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மீன் - 1/2 கிலோ (முள் இல்லாத மீன்)

    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 4ஸ்பூன்

    வெந்தயப்பொடி - 1ஸ்பூன்

    பூண்டு - ௧ (நறுக்கியது)

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    வினிகர் - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    கடுகு - ஒரு ஸ்பூன்

    கறிவேப்பில்லை - சிறிது

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஊறுகாய் செய்வதற்கு தேவையான மீன்களை எடுத்து சுத்தம் செய்து சதுர வடிவில் வெட்டி வைக்க வேண்டு. பின்னர் இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்து வைத்துள்ள மீன்களுக்கு மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக மீன்களுக்கு மேல் படும்படி கலந்து விட வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உப்பு கலந்து வைத்திருக்கும் மீன்களை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகிய பொருட்களை போட்டு நன்றாக கிளர வேண்டும். பின்னர் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மீன்களையும் சேர்க்க வேண்டும்.

    சரியாக 5 நிமிடங்கள் மீனை வேக விட்டு அரை கப் வினிகர் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க வைத்து விட்டு இறக்கினால் சுவையான மீன் ஊறுகாய் தயார்.

    பின்னர் ஆறியதும் ஊறுகாயை காற்று போகாத பாட்டிலில் போட்டு அடைத்து வைத்து தேவையான போது எடுத்து பரிமாறலாம்.

    • மாவில் வண்டு வராமல் இருக்க சிறிதளவு உப்பை போட்டு வைத்தால் போதும்.
    • இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலையை போட்டு வைக்கலாம்.

    * கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்கு அதில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் போதும்.

    * காப்பர் பூசப்பட்ட பாத்திரம் மங்காமல் இருப்பதற்கு சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி, துணியால் அழுத்தி தேய்த்தால் போதும். பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

    * இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் அதன் உள்பகுதியை மாவில் போட்டு வைக்கவும். மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

    * மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். பின்பு நீரை ஊற்றிவிட்டு முயற்சி செய்தால் பிளேடை எளிதாக கழற்றலாம்.

    * மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து இட்லி சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் சுவையாக இருக்கும்.

    * வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் மணமாக இருக்கும்.

    * சப்பாத்தியை சில்வர் பாயில் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரம் காயாமல் இருக்கும்.

    * ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

    * வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

    * தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும்.

    * முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டு வைத்தால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

    • அருமையான சுவையில் பிரெட் டோஸ்ட்.
    • நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும்.

    பெரும்பாலும் காலையில் வேலைக்கு செல்லும் போதோ அல்லது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதோ, எப்போதும் நல்ல சுவையான காலை உணவை செய்ய முடியாது. அந்த நேரத்தில் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு உணவுகளை தயாரித்து, அதனையே தான் காலையிலும் சாப்பிடுவோம். ஆனால் இப்போது சற்று எளிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடிய ஒரு சூப்பர் ரெசிபியை பார்க்கலாம்.

    பிரட்டுகளைக் கொண்டு ஒரு அருமையான சுவையில் பிரெட் டோஸ்ட் செய்வது தான். இந்த டோஸ்ட்டில் முட்டைகளை சேர்த்து செய்வதால், நிச்சயம் இது நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்களுக்கு சிறந்த ரெசிபியாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பிரட் துண்டுகள் - 4

    முட்டை - 2

    சீஸ் - 2 கட்டிகள் (துருவியது)

    பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்

    பெப்பர் தூள் - 1/2 டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    ப்ரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பிரட்டை இரண்டு பிரட் துண்டுகள் போன்று வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த இரண்டு பிரட் துண்டுகளுக்கும் இடையில், துருவிய சீஸை வைத்துக் கொள்ள வேண்டும். (அளவுக்கு அதிகமாக சீஸை துணித்து வைக்கக்கூடாது.) இதே போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் வெட்டி, சீஸ் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் முட்டை, உப்பு, பட்டை தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து தோசைக்கலை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை தடவி உருகியதும், வெண்ணெயானது உருகியதும், ஒவ்வொரு பிரட் துண்டுகளாக முட்டை கலவையில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் அதன் மேல் ப்ரஷ் க்ரீம் தடவி பரிமாறினால், சுவையான சீஸ் பிரெஞ்சு டோஸ்ட் ரெடி.

    ×