search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பெண் சமையற்கலைஞர் தொடர்ந்து 100 மணி நேரம் சமைத்து சாதனை
    X

    பெண் சமையற்கலைஞர் தொடர்ந்து 100 மணி நேரம் சமைத்து சாதனை

    • நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்றவற்றை தயாரித்தார்.
    • ஹில்டா பாசியின் அற்புதமான முயற்சியை நாங்கள் அறிவோம்.

    அபுஜா:

    நைஜீரியாவை சேர்ந்த பெண் சமையல் நிபுணர் ஹில்டா பாசி (வயது27). தொழில் அதிபரான இவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமைத்து சாதனை படைக்க முடிவு செய்தார்.

    அதன்படி அவர் கடந்த 11-ந்தேதி மாலை 4 மணிக்கு சமைக்க தொடங்கினார். அவர் பெரும்பாலும் நைஜீரிய உணவுகளான ஜோலோப் ரைஸ், அகாரா போன்றவற்றை தயாரித்தார்.வெளிநாட்டு உணவு வகைகளையும் சமைத்தார்.

    லாகோஸ் நகரில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியில் சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை உற்காசப்படுத்தியபடி இருந்தனர்.

    அவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைத்தார். ஹில்டா பாசி, 110 உணவு வகைகளை சமைத்தார். இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த பெண் சமையல் நிபுணர் லதா டாண்டன் கடந்த 2019-ம் ஆண்டு தொடர்ந்து 87 மணி நேரம் 45 நிமிடங்கள் சமைத்து இருந்தார். அந்த சாதனையை ஹில்டா பாசி முறியடித்தார்.

    இதையடுத்து அவருக்கு ஜனாதிபதி முகம்மது புகாரி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இது தொடர்பாக ஹில்டா பாசி கூறும்போது, அன்பின் வெளிப்பாடு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அன்புக்கும், ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார். ஹில்டா பாசியின் சாதனை சமையல் நிகழ்ச்சி, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.

    இது தொடர்பாக கின்னஸ் சாதனை நிறுவனம் கூறும் போது, ஹில்டா பாசியின் அற்புதமான முயற்சியை நாங்கள் அறிவோம். அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் முன் முதலில் அனைத்து ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×