என் மலர்
உலகம்
- நிலநடுக்கத்தால் அப்பகுதியில் 3 கட்டிடங்கள் பயங்கர சேதம் அடைந்தன.
- உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
துருக்கியின் மேற்குப் பகுதியான பாலிகெசிர் மாகாணம் சிந்திர்கி நகரில் நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் சிந்திர்கியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியது.
நள்ளிரவில் திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் தூக்கத்திலிருந்து பதறி அடித்து எழுந்து வெளியே ஓடி வந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
அந்த நேரத்தில் மழை பெய்ததால், மசூதிகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் வீடு திரும்ப விரும்பாதவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
நிலநடுக்கத்தால் அப்பகுதியில் 3 கட்டிடங்கள் பயங்கர சேதம் அடைந்தன. 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இஸ்தான் புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் உள்ளிட்ட மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- தலைநகர் டாக்காவில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார்.
- து யூனுஸ் பேசிய கருத்துக்களுக்குப் பதிலடியாக, வங்கதேசத்துக்கான போக்குவரத்து ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருந்தது
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் வங்கதேசம் சென்றிருந்தார்.
அங்கு தலைநகர் டாக்காவில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார்.
இந்நிலையில் முகமது யூனுஸ், சாஹிர் மிர்சாவுக்குப் பரிசாக அளித்த புத்தகத்தின் அட்டைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தில், இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய 'கிரேட்டர் பங்களாதேஷ்' பகுதியாக வங்கதேசம் காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, வடகிழக்கு மாநிலங்கள் குறித்து யூனுஸ் பேசிய கருத்துக்களுக்குப் பதிலடியாக, வங்கதேசத்துக்கான போக்குவரத்து ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் பணியாற்றி வந்தார்.
- வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கனடாவில் ஓக்வில்லில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் ஒருவர் இனவெறி கருத்துக்களால் தவறாக நடத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவில் ஒரு இளைஞர் இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, "உடனடியாக உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்.. அருவருப்பான இந்தியரே" என்று கூறுவது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே இங்கிலாந்தின் ஓல்ட்பாரி நகரத்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இந்திய வம்சாவளி சீக்கிய பெண் சாலையில் நடந்துசென்றபோது 2 இளைஞர்கள் அவரை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணிடம் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என ஆக்ரோஷமாக கூறி உள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் அதிபர் பதவிக்கால வரம்புகளை நீக்கினார்
- எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினர் இடையேயான மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் அதிபராக பால் பயா (Paul Biya) எட்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகில் அதிபர் பதவியில் இருக்கும் வயது முதிர்ந்த அதிபராக அவர் உள்ளார்.
கடந்த அக்டோபர் 12 அன்று அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 57.7% ஆகும்.
இந்நிலையில் பால் பயா 53.66% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அனைத்தின் அரசியலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான இசா ச்ரோமா பகாரி 35.19% வாக்குகளைப் பெற்றார்.
இந்த வெற்றியின்மூலம், பால் பயா 2032 ஆம் ஆண்டு வரை கேமரூன் அதிபராக தொடர்வார்.
கேமரூனின் முதல் அதிபரின் ராஜினாமாவைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு பால் பயா முதன்முதலில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
பின்னர், அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் அதிபர் பதவிக்கால வரம்புகளை நீக்கி, தொடர்ந்து அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கேமரூனில் கடந்த வாரம் பதற்றம் நீடித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, டூவாலாவா நகரில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினர் இடையேயான மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
எதிர்க்கட்சியினர் வாக்குகள் திருடப்பட்டதாக கூறி தேர்தல் முடிவுகளை எதிர்த்து வருகின்றனர்.
- அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்து புறப்பட்டது.
- தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திக்க உள்ளனர்.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்து புறப்பட்ட ஒரு போர் விமானமும் ஹெலிகாப்டரும் தென் சீனக் கடலில் 30 நிமிட இடைவெளியில் நேற்று விபத்துக்குள்ளாகின.
விபத்துக்குள்ளான எம்ஹெச்-60ஆர் சீ ஹாக் ஹெலிகாப்டரின் மூன்று பணியாளர்களும், எஃப்/ஏ-18எஃப் சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தின் இரண்டு விமானிகளும் விபத்துக்கு முன் பாதுகாப்பாக வெளியேறினர்.
இரண்டு விபத்துகளுக்கான காரணங்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த நேரத்தில் விமானம் அங்கு என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்து குறிப்பிடவில்லை.
இராணுவப் பயிற்சியின் போது விபத்து நடந்ததாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள சூழலில் தென் சீனக் கடலில் அமெரிக்க ராணுவ விமானமும் ஹெலிகாப்டரும் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வாரம் தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பஞ்சாப்பை சேர்ந்த அந்த பெண் ஓல்ட்பரி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
- வெள்ளையின இளைஞர் ஒருவர் இந்திய பெண் என்பதால் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இங்கிலாந்தின் வெஸ்ட்மிட்லாண்ட்ஸ் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கராம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த அந்த பெண் ஓல்ட்பரி பகுதியில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பெண்ணை 30 வயதுடைய வெள்ளையின இளைஞர் ஒருவர் இன ரீதியாக இந்திய பெண் என்பதால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த பெண் மன உளைச்சலுடன் தெருவில் அமர்ந்திருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வால்சாலின் பார்க் ஹால் பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவர் பெண்ணின் வீட்டு கதவை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சேகரித்தனர். இதில் கருப்பு நிற உடை அணிந்து வந்த வாலிபர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அவரின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்
- பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தாலிபான் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
- துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் 2-வது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே இந்த மாத தொடக்கம் முதலே மோதல் நீடித்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தாலிபான் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் இரு தரப்பினருமே நூற்றுக்கணக்கில் எதிா் தரப்பினரைக் கொன்றுவிட்டதாக அறிவித்தனா். பின்னா், கத்தாா், துருக்கி தலையிட்டதன் மூலம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் அவ்வப்போது தாக்குதல்களும், உயிரிழப்புகளும் தொடா்ந்து வருகின்றன.
இந்நிலையில், துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் நேற்று முன்தினம் 2-வது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது பதற்றத்தைக் குறைப்பது, எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக பேச்சு நடத்தப்பட்டது.
இதற்கிடையே இரு தரப்பினர் இடையே மோதலும் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த மோதல்களில் 5 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. கடந்த 2 நாட்களில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடக்க முயன்ற 25 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதனால், இருநாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
- வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள் நுழைந்தது.
- பின் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
குயிட்டோ:
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. அங்கு ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள் நுழைந்தது. பின் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தல் முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளைப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பலுசிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டு நடிகர் சல்மான் கான் பேசினார்.
- இதனால் பயங்கரவாதிகள் பட்டியலில் அவரை பாகிஸ்தான் சேர்த்ததாக கூறப்படுகிறது.
லாகூர்:
பாலிவுட் நடிகர் சல்மான்கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது
இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சல்மான்கான் பேசியதாவது:
நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும்.
தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால் அது பல நூறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனெனில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். இங்கு பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள் என பேசியிருந்தார்.
சல்மான்கானின் இந்தப் பேச்சால் கோபமடைந்த பாகிஸ்தான், அவரை பயங்கரவாதிகள் பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
- ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதல்.
- 101 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றச்சாட்டு.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து இன்று 2ஆவது நாளாக இரவு நேரத்தில் ரஷியா டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழ்ந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கீவில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடம் ரஷியாவின் டிரோன்கள் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. 9 மற்றும் 16 மாடி குடியிருப்புகளில் இருந்து மக்களை மீட்புக்குழுவினர் வெளியேற்றினர். 74 வயது மூதாட்டியால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மேலும் 19 வயது இளம் பெண் மற்றும் அவருடைய 46 வயது தாய் ஆகியோரும் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 101 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியு்ளது. இதில் 90 டிரோன்களை தடுத்து நிறுத்தியும், தாக்கியும் அழித்ததாக உக்ரைன் விமானப்படை தெரிவித்து்ளளது. ஐந்து டிரோன்கள் நான்கு இடங்களை தாக்கியது எனவும் தெரிவித்துள்ளது.
நேற்று ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி 4 பேர் கொலை செய்த நிலையில், இந்த தாக்குதலை ரஷியா நடத்தியுளள்து.
- இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
- மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.
இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் கலந்துகொண்டார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் மூலம் தாய்லாந்து காவலில் வைத்திருந்த 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான 800 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட கனரக ஆயுதங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த ஒப்பந்தத்துடன் சேர்த்து, மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
மேலும் கம்போடியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான கனிம வள ஒப்பந்தத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
- என் கணவரிடம் எனக்கு உதவுமாறு கேட்டேன்.
- பள்ளியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக இந்திய வம்சாவளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
வட கரோலினாவின் பாக்ஸ்ஹேவன் டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியை சந்திரபிரபா சிங் (44) தனது கணவர் அரவிந்த் சிங் உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 12 அன்று, வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்திரபிரபா தனது கணவர் அரவிந்த் சிங்கைக் கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு அரவிந்த் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார் சந்திரபிரபாவை கைது செய்தனர். போலீசாரிடம் சந்திரபிரபா கூறுகையில், "காலை உணவு தயாரிக்கும் போது என் கணவரிடம் எனக்கு உதவுமாறு கேட்டேன்.
அவர் வீட்டை சுத்தம் செய்யாததால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் கையில் கத்தியுடன் திரும்பியபோது, தற்செயலாக என் கணவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது" என்று கூறினார்.
இருப்பினும், அரவிந்த் சிங் தனது மனைவி வேண்டுமென்றே தன்னை குத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது சந்திரபிரபா ஜாமீனில் வெளிவந்துள்ளார். பள்ளியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.






