என் மலர்
உலகம்
- இந்தியர்கள் கவலைப்படுவது இயல்பானதுதான் என்று நாங்கள் அறிவோம்.
- அவர்கள் நாங்கள் கூட உறவிலில்லாத சில நாடுகளுடன் நல்ல உறவு வைத்துள்ளனர்.
பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த பதட்டங்கள் காரணமாக, இந்தியர்கள் கவலைப்படுவது இயல்பானதுதான் என்று நாங்கள் அறிவோம்.
ஆனால், நாங்கள் பல நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானுடன் எங்கள் மூலோபாய உறவை விரிவுபடுத்த ஒரு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இந்தியர்கள் இராஜதந்திர விஷயங்களில் மிகவும் முதிர்ச்சியுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் நாங்கள் கூட உறவிலில்லாத சில நாடுகளுடன் நல்ல உறவு வைத்துள்ளனர். எனவே, நாங்கள் பாகிஸ்தானுடன் என்ன செய்தாலும், நட்பு நாடான இந்தியாவுடனான உறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா தங்கள் கச்சா எண்ணெய் தேவைகளுக்கு ரஷியாவை மட்டுமே அதிகம் சார்த்திருக்காமல் மற்ற நாடுகளின் சப்ளையர்களிடமிருந்தும் வாங்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா மீது அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி பேசிய அவர், எங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், எப்போதுமே இந்தியா எங்கள் கூட்டாளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார்.
முன்னதாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா முற்றிலும் நிறுத்திவிட்டதாக டிரம்ப் நேற்று மீண்டும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- காசாவில் 15,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- கடுமையான நோய்கள் உள்ளவர்களுக்கு பாராசிட்டமால் மட்டுமே கொடுக்க முடிகிறது.
அக்டோபர் 10 ஆம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.
காசாவில் 15,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் இஸ்ரேலிய இராணுவம் அவர்களை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் மேல் சிகிச்சை கிடைக்காமல் நாசர் மருத்துவமனையில் 2 இளைஞர்கள் இறந்தனர்.
காசாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் இஸ்ரேலால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
மீதமுள்ள சில மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ அவசதிகளோ ல்லது மருந்துகளோ இல்லை. கடுமையான நோய்கள் உள்ளவர்களுக்கு பாராசிட்டமால் மட்டுமே கொடுக்க முடிகிறது. மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
அதேசமயம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக வாடிய பொதுமக்களுக்காக லாரிகளில் நிவாரணப் பொருட்கள் ஐநா உள்ளிட்ட அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை பொதுமக்கள் முண்டியடித்து அள்ளிச்செல்லும் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. கடந்த 2023 அக்டோபர் முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 68,000 திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
- கடந்த 19-ந்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து கத்தார், துருக்கி தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன. தோகாவில் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 19-ந்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்கிடையே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே 2-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று துருக்கியின் இஸ்தான்புல்லில் தொடங்கியது. இதன் முதல் நாளில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "இஸ்தான்புல்லில் ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும். ஆனால் அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை நான் அறிவேன்" என்றார்.
- வாஷிங்டனில் இருந்து 23 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு கோலாலம்பூரில் வந்திறங்கினார்.
- கடைசி நேரத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ டிரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று 3 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2-வது முறை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று அமெரிக்காவிலிருந்து கிளம்பிய டிரம்ப் மலேசியா தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
வாஷிங்டனில் இருந்து 23 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு கோலாலம்பூரில் வந்திறங்கிய டிரம்ப்புக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான ஓடுபாதையில் மலேசியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்த நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ப் நடனமாடினார். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் அதிபரும் இணைந்து நடனமாடினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன்பின் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
குறிப்பாக இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தின்போது கடைசி நேரத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ டிரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
- ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
- கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தினார். இதை சரி செய்ய இரு நாடுகள் இடையேயும் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இதற்கிடையே கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ இன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
1987 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒரு உரையில், வரிகள் ஒவ்வொரு அமெரிக்க தொழிலாளி மற்றும் நுகர்வோரையும் பாதிக்கும் என்றும், கடுமையான வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் பேசியிருந்தார்.
இந்த வீடியோவை இணைத்து கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
ரொனால்ட் ரீகனின் உரை தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், வீடியோவை பயன்படுத்த தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை கூறியது.
இதற்கிடையே பொய்களை பரப்புவதாக கூறி டிரம்ப், கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- வலதுசாரி மையக் கட்சியான Fine Gael-ஐ சேர்ந்த ஹீதர் ஹம்ப்ரீஸ் 29% வாக்குகள் மட்டுமே பெற்றார்.
- அயர்லாந்தில் நிலவும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய பிரசனைகளை முன்னிறுத்தி இளைஞர்ளை ஈர்த்தார்.
அயர்லாந்தின் அடுத்த அதிபராக இடதுசாரி சுயேச்சை வேட்பாளரான கேத்தரின் கொனோலி பதவியேற்க உள்ளார்.
நேற்று முன் தினம் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட முடிவுகளின்படி கொனோலி 63% வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி மையக் கட்சியான Fine Gael-ஐ சேர்ந்த ஹீதர் ஹம்ப்ரீஸ் 29% வாக்குகளும் பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.
ஆரம்பகட்ட முடிவுகளின்படி அதிக வித்தியாசத்தில் பின்தங்கியதால் ஹீதர் ஹம்ப்ரீஸ் தோல்வியை ஒப்புக்கொண்டு கொன்னோலிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால் கொன்னோலி அடுத்த அதிபராவது உறுதியாகி உள்ளது.
அயர்லாந்தில் நிலவும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய பிரசனைகளை முன்னிறுத்தி களம் கண்ட கொனோலி இளைஞர்களின் வாக்குகளை அதிகம் ஈர்த்தார். மேலும் Sinn Fein, தொழிலாளர் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஆதரவையும் அவர் பெற்றிருந்தார்.
முன்னாள் பாரிஸ்டரான கொனோலி, 2016 முதல் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். காசா போர் தொடர்பாக இஸ்ரேலைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
உக்ரைன் போர் தொடர்பாக நேட்டோ கூட்டமைப்பின் செயல்பாடுகளையும் விமர்சித்து வந்தார். ஐரோப்பிய ஒன்றியம் சமூக நலனை புறக்கணித்து ராணுவமயமாக்களில் கவனம் செலுத்துவதாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
- எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபர் நிச்சயம் இருப்பார்.
- ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துகிறார்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
கமலா ஹாரிஸ் கொடுத்த சமீபத்திய நேர்காணலில், "எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபர் நிச்சயம் இருப்பார். அது நானாக கூட இருக்கலாம். ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துவார் என்ற எனது கணிப்புகள் உண்மையாகிவிட்டன" என்று தெரிவித்தார்.
- குஜராத்துக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் ஆகும்.
- இது எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.
குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும்.
இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அணமைக் காலமாக பாகிஸ்தான் இந்தப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் சர் க்ரீக்பகுதியில் பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி குஜராத் அருகே ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையான 'சர் க்ரீக்' பகுதிக்கு பிரிட்டனிடம் இருந்து வாங்கிய 3 Hovercraft கப்பல்களை பாகிஸ்தான் கடற்படையில் சேர்த்துள்ளது. இந்த நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி நவீத் அஷ்ரஃப், கலந்துகொண்டார்.
- மான்செஸ்டர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
- இதை புனரமைக்கும் பணி கடந்த சில மாதமாக நடைபெற்று வந்தது.
லண்டன்:
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தை புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்க அனுமதி கோரப்பட்டு இருந்தது. எனவே அந்தக் கட்டிடத்தின் இடிபாடுகள் இர்வெல் ஆற்றில் விழும்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து சுமார் 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது அங்கு வசிக்கும் மக்கள் பயங்கர அதிர்வை உணர்ந்தனர். இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக கருதி பீதியடைந்தனர்.
- உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார்.
- ரஷியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.
கீவ்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் பதவி ஏற்றபின் ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி நட்பை வளர்த்தார்.
உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியாவின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
ரஷியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.
இந்நிலையில், ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்துள்ளார். இத்தடை உத்தரவுகளை மேலும் விரிவுபடுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.
- 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி செய்து வந்தார்.
- அமெரிக்கா எப்போதும் சர்வாதிகார அரச தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.
1999 இல் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரத் அப்போதைய நவாஸ் ஷெரீப் ஆட்சியை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து தன்னை ஆட்சியாளராக அறிவித்துக்கொண்டார். 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி செய்து வந்தார்.
இந்நிலையில் அவரது ஆட்சி காலத்தில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ -வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகள் சிஐஏவில் பணியாற்றிய ஜான் கிரியாகோ 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பணிபுரிந்த அனுபவங்களை செய்தி நிறுவனத்திடம் அண்மையில் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பர்வேஸ் முஷாரப்பும் அமெரிக்காவும் நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் கொண்டிருந்தார்கள். இராணுவ மற்றும் மேம்பாட்டு உதவி வடிவில் அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தி பர்வேஸ் முஷாரப்பின் ஒத்துழைப்பைப் பெற்றது. நாங்கள் வாரத்திற்கு பல முறை முஷாரப்பை சந்தித்தோம்.
அமெரிக்கா இந்த அணு ஆயுதங்களை சுதந்திரமாக கையாள முஷாரப் அனுமதித்தார். பாகிஸ்தான் அரசாங்கத்துடனான எங்கள் உறவு மிகவும் அன்பானது. அமெரிக்கா எப்போதும் சர்வாதிகார அரச தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.
அவர்கள் பொதுக் கருத்தைப் பற்றியோ அல்லது ஊடகங்களைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. எனவே நாங்கள் அடிப்படையில் முஷாரப்பை விலைக்கு வாங்கினோம்" என்று தெரிவித்தார்.
- உடனே அங்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- படுகாயம் அடைந்த10 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நேபாளத்தின் கர்னாலி மாகாணம் பாபிகோட்டின் ஜர்மாரே பகுதியில் 18 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு, ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த ஜீப் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
உடனே அங்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த10 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முதற்கட்ட விசாரணையில் அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.






