என் மலர்
உலகம்

பாகிஸ்தானுடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது - மார்கோ ரூபியோ பளிச்
- இந்தியர்கள் கவலைப்படுவது இயல்பானதுதான் என்று நாங்கள் அறிவோம்.
- அவர்கள் நாங்கள் கூட உறவிலில்லாத சில நாடுகளுடன் நல்ல உறவு வைத்துள்ளனர்.
பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த பதட்டங்கள் காரணமாக, இந்தியர்கள் கவலைப்படுவது இயல்பானதுதான் என்று நாங்கள் அறிவோம்.
ஆனால், நாங்கள் பல நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானுடன் எங்கள் மூலோபாய உறவை விரிவுபடுத்த ஒரு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இந்தியர்கள் இராஜதந்திர விஷயங்களில் மிகவும் முதிர்ச்சியுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் நாங்கள் கூட உறவிலில்லாத சில நாடுகளுடன் நல்ல உறவு வைத்துள்ளனர். எனவே, நாங்கள் பாகிஸ்தானுடன் என்ன செய்தாலும், நட்பு நாடான இந்தியாவுடனான உறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா தங்கள் கச்சா எண்ணெய் தேவைகளுக்கு ரஷியாவை மட்டுமே அதிகம் சார்த்திருக்காமல் மற்ற நாடுகளின் சப்ளையர்களிடமிருந்தும் வாங்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா மீது அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி பேசிய அவர், எங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், எப்போதுமே இந்தியா எங்கள் கூட்டாளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார்.
முன்னதாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா முற்றிலும் நிறுத்திவிட்டதாக டிரம்ப் நேற்று மீண்டும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






