என் மலர்
உலகம்
- மில்லியன் கணக்கான மக்கள் அவாமி லீக்கை ஆதரிக்கிறார்கள்.
- செயல்படும் ஒரு அரசியல் அமைப்பை விரும்பினால், மில்லியன் கணக்கான மக்களின் வாக்குரிமையை பறிக்க முடியாது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா, "டெல்லியில் சுதந்திரமாக வாழ்கிறேன். ஆனாலும், சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன். அதேவேளையில், தேர்தலுக்கு பிறகு எந்த அரசு அமைந்தாலும் வங்கதேசம் திரும்ப போவதில்லை. தனது கட்சியை ஒதிக்கு வைத்து விட்டு தொடர்ந்து இந்தியாவில் இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
அவாமி லீக் கட்சிக்கு தடைவிதித்தது, அநீதி மட்டுமல்ல. ஆது தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்வதாகும். அடுத்த அரசாங்கம் தேர்தல் சட்டப்பூர்வத்தை கொண்டிருக்க வேண்டும். மில்லியன் கணக்கான மக்கள் அவாமி லீக்கை ஆதரிக்கிறார்கள். எனவே தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். செயல்படும் ஒரு அரசியல் அமைப்பை விரும்பினால், மில்லியன் கணக்கான மக்களின் வாக்குரிமையை நீங்கள் பறிக்க முடியாது.
அவாமி கட்சி வாக்காளர்களை மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் கேட்கமாட்டோம். பொது அறிவு மேலோங்கி, நாங்களே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவோம் என்று இன்னும் நம்புகிறோம். வங்கதேசத்தின் எதிர்காலத்தில் அவாமி லீக் இறுதியாக முக்கிய பங்கு வகிக்கும் வகையில் திரும்பும். அது அரசாக அல்லது எதிர்க்கட்சியாக இருக்கலாம். எனது குடும்பத்தினர் தலைமை தாங்க தேவையில்லை.
நாம் அனைவரும் விரும்பும் வங்கதேசத்திற்காக, முதலில் அரசியலமைப்பு சட்டம் திரும்ப வேண்டும். அரசியல் நிலைத்தன்மை ஏற்பட வேண்டும். தனிநபர் அல்லது குடும்பம் நாட்டின் எதிர்காலத்தை வரையறுக்க முடியாது.
அரசாங்கம் சட்டப்பூர்வமாகவும், அரசியலமைப்புச் சட்டம் நிலைநிறுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு உண்மையிலேயே நிலைத்திருக்கும் வரையில் நான் சொந்த நாடு செல்ல விரும்புகிறேன்.
இவ்வாறு ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
- உலக பொருளாதாரத்தில் இந்தியா தற்போது 4-வது இடத்தில் இருக்கிறது.
- 2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும்
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருக்கிறது. ஜப்பான் 3-வது இடத்திலும் உள்ளது இந்தியா தற்போது 4-வது இடத்தில் இருக்கிறது.
2030-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா ஒருநாள் சீனப் பொருளாதாரத்தை எட்டிவிடும் என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய லீ சியன் லூங், " இந்தியா ஒருநாள் சீனப் பொருளாதாரத்தை எட்டிவிடும். ஏன் அதை விஞ்சும் அளவுக்கும் வாய்ப்புள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. சீனாவின் மக்கள்தொகை ஏற்கனவே சுருங்கி வருகிறது. இந்தியா இன்னும் இளம் மக்கள்தொகையை கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- ஜமைக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மெலிசா புயல் கரையைக் கடந்தது.
- இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
வாஷிங்டன் டி.சி.
கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சூறாவளி என்றும், 174 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட மெலிசா புயல் ஜமைக்காவை கடுமையாக தாக்கி உள்ளது.
ஜமைக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மெலிசா புயல் கரையைக் கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக பலத்த மழை மற்றும் சீற்றமான கடல் அலைகள் காரணமாக அங்கு வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் என பல கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஜமைக்காவை சக்திவாய்ந்த மெலிசா புயல் புரட்டிப் போட்டதையடுத்து Pray For Jamaica எனப் அந்நாட்டின் தடகள வீரர் உசேன் போல்ட் பதிவிட்டுள்ளார்.
இந்த புயலால் அவரது வீடு சேதமாகியது குறிப்பிடத்தக்கது.
- அமீரக லாட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
- பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அபுதாபியில் வசித்து வருபவர் இந்தியர் அனில்குமார் பொல்லா (வயது29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந்தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார்.
இதில் அவர் பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி) பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
அமீரக லாட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே, லாட்டரியில் பரிசு பெற்றது தொடர்பாக அனில்குமார் பொல்லா கூறுகையில், பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எந்த மந்திரமோ, வேலையோ செய்யவில்லை. லாட்டரியில் கடைசி எண் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது என் அம்மாவின் பிறந்தநாள். இப்போது என் எண்ணங்கள் எல்லாம் பரிசு தொகையை எப்படி முதலீடு செய்வது, சரியான வழியில் செலவிடுவது என்பது பற்றி யோசித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.
- 'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- 1986 ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணு உலை வெடித்தது.
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் சில நாய்களின் ரோமம் நீல நிறமாக மாறியுள்ள விசித்திரம் அரங்கேறி உள்ளது.
'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த நாய்கள் 1986 செர்னோபில் அணுசக்தி பேரழிவிற்குப் பிறகு அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களின் சந்ததியை சேர்ந்தவை.
இந்த நாய்கள் மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் வனவிலங்குகளுடன் வாழ்கின்றன.
'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' அமைப்பு இங்கு உள்ள சுமார் 700 நாய்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வழக்கமான கருத்தடை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்ய சென்றபோது போது மூன்று நாய்கள் விசித்திரமாக நீல நிறத்தில் இருப்பதை கண்டறிந்ததாக அவ்வமைப்பின் தெரிவித்தனர்.
அவை இதன்முன் சாதாரணமாகவே இருந்தன என்றும் அப்பகுதியில் உள்ள எதோ ஒரு ரசாயனத்துடன் தொடர்ந்து கொண்டதில் அவற்றின் நிறம் மாறியிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
உண்மையான காரணத்தைக் கண்டறிய அவற்றின் ரோமம், தோல் மற்றும் இரத்தத்தின் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
1986 ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணு உலை வெடித்தது. அபாயகரமான கதிரியக்கப் பொருட்கள் காற்று மண்டலத்தில் பரவி, உக்ரைன், பெலாரஸ், ரஷியா மட்டுமின்றி ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவியது.இதில் பலர் உயிரிழந்தனர்.
மேலும் கதிரியக்கத்தால் மக்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்பட்டன. சுமார் 30 கி.மீ அணுமின் நிலையத்தை சுற்றளவுள்ள பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
- மொசாட் மற்றும் அமெரிக்க சிஐஏவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார்.
- ஹமாஸை நிராயுதபாணியாக்குவதிலும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்த இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும்.
காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமைதியை உறுதி செய்ய சர்வதேச படை உருவாக்கப்பட்டு காசாவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த சர்வதேச படையில் இணைய பாகிஸ்தான் தங்களின் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், எகிப்தில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட் மற்றும் அமெரிக்க சிஐஏவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார். இதன்போது இதற்கான முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சுமார் 20,000 வீரர்களை காசாவிற்கு அனுப்பும். காசாவில் பாதுகாப்பைக் கண்காணித்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் மறுகட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்பது இந்தப் படைகளின் பொறுப்பாகும்.
மேலும் ஹமாஸை நிராயுதபாணியாக்குவதிலும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்த இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த படையில் இடம்பெறுவதற்கு ஈடாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து பாகிஸ்தானுக்கு பெரும் நிதி ஊக்கத்தொகையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தனது கையிருப்பில் உள்ள 34 மெட்ரிக் டன் புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது என ஒப்பந்தம் கூறியது.
- இந்த ஒப்பந்தம் 2010 இல் திருத்தப்பட்டது.
உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷிய அதிபர் புதின் பிடிகொடுக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே கோபத்தில் உள்ளார்.
இந்த சூழலில், அமெரிக்காவுடன் ரஷியா கையெழுத்திட்ட புளூட்டோனியம் ஒப்பந்தத்தை புதின் ரத்து செய்து டிரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான சட்டதிருத்தத்தில் புதின் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டில், புளூட்டோனியம் மேலாண்மை குறித்து அமெரிக்காவிற்கும் ரஷியாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இந்த ஒப்பந்தம் 2010 இல் திருத்தப்பட்டது.
இதன்படி ரஷியா தனது கையிருப்பில் உள்ள 34 மெட்ரிக் டன் புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. இவற்றை அணுமின் உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
அந்த நேரத்தில், இந்த ஒப்பந்தம்மூலம் சுமார் 17,000 அணு ஆயுதங்களின் உற்பத்தியைத் தடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
2016 இல் அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தபோது புதின் புளூட்டோனியம் ஒப்பந்தத்தை இடைநிறுத்தி வைத்தார்.
இந்நிலையில் தற்போது இந்த ஒப்பந்தத்தை முற்றிலுமாக ரத்து செய்யும் சட்டதிருத்தத்தில் புதின் கெய்யெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் ரஷியா தடையின்றி அணு ஆயுதங்கள் தயாரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- ChatGPT-யுடன் தீவிர உணர்ச்சிப் பிணைப்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
- 170க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
உலகில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு முன்னெப்போதும் இல்லாத அளவு எளிமையாகி உள்ளது.அதேசமயம் முன்னெப்போதும் இல்லாத அளவு நவீன யுக மனிதர்கள் தனிமைப்பட்டு போயிருக்கின்றனர்.
மேலும் இளைய தலைமுறையினரிடையே மனத்திடம் குறைந்து சிறிய விஷ்யங்களுக்கே தற்கொலை வரை செல்லும் போக்கும் அதிகரித்துள்ளது.
இதை மெய்ப்பிக்கும் விதமான முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான OpenAI ஒரு அதிர்ச்சியூட்டும் தரவுகளை வெளியிட்டுள்ளது.
அதன் Chatbot சேவையான ChatGPT-ஐ பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் (10 லட்சத்திற்கும்) அதிகமான பயனர்கள் ஒவ்வொரு வாரமும் தற்கொலை எண்ணங்களைப் பற்றி விவாதித்து வருவதாகவும், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தரவு, மக்கள் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் AI-ஐ சார்ந்து இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

OpenAI மதிப்பீடுகளின்படி, ChatGPT-ஐ தற்போது வாரத்திற்கு 800 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். அந்த பயனர்களில் 0.15 சதவீதம் பேர் ஒவ்வொரு வாரமும் தற்கொலை உரையாடல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் அதிகப்படியான பயனர்கள் ChatGPT-யுடன் தீவிர உணர்ச்சிப் பிணைப்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள். மில்லியன் கணக்கான பயனர்களிடம் மனநலக் கோளாறுகளின் அறிகுறிகள் காணப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்கொலை எண்ணங்கள் மற்றும் மன நல பிரச்சனைகள் குறித்து ChatGPT பதிலளிக்கும் விதத்தை மேம்படுத்த 170க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
ChatGPT இன் புதுப்பிக்கப்பட்ட GPT-5 மாடல் இதுபோன்ற உணர்திறன் வாய்ந்த தலைப்புகளில் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக OpenAI தெரிவித்துள்ளது.
தற்கொலை தொடர்பான உரையாடல்களில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதில் பழைய மாடல் 77 சதவீதம் வெற்றி பெற்றிருந்தாலும், புதிய மாடல் 91 சதவீத துல்லியத்துடன் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்ல விமானம் புறப்பட்டது.
- எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கென்யாவின் கடற்கரைப் பகுதியான குவாலே மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.
மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்குச் செல்ல விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மலைப் பிரதேசத்தில் தரையில் விழுந்து விமானம் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் மொத்தம் இருந்த 12 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் சம்பவ இடத்திலிருந்து கருகிய நிலையில் உள்ள விமான பாகங்களும், எரிந்த நிலையில் சிதறிக் கிடந்த உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
- முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை.
- உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை அவர் நிறுவினார்
கனடாவில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபரும், Canam இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவருமான தர்ஷன் சிங் சாஹ்சி (68), பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
திங்கட்கிழமை காலை, வீட்டின் வெளியே அவர் தனது காரில் அமர்ந்திருந்தபோது மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, காரில் இருந்த சாஹ்சி காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டும் எந்த பலனும் இல்லை. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.
தர்ஷன் சிங் சாஹ்சி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1991 ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்து தொழிலதிபராக உயர்ந்தார்.
உலகின் மிகப்பெரிய ஆடை மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான Canam குழுமத்தை அவர் நிறுவினார். இது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. தனது நிறுவனத்தில் ஏராளமான பஞ்சாபிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்.
- இந்த நடைமுறை வருகிற டிசம்பர் 26-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் போது போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்பவர்களை எளிதில் தடுக்க முடியும்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
அதாவது வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், செல்லும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நடைமுறை வருகிற டிசம்பர் 26-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த புதிய விதியின் கீழ், அமெரிக்காவிற்கு வரும் போது அல்லது வெளியேறும்போது அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களிடம் இருந்து புகைப்படங்கள் மற்றும் பிற பயோமெட்ரிக் தகவல்களை சேகரிப்பார்கள். முன்பு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு துறை ஒவ்வொரு பயணியுடனும் இணைக்கப்பட்ட புகைப்பட தரவுத்தளங்களை தொகுத்து, பாஸ்போர்ட்டுகள், பயண ஆவணங்கள் மற்றும் எல்லை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை இணைக்கும். இந்த படங்கள் பின்னர் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் எடுக்கப்பட்ட நிகழ்நேர புகைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டு சரி பார்க்கப்படும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் போது போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்பவர்களை எளிதில் தடுக்க முடியும். அதேபோல, இந்த நடவடிக்கையின் மூலம் எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதோடு, ஆள்மாறாட்டம் மற்றும் விசா காலம் முடிவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்க அமேசான் நிறுவனம் முடிவு
- 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும்.
அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது.
ஒட்டுமொத்த நிறுவனச் செலவுகளை குறைக்கவும், கொரோனா காலத்தில் அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இம்முடிவு எடுக்கப்படுவதாக அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும்.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேலைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியயர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.






