என் மலர்tooltip icon

    உலகம்

    • நேற்றைய தினம் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர்.
    • உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து இன்று [ஜூலை 9] நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நேற்று ரஷியா சென்றார். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பில் மோடியை புதில் காட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினார். நேற்றைய தினம் அதிபர் புதினுடன் தேநீர் விருந்தில் அவரது இல்லத்தில் வைத்து மோடி உரையாடினார். பின்னர் மோடிக்கு முக்கிய பகுதிகளை புதின் சுற்றிக் காட்டினார்.

     

    சிறிது நேரம் கோல்ப் வண்டியில் இருவரும் பயணித்தனர். அதனபின் புதின் ஏற்பாடு செய்த இரவு விருந்தில் அவருடன் மோடி உணவருந்தினார். அதைத்தொடர்ந்து இன்று நடக்கும் மாநாட்டில் மோடி கலந்துகொள்கிறார். இந்நிலையில் மோடி ரஷியா சென்றுள்ளது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றைய தினம் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர். உக்ரைனின் குழந்தைகள் மருத்துவமனை மீதும் ரஷியா நேற்றைய தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் நேட்டோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பயணித்துக்கொண்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய பயங்கரவாதிகள் இந்த தாக்குதளுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்று தெரிவித்தார்.

     

     

    இதற்கிடையில், மோடியின் ரஷிய பயணம் குறித்து ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், 'இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளது அமைதிக்கான முயற்சிகள் மீது விழுந்த பெருத்த அடியாக உள்ளது' என்று தெரிவிட்டுள்ளார். கடந்த மாதம் இத்தாலியில் நடந்த ஜி 7 மாநாட்டில் மோடியும்  ஜெலன்ஸ்கியும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிஜிட்டல் பரிவர்த்தனையில் சாதனை படைத்துள்ளது இந்தியா.
    • கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கி.மீ. ரெயில் பாதை மின்சார வழித்தடமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அரசு முறை பயணமாக ரஷியா வந்துள்ள பிரதமர் மோடி இன்று மாஸ்கோவில் ரஷிய வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ரஷிய வாழ் இந்தியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி.

    * 140 கோடி மக்களின் அன்பை கொண்டு வந்துள்ளேன்.

    * 3 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உறுதியுடன் 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளேன்.

    * இந்தியாவை 3வது பொருளாதார நாடாக மாற்றுவதே எனது இலக்கு.

    * இந்தியாவில் 3 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்பட உள்ளது.

    * சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் நாடாக இந்தியா திகழும்.

    * இந்தியா மாற்றத்தை நோக்கி செல்வதாக அனைவரும் கூறுகிறார்கள்.

    * கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகம் வியப்படைந்துள்ளது.

    * இந்தியாவில் லட்சக்கணக்கான ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டுள்ளன.

    * டிஜிட்டல் பரிவர்த்தனையில் சாதனை படைத்துள்ளது இந்தியா.

    * கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கி.மீ. ரெயில் பாதை மின்சார வழித்தடமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • உக்ரைனிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துமனையான இதில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர்
    • இந்த தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 87 படுகாயமடைந்த்துள்ளனர்

    உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பிரதான குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துமனையான இதில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். தாக்குதல் நடந்த சில நொடிகளுக்கு பிறகு தங்களின் குழந்தைகளை கையில் ஏந்தியபடி தாய்மார்கள் வெளியே ஓடி வந்தனர்.

     

    இந்த தாக்குதலில் மருத்துவமனையில் இருந்த 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 87 படுகாயமடைந்த்துள்ளனர் என்றும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் மருத்துவமனையில் டயாலிசிஸ் பகுதி உட்பட 5 யூனிட்டுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. மருத்துவமனை ஊழியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என பலர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.

     

    நேற்று உக்ரைனின் பல்வேறு நகரங்களின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 170 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனை பிரச வார்டுகள், குழந்தைகள் நர்சரிகள், மக்கள் வசிக்கும் வீடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோ கூத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுகொண்டிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள செய்தியில்,  ரஷிய தீவிரவாதிகள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   

     

    • ஹெஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
    • இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்

    ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ள சீர்திருத்தவாத கட்சி வேட்பாளர் மசூத் பெசெஸ்கியன் இஸ்ரேல் - காசா போரை முன்னிறுத்தி முக்கிய முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலின் அருகாமையில் உள்ள லெபனானில் இயங்கி வரும் ஹெஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு ஈரான் அரசு முழு ஆதரவு வழங்குவதாக அவ்வமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவுக்கு ஈரானின் அரசு ஊடகமான IRNA மூலம் உறுதி தெரிவித்துள்ளார்.

     

    மேலும் ஹெஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை ஈரான் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஆதரவானது இஸ்லாமியக் குடியரசாக விளங்கும் ஈரானின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்று தெரிவித்துள்ள அவர், பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்களை நிறுத்த ஹெஸ்புல்லா போன்ற எதிர்ப்பு இயக்கமே தீர்வு என்பதில் தான் உறுதியாக உள்ளதாக மசூத் தெரிவித்துள்ளார்.

     

    1984 இல் லேபனான் உள்நாட்டுப் போரின் போது அந்நாட்டின்மீது இஸ்ரேல் படையெடுத்து கைப்பற்ற முயன்றது. இஸ்ரேல் படையெடுப்பை எதிர்க்க உருவான இயக்கமே ஹிஸ்புல்லா ஆகும். ஹிஸ்புல்லா என்ற சொல்லுக்கு கடவுளின் ஆட்சி என்று பொருள். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஹாசன் நஸ்ரல்லா தலைமையில் லெபனானை மையமாக கொண்டு ஹிஸ்புல்லா இயங்கி வருகிறது.

    ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக கடந்த 8 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா நடந்திய ஏவுகணைத் தாக்குதல் லெபனானில் இஸ்ரேல் போர் தொடுத்துவரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • மோடி மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்தார் புதின்
    • ரஷியா - உக்ரைன் போரின் பினன்ணியில் புதினிடம் 'இது போருக்கான சகாப்தம் அல்ல' என்று பேசியுள்ளதாகவும் தெரிகிறது

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து இன்று [ஜூலை 9] நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி நேற்று ரஷியா சென்றார்.  விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் புதினை சந்தித்து மோடி, இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

     

    அந்தவகையில் நேற்று மதியம் அதிபர் புதினின் இல்லமான நோகோ ஓகார்யோவோவில் வைத்து இரு தலைவர்களும் சந்தித்து தனிப்பட்ட முறையில் பலவேறு விஷயங்களை பற்றி பேசியுள்ளனர்.மோடி மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்த புதின், 'நீங்கள் உங்களின் மொத்த வாழ்க்கையையும் இந்திய மக்களுக்காக உழைப்பதற்கு அர்ப்பணித்துள்ளீர்கள், மக்களும் அதை அறிவர்' என்று மோடியிடம் தெரிவித்தார்.

     

    இதற்கு பதிலளித்த மோடி, 'நீங்கள் சொல்வது சரி, எனக்கு ஒரே ஒரு இலக்கு தான் உள்ளது - அது என் நாடும், இந்திய மக்களுமே ஆவர்' என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மோடி, ரஷியா - உக்ரைன் போரின் பினன்ணியில் புதினிடம் 'இது போருக்கான சகாப்தம் அல்ல' என்று பேசியுள்ளதாகவும் மாஸ்கோ வாட்டரங்கள் தெரிவிக்கின்றன. 

    முன்னதாக, உக்ரைனின் இறையாண்மை குறித்து புதினிடம் மோடி வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து ரஷிய ராணுவத்தில் உள்ள இந்திய வீரர்களை பணியில் இருந்து சீக்கிரம்  விடுவிக்க வேண்டும் மோடி புதினிடம் வலியுறுத்தியுள்ளார்.

     

    புதின் இல்லத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் கோல்ப் வண்டியில் மோடிக்கு அப்பகுதியை புதின் சுற்றிக்காட்டினார். அதன்பின்னர் நடந்த இரவு விருந்தில் இருவரும் சேர்ந்து உணவருந்தினர். இன்று நடக்க உள்ள உச்சிமாநாட்டில் இந்தியா-ரஷியா இடையிலான பொருளாதார உறவுகள் குறித்த பல முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன்.
    • இந்த பந்தயத்தில் இறுதிவரை ஓடிக் கொண்டு இருப்பேன்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர். எனினும், தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அதிபர் பைடன், "டொனால்ட் டிரம்ப்-ஐ தேர்தலில் வீழ்த்த முடியும் என்று முழுமையாக நான் நம்பவில்லை என்றால், மீண்டும் போட்டியிட மாட்டேன். ஊடகம் மற்றும் பல்வேறு தகவல்களுக்கு மத்தியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளேன். இந்த பந்தயத்தில் இறுதிவரை ஓடிக் கொண்டே இருப்பேன். டொனால்ட் டிரம்ப்-ஐ வீழ்த்துவேன்."

    "ஜனநாயக கட்சி சார்பில் இறுதி வேட்பாளர் தேர்வுக்கு இன்னும் 42 நாட்களும், பொது தேர்தல் துவங்க 119 நாட்களும் உள்ளன. எதிர்காலம் பற்றிய தெளிவின்மை மற்றும் தீர்மானங்களில் பலவீனம் ஏற்பட்டால் அது டிரம்ப்-க்கு சாதகமாக மாறி நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த தருணத்தில் நாம் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த கட்சியாக டொனால்ட் டிரம்ப்-ஐ வீழ்த்த வேண்டும்," என்று தெரிவித்தார். 


    • பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.
    • மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்தின் தொலைக்காட்சி தொகுப்பாளராக கேத்தரின் ஃபார்ஸ்டர் தனது மகன்களுடன் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மேத்யூ (22), ஆண்ட்ரூ (18) என்ற அவரின் 2 மகன்களும் வழிதவறி பாலியில் உள்ள எரிமலையின் மீது எறியுள்ளனர். அங்கிருந்து எப்படி இறங்குவது என தெரியாமல் எரிமலையில் அவர்கள் மாட்டிக் கொண்டனர்.

    அவர்களை மீட்க மீட்புக்குழுவினர் அந்த எரிமலைக்கு புறப்பட்டனர். எரிமலையில் 30 மணிநேரத்திற்கு மேலாக சிக்கி கொண்டதால், அவர்கள் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் வீடியோவில் கூறிய அறிவுரைகளை வைத்து உயிர்பிழைத்துள்ளனர்.

    பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.

    கிட்டத்தட்ட 40 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    • 2021-க்கும் முன்னதாக 4 ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்தனர்.
    • 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை 45,774 ஆக அதிகரித்தது.

    சமீப ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகு மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் அதிகமானோர் வரத் தொடங்கினர். 2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே சட்டவிரோதமாக குடியேறிய நிலையில் 2022-ம் ஆண்டு 45774 பேராக அது உயர்ந்தது.

    இதை கட்டுப்படுத்த முன்னாள் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் புதிய சட்டம் கொண்டு ஒன்றை கொண்டு வந்தார்.

    இந்த புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இந்நிலையில், சட்ட விரோதமாகப் பிரிட்டனுக்குள் வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் முந்தைய பிரதமர் ரிஷி சுனக்கின் திட்டத்தை ரத்து செய்வதாக பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

    • சுமார் ஒரு நூற்றாண்டு கழித்து தற்போது 2023-2024 அதிக வெப்பமான காலகட்டமாக பதிவாகியுள்ளது
    • இதற்கு முன்னர் 1890 - 1900 ஆகிய வருடங்களில் இடைப்பட்ட காலமே பூமியின் அதிக வெப்பமான வருடங்களாக பதிவானது

    ஐரோப்பிய யூனியன், காலநிலை மாற்றம், வெப்பம் காலநிலை மாற்ற கண்காணிப்பு அமைப்பான காப்பர்னிக்கஸ் சர்வீஸ் [C2C] நடத்திய ஆய்வில் 2023 ஜூன் முதல் 2024 ஜூன் வரையிலான காலகட்டம் மிகுந்த வெப்பம் நிறைந்த காலகட்டமாக பதிவாகியுள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதம் அதிக வெப்பம் நிறைந்த மாதமாக உள்ளது.

    இதற்கு முன்னர் 1850 - 1900 ஆகிய வருடங்களில் இடைப்பட்ட காலமே பூமியின் அதிக வெப்பமான வருடங்களாக பதிவான நிலையில் சுமார் ஒரு நூற்றாண்டு கழித்து தற்போது 2023-2024 அதிக வெப்பமான காலகட்டமாக பதிவாகியுள்ளது அனைவரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த வருடம் வரலாற்றில் உலகின் அதிக வெப்பநிலை கொண்ட வருடமாக பதிவாகும் என்றும் ஆய்வளார்கள் கணித்துள்ளனர்.

    ஏற்கனவே கடந்த வருடத்தின் வெப்பத்தை இந்த வருடம் முறியடித்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மனிதர்களின் செயலகளாலும், எல்- நினோ உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளாலும் இந்த அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது

    ஹஜ் புனித பயணத்தின்போது ஏற்பட்ட ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள், இந்தியாவில் ஏற்பட்ட 250 க்கும் மேற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் ஆகியவை ஆய்வாளர்களின் இந்த கூற்றை நிரூபிப்பதாக உள்ளது.

    எல் நினோ உள்ளிட்டவை இயற்கை நிகழ்வுகள் என்பதால அவற்றை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் மனிதர்களின் செயல்களாக நிலக்கரி எரிப்பு, எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றால் ஏற்படும் காலநிலை தாக்கங்களை கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் வரும் காலங்கள் மனித குலத்துக்கு சோதனை மிகுந்த காலமாக அமையும் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

    • 1 சென்ட் [இந்திய மதிப்பில் 0.024 பைசா] காசுக்காக சிறை சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • 'என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா?' என்று மிரட்டியுள்ளார்.

    உலகத்தில் பல்வேறு நாடுகளில் கோடி கோடியாக கொள்ளையடித்தவர்கள் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் முதலாளித்துவத்தின் மகுடமாக விளங்கும் அமெரிக்கவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 1 சென்ட் [இந்திய மதிப்பில் 0.024 பைசா] காசுக்காக சிறை சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    புளோரிடா மாகாணத்தின் சம்டர் கவுண்டி பகுதியில் உள்ள வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட் வேண்டும் என்று மைக்கேல் பிளெம்மிங் என்ற 41 வயது நபர், பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கவுண்டரில் இருந்தவரிடம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரி, இவ்வளவு சிறிய தொகையையெல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளார்.

    இதனால் சற்று பொறுமை இழந்த மைக்கேல், 'என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்கிறீர்களா?' என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அதிகாரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரியை மிரட்டியதற்காகவும், அவர் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுயப்பட்டிருந்தனர்.
    • 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று [ஜூலை 7] ஞாயிற்றுக்கிழமை  சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென மேரோபகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்து அடைத்தது. இந்த விபத்தில் 12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் சிக்கிய மேலும் 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

     

     

    • துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
    • போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மிச்சிகன்:

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இந்தநிலையில் மிச்சிகனில் டெட்ராய்ட் நகரின் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×