என் மலர்tooltip icon

    உலகம்

    • கனமழையால் மோக்வா நகர் தத்தளித்த நிலையில் அணை உடைந்து நீர் புகுந்தது.
    • ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் மார்க்கெட் நகரான மோக்வா, மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால் நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கியது. பல மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் மோக்வா நகர் வெள்ளத்தில் தத்தளித்த நேரத்தில், அணை உடைந்து தண்ணீர் நகருக்குள் புகுந்ததால் உயிரிழப்பு அதிகமானது.

    பல வீடுகள் நீரில் மூழ்கின. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிலையில், நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்தனர் என நைஜர் அவசரகால அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    • ஒரு மாதத்திற்கு மேலாக உணவுப் பொருட்கள் செல்ல இஸ்ரேல் தடைவிதித்திருந்தது.
    • உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடைவிதித்தது. இதனால் பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பசியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது.

    இதனால் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்த முக்கியமான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத்தொடர்நது காசா முனைக்கு உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல ஐ.நா-வுக்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது.

    இதனைத்தொடர்ந்து 77 கனரக வாகனங்களில் (Trucks) உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை ஐ.நா. உலக உணவு திட்டம் சார்பில் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு முன்னதாகவே பாலஸ்தீனர்கள் டிரக்குகளை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

    அத்துடன் உணவுப் பொருட்களை முண்டியடித்துச் சென்று அள்ளிச் சென்றனர். 12-க்கும் மேற்பட்ட டிரக்குகளில் உள்ள பொருட்கள் அள்ளிச் சென்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா 60 நாட்களாக போர் நிறுத்த பரிந்துரையை வழங்கியுள்ளது. இதை ஆய்வு செய்வோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளார். 60 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்படும் வகையில் அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளது. அப்போது ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் 58 பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். உதவிப்பொருட்கள் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    • காசாவைத் தாக்க ஆயுதங்களை வழங்கும் இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான எல்பிட் சிஸ்டம்ஸுடன் எம்ஐடி கூட்டணி வைத்துள்ளது.
    • மேகாவும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து அனுப்பப்பட்டனர்.

    பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒடுக்கும் முயற்சியை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இந்திய மாணவி ஒருவர் இஸ்ரேலுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார்.

    புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி, பாலஸ்தீனத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

    வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், PG வகுப்பு தலைவரான மேகா வெமுரி, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இஸ்ரேலிய இராணுவத்துடன் தொடர்ந்து உறவுகளைக் கொண்டுள்ளதை KANDITHAAR 

    அவர் கூறியதாவது, "இஸ்ரேல் பாலஸ்தீனத்தை பூமியிலிருந்து துடைத்தெறிய முயற்சிக்கிறது. எம்ஐடி அதன் ஒரு பகுதியாக இருப்பது வெட்கக்கேடானது. நாங்கள் பட்டம் பெற்று எங்கள் வாழ்க்கையைத் தொடரத் தயாராகி வரும் நிலையில், காசாவில் எந்தப் பல்கலைக்கழகமும் இல்லாத சூழல் உருவாகி உள்ளது.

    காசாவைத் தாக்க ஆயுதங்களை வழங்கும் இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான எல்பிட் சிஸ்டம்ஸுடனான எம்ஐடியின் கூட்டாண்மையை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்கள் அழுத்தம் கொடுத்தோம்.

    எம்ஐடி ஆராய்ச்சி உறவுகளைக் கொண்ட ஒரே வெளிநாட்டு இராணுவம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மட்டுமே" என்று அவர் சுட்டிக்காட்டினார். அவரின் உரைக்கு மாணவர்கள் கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.

    காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் எல்பிட்டின் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே பாலஸ்தீனத்தை ஆதரித்து MIT பற்றி மேகா கூறிய கருத்துக்களால் பல்கலைக்கழக வேந்தர் மெலிசா நோபல்ஸ் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. மேகாவும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மறுநாள் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தடை விதிப்பதாக மெகா வேமூரிக்கு நிர்வாகம் சார்பில் இமெயில் அனுப்பப்பட்டது. 

    • இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.
    • நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது

    மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.

    சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற ஷாங்க்ரி-லா மாநாட்டில் பங்கேற்ற இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.

    பாகிஸ்தானுடனான இராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததா என்றும், 3 ரஃபேல் உட்பட ஆறு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது குறித்தும் அவரிடம் செய்தித் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசுகையில், மே 7 ஆரம்ப கட்ட தாக்குதல்களில் அவற்றை இழந்தோம், ஆனால் எத்தனை போர் விமானங்கள் இழந்தோம் என்பது முக்கியமல்ல, அவற்றை ஏன் இழந்தோம் என்பதுதான் முக்கியம்.

    அவை ஏன் சரிந்தன, என்ன தவறுகள் செய்யப்பட்டன என்பதுதான் முக்கியம். நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் சரிசெய்தோம், இரண்டு நாட்களுக்குப் பிறகு எங்கள் அனைத்து விமானங்களும் மீண்டும் நீண்ட தூர இலக்குகளைத் தாக்கின" என்று அனில் சவுகான் கூறினார்.

    இருப்பினும் பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அவர் மறுத்தார்.

    மே 7 அன்று பாகிஸ்தானுடனான மோதல்களில் இந்திய போர் விமானங்களின் நிலை குறித்து இந்திய அரசாங்கமோ அல்லது இராணுவ அதிகாரியோ வெளிப்படையாக பேசியது இதுவே முதல் முறை. 

    • இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
    • குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

    இன்று (மே 31) பிற்பகல் ஜப்பானின் வடக்கே அமைத்துள்ள ஹொக்கைடோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாகவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

    நிலநடுக்கம் பல பகுதிகளில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றன, ஆனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

    • இஸ்ரேல் 1,236 பாலஸ்தீன கைதிகளையும் 180 பாலஸ்தீனியர்களின் உடல்களையும் திருப்பி அனுப்பும்
    • அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஒப்பந்தம் வழங்கினார்.

    ஹமாஸ் எந்த விலை கொடுத்தாவது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

    காசா போரை நிறுத்த அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் வழங்கிய ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால், அது முற்றிலுமாக அழிக்கப்படும் என்று காட்ஸ் எச்சரித்துள்ளார்.

    காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு ஈடாக இரண்டு கட்ட பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஸ்டீவ் விட்காஃப் முன்மொழிந்துள்ளார்.

    இதன் கீழ், 10 உயிருள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளும் 18 இறந்த உடல்களும் ஒப்படைக்கப்படும். இஸ்ரேல் 1,236 பாலஸ்தீன கைதிகளையும் 180 பாலஸ்தீனியர்களின் உடல்களையும் திருப்பி அனுப்பும்.

    அக்டோபர் 2023 இல் ஹமாஸ் தாக்குதலின் போது 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களில் 57 பேர் இன்னும் காசாவில் உள்ளனர். அவர்களில் 34 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    அமெரிக்கா ஹமாஸுக்கு போர்நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளதாகவும், அதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    • யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா) பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச மாநாட்டில் லாவ்ரோ பங்கேற்றார்.
    • ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியின் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புகிறோம்.

    ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புவதாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

    சீனாவிற்கு எதிரான சதியில் இந்தியாவை ஈடுபடுத்த நேட்டோ கூட்டணி வெளிப்படையாக முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

    ரஷியாவில் நடைபெற்ற யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா) பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச மாநாட்டில் லாவ்ரோ பங்கேற்றார்.

    அதில் அவர் பேசியதாவது, "முன்னாள் ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமகோவ் தலைமையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியின் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புகிறோம்.

    இந்தக் கூட்டணி மூன்று நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் 20க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளது.

    எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியாவும் சீனாவும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. எனவே, கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான நேரம் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
    • காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியா நாட்டுக்கு சென்றனர்.

    காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

    இதனால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதை இந்தியா ராணுவம் முறியடித்தது. இதற்கிடையே பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு மற்றும் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்க வெளிநாடுகளுக்கு எம்.பிக்கள் கொண்ட 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

    அவர்கள் ஒவ்வொரு நாடாக சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்கள். காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியா நாட்டுக்கு சென்றனர்.

    அப்போது தலைநகர் பொக்கோட்டாவில் சசி தரூர் நிருபர்களிடம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இந்த இரங்கல் என்பது பயங்கரவாதிகளை அனுப்புபவர்களுக்கும், பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளுபவர்களுக்கும் இடையே வேறுபாடு இன்றி உள்ளது என்றார்.

    இதற்கிடையே கொலம்பியா எம்.பிக்களை, சசிதரூர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர்.

    இந்த நிலையில் இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை கொலம்பியா திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக சசிதரூர் கூறும்போது, நாங்கள் கவலை தெரிவித்ததையடுத்து பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்கிறோம் என்று கொலம்பியா துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா தெரிவித்தார்.

    இது நாங்கள் மிகவும் மதிக்கும் ஒன்று. எங்கள் இறையாண்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், இந்திய துணைக் கண்டத்தில் அமைதிக்காகவும் எங்களுடன் கொலம்பியா உறுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் அறிக்கையை கொலம்பியா வெளியிடும்" என்று தெரிவித்தார்.

    • பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்த பின் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்
    • உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படு கிறேன் என்றார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்த பின் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, அமெரிக்காவில் இரும்பு இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த போகிறோம். இது அமெரிக்காவில் இரும்பு தொழிலை மேலும் பாதுகாக்கும்.

    இன்று இங்குள்ள ஆண்களும் பெண்களும் அமெரிக்காவை சக்திவாய்ந்ததாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறார்கள். இப்போது, இறுதியாக உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படு கிறேன் என்றார்.

    • இந்தியா தங்கள் சொந்த பாதுகாப்பு தோல்வியை மறைக்க பாகிஸ்தான் மீது வீண் பழி போடுகிறது.
    • சிவப்புக் கோட்டை தாண்ட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

    கடந்த ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பேர் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யட்டனர். எனவே பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.

    1960 இல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் சிந்து நதியின் துணை நதிகளில் இருந்து பாகிஸ்தான் தண்ணீர் பெற்று வந்தது. இந்த நீரையே அந்நாட்டில் விவசாயம் மற்றும் மற்ற தேவைகளுக்கு மக்கள் நம்பியுள்ளனர். இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை முறித்து சில அணைகளில் இந்தியா நீரை நிறுத்தியது.

    ஆனால் பயங்கரவாத ஆதரவு குற்றசாட்டை மறுத்து வரும் பாகிஸ்தான், இந்தியா தங்கள் சொந்த பாதுகாப்பு தோல்வியை மறைக்க பாகிஸ்தான் மீது வீண் பழி போடுவதாக தெரிவித்து வருகிறது.

    இந்த சூழலில் இந்தியா தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

    தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடந்து வரும் சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார்.

    அவர் கூறியதாவது, 'சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத முடிவு மிகவும் வருந்தத்தக்கது. குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது. பாகிஸ்தான் இதை அனுமதிக்காது. சிவப்புக் கோட்டை தாண்ட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்' என்று கூறினார். 

    • இந்தியா-பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் சிறந்த தலைவர்கள்.
    • உலகின் மிகச்சிறந்த ராணுவம் எங்களிடம் உள்ளது.

    காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகளை இந்தியா தாக்கியது. மேலும் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. 4 நாட்கள் சண்டைக்கு பிறகு இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை நான் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அதை இந்தியா மறுத்தது. இருந்தபோதிலும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட நான்தான் காரணம் என்று மீண்டும் திட்டவட்டமாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    அவர் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடுவதை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அது ஒரு அணுசக்தி பேரழிவாக மாறியிருக்கலாம். அதை தடுத்து நிறுத்தினோம். ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுடனும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடியவர்களுடனும் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியாது' என்று இரு நாடுகளிடமும் தெரிவித்தோம்.

    இந்தியா-பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் சிறந்த தலைவர்கள். அவர்கள் புரிந்துகொண்டு போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். சண்டையை நிறுத்தி விட்டார்கள். இந்திய தலைவர்கள், பாகிஸ்தான் தலைவர்கள் மற்றும் என் மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

    நாங்கள் மற்றவர்களும் சண்டையிடுவதைத் தடுக்கிறோம். எங்களால் எவரையும் விட சிறப்பாகப் போராட முடியும். உலகின் மிகச்சிறந்த ராணுவம் எங்களிடம் உள்ளது. உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் எங்களிடம் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தோனேசியாவின் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது
    • 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த கல் குவாரியில் நேற்று காலை பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான எந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன.

    இச்சம்பவத்தில் 14 தொழிலாளர்கள் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அந்தக் கல் குவாரி சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என மேற்கு ஜாவா கவர்னர் டெடி முல்யாடி தெரிவித்தார்.

    கல் குவாரியில் பாறை விழுந்து 14 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×