என் மலர்
உலகம்
- பிரதமர் மோடிக்கு கானா அரசு உயரிய விருது வழங்கி கவுரவித்தது.
- பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மற்றும் நாளை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "ரியோ டி ஜெனிரோவில் பிரேசிலின் இந்திய சமூகத்தினர் மிகவும் துடிப்பான வரவேற்பை அளித்தனர். அவர்கள் இந்திய கலாச்சாரத்துடன் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதும், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது!" என்று தெரிவித்துள்ளார்.
- 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம்.
- புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.
இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார். ஆனால் BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், டிரம்ப் அரசு வழங்கிய பதவியில் இருந்து விலகி டிரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.
முன்னதாக புதிய கட்சியை தொடங்குவது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பும் கேட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- புறப்படத் தயாராக இருந்தபோது ரயானேர் போயிங் 737 விமானம் இந்த சம்பவம் நடந்தது.
- அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.
ஸ்பெயினில் ஒரு விமானம் புறம்படும் நேரத்தில் தீ எச்சரிக்கை ஒலித்ததால் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
இன்று, ஸ்பெயினில் உள்ள பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்திலிருந்து மான்செஸ்டருக்கு புறப்படத் தயாராக இருந்தபோது ரயானேர் போயிங் 737 விமானம் இந்த சம்பவம் நடந்தது.
புறப்படும் போது திடீரென தீ எச்சரிக்கை ஒலித்தது, இதனால் பயணிகள் பீதியில் அலறினர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு குழுவினர், அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.
இருப்பினும், சில பயணிகள், குழுவினரின் அறிவுறுத்தல்களைக் கேட்காமல், பயத்தில் விமானத்தின் இறக்கைகளில் ஏறி அதிலிருந்து குதித்தனர். இதன்போது சுமார் 18 பேர் சிறு காயங்களுக்கு ஆளானார்கள். சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ எச்சரிக்கை ஒலித்ததாகவும், எந்த ஆபத்தும் இல்லை என்றும் விமான நிறுவனம் விளக்கம் அளித்தது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சில நாடுகளுக்கு இது 70 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
- ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சுமார் 12 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "கட்டணங்கள் தொடர்பான சில கடிதங்களில் நான் கையெழுத்திட்டுள்ளேன்.
அவை திங்கட்கிழமை 12 நாடுகளுக்கு அனுப்பப்படும். கடிதத்தைப் பெறும் ஒவ்வொரு நாடும் அதன் ஏற்றுமதிக்கு வெவ்வேறு வரிகளைப் பெறும். கடிதங்களைப் பெறும் நாடுகளின் பெயர்கள் திங்கட்கிழமை மட்டுமே வெளியிடப்படும்" என்று கூறினார்.
இந்த புதிய வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரக்கூடும் என்றும், சில நாடுகளுக்கு இது 70 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இந்த 12 நாடுகளில் இந்தியாவும் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம், அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சென்ற உயர்மட்ட இந்தியக் குழு பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளது.
அமெரிக்கா கோரும் விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தை அணுகல் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார்.
எனவே ஜூலை 9 ஆம் தேதிக்குள் வரி விலக்கு பெற இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நிமிட அரசியல் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் எந்த காலக்கெடுவின் கீழும் எந்த வர்த்தக ஒப்பந்தங்களும் இருக்காது என்று இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார்.
- பெண்ணிற்கு வந்த RIP மெசேஜ்-ஐ மற்றொரு பெண் பார்த்து வெடிகுண்டு மிரட்டல் என நினைத்துள்ளார்.
- விமான பணிப்பெண் மூலம் விமானிக்கு தகவல் பறக்க, விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அருகில் இருந்த பெண்ணின் செல்போனில் RIP மெசேஜ் இருந்ததை பார்த்து, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இருக்கலாம் என பெண் ஒருவர் சொல்ல, விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயானில் இருந்து அமெரிக்காவின் தல்லாஸ் நகருக்கு 193 பயணிகளுடன், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
அப்போது இரு பெண்கள் அருகருகே இருந்துள்ளனர். ஒரு பெண்ணின் செல்போனை மற்றொரு பெண் நைசாக எட்டிப்பார்த்துள்ளார். அப்போது போனில் "RIP" என மெசேஜ் வந்துள்ளது.
உடனடியாக அந்த பெண் விமான பணிப்பெண்ணை அழைத்து, வெடிகுண்டு மிரட்டலுக்கான மெசேஜ் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக விமான பிணப்பெண், விமானிக்கு தகவலை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விமானத்தை இஸ்லா வெர்டேவுக்கு திருப்பி அவசரமாக தரையிறக்கியுள்ளார்.
பின்னர் விசாரணையின்போதுதான் RIP என்பதை பார்த்து தவறாக தகவல் தெரிவித்துள்ளது தெரியவந்தது.
சமூக வலைத்தளத்தில் அந்த பெண்ணுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. பொய் குற்றச்சாட்டு உருவாக்கிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- பெல்ஜியம் குடியுரிமை கொண்டவர் நேஹல் மோடி.
- இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது இன்டர்போல்.
பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர் நிரவ் மோடி. வைர தொழில் அதிபரான இவர், வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இவர் சகோதரர் நேஹல் மோடி. இவர் சாட்சிகளை அழித்தல் உள்ளிட்ட உதவியை சகோதரருக்கு செய்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
பெல்ஜியம் குடியுரிமை பெற்ற இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இரு அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று இன்டர்போல் நேஹல் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.
இந்த நிலையில் நேஹல் மோடியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருவதாக கூறுப்படும் தகவல் உண்மை இல்லை.
- பாகிஸ்தான் மண்ணில் இருப்பதாக இந்திய அரசாங்கம் எங்களுடன் தகவலைப் பகிர்ந்து கொண்டால், அவரைக் கைது செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசார், இந்திய பாராளுமன்ற தாக்குதல், மும்பைத் தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர். அவர் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர்.
மசூத் அசார் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின்தலைவருமான பிலாவல் பூட்டோ தெரிவித்து உள்ளார். தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருவதாக கூறுப்படும் தகவல் உண்மை இல்லை. அவர் பாகிஸ்தான் அரசின் காவலில் உள்ளார். மசூத் அசாரை பொறுத்தவரை அவரை கைது செய்யவோ அல்லது அடையாளம் காணவோ முடியவில்லை.
அவர் பாகிஸ்தானில் இல்லை. ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்து இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் பாகிஸ்தான் மண்ணில் இருப்பதாக இந்திய அரசாங்கம் எங்களுடன் தகவலைப் பகிர்ந்து கொண்டால், அவரைக் கைது செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். ஆனால் உண்மை என்னவென்றால் இந்திய அரசாங்கத்திடம் தகவல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் பகிர்ந்துள்ளார்.
- இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
ஹவாயில் உள்ள கிலோவியா எரிமலை வெடித்து சிதறும்போது, மார்க் ஸ்டீவர்ட் என்ற நபர் தனது நீண்ட நாள் காதலி ஒலிவியாவிடம் தனது காதலை தெரிவித்தார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டார்.
இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களில், எரிமலைக்குழம்பு காற்றில் பறக்கிறது. மார்க் ஸ்டீவர்ட் தனது காதலியின் முன்பு மண்டியிட்டு மோதிரத்தை நீட்டியபடி உள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
- சிங்கத்தை வளர்த்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பாகிஸ்தானில் சிங்கங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளை வளர்ப்பு சிங்கம் ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு கட்டடத்தின் சுவர் மீது ஏறி வீதியில் குதித்த சிங்கம் அவ்வழியே வந்து கொண்டிருந்த பெண் மீது பாய்ந்து தாக்கியது பதிவாகியுள்ளது. தனது 2 குழந்தைகளையும் இந்த சிங்கம் தாக்கியதாக தந்தை ஒருவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிங்கத்தை வளர்த்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாகூரில் மக்களைத் தாக்கிய 11 மாத சிங்கம், போலீசாரால் கைப்பற்றப்பட்டு வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சிங்கங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் - ரஷியா இடையே அமைத்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
- ரஷியா நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள சுமி பிராந்தியத்தின் அருகே உள்ள குர்ஸ்க் பகுதியில் சண்டை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
கீவ், சுமி, கார்கிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிகிவப் ஆகிய நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
- பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
- மீட்புப் பணியில் 400 அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் திடீரென்று பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்பகுதியில் 25 செ.மீ. மழை பெய்தது. சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலூப் நதி நீர்மட்டம் 2 மணி நேரத்தில் பல அடி உயர்ந்தது.
இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் நடந்த கோடைக்கால முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு இருந்தனர். அவர்களில் 23 சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணியில் 400 அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
9 மீட்புக் குழுக்கள், 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் 12 டிரோன்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எந்த வானிலை முன்னறிவிப்புமின்றி திடீரென கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
- துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
உணவு விநியோக மையங்களை நிர்வகிக்கும் போர்வையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
கடுமையான பசி காரணமாக அவை மரணப் பொறிகள் என்பதை அறிந்தும், மக்கள் கூட்டம் கூட்டமாக விநியோக மையங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாகவும் ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
இதனுடன் அல்-மவாசியில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் கான் யூனிஸ் 15 பேரும், காசா நகரில் அகதிகள் தங்கியிருந்த பள்ளியில் மேலும் 15 பேரும் கொல்லப்பட்டனர். காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது. 1,34,611 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததிலிருந்த சூழலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.






