என் மலர்tooltip icon

    உலகம்

    • ஜப்பானின் பாபா வங்கா என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகள் பரவலாக பேசப்பட்டது.

    எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறும் தீர்க்க தரிசிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்களில் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவும் ஒருவர்.

    இவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பற்றி கூறியது பலமுறை உண்மையாகி உள்ளது. இந்நிலையில் ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைய தொடங்கினார். அவர் 1980 முதல் தெளிவான கனவுகளை வரைய தொடங்கிய நிலையில் இது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்ததாக கூறப்படுகிறது. 1991-ம் ஆண்டு பிரெட்டி மெர்குரியின் மரணம், 1995-ம் ஆண்டு கோபே நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி, 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகளை அவர் முன்கூட்டியே துல்லியமாக வரைந்திருந்ததாக கூறுகிறார்கள்.

    அதன்பிறகே அவர் முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக அங்கீகரிக்கப்பட்டதோடு அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் வரைந்த மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த ஆண்டு (2025)-ம் ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிக பயங்கரமான சுனாமி ஏற்படும் என ரியோ டட்சுகி கணித்துள்ளார்.

    இந்த சுனாமி 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும் ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார்.

    ரியோ டட்சுகியின் இந்த கணிப்பு காரணமாக ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல இருந்த பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால் ஜப்பானுக்கான விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ரியோ டட்சுகியின் கணிப்பு காரணமாக தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

    இதனால் இன்று மீண்டும் சுனாமி ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஜப்பானியர்கள் உள்ளிட்ட ஆசிய மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக ஜப்பானின் டொகாரோ தீவுகளில் ஜூலை 3ஆம் தேதி 5.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகிவிடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது

    • கியாஸ் கசிந்ததால் பயங்கர சத்தத்துடன் கியாஸ் நிலையம் வெடித்து சிதறியது.
    • இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

    ரோம்:

    இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கியாஸ் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.

    அப்போது கியாஸ் கசிந்ததால் பயங்கர சத்தத்துடன் கியாஸ் நிலையம் வெடித்து சிதறியது. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

    தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே சமயம் கியாஸ் நிலையம் வெடித்து சிதறியதில் 45 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    • பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
    • 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கானா நாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு கரீபியன் தீவு நாடான டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். அவர் அந்நாட்டு பிரதமர் கமலா பிரிசத் பிஸ்சரை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருதான தி ஆர்டர் ஆப் தி டிரினிடாட் அண்டு டொபாகோ குடியரசு விருது வழங்கப்பட்டது.

    இந்த விருதை 140 கோடி இந்தியர்கள் சார்பாக ஏற்றுக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • 2023 ஆம் ஆண்டிடுக்குப்பின் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    • இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூடியுள்ளது.

    உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூடியுள்ளது. உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு மாற்றம் (cloud-based) போன்ற காரணத்திற்காக இந்த நவட்டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவம் தெரிவித்துள்ளது.

    மைக்ரோசாஃப்ட்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து.
    • 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. குறைந்தது 25 பேராவது சிக்கியிருக்கலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் இந்த விருந்தில் பங்கேற்றார்.
    • இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது விவாத பொருளாக மாறியுள்ளது.

    இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி ஒன்றில் இணைந்து பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் கடுமையான நிதி குற்றங்களைச் சந்தித்து வரும் இந்த இருவரும் லண்டனில் நடைபெற்ற ஒரு ஆடம்பர விருந்தில் இருவரும் பாடல்களைப் பாடி மகிழ்வது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    லலித் மோடி ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்தில் 310க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் இந்த விருந்தில் பங்கேற்று லலித் மோடி மற்றும் மல்லையாவுடன் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

    "இது நிச்சயமாக சர்ச்சைக்குரியது. ஆனால் நான் அதைத்தான் செய்கிறேன்" என்ற தலைப்புடன் இந்த வீடியோவை லலித் மோடியே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.

    மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

    அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    • முந்தைய அரசாங்கத்தின் கொடி அகற்றப்பட்டு தாலிபானின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.
    • இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய வெற்றி என்று கூறினார்.

    ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கத்தை ரஷியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

    2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட தாலிபான் ஆட்சியை எந்த நாடும் இதுவரை அங்கீகரிக்காத நிலையில் முதல் நாடாக ரஷியாவின் அங்கீகரித்துள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ குல் ஹசனிடமிருந்து தாலிபான்களால் நியமிக்கப்பட்ட புதிய ஆப்கானிய தூதர் குல் ஹசன் ஹாசன் இதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பெற்றார்.

    இது குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. கூடுதலாக, மாஸ்கோவில் உள்ள ஆப்கான் தூதரகத்தில் இருந்து முந்தைய அரசாங்கத்தின் கொடி அகற்றப்பட்டு தாலிபானின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.

    இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று நம்புவதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி இது அவர்களின் இருதரப்பு உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய வெற்றி என்று கூறினார்.

    இதற்கிடையில், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச தரங்களை தாலிபான்கள் பின்பற்ற வேண்டும் என்று உலகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, இதுவரை மற்ற எந்த நாடும் அவர்களின் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முன்வரவில்லை. 

    • காசாவில் இஸ்ரேலின் 21 மாத தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது.
    • உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம்.

    ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து லாபம் ஈட்டியதற்காக உலகளாவிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு பிரான்செஸ்கா அல்பனீஸ் அளித்த அறிக்கை, காசாவில் இஸ்ரேலின் 21 மாத தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது.

    காசாவில் முற்றிலுமாக சிதைந்த நிலையிலும், இஸ்ரேலின் இனப்படுகொலை பெருநிறுவனங்களுக்கு லாபகரமானது என்பதால் தொடர்கிறது என பிரான்செஸ்கா அறிக்கை விளக்குகிறது .

    'ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை' என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனப் பிரதேசங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன பங்காளிகளின் ஈடுபாட்டையும், பொருட்களை விற்பனை செய்யும் விவசாய நிறுவனங்களையும், போருக்கு நிதியளிக்கும் முதலீட்டு நிறுவனங்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

    அரசியல் தலைவர்களும் அரசாங்கங்களும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் அதே வேளையில், ஏராளமான பெருநிறுவனங்கள் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு,  இனப்படுகொலை ஆகியவற்றால் லாபம் ஈட்டியுள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

    சிறப்பு அறிக்கையாளர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை வழங்க அல்லது அறிக்கை அளிக்க ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் ஆவர்.

    2022 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்கள் குறித்த சிறப்பு அறிக்கையாளராக இருக்கும் இத்தாலிய சட்ட அறிஞரான பிரான்செஸ்கா அல்பானீஸ், காசாவில் இஸ்ரேலிய தாக்குதலை ஒரு 'இனப்படுகொலை' என்று ஜனவரி 2024 இல் முதன்முதலில் உறுதிப்படுத்தினார். இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

    காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் 57,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், பல பாலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும் நம்பப்படுவதால், உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

    • 'ஆங்க் ஆ தன்யா சே' (இந்த கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை) என்ற புத்தகத்தின் கவிதையை அவர் குறிப்பிட்டார்.
    • 1845 மற்றும் 1917 க்கு இடையில் இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளர்களாக குடிபெயர்ந்தவர்களின் சந்ததியினர் ஆவர்.

    அயல்நாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு சென்றுள்ளார். அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு கவாய் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் பேசிய டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர், மோடி எழுதிய குஜராத்தி கவிதையிலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

    பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய 'ஆங்க் ஆ தன்யா சே' (இந்த கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை) என்ற புத்தகத்தின் கவிதையை அவர் குறிப்பிட்டார்.

    "நாம் காலத்தில் பின்னோக்கி பயணிக்கும்போது, பல நினைவுகள் மீண்டும் வருகின்றன. கடினமான காலங்களில் நமக்கு ஆதரவாக நின்றவர்களை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. அந்த நினைவுகள் நமது பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கும்," என்று அவர் கூறினார். இதற்கிடையே, கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர் பீகாரை பூர்வீகமாக கொண்டவர் என மோடி தனது உரையில் குறிப்பிட்டார். 

    கரீபியன் நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த நாட்டில் சுமார் 5.56 லட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கின்றனர்.

    அவர்களில் பெரும்பாலோர் 1845 மற்றும் 1917 க்கு இடையில் இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளர்களாக குடிபெயர்ந்தவர்களின் சந்ததியினர் ஆவர். 

    • இருவரும் ஒருவரையொருவர் கழுத்தைப் பிடித்து சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
    • தனது கட்சிக்காரர் மத நம்பிக்கைகளின்படி தியானம் செய்வது எவன்ஸ்க்கு பிடிக்கவில்லை.

    அமெரிக்க விமானத்தில் சக பயணி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜூன் 30 அன்று பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21), தனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த கீனு எவன்ஸைத் தாக்கினார். இருவரும் ஒருவரையொருவர் கழுத்தைப் பிடித்து சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இஷான் சர்மாவின் நடத்தை விசித்திரமானது என்றும் தன்னை மிரட்டியதாகவும் கீனு எவன்ஸ் போலீசாரிடம் தெரிவித்தார்.

    சர்மா தன்னை மிரட்டுவதை நிறுத்தாதபோது தான் உதவிக்கான பொத்தானை அழுத்தியதாகவும், அதன் பிறகு சர்மா தன்னை தாக்கி தொண்டையைப் பிடித்ததாகவும் எவன்ஸ் விளக்கினார். தற்காப்புக்காக தான் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

    விமானம் மியாமியில் தரையிறங்கியவுடன் இஷான் சர்மாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இருப்பினும்,  நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, சர்மாவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் தனது மத நம்பிக்கைகளின்படி தியானம் செய்வது எவன்ஸ்க்கு பிடிக்கவில்லை என்றும், அதனால்தான் சண்டை வெடித்ததாகவும் கூறினார். இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. 

    • ஏழைகளுக்கான உணவு உதவித் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் பெரும் நிதி குறைப்புகள் ஏற்படும்.
    • 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

    வியாழக்கிழமை நடந்த பரபரப்பான வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 214 வாக்குகளும் பதிவாகின. எனவே 4 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் அமெரிக்க சுதந்திர தினமான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு அதிபர் டிரம்ப், மசோதாவில் கையெழுத்திடுவார் என்று பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறினார். இதன்மூலம் மசோதா சட்ட்டமாக அமலுக்கு வரும். 

    இந்த மசோதாவில் இராணுவ செலவினங்களை அதிகரித்தல், புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டத்திற்கு நிதியளித்தல் மற்றும் வரி நிவாரணத்தை நீட்டிக்க 4.5 டிரில்லியன் டாலர்களை ஒதுக்குதல் ஆகியவை முக்கிய அம்சங்கள் அடங்கும்.

    இருப்பினும், இந்த மசோதா நாட்டின் கடனை மேலும் 3.4 டிரில்லியன் டாலர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஏழைகளுக்கான உணவு உதவித் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் பெரும் நிதி குறைப்புகள் ஏற்படும். இந்த மசோதா அமலானால் சுமார் 17 மில்லியன் மக்களின் காப்பீட்டுத் தொகையை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

    மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுக்க ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் அவையில் பேசுகையில், "இந்த மசோதா அமெரிக்க மக்களின் வாழ்க்கையை அழிக்கும். இது ஒரு அருவருப்பான மற்றும் ஆபத்தான மசோதா" என்று கூறினார்.

    இந்த மசோதாவால் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என முன்னாள் அதிபர்  ஒபாமாவும்  வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்ரேலுடன் மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது.

    காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று நடந்த தாக்குதல்களில் இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது. உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    உணவு விநியோக மையங்களை நிர்வகிக்கும் போர்வையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

    கடுமையான பசி காரணமாக அவை மரணப் பொறிகள் என்பதை அறிந்தும், மக்கள் கூட்டம் கூட்டமாக விநியோக மையங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதனுடன் அல்-மவாசியில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் கான் யூனிஸ் 15 பேரும், காசா நகரில் அகதிகள் தங்கியிருந்த பள்ளியில் மேலும் 15 பேரும் கொல்லப்பட்டனர். காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது. 1,34,611 பேர் காயமடைந்தனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததிலிருந்த சூழலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையில், இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையில், 14 அமைச்சர்கள், ஜூலை 27 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்க்கு மத்திய கிழக்கு மற்றும் உலக நாடுகளிடம் இருந்து கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  

    ×