என் மலர்
உலகம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பல்வேறு நாடுகளுக்கு செல்லும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவர் என தெரிவித்தது.
பாரீஸ்:
பிரான்சில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்கும்படி பிரான்ஸ் விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் ஏர் 170 விமானங்களை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரியான் ஏர் விமான போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதனால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
- டோகாரா தீவில் கடந்த 2 வாரத்தில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகின.
- மிகப் பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாகப் பதிவானது.
டோக்கியோ:
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது.
அதன்படி, அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் மிகப் பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
அதேசமயம், எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்காக, டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்து காணப்படுகின்றனர்.
- தொழிற்சாலையில் பணிபுரிந்த 3 இந்தியர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
- இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பமாகா:
மேற்கு ஆப்பரிக்க நாடான மாலியில் பயங்கரவாத அமைப்புகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மாலியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்த 3 இந்தியர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
கெய்ஸ், நியோரோடு சஹேல், நியோனா உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள்மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அப்போது கெய்ஸ் நகரில் உள்ள ஒரு சிமெண்ட் தொழிற்சாலைக்குள் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
அதன்பின் அவர்கள் தொழிற்சாலையில் பணியில் இருந்த 3 இந்தியர்களை கடத்திச் சென்றனர். இச்சம்பவம் கடந்த 1-ம் தேதி நடந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாலியில் உள்ள தொழிற்சாலைக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்குதலை நடத்தி 3 இந்தியர்களை வலுக்கட்டாயமாக பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இந்த மோசமான வன்முறைச் செயலை இந்திய அரசாங்கம் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது.
கடத்தப்பட்ட இந்திய குடிமக்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாலி குடியரசு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறது.
அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இந்திய குடிமக்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் விடுவிக்க பல்வேறு மட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மாலியில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கை, விழிப்புடன் இருக்கவும், தேவையான உதவிகளுக்காக பமாகோவில் உள்ள தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
- குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுமியில் சண்டை நடைபெற்று வருகிறது.
- படை வீரர்களை சந்திக்கும்போது கொல்லப்பட்டதாக தகவல்.
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள சுமி பிராந்தியத்தின் அருகே உள்ள குர்ஸ்க் பகுதியில் சண்டை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இருநாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் வகையில் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷியாவின் கப்பற்படை துணைத் தளபதி மேஜர் ஜெனரல் மிக்கைல் குட்கோவ், சண்டை நடைபெறும் இடத்தை பார்வையிட சென்றுள்ளார். அப்போது சண்டைக்கான பணியில் ஈடுபட்டபோது கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த விளக்கத்தை ரஷிய ராணுவம் வெளியிடவில்லை. குட்கோவ் கடந்த மார்ச் மாதம் கடற்படைத் தளபதியின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, கடற்படையின் 155வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தார்.
- பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தைப் பெற ஆப்பிரிக்காவின் வளர்ச்சி கட்டமைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.
- ஒரு வலிமையான இந்தியா, மிகவும் நிலையான மற்றும் வளமான உலகத்திற்கு பங்களிக்கும்.
இந்திய பிரதமர் மோடி கானா சென்றுள்ளார். இந்திய நேரப்படி இன்று மதியம் கானா பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
* மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இருப்பது ஒரு பாக்கியம்.
* உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 140 கோடி இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன்.
* எங்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஒரு அமைப்பு அல்ல. அது எங்கள் அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதியாகும்.
* எனக்கு வழங்கப்பட்ட கானா தேசிய விருதை இரு நாடுகளையும் இணைக்கும் நீடித்த நட்பு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.
* நமது உறவுகளை விரிவான கூட்டாண்மையாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
* இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஆர்டர் வேகமாக மாறி வருகிறது.
* மாறிவரும் சூழ்நிலைகள் உலகளாவிய நிர்வாகத்தில் நம்பகமான மற்றும் பயனுள்ள சீர்திருத்தங்களைக் கோருகின்றன.
* உலகளாவிய தெற்கிற்கு குரல் கொடுக்காமல் முன்னேற்றம் வராது.
* 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.
* ஒரு வலிமையான இந்தியா, மிகவும் நிலையான மற்றும் வளமான உலகத்திற்கு பங்களிக்கும்.
* பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தைப் பெற ஆப்பிரிக்காவின் வளர்ச்சி கட்டமைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.
* ஒன்றாக, வாக்குறுதிகள் மற்றும் முன்னேற்றம் நிறைந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
- உதவிபொருட்கள் வாங்க நின்ற பாலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 38 பேர் உயிரிழப்பு.
இஸ்ரேல்- காசா இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார். என்ற போதிலும் இஸ்ரேல் வான் தாக்குதலை நிறுத்தவில்லை. நேற்றிரவு காசாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது பட்டினியால் தவித்து வரும் பாலஸ்தீனர்கள் உதவிப்பொருட்களுக்களுக்கான காத்திருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்க லாரிகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகளில் வரும் உதவிப்பொருட்களை பெறுவதற்கு பாலஸ்தீன மக்கள் முண்டியத்துச் செல்லும் பரிதாப நிலை ஏற்படுகிறது.
அவ்வாறு முண்டியடித்துச் செல்லும் பட்டினியால் தவிக்கும் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. அவ்வாறு காசாவில் பல்வேறு இடங்களில் உதவிப் பொருட்கள் வாங்கும் இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 38 உயிரிழந்தனர்.
- விபத்து நடந்தபோது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
- குழுவினர் சுமார் 6.5 அடி உயர அலைகளுடன் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் கெட்டபாங் துறைமுகத்தில் இருந்து நேற்று இரவு 65 பேருடன் படகு ஒன்று பாலி தீவில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது. மேலும் அந்த படகில் 14 லாரிகள் உள்பட 22 வாகனங்கள் இருந்தன.
கே.எம்.பி. துனு பிரதாமா ஜெயா என்று பெயரிடப்பட்ட அந்த படகு புறப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. இதில் படகு கடலில் ஒருபக்கம் சாய்ந்து மூழ்கியது.
இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். உடனே மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். விபத்து நடந்தபோது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் மீட்புப் பணி சவாலாக இருந்தது.
இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 38 பேர் மாயமாகி இருந்தனர். அவர்களை மீட்க இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.
மீட்புப் பணியில் 2 இழுவைப் படகுகள், 2 சிறிய அளவிலான கப்பல்கள் உள்பட 9 படகுகள் ஈடுபட்டுள்ளன. இந்த குழுவினர் சுமார் 6.5 அடி உயர அலைகளுடன் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களில் பலர் மணிக்கணக்கில் கொந்தளிப்பான கடலில் மிதந்ததால் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படகு விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- விபத்துக்குள்ளான படகில் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.
விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் கூறினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர்.
- மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறுகையில்,
இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
இலங்கைக் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
எல்லைதாண்டி மீன் பிடித்தால் கைது மற்றும் படகு பறிமுதல் நடவடிக்கை தொடரும். மீனவர்கள் மற்றும் படகுகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பிரச்சனையை தூதரக ரீதியாக இந்தியாவிடம் கொண்டு செல்வதோடு, சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் மீனவர்களை கைது செய்ய இலங்கை அரசு, இலங்கை கடற்படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
- மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.
- 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்
அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த 'பிக் பியூட்டிபுல்' வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வரி குறைப்பு நடவடிக்கைக்கு பின்பு, நிதி ஆதாரத்தை திரட்ட, Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மருத்துவ உதவிக்கான நிதியைக் குறைத்து, மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் விரைந்து வருவதால், 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்
இந்த மசோதாவை அவை நிறைவேறினால், உழைக்கும் வர்க்க குடும்பங்களின் எதிர்கால தலைமுறைகள் கடுமையாக பாதிக்கும். இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- கானா நாட்டிற்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக கானா நாட்டிற்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, 'The Officer of the Order of the Star of Ghana' என்ற விருதை வழங்கி கானா அரசு கௌரவித்துள்ளது. இந்த விருது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய மரியாதையாக கருதப்படுகிறது.
கானா நாட்டை தொடர்ந்து டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். மேலும், வரும் 6, 7ம் தேதி பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
- கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
- நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டில் 4-வது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. நேற்று ஏராளமானவர்களுக்கு பணிநீக்க நோட்டீசுகளை அனுப்பத் தொடங்கியது. எவ்வளவு பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம் பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வெளியான பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. புளூம்பெர்க் நிறுவன அறிக்கையின்படி இந்த முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று தெரியவருகிறது.






