என் மலர்
உலகம்

மாலி நாட்டில் துணிகரம்: 3 இந்திய தொழிலாளர்கள் கடத்தல்
- தொழிற்சாலையில் பணிபுரிந்த 3 இந்தியர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
- இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பமாகா:
மேற்கு ஆப்பரிக்க நாடான மாலியில் பயங்கரவாத அமைப்புகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மாலியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்த 3 இந்தியர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
கெய்ஸ், நியோரோடு சஹேல், நியோனா உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள்மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அப்போது கெய்ஸ் நகரில் உள்ள ஒரு சிமெண்ட் தொழிற்சாலைக்குள் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
அதன்பின் அவர்கள் தொழிற்சாலையில் பணியில் இருந்த 3 இந்தியர்களை கடத்திச் சென்றனர். இச்சம்பவம் கடந்த 1-ம் தேதி நடந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாலியில் உள்ள தொழிற்சாலைக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்குதலை நடத்தி 3 இந்தியர்களை வலுக்கட்டாயமாக பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இந்த மோசமான வன்முறைச் செயலை இந்திய அரசாங்கம் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது.
கடத்தப்பட்ட இந்திய குடிமக்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாலி குடியரசு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறது.
அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இந்திய குடிமக்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் விடுவிக்க பல்வேறு மட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மாலியில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கை, விழிப்புடன் இருக்கவும், தேவையான உதவிகளுக்காக பமாகோவில் உள்ள தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.






