என் மலர்tooltip icon

    உலகம்

    • உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
    • டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகை செல்கிறார்.

    லண்டன்:

    உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று செல்கிறார்.

    இந்நிலையில், 'விருப்ப கூட்டணி' என்ற பெயரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும், ஜெர்மன் அதிபர் பிரைட்ரிச் மெர்சும் வீடியோ அழைப்பில் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். அப்போது, கெய்ர் ஸ்டார்மர் கூறியதாவது:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷியாவின் சட்ட விரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன.

    கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சனைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது.

    உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை ஐரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷிய அதிபர் புதினை தடுப்பது முக்கியம்.

    உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புதின் நிறுத்தும் வரை, ரஷியா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷிய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன என தெரிவித்தார்.

    • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அலிகேட்டர் 14.5 மிமீ' துப்பாக்கியால் 2 ரஷிய வீரர்களைக் அவர் கொன்றார்.
    • முன்னதாக இந்த சாதனை மற்றொரு உக்ரைன் வீரர் வசம் இருந்தது.

    ரஷியாவுடன் நடந்து வரும் போரில் உக்ரேனிய வீரர் ஒருவர் துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்துள்ளார்.

    13,000 அடி (கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர்) தூரத்தில் இருந்த 2 ரஷிய வீரர்களை Sniper துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொன்றார். இதை உக்ரைன் செய்தித்தாள் கீவ் போஸ்ட் தெரிவித்தது.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 14 அன்று போக்ரோவ்ஸ்க் பகுதியில் நடந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அலிகேட்டர் 14.5 மிமீ' Sniper துப்பாக்கியால் 2 ரஷிய வீரர்களைக் அவர் கொன்றார்.

    அலிகேட்டர் 14.5 மிமீ

    இதை வெற்றிகரமாகச் செய்ய செயற்கை நுண்ணறிவு மற்றும் டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த சாதனை மற்றொரு உக்ரைன் வீரர் வசம் இருந்தது. 12,400 அடி தூரத்தில் இருந்து ரஷிய வீரர் ஒருவரை அவர் சுட்டுக் கொன்றிருந்தார். தற்போது அந்த சாதனையை மற்றொரு உக்ரேனிய வீரர் முறியடித்துள்ளார். 

    • இதற்காக அமெரிக்கா பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • இந்த அபராத வரி வருகிற 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடந்த ஏப்ரல் மாதம் விதித்தார்.

    அதன்பின் வரி விதிப்பை நிறுத்தி வைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியது.

    இதில் இந்தியா-அமெரிக்கா பிரதிநிதிகள் குழுக்கள் இடையே 5 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப் படவில்லை.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 6-வது சுற்று பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்கா பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக மேலும் 25 சதவீதம் வரியை விதித்தார்.

    இந்த அபராத வரி வருகிற 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி தொடங்குவதாக இருந்த இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை வேறு தேதியில் நடத்த திட்டமிடப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியிடப்படவில்லை.

    புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சம்பவ இடத்திலிருந்து போலீசார் 36 தோட்டாக்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை மீட்டனர்.
    • மர்ம நபர்களை தேடும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

    அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள ஒரு இரவு விடுதியில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

    லவுஞ்சில் நடந்த ஒரு சிறிய சண்டை துப்பாக்கிச் சூடாக மாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து போலீசார் 36 தோட்டாக்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை மீட்டனர்.

    இறந்தவர்களில் மூவரும் ஆண்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. காயமடைந்தவர்களில் எட்டு பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மர்ம நபர்களை தேடும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.   

    • கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல.
    • கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

    கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

    சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது.

    சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன.

    செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது.

    நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

    கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

    உண்மையில், இந்த செயற்கை கருப்பை ஒரு புதிய முறை அல்ல என்று டாக்டர் ஜாங் கூறினார்.

    விஞ்ஞானிகள் முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பெற்றெடுத்ததாக அவர் விளக்கினார்.

    இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும், இதற்கு ரூ. 12.96 லட்சம் வரை செலவாகும் என்றும் ஜாங் கூறினார். 

    • புவியியல் ரீதியாக இந்தப் பகுதிகள் உக்ரைனின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
    • நாளை (திங்களன்று) ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று டிரம்ப்-ஐ சந்திக்க உள்ளார்.

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வருவது தெரிந்ததே.

    இதன் ஒரு பகுதியாக, சனிக்கிழமை அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை டிரம்ப் சந்தித்தார். இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடைபெற்றதாக இரு நாட்டுத் தலைவர்களும் அறிவித்தனர்.

    ஆனால் போர் நிறுத்தம் குறித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை. போரை நிறுத்த புதின் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.

    போர் நிறுத்தத்திற்கு புதின் விதித்த முக்கிய நிபந்தனையை அவர் ஜெலன்ஸ்கியிடம் விளக்கினார்.

    சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, உக்ரைன் மற்றும் ரஷியாவின் எல்லையில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதியை ரஷியாவிடம் விட்டுவிட வேண்டும் என்றும் அவை தங்களின் முழு கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்றும் புதின் நிபந்தனை விதித்தாக தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நிபந்தனையை டிரம்ப் உக்ரைன் அதிபரிடம் விளக்கியபோது, ஜெலென்ஸ்கி தனது பிரதேசத்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. நாளை (திங்களன்று) ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று டிரம்ப்-ஐ சந்திக்க உள்ளார்.

    டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் இயற்கை வளங்கள் மற்றும் தொழில்துறை நிறைந்தவை. இங்கு எஃகு மற்றும் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகின்றன.

    புவியியல் ரீதியாக இந்தப் பகுதிகள் உக்ரைனின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை தற்போது ரஷியாவல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    இந்தப் பகுதியில் 30 சதவீதப் பகுதி மட்டுமே உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது புதின் இந்தப் பகுதியையும் தங்களுடன் இணைக்க வேண்டும் என்று கோருகிறார்.  

    • ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.

    ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.

    இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ அதிகாரிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தி உள்ளது.

    மூன்று மாதங்களுக்குப் பிறகு இதை பாகிஸ்தான் அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தினர்.

    பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 14) வியாழக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரில் இறந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருதுகளை வழங்கினார்.

    ஹவில்தார் முகமது நவீத், நாயக் வக்கார் காலித், லான்ஸ் நாயக் திலாவர் கான் மற்றும் பிறருக்கு தங்கா-இ-பசலத் விருதுகள் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டன.

    அதேபோல் நாயக் அப்துல் ரெஹ்மான், லான்ஸ் நாயக் இக்ரமுல்லா, சிப்பாய் அடில் அக்பர் மற்றும் பிறருக்கு தங்கா-இ-ஜுராத் விருதுகள் வழங்கப்பட்டன. 

    • அப்பாவித்தனம் கொண்ட குழந்தைகளை பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • மோதலில் சிக்கிய குழந்தைகளின் மெல்லிசை சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும்.

    அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சந்திப்பில் உக்ரைன், ரஷியா இடையிலான போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதின், எங்களுக்கு இடையே நடந்த போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.

    பின்னர் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இன்னும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என தெரிவித்தார். மேலும், "ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் உள்ளது.

    ஐரோப்பிய நாடுகளும் இதில் சிறிது தலையிட வேண்டும். ஆனால் முக்கிய பொறுப்பு ஜெலென்ஸ்கியிடம் உள்ளது" என்று கூறினார்.

    இதனிடையே அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது புதினிடம் டிரம்ப் தனது மனைவி மெலனியா எழுதிய கடிதத்தை வழங்கினார். அதில் உக்ரைனில் போரால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அக்கடிதத்தில், "புவியியல், அரசாங்கம் மற்றும் சித்தாந்தத்திற்கு மேலே நிற்கும் ஒரு அப்பாவித்தனம் கொண்ட குழந்தைகளை பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மோதலில் சிக்கிய குழந்தைகளின் மெல்லிசை சிரிப்பை உங்களால் மீட்டெடுக்க முடியும். இந்த குழந்தைகளின் அப்பாவித்தனத்தைப் பாதுகாப்பதில், நீங்கள் ரஷியாவிற்கு மட்டும் சேவை செய்வதை விட அதிகமாகச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த குழந்தைகளுக்கு நீங்கள் பேனாவால் கையெழுத்திடுவது மூலம் உதவ முடியும்" என்று மெலனியா தெரிவித்தார் .

    • கோரிக்கையை வலியுறுத்தி பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    ஒட்டாவா:

    கனடாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் கனடா. இதில் சுமார் 10 ஆயிரம் பணிப்பெண்கள் வேலை பார்க்கின்றனர்.

    அவர்கள் சம்பள உயர்வு, விமானத்தில் செலவழித்த நேரத்துக்கு ஏற்றாற்போல் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    எனவே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    • ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.05 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 36.83 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.01 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 13-ம் தேதி மற்றும் 8-ம் தேதி ஆகிய நாட்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

    • வேறொரு நாட்டின் கொடி இந்தக் கோபுரத்தில் ஏற்றப்பட்டது இது முதல் முறை ஆகும்.
    • இந்திய வம்சாவளியினர் பலரும் தேசிய கொடி அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளியினர் பலர் வசித்து வருகின்றனர். அந்நகரின் வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

    இந்நிலையில், சியாட்டில் நகரை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்த இந்திய-அமெரிக்க வம்சாவளியினரை அங்கீகரிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி, சியாட்டில் நகரின் ஸ்பேஸ் நீடில் என்ற கோபுரத்தின் உச்சியில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

    605 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்படுவது வரலாற்று தருணம் ஆகும். வேறொரு நாட்டின் கொடி இந்தக் கோபுரத்தில் ஏற்றப்பட்டது இது முதல் முறையாகும். இந்திய வம்சாவளியினர் பலரும் தேசிய கொடி அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை இந்தியா மீண்டும் தொடங்கியது.

    அமெரிக்கா இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததில் இருந்து சர்வதேச அரசியலில் காட்சிகள் மாறி வருகின்றன.

    ஜூன் 2020 இல் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பகையை மறந்து இந்தியா சீனாவுக்கு நட்புக் கரம் நீட்டியுள்ளது.

    வரும் ஆகஸ்ட் 31 அன்று சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டுக்கு பிரதமர் மோடி பயணப்படுகிறார். இதற்கிடையே நிறுத்திவைக்கப்பட்ட இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சூழலில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக, வாங் யி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து முக்கியமாக எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிப்பார். பின்னர், இருதரப்பு பிரச்சினைகள் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக அஜித் தோவல் டிசம்பரில் சீனாவுக்குச் சென்று வாங் யியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு, சீன குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்களை இந்தியா மீண்டும் தொடங்கியது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுடன் வெடித்த மோதலில் சீனா தங்களுக்கு உதவியதாக பாகிஸ்தான் தலைவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    ×